மலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும்- கட்டுரை-எஸ்தர்

 

எஸ்தர்மலையக மக்கள் என்போர் அந்நிய  இந்தியத் தமிழர் என்ற ஒரு பிரிவினைக்குட்பட்ட  மக்களாகக் கணிக்கப்பட்டது ஒரு வரலாற்றுண்மை. ஆரம்பத்தில் “கொழுந்து  பறிப்பதற்கு  எதற்கு கல்வி?” என்ற நிலையிலிருந்தது. மலையக மக்களைக்  கருத்தியல் ரீதியில் “கள்ளத்தோணிகள்”,”தோட்டக்காட்டான்” ,”கூலிகள்”,”தோட்டத்தொழிலாளர்கள்” என்று அவர்களைப்  பலவித செல்லமில்லாத பெயர்களால்  அழைக்கப்பட்டனர்.

தனிப்பட்ட இலாபம் சேர்க்கும் தோட்டச்  சிங்கள துரைமார்களும் ஆரசும் இவர்களைத் “தொழிலாளர்கள்” என்ற நிலையில் வைத்திருப்பதற்கு எப்போதும் கண்ணும் கருத்துமாகவே  இருக்கின்றார்கள். மலையகப் பெண்கள் காலை முதல் மாலை வரை தேயிலைத்தோட்டத்தில் குறைந்த மிகக்குறைந்தக் கூலியில் வேலை செய்கிறார்கள்.இவர்களின் வேலைப்பளுவும் வீட்டுப்பளுவும் சொல்லெண்ணா துன்பம் கொண்டவை.வெளியில் கொழுந்துப் பிடுங்கவும் இரவு வீடு சென்று வீட்டு வேலைகளான  சமையல், கூட்டுதல், கழுவுதல் என்று பலதரப்பட்ட குடும்பச்  சுமைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் “மலையக மக்கள்” என்ற சொற்றொடரே மிகவும் பிரச்சனையாகவுள்ளது.மலையகம் என்பது மலை சூழ்ந்த இடத்தை அவர்கள் வாழ்விடமாக கொண்டது என்றக் காரணத்தாலே அவர்களுக்குப் பல  காரணப்பெயர்கள் உருவாகியுள்ளன.

தென்இந்தியாவில் இருந்து  வந்ததே வந்தோம் எமக்குத்தான் எத்தனைப் பெயர்கள்? குழந்தை பிறந்ததும்  ஒரு பெயரும் அத்துடன் இன்னுமொரு செல்லப்பெயரும்  இருக்கும். ஆனால் எமக்கு எத்தனைப் பெயர்கள்!!பிரஜாஉரிமைகூட  இன்றுமே  பிரச்சனையாகவேயுள்ளது. இவைகளே  மக்களின் அரசியல் நிலைமைகளை நிர்ணாயிப்பதாகவுள்ளது.”மலையக மக்கள்” என்றப்பதத்தை மக்கள் விரும்புவதில்லை. “இந்திய வம்சாவழி” என்றப்பதம் எந்தவகையிலும் இழிவானதல்லவே. இந்தப்பதமே உண்மையை உரக்க சொல்வதுப்போலவும்  உள்ளது.1920 களிற்கு பின்னால் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் நிலையான குடியிருப்புத்தன்னைமை ஏற்பட்டது.1931 இல் இலங்கை அரசியல் யாப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் பொழுது  30 களில் அரசியலில் மலையக பிரதிநிதித்துவம் உருவானது. மேலும் அரசியலுடனான தொழிற்சங்க நடவடிக்கைககள் இடம்பெற்றன. தென்னிந்தியாவில் தஞ்சாவூரில் அரச உத்தியோகாத்தரான இங்கு வந்த நடேசையரினால் தொழிற்சங்க  நடவடிக்கைககளும் உருவானது.அவர் “தேசநேசன்” என்ற பத்திரிகை மூலம் தமது  கருத்துக்களை வெளியிட்டார் .மேலும் “சிட்டிசன்” என்ற ஆங்கிலப்பத்திரிகையையும் இவர் பயன்படுத்திக்கொண்டார்.இவரும் இவரது மனைவியான மீனாட்சியம்மையும்   இணைந்து சில விடியல்களை தேடினார்கள். தொழிலாளரை கடன் தொல்லையிலிருந்து விடுவித்தல், தொழிலாளரிடையே கல்வியறிவை உருவாக்குதல், அவர்களிடையே பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்துதல், அரசியல் அறிவினை உருவாக்குதல்,போன்றவை  முக்கிய  நோக்கங்களாக இருந்தன.

பெண்களை வலுப்படுத்தவும் அவர்களை அரசியல்  நீரோட்டத்தில் இணைக்கவும் எழுத்தறிவை விதைக்கவும்  மீனாட்சியம்மை அவர்கள் கடுமையாகப் பாடுபட்டார். 95%பெண்கள் தொழிற்சங்கங்களில்  அங்கத்துவம் வகிப்பதுடன் சாந்தா செலுத்துபவர்களாகவும் உள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில்  பங்குபற்றும் பெண் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால், தோட்டமட்டங்களில் மாதர்சங்கத் தலைவி கமிட்டியில் உள்ளப்பெண்கள் ஆவார்கள். பெண்களினது  தொழில் தொடர்பானப்பிரச்சினைகள்  மாதர்சங்கத்தலைவியினூடாகவே தொழில்சங்கத்தலைவருக்கு அறிவிக்கப்படும். மாதர் சங்கத்தலைவி தோட்டமட்டத்தில் உள்ள பெண்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து சொல்பவராக இருப்பாள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்வாறு மாதர் அணியை எல்லா தோட்டங்களிலும் உருவாக்கி உள்ளது.பெரும்பாலும் தோட்டக்கமிட்டித் தலைவர் ஆணாகவே இருப்பார். சில தோட்டங்களில் பெண்களும் தோட்டக்கமிட்டித் தலைவியாக உள்ளனார்.

நான் ஏலவே  சொன்னது போல்  தொழிற்சங்க வரலாற்றில் முதன் முதலாகச் செயற்பட்ட பெண்ணாக நடேசையரின் துணைவியார் மீனாட்சியம்மாளைத் தான்  முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.இவர் பொதுவாக தொழிலாளருக்கும் பெண்காளுக்காககவும் தனது செயற்பாடுகளை ஆற்றியுள்ளார்.

பெண்களது  கல்வி:

1920 கல்விச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதனூடாக தோட்டங்களில் பாடசாலலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டது.இது எழுத வாசிக்க பழகுவதற்காக மட்டுமே இருந்தது.1904 இல் 2000 பிள்ளைகள் பாடசாலையில் இருந்ததாகவும்,1930-களில் 26000 பிள்ளைகள் இருந்ததாகவும்,18% கல்வியறிவு பெருந்தோட்டங்களில் நிலவியதாகவும், அதில் 7.1% பெண்கள் இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

1972 இல் அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்கும் வரை தோட்டங்களில் உள்ளவர்களின் சமூகநலன், கல்வி,சுகாதாரம் தொழில் நிலமைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குரிய பொறுப்புக்களாகக்  கொள்ளப்படவில்லை. மேலும்1972 ம் ஆண்டு சில மாற்றம் ஏற்படத்தொடங்கியது. 1970-ற்குப்  பின் பல தமிழ் பாடசாலைகளை  மூடியதுடன் மலையகத்தின் கல்வி நிலைகளில்  இனத்துவரீதியான சிங்களாமக்களுக்குக்  கூடுதல் முன்னுரிமைகளைக் கொடுத்து வாந்திருக்கின்றது. 1970-களுக்கு  முன்பும் பின்பும் சரி நிர்வாகமும் அரசும் தோட்ட வேலைகளுக்கு கல்வி அவசியமில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளதுடன் அதற்கான  வழிவகைகளை எடுக்கத்தேவையில்லை என்றப்போக்கையே காட்டி வருகின்றது. இதனால் ஆகக்கூடிய ஐந்தாம் தரம் மட்டும் உள்ள பாடசாலைகளே இயங்கி வந்தன. 13 வாயதில் தோட்டத்தில் வேலை செய்யப்  பெயரைப்  பதிவு செய்யவேண்டியிருந்தது. எனது தாயார் வெறும் 50 சதங்களுக்காகத் தனது  10 ஆவது வயதில் தோட்டத்தில் வேலைக்குச்  சேர்ந்தாகச் சொன்னார். அம்மாவைப்போல ஏனைய சிறார்களும் குறைந்த கூலிக்காக வேலைக்கமர்த்தப்பட்டனர்.இது லாபகராமானதாகவும் இருந்தது. பிள்ளைகளும்  தொழில் செய்வதையே விரும்பினார். காரணம் அவர்களது தலைவிரித்தாடும் பட்டினி. அதிகமாகக்  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

85/86 மேற்க்கொள்ளப்பட்ட சமூகபொருளாதார ஆய்வில், 10-14 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின்   கல்வியறிவு வீதம் 54.73%ஆகவும், 50-54 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின் கல்வியறிவு வீதம்  27.28%ஆகவும் இருந்தது. மலையகத்தில் இன்றுக்காணப்படும் சிறீபாதக்கல்லூரியானாது சிறீபாத என்ற சிங்களப் ப்பெயருடன் மலையக மக்களிடையே கல்வியைக்  கருத்தில் கொண்டு கட்டப்பட்டது.மலையகத்  தமிழரை விட சிங்களவார்களும் வெளியாருமே இங்கு கூடுதலாகப்  படிக்கிறார்கள். தொழில் புரிகின்றார்கள்.

மலையகத்தில் மீனாட்சியம்மைக்குப் பின்னர்தான் கல்வி மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உருவானது.பெண் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான வளரத்தொடங்கின. எழுதப் படிக்க பெண்களையும் ஈடுபடுத்தும் நிலை உருவானது. முறையான பாடசாலைச்  சீருடைக்கூட இல்லாமல் மாணவிகள் அணிந்த ஆடையுடனேயே அருகில் இருந்த ஐந்தாம் தரம் வரையிலான பள்ளிக்கூடங்களுக்கு சென்றதாகவும்  “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” என்பவர்களே இவர்களுக்கு எழுத்துச் சொல்லிக்கொடுத்ததாகவும் எனது தாயார் கூறுகிறார். பாடசாலை முடிந்ததும் இந்த  “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” வீடுகளில் பின்னேரங்களில் மாஸ்டரின் மனைவிக்கு எடுபிடிகளாகவும், விறகு சேகரித்து உதவியதாகக் கூறினார். நீண்டக்காலமாக “யாழ்ப்பாணத்து மாஸ்டர்களே” அதிகமான மலையகத்  தோட்டப்புற பாடசாலைகளில் கற்பித்தனர். அங்கே எமது மக்கள், யாழ்ப்பாணத்து மாஸ்டர்  மீன்களை  அதிகமாகச்  சாப்பிடுவதாலே நல்ல மூளைசாலிகள்  என்றெல்லாம் அவர்களைப்பற்றிக்கதைப்பார்கள்.அது உண்மைதான். அவர்கள் நிறையவே  எமது மக்களின் கற்றலுக்கு உதவினார்கள். கணக்கு, தமிழ், சமயம் முதலான பாடங்களை படிப்பித்தனர்.இந்த நிலமை இவ்வாறாக இருக்கும் பொழுது  சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியலுக்குள் உள் வாங்கப்பட்டார்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் வருகையின் பின்னார் பல்வேறு  அரசியல் நகர்வுகளும் மாற்றங்களும் உருவானது.சாதாரணதரம் மற்றும் ஆகக்கூடிய உயர்தரம் கற்ற மாணவர்களை அவர் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்து “சிறிபாதக்கல்லுரி”, “தன்சைட் கொட்டக்கல” முதலான ஆசிரியர் கலாசாலைகளை கொண்டு வந்தார். ஆக சௌமியமூர்த்தி தொண்டமானின் செயற்பாடுகள் இவ்வாறு செயல்பட ஆரம்பித்தது.தற்பொழுது  தமிழ்நாட்டில் அமரர் ஜெயலலிதாவைமக்கள் எவ்வாறு அவர்களின் கதாநாயகியாகப் பார்த்தார்களோ அவ்வாறே  மலையகத்தில் தொண்டமான் மக்களின் கதாநாயகனாகப் பார்க்கப்பட்டார்.தரம் ஐந்தில் பெயிலாகும் பிள்ளைகள் தேயிலைத்தோட்டத்தில் பெயரைப்பதிந்து வேலை செய்யப் போய்விடுவார்கள்.என்னுடன் கற்ற மூன்றே மூன்று மாணவிகளைத்தவிர மற்றைய பிள்ளைகள்  யாவரும் தோடட்டத்தில் கொழுந்தெடுக்கப்போனார்கள்.காரணம் அவர்களுக்கு  வேறுத்தெரிவென்பது இல்லை. சில ஆண்கள் புலிகளின் இயக்கத்தில்  ஈர்க்கப்பட்டு சதா அதைபற்றியே  கதைத்து கேட்டும் ஆண்மாணவர்கள் சிலர்  கடனுக்கு பணம் வாங்கிக்கொண்டு கிளிநொச்சிக்கு பயணமானதாக நினைவிலுண்டு.

கல்வி வளர்ச்சியின் பின்னரான கால கட்டத்தில் மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் டொமினிக் ஜீவா  மல்லிகை சிவா, அந்தனி ஜீவா முதலானோர் முக்கியமானவர்கள். மொழிவரதன் (தர்மலிங்கம்), சாரல்நாடன், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களும் முக்கியமானவர்களே.

பெண் எழுத்தாளர்களில்  பெயரிடும்படி பத்மாசோமகாந்தனை குறிப்பிட முடியும். அதிகமாகப்  பெண் எழுத்தாளர்கள் என்ன  எழுதினாலும் அவர்களைத்  தொடர்ந்து ஊக்குவிக்கும் செயற்பாட்டுத்தளம்  என்பது மிகவும் அருந்தலாகவே இருந்தது  என்பதைக்  கவனத்தில் கொள்ளப்படல்  வேண்டும். ஆக மலையகத்தில் இன்னும் 200 வருடங்கள் சென்றதன் பின்னும் மீனாட்சியம்மையையே நாங்கள் இன்றும் பெண் எழுத்துக்களுக்காக  நினைவுக்கூருகின்றோம். அதேபோல  பெண் எழுத்துக்களையும் நினைவுக்கூறுமளவுக்கு மலையகப்பெண்கள்  தமெக்கென்ற ஒரு அடையாளத்தை  முன் வைக்க எழுதிட வேண்டும்.மலையகத்தின் இலக்கிய செழிப்புக்கு பணியாற்றுதல் காலத்தின் அவசியமாகவும் உள்ளது.இப்போது நிறைய இளம் படைப்பாளிகள் தங்களின் எழுத்து வெளியை விரிவாக்கிக் கொண்டு வரும் நிலையினைக் காண்பதும் மனதுக்கு சிறு ஆறுதலாகவும் உள்ளமை குறிப்பிடத்கக்கது.

உச்சாந்துணை: மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை.

எஸ்தர்-இலங்கை 

எஸ்தர்

(Visited 143 times, 1 visits today)