புலப்பெயர்வு இலக்கியமும் நிலம் இழந்தவர்களின் குரலும்-மலையக இலக்கியத்தை முன்வைத்து-கட்டுரை-

மேமன்கவிஈழத்துப் புலப்பெயர்வு இலக்கியத்தைப் பற்றிப் பேச முனையும் பொழுதெல்லாம் 80 களுக்கு பின்னான கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த வட-கிழக்கு தமிழ் மக்களின் புலப்பெயர்வைப் பற்றியும், அவர் தம் கலை இலக்கியத்தை வைத்தே, ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் நிலம் இழந்தவர்களின் குரலைப் பற்றியும் நாம் விரிவாகவும் அடிக்கடியும் பேசி வந்துள்ளோம்.ஆனால், அதற்கு முன்னதான காலகட்டத்தில் ஈழத்துத் தமிழர்களாகக் கணிக்கப்படத் தவறிய மலையக மக்கள் இந்தியாவுக்குப் பலாத்காரமாகவும், ஒப்பந்தங்களாலும் மேற்கொள்ள வைக்கப்பட்ட புலப்பெயர்வைப் பற்றியோ, அவர் தம் கலை இலக்கியங்களில் ஒலித்த நிலம் இழந்தவர்களின் குரலைப் பற்றியோ உரத்துப் பேசுவதில்லை.

பின்காலனியச் சூழலில் நிலம் இழந்தவர்களின் குரல் என்பது ஈழத்துத் தமிழ் சமூகத்தில் சுதேசிய அரசியல் அதிகாரத்தாலும், மேலாண்மையாலும் ஒலித்தது. சுதந்திரத்திற்கு பிறகான காலகட்டத்தில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்  இந்தியாவிலிருந்து இங்குக் குடியேற்றப்பட்ட தமிழ் பேசும் மக்கள்  சுதந்திரத்திற்குப் பின், அவர்களும் இலங்கையர்கள் என்ற உரிமை 1948 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட சட்டத்தால் மறுதலிக்கப்பட்டது. அதன் மூலம் ஈழத்துத் தமிழர்களாகக் கணிக்கப்பட்ட, மலையக மக்களை இந்தியாவுக்குப் பலாத்காரமாகவும், ஒப்பந்தங்களாலும் மேற்கொள்ள வைக்கப்பட்ட புலப்பெயர்வும் ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் முதல் புலம்பெயராகவும், அவ்வாறாக ஒப்பந்தங்களாலும் புலம்பெயர்ந்த மலையக மக்களின்  இலக்கியமே ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் புலப்பெயர்வு இலக்கியத்தின் முன்னோடியாக அமைந்தது என்பதும் அழுத்தமாக இதுவரை சொல்லப்படவில்லை. இதற்கு மலையக மக்களின்  போராட்டம்  என்பது காலனிய -பின்காலனியச் சூழலில்  வெறுமனே தொழில் சங்கப் போராட்டமாகப் பார்க்கப்பட்டதும்.அவர்கள் படைப்புகள் இலக்கியத்  தரமாகவும், வீச்சாகவும் இல்லை என்ற மாதிரியான கருத்துகளை  மலையகம் சாராதவர்களாலும் முன் வைக்கப்பட்டதன் மூலம், மலையகத் தமிழர்களின் ஈழத்துத் தமிழ் புலப்பெயர்ப்பு இலக்கியத்திலும், நிலம் இழந்தவர்களின் குரல் என்பதற்கான பங்களிப்பை  மறைக்கப்பட்டது.  இது இவர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பொழுது, அந்தச் சட்டத்திற்குத்  துணை போன,அவர்களின் உரிமைக்காகப் போராடாது, அவர்களின் உரிமை மறுக்கப்பட்ட பொழுது  மௌனம் சாதித்தவர்களால் அந்த வரலாறு மறைக்கப்பட்டது என்பதுதான்  உண்மை. பிற்காலத்தில் அவர்களே நிலம் இழந்தவர்களாக மாறிய பொழுதும் கூட, அதன் வரலாற்றில் மலையக மக்களின் பங்கு கடைசியாகச்  சொல்லப்பட்டதுதான் அபத்தம்.

000000000000000000000000

இவ்விடத்தில், நம் ஆய்வு மற்றும் சமூக ஊடாட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் இரு சொல்லாடல்களைப் பற்றிச் சிறிது அளவான தெளிவினை முன் வைப்பது நல்லது என நினைக்கிறேன்.அச்சொல்லாடல்களில் ஒன்று இடப்பெயர்வு, அடுத்தது புலப்பெயர்வு.

உலகளாவிய சமூக ஆய்வுச் சூழலில் குறிப்பாகப் பின்காலனிய ஆய்வுகளில் இரண்டுமே அதாவது புலப்பெயர்வும் இடப்பெயர்வும் இரண்டுமே இடப்பெயர்வாகவே பார்க்கப்பட்டாலும், நமது சூழலிலே இரண்டும் வெவ்வேறானவை என்பதை நாம் அறிவோம்.

நமது சூழலில், “இடப்பெயர்வு” என்பது, ஒர் ஆட்சி அதிகாரம் நிலவுகின்ற ஒரு நிலப் பகுதிகளிலிருந்து அதே ஆட்சி அதிகாரம் நிலவுகின்ற இன்னுமொரு  நிலப்பகுதியினை வாழ்விடமாய்க் கொண்டு செல்வது அல்லது அனுப்பப்படுவது. விரட்டப்படுவது.

“புலப்பெயர்வு” என்பது ஒர் ஆட்சி அதிகாரம் கொண்ட ஒரு பகுதிலிருந்து இன்னுமொரு ஆட்சி அதிகாரம் கொண்ட நிலப்பகுதியை வாழ்விடமாய்க் கொண்டு செல்வது அல்லது அனுப்பப்படுவது. விரட்டப்படுவது. என்பதாகவே பார்க்கப்படுகிறது.

இங்கு ஆட்சி அதிகாரம் என்றெல்லாம்  அழுத்திச் சொல்வதற்குக் காரணம், ஆட்சி அல்லது அதிகாரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாகத்தான் இந்தப் புலப்பெயர்வும், இடப்பெயர்வும் நிகழ்கின்றன என்பது நாம் அறிந்த செய்தி.

ஆக 70களில் அதற்கு முன்னதான காலகட்டத்தில் ஈழத்துத் தமிழர்களாகக் கணிக்கப்பட்ட, 1948-ல்  பிரஜா உரிமை பறிக்கப்பட்ட, மலையக மக்களை இந்தியாவுக்குப் பலாத்காரமாகவும், ஒப்பந்தங்களாலும் மேற்கொள்ளவைக்கப்பட்ட புலப்பெயர்வும் ஈழத்துத் தமிழ் மக்களின் புலம்பெயராகப் பார்க்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

000000000000000000000000000

பொதுவாக நாம் புலப்பெயர்வைப் பற்றி பேசும் பொழுது புலம்பெயர் மக்களின் பிரச்சினையாகவும், அவர்தம் கலை இலக்கியங்களில்  ஒலிக்கும் குரலாக இருப்பது,  பரம்பரைப் பரம்பரையாகப் பிறந்த, வாழ்ந்த, மடிந்த, சொந்த நிலத்தை இழந்தவர்களின், பிரிந்தவர்களின், அதற்காக  ஏங்குபவர்களின் குரலாக அது ஒலிப்பதுதான்.

அத்தகைய குரல்கள்,நாம் 80களுக்கு பிறகான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப்  புலம்பெயர்ந்த வட-கிழக்கு தமிழ் மக்களின் முதல்  தலைமுறையினரின்  கலை இலக்கியங்களில் ஒலித்ததுபோல், 60-களுக்குப் பின்னான கால கட்டத்தில் இந்தியாவுக்குப் புலப்பெயர்க்கப்பட்ட மலையக மக்களின் கலை இலக்கியங்களிலும் அக்குரல் ஒலித்தது. அத்தோடு, இங்கிருந்த மலையகப் படைப்பாளிகளாலும், மலையகம் சாராத பிற பிரதேச எழுத்தாளர்களால் அவர்களுக்காகப் படைக்கப்பட்ட கலை இலக்கியங்களிலும் அக்குரல் ஒலித்தது.

இன்னும் ஆழ்ந்து சொன்னால்  நிலம் இழந்தவர்களின் குரலும், நிலத்தைப் பிரிந்து போனவர்களின் குரலும்,  நிலத்திற்காய்ப்  போராடியவர்களின்  குரலும்,முதல் முதலாக ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் மலையகக் கலை இலக்கியத்திலேயே ஒலித்தது என்பது மிகைகூற்று அல்ல.

இதற்கு சான்றாக 60-களுக்குப் பின்னான காலகட்டத்தில் இந்தியாவுக்குப்  புலம் பெயர்ந்த  மலையக மக்களின் கலை இலக்கியங்களையும், இங்கிருந்த மலையகப்  படைப்பாளிகளாலும், மலையகம் சாராத பிறப் பிரதேச எழுத்தாளர்களாலும், படைக்கப்பட்ட கலை இலக்கியங்களில் அக்குரல் ஒலிக்கும் பல கலை இலக்கியப் படைப்புகளை உதாரணங்களாக காட்டலாம்.

000000000000000000000000

அவ்வாறான பிரதிகளாக 70களல்  இந்தியாவுக்குப் புலம்பெயர்க்கப்பட்ட மலையகப்  படைப்பாளிகளால்  படைக்கப்பட்ட பிரதிகள் பலவற்றைச் சொல்லாம். தோ. சிக்கன்ராஜின் “தாயகம்”  (நாவல்), சி.பன்னீர்செல்வத்தின் “திறந்தவெளி சிறைசாலைகள்” (சிறுகதைத்தொகுதி), வண்ணச்சிறகின் “சென்று வருகிறேன் ஜென்மபூமியே!” (கவிதைத்தொகுப்பு), தமிழ்மகனின் “வனவாசி” (நாவல்), அத்தோடு இங்கிருந்த மலையகப் படைப்பாளிகளால் அவர்களுக்காகப் படைக்கப்பட்ட கலை இலக்கியப் பிரதிகளில் அக்குரல் பரவலாகக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

சி.வி. வேலுப்பிளையின் “இனிப்படமாட்டேன்” (நாவல்), அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை” (சிறுகதை), திருச்செந்தூரனின் “உரிமை எங்கே?” (சிறுகதை), இரா.சிவலிங்கத்தின “முனைவன் சொத்து” (சிறுகதை), சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் சக்தி பாலையா மொழிபெயர்த்த In Ceylon’s Tea Garden 1952  (தேயிலைத்தோட்டத்திலே-கவிதைத்தொகுப்பு), தெளிவத்தை ஜோசப்பின் நாமிருக்கும் நாடே”, தி.ஞானசேகரனின் “பிறந்தமண்”, மு.சிவலிங்கத்தின் “ஒப்பாரிகோச்சி” (சிறுகதை), ப.ஆப்டீனின்“புதுப்பட்டி கிராமத்திற்குக் கடைசி டிக்கெட்” (சிறுகதை), ரத்தினசபாதி அய்யரின் “அம்மாசி இலங்கை பிரஜையானான்” (சிறுகதை) இப்படியாகப் பல பிரதிகளைச் சொல்லாம். விரிவஞ்சியும், உடனடியாக நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தகைய பல படைப்புக்கள் மலையக மக்கள்  நிலம் இழந்த நிலையை அதற்கான போராட்டத்தை சித்திரித்திருக்கின்றன.  இருக்கின்றன. (இது பூரணமான பட்டியல் அல்ல).

இப்படியான பல படைப்புகளின் மூலம் , மலையக மக்களின் போராட்டங்களிலும், அவர்களின் கலை இலக்கியங்களிலும் அக்குரல் எவ்வாறு ஒலித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பிரஜா உரிமை பறிக்கப்பட்டதன் மூலம், தாம் புலம்பெயர வேண்டிய நாடு எது என தெரியாத நிலையில், சி.வியின் மொழியில் சொல்வது என்றால், ‘மலையக மக்கள் நாடற்றவர்களாக, வீடற்றவர்களாக ஆக்கப்படடார்கள் என்பதைப்  பெரும்  தொகையான மலையக மக்களின் இலக்கியப் பிரதிகள் சித்திரித்து இருக்கின்றன’.

சி.வி,அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிச் சக்தி பாலையா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த

Ceylon’s Tea Garden 1952 (தேயிலைத்தோட்டத்திலே) எனும்  கவிதைத் தொகுப்பில் வரும் கவிதை ஒன்றில், மலையக மக்களது இலங்கை மண்ணின  மீதான உயிருக்கு உயிரான உரிமையை எடுத்துக் காட்டும் வகையில்,

தேயிலைத் தோட்டத்தில்- உடல்
தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட
ஓய்வின்றி நாமுழைத்தோம்- மக்கள்
நோய் கண்டு தானிளைத்தோம்-உடல்
ஊறிசச் சுரந்திடும் வேர்வை புனல் பாய்ச்சி
ஓங்கும் பயிர் வளர்த்தோம்.-வளம்
தாங்கும் உயிர் கொடுத்தோம்.-வரும்
சாவிலும் நாமிந்த தேயிலேக்கே-உடல்
ஆகப் புதைந்திடுவோம்.-பெரும்
தியாகம் புரிந்திடுவோம்

எனப்பாடுகிறார்.

அவ்வாறாக இம்மண்ணில் உடல் புதைந்த  ஒருவரின் பேரன் ஒருவன், இம்மண்ணில் தனக்கான உரிமையை,  அதாவது பறிக்கப்பட்ட பிரஜா உரிமை வழங்குவதற்கும், வாக்குரிமை பெற்றுக் கொள்ளுவதற்கும் தேவையான அத்தாட்சியைக் கோரும் அதிகாரிகளிடம், தான் இந்த மண்ணின் மைந்தன்தான் என்பதை அத்தாட்சிப்படுத்த மேற்கொள்ளும் கலகத்தை, மலையகப் பிரதேசத்தைச் சாராதவராக இருப்பினும், மலையக மக்களின் மண்ணுக்கான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையிலான இலக்கியப் பிரதியை முதல் முதலாகத் தந்த அ. செ.முரூகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”  எனும் பிரதி சித்திரிக்கிறது.

“வாருங்கள், அத்தாட்சி காட்டுகிறேன்  என்று வாக்குப் பதிவு உத்தியோகஸ்தர்களை காளிமுத்து தன் வீட்டின் பின் பக்கமாய்,அமைந்துள்ள தேயிலைக் காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான். அரசங்கன்றை  அடி மரத்தோடு வெட்டி வீழ்த்திவிட்டு மண்ணுக்குக் கீழே புதையுண்டிருந்த மரத்தின் வேர்ப்பாகத்தை அவன் கிளப்பத் தொடங்கினான்”. என அப்பிரதி நகர்ந்து, அதன் இறுதியில்,

“இதோ அத்தாட்சி கிடைத்து விட்டது” எனச் சப்தமிட்டவாறே அவன் தோண்டியிருந்த புதைகுழியிருந்து ஒரு மனிதப் பிரேதத்தின் கை எலும்பு ஒன்றினை அந்த அதிகாரிகளை நோக்கி வீசியவனாக,

“ஐயா துரைமார்களே, இது என  பாட்டனாரின்  கை எலும்பு, எத்தயோ  வருசங்களுக்கு முன்னே அவர் இங்குப் புதைக்கப்பட்டவர். என்னை இலங்கைப் பிரஜையாக்க உங்களுக்கு இந்த அத்தசாடசி போதலில்லையென்றல் என்னை இந்தக் குழியிலே வைத்து உங்கள் கையினாலேயே தள்ளி  விட்டுப்  புதையுங்கள்  எனக் காளிமுத்து மறுபடியும் சத்தம் செய்தான்”

காளிமுத்துவின் இச்செயற்பாடு அசெ.முவின் அதீதக் கற்பனை எனச் சொல்லப்பட்டது. மலையக மக்கள் இந்த நாட்டு மைந்தர்கள்தான் என்பதற்கான காகித அத்தாட்சி இல்லாமல் இருந்தாலும், காயாத மண்ணில் இருக்கிறது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டி, இத்தகைய கலகத்  தன்மைமிக்க சித்திரிப்பின் அவசியம் இருக்கிறது. அதன் பிரகாரம் அசெமுவின் அப்பிரதி யதார்த்தமானது என்பதே நமது கணிப்பு.

மலையக மக்களின் இப்பிரச்சினையைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளில் அதிகம் பேசப்பட்ட இன்னுமொரு பிரதி மலையகப ;படைப்பாளிகளில் ஒருவரான திருச்செந்தூரன் “அவர்களின் உரிமை எங்கே?” இப்பிரதியில்  பறிக்கப்பட்ட பிரஜா உரிமை, மீண்டும் வழங்கப்பட மலையக மக்கள் எவ்வாறு எல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லுகிறது. இறுதியில் அப்பிரதி இவ்வாறாக முடிகிறது.

காடாகக் கிடந்த இந்த நாட்டை வற்றாத வளங்கொழிக்கும் நாடாக உயர்த்தி உலக அரங்கிலே இதனைக் காட்சிக்கு வைத்த அவ்வேழைத்  தொழிலாளிக்கு இன்று இந்நாட்டிலே உரிமையில்லை. இந்த நாட்டில் மட்டுமா? அவருக்கு எந்த நாட்டிலுமே இனி உரிமையில்லை!”

அடுத்து,  வெறும் வெளி ஒன்றுக்குக் கடத்தப்பட்ட மாதிரியாகி விட்ட, கேள்விக் குறியாகிவிட்ட மலையக மக்களின் வாழ்வின் அவலத்தைக் காட்டும் வண்ணம் அமைந்த இரா சிவலிங்கத்தின் “முனைவன்சொத்து” எனும் சிறுகதையில் பிரஜா உரிமைக்  கேட்டு விண்ணப்பித்த மலையக இளைஞன் ஒருவனின் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டு விட்டதை அறிந்து அவனது நலன் விரும்பி இப்படி யோசிக்கிறார்,

“இலங்கை அரசாங்கம் அவனுக்குப் பாஸ்போர்ட் தராது. அவன் இலங்கை பிரஜை அல்ல. இந்திய அரசாங்கத்தின் தூதுராலயமும் பாஸ்போர்ட தரமாட்டார்கள். அவன்  இந்தியனல்ல. பின் எப்படிப் போவான்? “

அதைப் போல தி.ஞானசேகரனின் “பிறந்த மண்” சிறுகதைப் பிரதியில்  குடும்பத்துடன் இந்தியாப்  போகத் தீர்மானித்திருக்கும் மலையகத்  தந்தை ஒருவரிடம் அவரது மகன் இப்படிக் கூறுகிறான்,

“பிரஜாவுரிமை கிடைக்கிறதுன்னா எத்தனையோ சட்டதிட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடையாமலே போகலாம். ஆனா நான்   இந்த நாட்டில பொறந்தவன் என்கிற நெனைப்பை, அந்த நெனப்பில் கிடைக்கிற சொகத்தை என் மனசில இருந்து அழிக்க முடியாதுப்பா……’ என்பான்.

இவ்வாறான மலையக இலக்கியப் பிரதிகள் முற்றும்  முழுதுமான கற்பனையானவை அல்ல. மலையக மக்களின் இம்மண்ணுடனான பிணைப்பையும், இணைப்பையும் ஆத்மார்த்தமான உறவையும், மறுதலிக்க முடியாத உரிமையையும், எடுத்துக் காட்டும் யதார்த்தப் பிரதிகள் அவை என்பதை நிரூபிப்பதன்  மூலம், என்னதான்  ஒப்பந்தங்களாலும், சட்டங்களாலும் இவர்கள்  நாடு கடத்தப்பட்டாலும், புலம்பெயர்க்கப்பட்டாலும், எல்லா வகையான ஒப்பந்தங்களையும் மீறி, எல்லா சட்டங்களையும் மீறி, இந்த மண்ணிலேயே பிறந்த, இந்த மண்ணுக்காய் உழைத்த, இம்மண்ணிலேயே மடிந்த, அவர்களும் இந்த நாட்டின்  தமிழ் பிரஜைகள்கள் என்பதைப் பறை சாற்றும்  இலக்கிய ஆவணப் பிரதிகள் அவை என்பதுதான் உண்மை.

இதன் பிரகாரம் 70களில் மனிதஉரிமைகளுக்கு மாறாக. பண்டங்கள் போல் பரிமாறப்பட்டு, நாடு கடத்தப்பட்ட, அவர்களின் அப்புலப்பெயரும், ஈழத்துத்  தமிழ்  மக்களின் புலப்பெயர்வுதான். அந்த வகையில் 1948-ஆம் அவர்களது பிரஜா உரிமை பறிக்கப்பட்ட காலம் தொடக்கம் அவர்களாலும், அவர்களுக்காகவும்  படைக்கப்பட்ட கலை இலக்கியங்கள், “ஈழத்துப் புலப்பெயர்வு இலக்கியமாகக்” கருதப்படவேண்டும் என்பது எமது கணிப்பு என்பதுடன் அவாவும்கூட.

மேற்குறித்த நிலவரத்தை மேலும் எடுத்துக்  காட்டும் வகையில்,  பின்காலனியச் சூழலில் ஈழத்துச் சமூக அரசியல் நிகழ்வுகளையும் மலையக மக்களாலும், அவர்களுக்காகவும் படைக்கப்பட்ட கலை இலக்கியப் பிரதிகளையும்  மேலும் விரிவாக ஆராயும்  பொழுது, ஈழத்துப் புலப்பெயர்வு இலக்கியத்தில் அவர்களின் பங்கினைச் சரியாகவும் விரிவாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.ஈழத்துப்  புலப்பெயர்வு இலக்கியமும் மலையகமக்களும் என்ற தலைப்பில் விரிவான ஆய்வு எழுதும் அளவுக்குஅது சார்ந்த பிரதிகள் மலையகக் கலை இலக்கியப் பரப்பல் நிறைந்து இருக்கின்றன என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டி இருக்கிறது.

70களில் மலையகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கவிஞர் வண்ணச்சிறகின் “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே!” எனும் கவிதையின் இடைக்கிடையிலான சில வரிகளுடன் இக்குறிப்பை நிறைவு செய்வதுவதன் மூலம், ஈழத்துப் புலப்பெயர்வு இலக்கியத்தில் மலையக மக்களின் பங்கும், புலப்பெயர்வு இலக்கியத்தின்  ஒர் அம்சமான நிலம் இழந்தவர்களின் குரலும், இக்கவிதையில் எவ்வளவு தூரம் அழுத்தமாகவும், இதயத்தை நெகிழ வைக்கும் வகையிலும் வெளிப்பட்டுள்ளது எனத் தெரிய வரும். ஆனால் 70களில் எழுதப்பட்ட நிலம் இழந்தவர்களில் குரலை மலையக  நவீனக் கவிதையில் ஒலிக்கச் செய்த இக்கவிதை, 80களுக்கு பின் எழுதப்பட்ட ஈழத்தின் நிலம் இழந்தவர்களின் குரலை வெளிப்படுத்தும்  கவிதைகள் கொண்ட தொகுக்கப்பட்ட வெளிப்பட்ட “மரணத்துள் வாழ்வோம்” எனும்  தொகுப்பில்  வண்ணச்சிறகின் இக்கவிதை கடைசி பகுதியில் சேர்க்கப்பட்டதற்கான நுண் அரசியல் என்ன?

தாம் பிறந்த நாடுகளை
நேசிக்காத மக்களில்லை
நாட்கள் கழிக்கின்றன.
நாடு கடக்கும் வேளை நெருக்கின்றது.
நான் பிறந்த நாட்டினிலே
நான்  இருக்க விதியில்லை
என் ஜென்மப் பூமியிலே
எனக்கு உரிமையில்லை’
உங்களுக்கும் ஒரு நாள்
உங்களது நாட்டை
பிரிகின்ற நிலை வந்தால்
உங்களது மன நிலையில்
உவப்பாமேலேங்கும்?
சென்று வருகிறேன்
ஜென்ம பூமியே!

மேமன்கவி-இலங்கை

மேமன்கவி

(Visited 173 times, 1 visits today)
 
நந்தினி சேவியர்

காலத்தால் வாழப் போகும் நந்தினி சேவியர்-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-மேமன்கவி

அவரது மறைவால் எனக்கு ஏற்பட்ட தனிமையிருந்தும் வெறுமையிருந்தும்  என்னால் இன்னும் விடுபடமுடியவில்லை, இதற்குக் காரணம் அவருக்கும் எனக்கும் 20 வருடக் காலத் தொடர்பு, அதற்கு முன்பாக அவரைப் பெயர் அளவிலும், […]