எஸ்தரின் கவிதைகள்

எஸ்தர்

எல்லோரையும் எப்போதும் மறுத்திட
இயலாத பிரியத்தின் காதலொன்று பின்
தொடர்கின்றது.
நீங்கள் புறக்கணித்திருக்கலாம்
ஒன்றில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்
இரண்டுமே அற்று
தடுமாறி நின்றிருக்கலாம்.

அது உங்களை ஒரு பறவையைப்போல்
கடந்திருக்கலாம் அல்லது
நடுநிசிகளில் உங்கள் துயில் கூட்டை
கலைத்திருக்கக் கூடும்
அல்லது உங்களுக்கே எட்டாத
உச்சீயில் பழுத்த ஒரு இனிய பழமாக
இருந்திருக்கும்

அவளிடமோ அவனிடமோ
பேச மறந்த மெல்லிய வார்த்தையாயும்
எதிர்பாராமல் சாலையோரத்தின்
மழைநீரை அள்ளி வார்த்து
கடந்துப்போன ஒரு திணறிய அனுபவமாக
இருக்கலாம்.

நீங்கள் இருவருமே கட்டிய தடுப்பு சுவரொன்றை
தாண்ட இயலாமல்
சுவர் உயரமாகிப் போயிருக்கலாம்
காதலின் மாயம்
ஒரு நிஜமாக மறைந்துப்போவதுதான்
அதன் துயரம்!!

000000000000000000000000000

எஸ்தர்

விதவிதமான கலவரம் சுமந்த போர் தேசம் உன் தேகம்
தலைமுறையின் தாடியும்
தாகத்தின் கண்களும் உனக்குண்டு
என்னென்ன காட்சிகள் அன்பே
கனவின் சாளரத்தை நான் திறக்கும்போது
பல நூற்றாண்டு கவலைகள்
புலன்களை விட்டு எங்கே போகும்??

நிரந்தரமாய் நீ சொல்லும்
வார்த்தைதான் என்ன?
யாருமே நம்பிடாத
ஆசையெல்லாம் நீ சொல்லு
ஆகாயத்தில் நீ அமர ஒரு மேடை போடுகிறேன்
அதில் நீ அமரு நான் சாமரம் வீசுகிறேன்
உன் இதயத்தில்தான் எத்தனை வார்த்தைகள்
அதில் எழுதவேண்டும்
என்னைப்பற்றியக்குறிப்பொன்று
மலையும் ஒரு நாள் என் மேலே சரியலாம்
உன் பயணத்தை நான் தாங்கிடக்கூடுமோ
வரிக்குதிரையின் தழும்புகளாய்
அடுக்கு மொழியில் ஆலாபனை வேண்டும்.
மின் கம்பிகளில் துணிந்து அமர்ந்திடும் பறவை நான்
உன் வீட்டு மரங்களில் அமர்ந்திட
கிளைகளில்லை
பலவர்ணங்களில் துரோகம் உன்னை
உரசி இருக்கலாம்
ஒரு பாசாங்குக்கேனும் உன்னை தழுவவிடு? நான் விடைபெற…….

0000000000000000000000000000000

தேவை இதுவென தெரிந்து விட்டால் என் தேடல்
குறையுமா? ஆறாத காயங்கள் ஆயிரம் இங்கே
உன் தேகம் போர்த்தும் ஆடையாய் என் பார்வை படும்
உன் முகத்தில் உதிராத தாடியாய்
என் பாடல் இருக்கும்
பெய்யாத மழை நீ
பெய்துதான் என்னை
கரைப்பாயோ?
நீண்ட சாலைகளில் நான்
நடப்பேன்
உன் நினைவு வந்தால்
கொஞ்சம் நிற்பேன்
பாதி இரவில் விழிப்பேன்
உன்னைக் கனவு கண்டதாய்
நினைப்பேன்
நீ தொலைதூரத்தில் நோயுற்றீரா?
இல்லை என் நினைவு மனுக்களை
வாசித்தீரா நானறியேன்
விட்டு விலகாத நிழல் நீ
இரவிலும் நான் கேட்பது நியாயமா?
நீ இரவிலும்
பகல் போன்றவன்
துருப்பிடித்த கவலைகளை பளபளக்க
வைக்கிறதே உன் காதித
கைகள்!!

எஸ்தர்-இலங்கை 

எஸ்தர்

 

(Visited 193 times, 1 visits today)
 
எஸ்தர்

மலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும்- கட்டுரை-எஸ்தர்

  மலையக மக்கள் என்போர் அந்நிய  இந்தியத் தமிழர் என்ற ஒரு பிரிவினைக்குட்பட்ட  மக்களாகக் கணிக்கப்பட்டது ஒரு வரலாற்றுண்மை. ஆரம்பத்தில் “கொழுந்து  பறிப்பதற்கு  எதற்கு கல்வி?” என்ற நிலையிலிருந்தது. மலையக […]