மலையகமும் அரசியலும்-கட்டுரை-வரதன் கிருஷ்ணா

 

வரதன் கிருஷ்ணாமலையக தமிழ்ப்பேசும்  மக்களின்  அரசியல் வரலாற்றை   ஆராய்ந்தால்  அதில்  முதன்மையான  மனிதராக கோ . நடேச  அய்யரை  குறிப்பிடாமல்  இங்கு பயணிக்க  முடியாது, தஞ்சாவூரில்  ஒரு வர்த்தகராக, எழுத்தாளராக  இருந்த  அவர்    பின்னர்  இலங்கைக்கு  வந்த  அவர் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் வெள்ளையர்களால்  அடிமைப்படுத்தி  வைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பேசும்  மக்களின்  வாழ்க்கை பற்றி சிந்திக்க  தொடங்கினார், அந்த மக்களின்  விடுதலைக்காக  குரல் எழுப்பினார்,  1921ஆம்  ஆண்டு தேசநேசன்” என்ற  தமிழ் வார இதழை  பதிப்பித்தார்  இதுதான்  இலங்கையின்  முதலாவது தமிழ் பத்திரிகையாக  பதிவாகியுள்ளது.

1924 ஆம் ஆண்டு  முதல்  1931ஆம்  ஆண்டுவரை  இலங்கையின்  சட்டப்பேரவையில்  ஒரு அங்கத்தினராக  பதவி வகித்தவர்,  இவர் மலையக மக்களின் குரலாகவே  இருந்தவர்  பின்னர்  1936 முதல் 1947வரை  இலங்கை  சுதந்திரம் பெறும்வரை  சட்டப்பேரவையில்  அட்டன்  பிரதிநிதியாக  இருந்தவர்.

பெருந்தோட்ட மக்களை விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காக  ஒரு  புடவை  வியாபாரிபோல  தோட்டங்களுக்குள்  உள்ளிட்டு  அந்த மக்களை  சிந்திக்க  வைத்தவர், அவர் மட்டும்  இன்றி  அவரோடு  அவரது  மனைவி மீனாட்சி  அம்மையாரும்  இணைந்து  பெருந்தோட்ட  தமிழர்களின்  விடுதலைக்காக போராடினார்கள், அவர் வெளியிட்ட  தி சிட்டிசன் ” என்ற  ஆங்கில  ஏடு வெள்ளையர்களை  சிந்திக்க  வைத்தன,  எனினும்  1947ஆம்  ஆண்டு  இடம்பெற்ற  தேர்தலில்  மஸ்கெலியா  தொகுதியில்  தோல்வியுற்றார், நேரு  இலங்கை வந்தபோது  உருவாக்கப்பட்ட  இலங்கை  இந்திய  காங்கிரசில் ( இன்று  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் )    இணைந்து செயலாற்றினால்  மறைந்த சவுமியமூர்த்தி  தொண்டைமானின்  நேர்மையற்ற  தன்மையால்  பின்னர்  அதிலிருந்து  ஒதுங்கினார்.

1947ஆம்  ஆண்டு மலையக  மக்கள் சார்பாக ஏழு  பிரதிநிதிகள்  இலங்கை  நாடாளுமன்றில்  அங்கம்  வகித்தனர், தொண்டமான், இராஜலிங்கம்,  சுப்பையா  , சி, வேலுப்பிள்ளை , குமாரவேலு , ராமானுஜம்,  என மலையக  மக்களின்  பிரதிநிதிகளாக  இருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது,  அப்போது  இலங்கையின்  சனத்தொகையில்  மலையக  மக்கள்  11 வீதமானவர்களாக இருந்தனர் , பின்னர்  இலங்கை  சுதந்திரம்  பெற்றபின்னர் முதலாவது  நாடாளுமன்றில்  கொண்டுவரப்பட்ட குடியுரிமை  சட்டத்தில்  மலையக மக்கள்  நாடற்றவர்களாக  ஆக்கப்பட்டனர்  நாடாளுமன்றில்  அங்கம் வகித்த  ஏழு பிரதிநிதிகளும்  பதவியிழந்தனர், இந்த சட்டத்துக்கு  ஜி ஜி  பொன்னம்பலம்  துணைப்போனார்  என்ற பழிச்சொல்  இன்னும் முடிவுக்கு  வரவில்லை.

நாடற்றவர்கள் நாடு கடத்தப்பட்ட அவலம்.

பின்னர்  இந்த மக்களின்  குடிப்பரம்பல்  அதிகரித்து வருவதை  அறிந்த 1964ஆம்  ஆண்டு இலங்கையின்  பிரதமராக இருந்த சிறிமாவோ  பண்டாரநாயக்க  அப்போது  இந்திய பிரதமாக  இருந்த பகதூர்  சாஸ்திரியோடு  இருந்த உறவின்  காரணமாக  ஒரு ஒப்பந்தத்தை செய்தார்  அந்த ஒப்பந்தத்தின்  ஊடாக சுமார் நான்கு லட்சம்  பெருந்தோட்ட தமிழர்கள்  நாடு கடத்தப்பட்டனர்.

1977ஆம்  ஆண்டுக்கு பின்னரே முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர்!

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னரே தொண்டமான்  அவர்கள் நுவரெலியா  தொகுதியில்  போட்டியிட்டு நாடாளுமன்றம்  சென்றார், அவர் ஐக்கிய தேசிய கட்சியின்  ஆதரவோடு  ஜேஆர்  அரசில் கால்நடை  அமைச்சராக  பதவி வகித்து  ஜேஆரிடம்  சிறு சிறு சலுகைகளை  பெற்று  தனது தொழிற்சங்கத்தை  வளர்த்தார்  தொடர்ச்சியாக ஐதேக  அரசில் அமைச்சரவை  அந்தஸ்து கொண்ட ஒரு அமைச்சராக  வலம்வந்தவர் 1994ஆம்  ஆண்டுவரை இலங்கை  அரசியலில்  கோலோச்சிய  அவர் 1994ஆம்  ஆண்டு சந்திரிக்கா  அம்மையார் தலைமையில்  பொதுஜன  ஐக்கிய முன்னணி  ஆட்சியை  கைப்பற்றியதும்  சிறிது காலம் நாடாளுமன்ற  உறுப்பினராக  இருந்த அவர் சந்திரிகா  அம்மையாரிடம் பேரம்பேசி  மீண்டும் அமைச்சரானார்,

இவர் தனது  அரசியல் வாரிசாக  தனது மகனான  இராமநாதனை  அரசியலுக்கு  கொண்டு வந்தாலும்  அவர்  அதை ஏற்க தயாராக  இருக்கவில்லை, பின்னர்  அவரின்  மகனான  பேரன்  ஆறுமுகத்தை  அரசியலுக்கு  கொண்டு வந்தார்.  அவர் மரணிக்கும்வரை  அமைச்சராகவே இருந்தார்,  இவர் நாடற்றவர்களாக  இருந்த 94ஆயிரம் பேருக்கு பிரஜாவுரிமை  பெற்றுக்கொடுத்தார்  என்று பலர் புகழ்ந்தாலும்  80களின்  நடுப்பகுதியில்  ஈழப்போராட்ட இயக்கங்களுக்கும்  ஜெ ஆரின்  அரசுக்கும்  இடையில்  இடம்பெற்ற பேசுச்சுக்களில்  ஈரோஸ் இயக்கம்  முன்வைத்த  மலையக மக்களின்  பிரஜாவுரிமை கோரிக்கையை மட்டுமே  ஜேஆர்  செவிசாய்த்தார்  என்பதே உண்மை.

சந்திரசேகரனின்  அரசியல் பிரசன்னம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலவாக்கலை  அமைப்பாளராகவும்  தொண்டைமானின் விசுவாசியாகவும்  இருந்த சந்திரசேகரன்  அவர்கள் 86களில் இதொகாவை விட்டு தனியாக மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியை  தொடங்கினார், இவரது புதிய அரசியல் பிரவேசத்துக்கு மலையகத்தில் பரவலாக  ஆதரவு திரண்டது அதைவிட  பல புத்திஜீவிகள்  இவரோடு கைக்கோர்த்தனர் 1987ஆம்  ஆண்டு  தேர்தலில் புளொட்  இயக்கத்துடன்  இணைந்து மலையகத்தில்  தேர்தலில் போட்டியிட்டு  தோல்வியை தழுவினார்  இவரது கூட்டை மலையக  மக்கள் விரும்பவில்லை பின்னர் புளொட்டுக்கும்  தனக்கும் தொடர்பு  கிடையாது என அறிக்கை விடுத்தார், அதன் பின்னர்  கொழும்பு குண்டு வெடிப்புக்கு  காரணமாக  இருந்த விடுதலைப்புலிகளின்  உறுப்பினர்  அப்புச்சி  வரதனுக்கு  அடைக்கலம்  வழங்கினார் என்ற குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்டு  சிறையில்  அடைக்கப்பட்டார்,  இவர்  சிறையில் இருக்கும்போது  நடைப்பெற்ற  மாகாணசபை  தேர்தலில்  போட்டியிட்டு  வெற்றிப்பெற்றார்,  பின்னர் விடுதலையான  இவர் 1994ஆம்  ஆண்டு நடைபெற்ற தேர்தலில்  போட்டியிட்டு நுவரெலியாவில்  வெற்றியீட்டினார், அப்போது  ஆட்சியமைக்க திண்டாடிய சந்திரிகா  அம்மையாரின்  ஆட்சிக்கு தக்க வைக்க அந்த அரசில் இணைந்து பிரதியமைச்சரானார், இவர் அமைச்சரான பின்னர் மலையக பகுதிகளில் தனி வீடுகள்  அமைக்கும்  திட்டத்தை  ஆரம்பித்து வைத்தார் இவரது மறைவுக்கு பின்னர் இவரால்  ஆரம்பிக்கப்பட்ட  மலையக மக்கள் முன்னணி வீழ்ச்சி கண்டுள்ளது.

யார் இந்த  அமைச்சர்  திகாம்பரம்?

மலையக தோட்டப்புறமொன்றில் மடக்கொம்பரை  தோட்டத்தில்  ஒரு தொழிலாளிக்கு  பிறந்த பழனி திகாம்பரம் சிறு வயதில்  கொழும்பு பகுதியில்  ஒரு கடை சிப்பந்தியாக தனது வாழ்க்கையை  தொடங்கிய இவர் பின்னர் பெரும்  வர்த்தகராக வலம்வந்தார்,  இவரை அரசியலுக்குள் உள்வாங்கிய சந்திரசேகரன்  அவர்கள் இவரை தனது கட்சியின் வேட்பாளராக 2004ஆம்  நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார், அதன் பின்னர் சந்திரசேகரனுடன்  இருந்த கருத்து  மோதல் காரணமாக  அந்த கட்சியில்  இருந்து ஒதுங்கி  தொழிலாளர்  தேசிய சங்கத்தில்  இணைந்து  அந்த கட்சியின்  தலைவரானார் பின்னர் ஐதேக சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியாவில் நாடாளுமன்றுக்கு தெரிவான  இவர் பின்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் கட்சி தாவி பிரதியமைச்சரானார், அதன் பின்னர் கடந்த தேர்தலில் மலையக மக்கள் முன்னணி மற்றும் மனோகணேசனின் ஜனநாயக  முன்னணியியுடன்  கூட்டு சேர்ந்து தமிழ் முற்போக்கு  கூட்டணியை  அமைத்து  ஐதேக சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியா  மாவட்டத்தில்  பெருந்தொகையான  வாக்குகளை பெற்று அமைச்சரவை  அந்தஸ்து உள்ள அமைச்சரானார்,  இவர் பதவியை பொறுப்பேற்றவுடன்  மலையக பகுதிகளில்  வீடமைப்பு திட்டங்களை  ஆரம்பித்து அதை செயற்படுத்தி வருகிறார், இவரின் அரசியல் வரவு இலங்கை தொழிலாளர் காங்கிரசின்  நீண்டகால  செல்வாக்கை மலையகத்தில் வீழ்ச்சியடைய  செய்தார், மறுபுறம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய உறுப்பினராக  இருந்த இராத கிருஷ்ணன்  அந்த கட்சியை விட்டு பிரிந்து சந்திரசேகரனால்  உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைமையை ஏற்று செயலாற்றுகிறார், தற்போது தமிழ் முற்போக்கு  கூட்டணியில்  ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்று அமைச்சர்களையும்  தனதாக்கியுள்ளது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆறுமுகன் மற்றும்  அந்த கட்சியின் தலைவர் மு. சிவலிங்கம்  ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர், 1947ஆம்  ஆண்டு இலங்கை நாடாளுமன்றில் ஏழு உறுப்பினர்கள்  அப்போது இலங்கை சனத்தொகையில்  மலையக மக்கள் 11 வீதம், 2017 நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்  இலங்கை மக்கள் தொகையில் ஏழு வீதம், திட்டமிட்டு ஒரு இனத்தின் விகிதாசாரத்தை சிதறடித்த வரலாறு மட்டுமே எஞ்சி நிற்கின்றது.

வரதன் கிருஷ்ணா-கனடா 

வரதன் கிருஷ்ணா

(Visited 142 times, 1 visits today)