‘நான் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் எவ்வளவோ விலை கொடுத்து மேலே வந்தவன்’ -டொமினிக் ஜீவா-கலந்துரையாடல்- எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஆரம்பம்

எஸ்.கே.விக்னேஸ்வரன்
ஓவியம் : டிஷாந்தினி நடராசா

அப்போது எங்களுக்கெல்லாம் – எல்லா எழுத்தாளர்களுக்கும் – களமாக அமைந்தது சுதந்திரன் பத்திரிகைதான். சுதந்திரன் ஒரு தமிழரசுக் கட்சியின் பத்திரிகை என்றாலும் கூட அது எங்களைப் போன்ற எழுத்தாளர்களை எல்லாம் அரவணைத்துப் போகிற தன்மையைக் கொண்டிருந்தது. அப்போது ஆசிரியராக எஸ்.டி. சிவநாயகம் இருந்தார். பிரேம்ஜி உதவி ஆசிரியராக இருந்தார். ஆனாலும் அது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து எம்மைப் போன்ற முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்தாளர்களுக்கு களம் தருவதாக விஜயபாஸ்கரன் அவர்களால் நடாத்தப்பட்டு வந்த சரஸ்வதி வெளிவந்து கொண்டிருந்தது. பின்னர் அது நின்றுபோக ரகுநாதனின் சாந்தி என்ற பத்திரிகை வெளிவந்தது. அதுவும் நின்ற பிறகு எமக்கு எமது கருத்துக்களைச் சொல்ல ஒரு பத்திரிகையின் தேவை எழுந்தது. இது மல்லிகையைக் கொண்டுவருவதன் அவசியத்தை எனக்கு ஏற்படுத்தியது. சரஸ்வதியில் எழுதியது மூலமாகவும், தமிழ்நாட்டு இடதுசாரிகளுடனான உறவாலும் எனக்கு ஏற்பட்ட தொடர்புகள் பல விடயங்களைப் புதிதாகச் சிந்திக்க வைத்தன. விந்தன் என்ற படைப்பாளியின் எழுத்துகளும் அவர் நடாத்திய மனிதன் என்ற சஞ்சிகையும் என்னை மிகவும் ஆட்கொண்டன.

மல்லிகையின் முதலாவது இதழ் யாழ்ப்பாணத்தில் – ஒரு சலூனில் இருந்து, அந்தச் சலூனில் சவரத் தொழிலாளியாக வேலை செய்த ஒருவனை ஆசிரியராகக் கொண்டு – வெளிவரத் தொடங்கியது. இருபது சதம் ஒரு பிரதியின் விலை. என்னைப் பொறுத்த வரையில் மல்லிகை ஒரு வெறும் பத்திரிகையாகத் தோன்றியதாக நான் கருதவில்லை. பல்வேறு முரண்பாடுகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு எண்ணங்களின் தொகுப்பாகத்தான் மல்லிகை தோன்றியது. அன்றைய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொண்டிருந்தாலும், மல்லிகை முழுக்க முழுக்க அப்படியே இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்க விமர்சகர்களாக இருந்த கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மகாகவியை அங்கீகரிக்காத போதும், நான் அவரது படத்தை அப்போதே மல்லிகையின் அட்டைப் படமாகப் பிரசுரித்தேன். கொழும்புக்குச் சென்று, அவரைக் கண்டு அவரது படத்தை வாங்கி வந்து பிரசுரித்தேன்; இது வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவம். எனக்கு ஒரு உறுதியான கருத்து இருந்தாலும் கூட முழு தேசத்திலும் உள்ள ஆரோக்கியமான கருத்துக்களையும் மல்லிகையில் பிரசுரிக்க வேண்டுமென்று நான் கருதினேன் உண்மையில் சொல்வதென்றால், நான் எனது சுயகருத்துக்குள் ஆட்பட்டு இருந்திருப்பேன் என்றால் என்னால் இவ்வளவு காலத்திற்கு மல்லிகையைக் கொண்டுவந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். மல்லிகையின் ஜனநாயகப் பரம்பல், அதன் அரவணைத்துப் போகும் போக்கு என்பன அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நான் சாதாரணமாக மனிதனாக உருவெடுக்கவில்லை. மண்புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்தவன். ஒவ்வொரு வளர்ச்சிக்கும் எவ்வளவோ விலை கொடுத்து மேலே வந்தவன். அந்தப் பதினெட்டு வயதில் இருந்த இலட்சிய வேகத்தில் நான் எடுத்த முடிவு, இலட்சிய உறுதி இன்று வரை என்னுள் நின்று என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை. உண்மையில் அதற்காக நான் எதையும் செய்யவில்லை. ஒரு நல்ல கணவனாக, நல்ல தந்தையாக நான் இருந்ததில்லை. இயக்கம், எழுத்து, பத்திரிகை என்ற வேகம் மட்டுமே என்னை முழுதாக ஆட்கொண்டிருந்தது. இதுதான் நான் உலகெங்கிலும் இல்லாத ஒரு புதுமையைச் செய்ய எனக்கு அடிப்படையாக இருந்தது.

வரலாறு படைத்தோம்

இன்றைக்கும் எனக்கு எதிரான பல முரண்பாடுகள், நீதியற்ற பிரச்சாரங்கள் இருக்கக்கூடும். இருந்தாலும் நான் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். நான் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு விடயத்தைச் சாதித்திருக்கிறேன். உலக நாடுகள் எங்கேயும் – ருசியாவில் கூட – நடக்காத ஒரு பெருமைக்குரிய வேலையை செய்திருக்கிறேன். இது இன்றைக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால் நான் செய்த பெருமை நின்று நிலைக்கக்கூடியது. ஒரு சலூனுக்குள் இருந்து ஒரு இலக்கியப் பத்திரிகை வெளிவந்தது. அந்தச் சலூனில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு சவரத் தொழிலாளியை ஆசிரியராகக் கொண்டு அது வெளிவந்தது. அதிலும் வெளியில் பகிரங்கமாக விளம்பரம் போட்டு எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் சிறப்பாக அது செய்யப்பட்டது. சவரத் தொழிலாளியாக இருந்துகொண்டே நான் மல்லிகையை ஏழு எட்டு வருடமாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தேன். பிரபலமான பல கல்விமான்கள் எல்லாம் அப்போது மல்லிகையில் எழுதினார்கள். இதற்கு பக்கபலமாக இருந்தது தமிழ் நாட்டில் எனக்கு இருந்த தளம்; அதனோடு எனக்கு இருந்த இலக்கிய உறவு. மாவிட்டபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேச உரிமை வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் சலூனுக்குள் இருந்து மல்லிகை வெளிவந்தது. இது என்னைப் பொறுத்தவரையில் உலகத்தில் வேறெங்கும் நடக்காத பெருமை என்றே சொல்வேன். இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். யு.என்.பி. அரசாங்கத்தின் – எமது கொள்கைகளுக்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட – யு.என்.பி. அரசாங்கத்தின் அமைச்சர் அஸ்வர் அவர்கள் மல்லிகைகையும் அதன் ஆசிரியரையும் பாராட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இது பாராளுமன்ற கன்சாட்டில் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதுவும் உலக வரலாற்றில் இருக்கக்கூடிய எந்தச் சிற்றிலக்கியச் சஞ்சிகைக்கும் கிடைக்காத ஒரு பெருமை என்று சொல்வேன். இவை வரலாற்றில் பதியப்பட வேண்டிய பெருமைகள் என்று நான் நம்புகிறேன்.

யாழ்ப்பாணச் சமூகம்

எங்கடை யாழ்ப்பாணச் சமூகத்தில் நாங்கள் எவ்வளவு மோசமாக அடக்கப்பட்டு, உரிமை பறிக்கப் பட்டு அவலத்தில் இருந்திருக்கிறோம் எண்டு சொல்லத் தேவையில்லை. அந்தளவு மோசமான ஒடுக்குமுறைகள் நிறைந்த யாழ்ப்பாணத்தில் இருந்து தான் இந்தப் புதுமையும் நடந்தது. சலூனுக்குள் இருந்து ஒரு பத்திரிகை – இலக்கியப் பத்திரிகை – வெளிவந்தது. நாங்கள் அண்டைக்கு இருந்த அவலத்திலை இது ஒரு நம்ப முடியாத புதுமைதான்.

பாருங்கள், நான் சாகித்ய அக்கடமிப் பரிசு பெற்ற – தண்ணீரும் கண்ணீரும் தொகுதிக்கு இது கிடைத்தது – செய்தியை வீரகேசரியில் வாசித்த ஒரு தமிழ்ப் பண்டிதர் – கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் படிப்பித்த ஒரு பண்டிதர் – தமது மாணவர்களைக் கூப்பிட்டு – இந்த மாணவர்களில் தெணியானும் ஒருவர் – இந்தத் தேசத்தில் ஒரு அதிசயம் நடந்திருக்கு தெரியுமா என்று கேட்டாராம். மாணவர்களுக்கு விளங்கவில்லை. அவர் சொன்னாராம் நாவிதனுக்கு சாகித்ய அக்கடமிப் பரிசு கிடைச்சிருக்கு என்று. அந்தளவுக்கு எள்ளலை எதிர்கொண்டு வந்தனாங்கள். எவ்வளவு விலை குடுத்து நாங்கள் வந்திருக்கிறம் எண்டு தெரியுதுதானே? ஆனால் எந்த யாழ்ப்பாணத்தான் இந்தளவுக்கு எங்களை ஒடுக்கிறானோ, இந்தளவு அவலங்கள் நாம் அனுபவிக்கக் காரணமாக இருந்தானோ அதே யாழ்ப்பாணத்திலிருந்துதான் மல்லிகை தொடர்ந்து வெளி வருவதற்கான உதவியும் கிடைத்தது. எவ்வளவு மோசமாக நாம் நடத்தப்பட்டோமோ, எமது மனித உரிமைகளும் சமூக உரிமைகளும் நசுக்கப்பட்டனவோ அந்த அளவுக்கு மல்லிகை தொடர்ந்து வெளிவருவதற்கான உதவியும் கிடைக்கத்தான் செய்தது. அந்த அளவுக்கு ஆரோக்கியமான ஆதரவு உயர்சாதியைச் சேர்ந்த ஆக்களிடமிருந்தும் எனக்கு கிடைக்கத்தான் செய்தது.

இதிலை என்ன கெட்டித்தனம்? பெரிசா ஒண்டுமில்லை. நான் ஓண்டும் வானத்தை வில்லா வளைச்சுப் போட்டன் எண்டு சொல்லவில்லை. ஆனால் இந்தச் சமூகத்துக்கை இருக்கிற ஆரோக்கியமான சக்திகளில் இனம் கண்டதுதான் எண்ட கெட்டித்தனம். இந்தப் பின்னணி பலருக்கு இப்பதான் விளங்குது. ஆனால் எனக்கு அப்பவே தெரியும் – செய்யும் போதே தெரியும் – ஏனெண்டால் நான் பல போராட்டங்களுக்குள்ளாலை வந்தவன். ஒரு மார்கழி மாதத்தில் நட்ட நடுச் சாமத்தில் மாவிட்ட புரத்திலே வைச்சு எங்களுக்கு பீவாளி கரைச்சு ஊத்தின வங்கள். சுந்தரலிங்கத்தின்ரை தலைமையிலே. இதை நான் பகிரங்கமாகப் பல கூட்டங்களிலை சொல்லியிருக்கிறேன். அப்பிடிப்பட்ட யாழ்ப்பாணத்தில் இருந்தது நாங்கள் வரலாறு படைச்சிருக்கிறம். இது வேறை யாருக்கும் கிடைக்காத அனுபவம். அவை தங்கட அறிவு மட்டத்தில் இருந்து, கெட்டித்தனத்திலை இருந்து எழுதியிருப்பினம். ஆனால் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர்கள் நானும் டானியலும். ஏனெண்டால் எங்களைத் தூக்கி விடுகிற அளவுக்கு எந்தச் சமூகப் பின்னணியோ, பொருளாதாரப் பின்னணியோ, கல்விப் பலமோ எமக்கு இருக்கவில்லை. நாங்கள் வெறம் உதிரிகள். ஆனால் உதிரிகள் எண்டு சொல்கிற நாங்கள் வரலாறு படைச்சிருக்கிறம். இதுக்கு காரணம் இலட்சியம் – பதினெட்டு வயதிலே ஈழத்து இலக்கியம் கொடி கட்டிப் பறக்கும் எண்ட நம்பிக்கையுடன் ஏற்படுத்திக் கொண்ட இலட்சியம் – இண்டைக்கு அது நடந்திருக்கு. அது ஈழத்தில் மட்டுமல்ல, முழு உலகத்திலும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கு.

இடதுசாரி இயக்கம்

உங்களுக்குத் தெரியும். நான் ஒரு பரம்பரை இடதுசாரி. இந்த இடதுசாரி இயக்கத்தில் பல அனுபவங்கள் எனக்கு உண்டு. உயிர்ப் பயம் கூட ஏற்பட்டிருக்கு. ஒரு முறை எம்.சி. சுப்பிரமணியம் எம்.பி.யாக வந்தபோது பருத்தித்துறைக்கு ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் போய்க்கொண்டிருந்தபோது வல்லை வெளியில் வைத்து எங்கடை காருக்கு பாம்ஸ் எறியப்பட்டது. அப்பவே மாற்றுக் கருத்துகளுக்கு எதிரான பயங்கரவாதம் அங்கை ஆரம்பிச்சிட்டுது. ஆனாலும் எவ்வளவுதான் எங்களை எதிர்த்தாலும் நாங்கள் இந்த மக்களை நேசிக்கிறனாங்கள் எண்ட மதிப்பு அவையளுன்னுள்ளை உள்ளுர் இருந்தது எனக்குத் தெரியும். இன்னொரு தடவை தமிழரசுக் கட்சியும் டட்லியும் சேர்ந்து மந்திரிசபை அமைத்து அதில் திருச்செல்வம் சேர்ந்த நேரம், ஒரு மேதின ஊர்வலம் நடந்தது. ஒரு பக்கத்தில் தமிழரசுக் கட்சியின்ரை ஊர்வலம். மற்றப்பக்கம் எங்கடை. இப்ப இருக்கிற யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் தான் எங்கடை கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எங்கடை ஊர் வலத்துக்கு கல்லெறி விழுந்தது. நான் மண்டை உடைபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு 9 இழை போடப்பட்டது. எனக்கு தையல் போட்டு மருந்து கட்டினது டொக்டர் நந்திதான். அவர் அப்ப அந்த ஆஸ்பத்திரியில் டொக்டராக இருந்தார்.

சந்திப்பு மையம்

கொழும்பிலை இருந்தோ, பிற பிரதேசங்களிலை இருந்ததோ யாழ்ப்பாணம் வாற எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கிற சந்திப்பு மையமாக மல்லிகைக் காரியாலயம் இருந்து வந்தது. ஜீவாட்டை வந்திடுங்கோ சந்திப்பம் எண்டு சொன்னால் சரி. இது எனக்கு ஒரு வளமான இலக்கிய வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை நானும் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். எங்கடை நோக்கம் நானும் ஒரு எழுத்தாளனாக பலர் மத்தியிலும் பேசப்பட வேணும் எண்டதல்ல. அப்படி நான் ஒரு காலமும் நினைக்கயில்லை. மல்லிகையூடாக நிறைய எழுத்தாளார்கள் உருவாக வேண்டும். எழுத்துக்கள் வர வேண்டும் எண்டுதான் நான் விரும்பினேன். இப்ப திரும்பிப் பார்க்கிறேன். எங்கடை சாதனை மிகப் பெரிசு எண்டு தெரிகிறது. இப்ப கிட்டடியில் நடந்த – பண்டாரநாயக்கர் ஞாபகார்ந்த மண்டபத்தில் நடந்த – புத்தகக் கண்காட்சி விழாவிலே பார்க்கேக்கை நாங்கள் நினைச்சுப் பார்க்க முடியாத பல இடங்களில் இருந்து நிறையப் புத்தகங்கள் வெளிவந்திருக்கிறதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. நாங்கள் 50களில் இலக்கிய உலகுக்கு வரேக்கை கணேசலிங்கன்ரை ஒரு தொகுப்புத்தான் – நல்லவன் என்ற சிறுகதைத் தொகுப்பு – வெளிவந்திருந்த ஒரு உருப்படியான நூல். அதுவும் தமிழ்நாட்டில் இருந்து வெளியிடப்பட்டிருந்தது. இப்ப ஒரு கிழமைக்கு 2 – 3 புத்தங்கள் இஞ்சையிருந்தே வருகுது. இப்படி வாறதிலை கணிசமான அளவு நல்லதுகளும் வருகுது. இது ஒரு பெரிய சாதனை.

சந்தைப்படுத்தல்

பத்திரிகை வெளியிடுகிறது எண்டு நாங்கள் வீம்பு பேசினாலும் எங்களிட்டை ஒரு பெரிய பலவீனம் இருக்குது. எங்களுக்கு சந்தைப்படுத்தத் தெரியாது. இப்ப ஈழத்து இலக்கியம் அது இது எண்டு பேசப்படுகிறது. ஆனால் அப்ப மல்லிகையைத் தொடங்கியதுபோது அதை ஒரு விளையாட்டுப் பிள்ளை வேலையாகத்தான் எல்லோரும் பார்த்தினம். பொதுவா 3 – 4 இதழ்களுக்கு மேல் சிற்றிலக்கியப் பத்திரிகைகள் தாக்குப்பிடிக்கிறதில்லை. இதுக்கு காரணம் எங்கடை சந்தைப்படுத்தல் பலவீனம் தான். எங்கடை சனத்துக்கு ஒரு பத்திரிகை வந்தால் அது தொடர்ந்து வெளிவரும் எண்ட நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. அது வரும் எண்ட நம்பிக்கையைக் கட்டி எழுப்புவது எங்கடை பெரிய பிரச்சினையாக இருந்தது. யாரும் முல்லை காசு தராவிட்டாலும் பரவலாக்குவதும் திணிப்பதும் அவசியம் எண்டு நான் நினைச்சன். அதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. தென்னிந்தியப் பிரசா உரிமைச் சட்டம் வந்தபோது இலங்கையிலை இருந்த எல்லா சலூன்களிலுமிருந்த தென்னிந்திய சவரத் தொழிலாளிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேற இந்த சலூன்களை கைப்பற்றிக் கொண்டது எங்கடை யாழ்ப்பாணத்துத் தொழிலாளிகள் தான். எனக்கு அந்த உறவு நல்ல பலமாக இருந்தது. கொழும்பு, பதுளை, நாவலப்பிட்டி எண்டு இலங்கையின்ரை கணிசமான பகுதிகளில் இருக்கிற சலூன்களோட எனக்கு தொடர்பு இருந்தது. எனக்கு இப்படிச் செய்யலாம் எண்ட எண்ணம் வந்ததுக்கு காரணம் பெரியார் தான்.

மலேசியாவில் பெரியார்

பெரியார் ஒரு தடவை மலேசியாவுக்கு வந்தபோது இரு நண்பர்கள் பார்க்கச் சென்றிருந்தார்கள். அவர்களிடம் பெரியார் எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நண்பர்களில் ஒருவருக்கு சற்று தயக்கம். சங்கடப்பட்டிருக்கிறார். மற்ற நண்பர் சொல்லும்படி அவரை வற்புறுத்தவே தான் சிகையலங்கரிப்பு நிலையமொன்று நடாத்துவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பெரியாருக்கு மிகப் பெரிய சந்தோசம். சிகையலங்கரிப்பு நிலையம் நடத்திறியளோ? எனக்கு உங்களைப் பார்த்ததிலை எவ்வளவு சந்தோசம் தெரியுமோ? குடியரசுப் பத்தரிகை தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் போவதற்கு இந்த சிகையலங்கார நிலையங்கள் தான் பெருமளவு உதவி செய்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி நன்றியுடன் அதை நினைவு கூர்ந்தார்.

இந்த இருவரில் ஒருவர் எனது நண்பர். அவர் இந்தக் கதையை எனக்குச் சொன்னபோது நான் அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டேன். எல்லா சலூன் முகவரிகளையும் தேடி எடுத்துக்கொண்டேன். காசு வருகுதோ இல்லையோ எல்லா சலூனுக்கும் மல்லியையை அனுப்பத் தொடங்கினேன். இது எனக்கு நல்லா உதவிச்சுது. இது ஒரு வகை சுயசாதி அபிமானம் எண்டுகூடச் சொல்லலாம். ஆனால் அதை நான் என்னர தனிப்பட்ட லாபத்திற்குப் பயன்படுத்தயில்ல. ஒரு இலக்கியப் பத்திரிகையை வளர்க்கப் பயன்படுத்தினேன். ஒரு சலூனுக்குள்ளை ஒரு பத்திரிகை இருந்தால் அது அந்தப் பிரதேசம் முழுக்கப் பிரபலமாகிவிடும். அட்டையில என்ரை பேரை ஆசிரியர் டொமினிக் ஜீவா எண்டு போட்டு வருகிறேன். இது நல்ல வேலை செய்யுது. என்பிரபலத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். நான் படிச்ச மாஸ் சைக்கோலஜி. அந்தச் சமூகத்திலை பிறந்தவன் என்ற முறையிலை நான் அதைச் சரியாத் தெரிஞ்சுகொண்டன். மல்லிகை தொடர்ந்து வருகுது எண் நிறையப் பேர் சொல்லுகினம். ஆனால் அதற்கு நான் குடுத்த விலை பலருக்குத் தெரியாது. என்னை விட வசதியான பொருளாதாரப் பலம் கொண்டவர்களால்கூட இதைச் செய்ய முடியாது. பத்திரிகை நிலைச்சு நிக்கிறது என்ரை கெட்டித்தனம் அல்ல. வெகுசன மனோபாவத்தை விளங்கிக் கொண்டதுதான் என்ரை கெட்டித்தனம். என்ரை சமூக ஆதரவை நல்லாப் பயன்படுத்தி அதை ஒரு வலைப்பின்னலா மாற்றிக் கொண்டன். திரும்பிப் பார்க்கையுக்குள்ள இது ஒரு நல்ல பெறுபேறாகத்தான் தெரியது.

படிப்பும் படைப்பும்

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோருடைய செல்வாக்கு மல்லிகையில் இருந்ததாக விமர்சனங்கள் எம்மீது வைக்கப்படுவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அதாவது நாங்கள் பேராசிரியர்கள் பல்கலைக் கழகக்காரர்கள் என்பதற்காக அவர்களை அணுகவில்லை. அவர்களின் தனித்திறமை, அவர்களது பார்வை, முற்போக்கு இலக்கியத்தில் அவர்கள் வைத்திருக்கின்ற கண்ணோட்டம் என்பவற்றுக்காகத்தான் நாங்கள் அவர்கள் மாணவர்களாக இருந்த காலத்திலேயே இணைந்து வேலை செய்தோம். காலப்போக்கில் அவர்கள் பல்கலைக் கழகத்திற்குப் போனார்கள். நாங்கள் வெளியே இருந்து இயங்கினோம். ஆனால் கைலாசபதி, சிவத்தம்பி தான் முற்போக்கு எழுத்துக்களை அங்கீகரித்து ஆதரிக்க வேண்டும் என்ற நிலை வந்ததற்குப் பிறகு கல்விப்பீடம் குறிப்பாகச் சொல்லப் போனால் பல்கலைக் கழகம் தாங்களும் எங்களை அங்கீகரிக்க வேணும் என்ற நிலைக்கு வந்த சேர்ந்தது. நாங்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தனாங்கள். படிப்பு வேறு, படைப்பு வேறு. உலக வரலாற்றில் எந்தப் பெரிய கொம்பான கொம்பனான கல்விமான்களும், பெரிய படைப்பாளியாக இருந்ததில்லை. இது பிரான்சிலையும் சரி, அமெரிக்காவிலையும் சரி, சோவியத்திலையும் சரி எங்கேயும் இதே நிலைதான். ஆனால் இங்கை கைலாசபதி, சிவத்தம்பியின்ரை ஆளுகைக்கு உட்பட்டு வரவர, எங்கடை உட்போராட்டங்களின்ர விஷயங்கள் வெளியில தெரியவர, அவர்களும் முக்கியத்துவம் பெற்று வரவர இலங்கையில ஒரு புதிய நிலைமை உருவாகத் தொடங்கியது. இப்படியான ஆக்களின்ரை அங்கீகாரம் கிடைத்தால்தான் ஈழத்து இலக்கியம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுத்தாளர்களிடையே வளரத் தொடங்கியது. இதை முழுக்க முழுக்க மூர்க்கமாக நானும் டானியலும் எதிர்த்தனாங்கள். காரணம் நாங்கள் படைப்பாளிகள். இரண்டாவது அவர்களுக்கு இருந்த அளவு செல்வாக்கு எமக்கும் தமிழ் நாட்டிலை இருந்தது. ஜெயகாந்தனோ ரகுநாதனோ விஜயபாஸ்கரனோ எல்லோருடனும் எமக்கும் தொடர்பிருந்தது. கிட்டத்தட்ட அவர்களுக்கு இருந்த தமிழ் நாட்டுச் செல்வாக்குக்கு சமனாக படைப்பாளிகள் மத்தியிலிருந்து அவர்களுக்கு மாற்றீடாக சொல்லக்கூடிய அளவு செல்வாக்கு எமக்கும் இருந்தது. இந்தக் கட்டத்தில் தான் மல்லிகை தோற்றம் பெறுகிறது. இது மல்லிகை நான் முன்கூறியது போல எல்லாவித இலக்கியப் போக்குகளையும் அரவணைத்துப் போவதற்கான தனிப்பலத்தை என்னிடம் ஏற்படுத்தியிருந்தது.

இலக்கிய இயக்கம்

பல போராட்டங்களை நாங்கள் நடாத்தியிருக்கிறோம். ஒரு இலக்கிய இயக்கத்தை இந்தத் தேசத்திலை கட்டியெழுப்ப வேணும் என்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலை நடாத்தப்பட்ட சாகித்திய விழாவிலை, முட்டை அடிச்ச விஷயத்தைப் பற்றி இப்பவும் பேசப்படுகிறது. முட்டை அடிச்சவங்கள் முட்டையடிச்சவங்கள் என்று சொல்லுகிறார்கள். முட்டை அடிக்கிறது என்ற திட்டம் உண்மையில திட்டம் போட்டு நடந்த ஒன்றல்ல ஆனால் இந்த நிகழ்வுக்குரிய ஒரு நிலைமை அங்கு உருவாகியிருந்தமையை மறுக்க முடியாது. சரி பிழைகளுக்கு அப்பால் முட்டை எறியுமளவான மனோநிலயை உணர்வு நிலையை, உயர்சாதிப் பண்டிதர்கள் உருவாக்கியிருந்தார்கள். இழிசார் இலக்கியத்தால் தமிழ் குட்டிச்சுவராகிறது என்று அவர்கள் பேசினார்கள். சாதி ஒடுக்குமுறையின் பல உச்சமான கொடுமைகளை அனுபவிச்ச எங்கடை சமூகத்தின் ஒரு எதிர்ப்புணர்வுதான் அது. கண்ட கண்ட சாதியர் எல்லாம் எழுத வந்துட்டுதுகள் எண்டு சொல்லாமல் சொல்லி வந்தார்கள். இந்த அயோக்கியத்தனங்களுக்கு முன்னால் முட்டை எறிந்த சம்பவம் ஒண்டும் பெரிய சம்பவம் அல்ல. எங்கடை பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதை அவர்கள் தீர்மானித்தார்கள். கந்தசாமி என்று வைக்கச் சொன்னால் கந்தன் என்று எழுதினார்கள். எங்களது பிள்ளையள் படிக்கிறததென்டால், ஏன் படிப்பிக்கிறாய் தொழிலைப் பழக்கு உனக்கு உதவியாய் இருக்கும் எண்டு பெரிய அக்கறையாக ஆலோசனை சொல்வார்கள். அவர்களுக்கு முடி சிரைக்க ஒரு பரம்பரையையே வைத்திருப்பதற்காகச் செயற்பட்டார்கள். இப்படி எத்தனையோ. முட்டையடி என்பது ஒரு குறியீடு மட்டுமே. அது இன்று மட்டும் எங்கடை எதிரிகளாலை சொல்லப்படுகிறது எண்டால் அதிலே ஒரு கூர்மையான உண்மை இருந்திருக்குது என்பது காரணம். இப்படி எத்தனையோ சொல்லலாம். எனக்கு சாகித்திய அக்கடமி பரிசு கிடைக்கேக்க நாவிதனுக்குப் பரிசு கிடைத்திருக்கு என்று நையாண்டி செய்யவில்லையா  ஒரு யாழ்ப்பாணத்து பண்டிதச்சட்டம்பி?. உண்மையில் இந்தப் போராடடங்களினூடாக தேசத்தின் இலக்கிய இயக்கம் நன்கு பலமாக வளர்ந்து வந்தது. நாங்கள் சாதியின் பேராலை நடந்த கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கிய போதுதான் எமது எழுத்துக்கள் இழிசன இலக்கியம் என்று பழிக்கப்பட்டன. அவர்கள் செய்தவைகளை யாரும் கேள்வி கேட்கவில்லை. சுந்தரலிங்கம் – பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு பெரிய கல்விமான். அமைச்சரவையிலை எவ்வளவு ஒரு முக்கியமான ஆள் கழிசடைமாதிரி, ரவுடிமாதிரி போய் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு மாவிட்டபுரத்திலை ஆலயப் பிரவேசப் போராட்டத்தில எதிர்த்து நிக்கேல்லையா? இதையேன் கேட்கவில்லை. முட்டை அடி பற்றி மட்டும் இண்டைக்கும் பேசுகிறார்கள். உண்மையில் தென்னிந்திய பிராமணன் செய்ததை விட யாழ்ப்பாணத்து வெள்ளாளன் செய்த அநியாயம் மிகப்பெரியது. அந்தக் கொடுமைகளை எதிர்த்து எங்களுக்குள்ளே எரியிற நெருப்புதான் மல்லிகையை நாற்பது ஆண்டுகளாக நிலைக்க வைச்சிருக்கு. உண்மையில் எங்களிடம் எந்தக் கெட்டித்தனமும் இருக்கவில்லை. சாதிய ஒடுக்குமுறை எங்களை கெட்டித்தனமாக்கியிருக்கிறது. ஒரு இலக்கிய இயக்கம் வளரக் காரணமாக இருந்திருக்கிறது.

அறுவடை செய்கிறோம்

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். யாழ்ப்பாணத்திமிர். யாழ்ப்பாணத்தான் பெரிய படிப்பாளி அவனுக்குத்தான் இலக்கியம், தெரியும் இலக்கணம் தெரியும், என்ற திமிர் எப்படி யாழ்ப்பாணத்துக்குள்ள எங்கட சமூகத்தை ஒடுக்கி வைத்தானோ அப்படித்தான் மட்டக்களப்பானை, திருகோணமலையானை, மலையகத்தானை எல்லாம் ஒதுக்கி வைக்கிற போக்கு அங்கு இருந்தது. அண்டைக்கு அப்படி ஒதுக்கி ஒதுக்கி வைத்ததின்ரை வெளிப்பாடுதான் இண்டைக்கு நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அனுபவத்திலிருந்து நாங்கள் படிச்சிட்டம் என்னவென்டால் நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் எண்டது. நாங்கள் வெளியேறினோம். மட்டக்களப்பு, மலையகம், திருகோணமலை முஸ்லீம் என்ற பாகுபாடின்றி எல்லாப் பிரதேசங்களின் இலக்கியத்தையும் நாம் உள்வாங்கி ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்துகிறோம்.

அட்டைப் படம்

தமிழ் நாட்டிலை பெருமளவுக்கு அறியப்பட்ட ஈழத்துச் சஞ்சிகை என்றால் அது நிச்சயமாக மல்லிகை தான். உலக நாடுகளிலைகூட ஈழத்தமிழர் வாழுகிற எல்லா நாடுகளிலும் மல்லிகையின் பரம்பல் கணிசமான அளவிற்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழுகிற ஈழத்தவர்கள் எங்களை வந்து சந்தித்து மல்லிகை வாங்கவும் புத்தகங்களை வாங்கவும் எண்டு ஒரு அரை நாளையாவது ஒதுக்கிறார்கள். இது யாழ்ப்பாணத்திலை நான் யுத்தகால நெருக்கடிக்குள்ளை இருந்துகொண்டே பத்திரிகையை கொண்டு வந்த என்னர உழைப்பை கௌரவிச்சு செய்கிற ஒரு உதவி என்று நான் கருதுகிறன். ஏனென்டால் இப்பவாவது பெரிய யுத்த நெருக்கடியிக்கையிருந்தும் பத்திரிகையை நடத்துகிறேனே எண்ட அபிமானம் தான் இப்போது எனக்கு ஆதரவாக இந்த வழியில் கிடைக்கிறது எண்டு சொல்ல வேண்டும். மற்றது கிட்டத்தட்ட 180 ற்கு மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் அட்டைப்படங்களைப் போட்டிருக்கிறன். இந்த அட்டைப்படங்களை நான் போட்டது மட்டுமல்ல அவற்றை நான் புத்தகமாகவும் போட்டிருக்கிறேன். ஏனென்டால் எனக்குத் தெரியுது. இப்ப இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத்தான் தெரியும். ஒரு இதழின் ஆகக் கூடிய காலம் அடுத்த இதழ் வரும்வரைதான் அதுக்கு மேலையும் அது இருக்கிற தென்டால் ஆரும் சேகரிச்சு வைச்சிருந்தால்தான். ஆனால் இதுக்கு மேலேயும் இருக்க வேணுமென்டால் இந்த அட்டைப்படங்கள் சஞ்சிகையோடை போயிடக்கூடாது ஒரு மாதத்திலேயே அதன் உயிர் போய்விடக்கூடாது. அட்டைப்படங்களை நான் போடத் தொடங்கியதின்ரை நோக்கமே இது ஒரு மாதத்திற்கு மேலாகவும் நிலைக்க வேண்டும் என்பதுதான். நான் தேடித் தேடித் தொகுத்து அட்டைப்படங்களின் கட்டுரைகளை தொகுத்து மூன்று தொகுதிகள் வெளிவந்து விட்டன. அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகை முகங்கள், அட்டைப்படங்கள் என்று. இது இப்ப விளங்காது எனக்குத் தெரியும். நான் கண்ணைமூடி 10 – 15 வருடங்களுக்குப் பிறகு யாராவது ஒரு பல்கலைக்கழக மாணவன் ஆய்வு செய்யும் போது நான் செய்த வேலையின்ர பெறுமதி விளங்கும். நான் அறியக் கூடியதாக மல்லிகை பற்றி மல்லிகை கதைகள், கவிதைகள் பற்றியெல்லாம் எத்தனையோ பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இவர்களிடையே வேறு பத்திரிகைகள் பற்றி செய்திருந்தாலும் கூட மல்லிகை அளவுக்கு அதிகமாக செய்யப்படவில்லை.

எல்லாம் மல்லிகையே

மல்லிகைதான் என்னுடைய எல்லாம். நான் முன்னால சொன்னது போல நான் ஒரு நல்ல கணவனாகவோ, தந்தையாகவோ இருக்கவில்லை. எனது மாமா மகளைத்தான் எனக்கு மணம் பேசி வந்தார்கள். நான் அப்பவே சொன்னனான். எனது மனைவிக்கு என்னை முடிக்காதை எண்டு. நீ மனதிலை வைச்சிருக்கிற அத்தனை கனவையும் நான் hநசமாக்குவன். உன்னைப் படத்துக்குக் கூட்டிக் கொண்டு போகவோ, ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போகவோ நான் வரமாட்டன் எண்டு நான் அப்பவே சொன்னனான். சத்தியமாய்சொல்லிறன் இராப் 12 மணிக்குத்தான் வருவன். சிலவேளை வராமலும் விடுவன். நீ விளக்கைக் கொழுத்தி வைச்சு விட்டு காவல் இருக்க வேண்டி வரும். மற்றது என்ர சினேகிதங்களெல்லாம் என்னைப் போலவே வக்கறுந்ததுகள். ஒருதரும் உருப்படியாய் இருக்கமாட்டனுங்கள். ஆனால் ஒண்டு நான் சொல்லுறன், நான் மனிதனாக இருப்பன். துன்புறுத்தமாட்டன், அடிக்கமாட்டன், பெண்மையை கேவலப்படுத்த மாட்டன், ஒரு நல்ல மனிதனாக இருப்பன். இதையெல்லாம் சொல்லுகிறான் ஏனென்றால் என்னை முடிக்காதை எண்டு சொல்லத்தான் எண்டு எல்லாம் சொன்னனான். அம்மாவுக்கும் சொன்னான். உன்ர அண்ணனுக்காக அவன்ரை மகளை நாசமாக்கப் போறாய் எண்டு சொன்னனான். உன்ரை சொந்த மருமோளை ஏன் இப்படி நாசமாக்கிறாய் மற்ற சகோதரங்களுக்கு முடிச்சுக்குடன் எண்டும் சொன்னனான். ஏனென்டால் எனக்குத் தெரியும் நான் ஒரு நல்ல கணவனாகவோ அப்பனாகவோ இருக்க மாட்டேன் என்று. அப்பவே நல்லாத் தெரியும். அண்டைக்கு இருந்த இலக்கியத் திமிர் என்னை அப்படிச் சொல்ல வைத்தது. ஏனென்டால் எந்த ஆதரவும் இல்லாமல் தட்டிக் கொடுக்க யாரும் இல்லாமல் வளர்ந்தனாங்கள். என்னுடைய படைப்புத் திமிரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எளிமையாக இருக்கிறது. இயல்பாக இருக்கிறது வேறை, என்னர படைப்புத்திமிரை யாருக்காகவும் எந்த கொம்பாதி கொம்பனுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் அன்றைக்கு யாரும் கொடுக்காத விலையை நான் கொடுத்து வந்தனான். நீ குடும்பப் பின்னணியால், வந்திருப்பாய்; நீ கல்வியால் வந்திருப்பாய்; நீ சாதியால் வந்திருப்பாய்; நீ பெரும்பான்மையால் வந்திருப்பாய். ஆனால் நான் ஒண்டுமில்லை. பிறந்திருக்கிறன். எதுவுமில்லாமல் மேலே வந்தவன். இதுதான் என்னை அப்படிப் பேசவைத்தது. இண்டைவரைக்கும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

நான் பாருங்கோ, இவை என்னத்தைச் சொன்னாலும், ஐரோப்பாவிலை- அங்கை இருந்துதான், தகவல் இஞ்சை வந்தது. பிரான்ஸிலை இருந்துதான், ரஷ்யா விலை, அமெரிக்காவிலை, ஜப்பானிலை இருந்துதான் தகவல்கள் இங்கை வந்து பள்ளிக்கூடங்களிலை பாடப்புத்தகங்களாக வந்தது. என்னுடைய பிற்காலத்திலை நான் ஐரோப்பாவிலேயே பேசப்படுவேன். ஐரோப்பிய பாடப்புத்தங்களிலை ஐரோப்பிய மாணவர்களுக்கு நான் பாடப்புத்தகமாக இருப்பேன். ஏனென்டால் செய்திருக்கிறம்; செய்து காட்டியிருக்கிறம்.

எனது முதலாவது சிறுகதை ‘எல்லாம் இரவல்’ என்ற பெயரில் வந்தது என்று நினைக்கிறன் – செந்தணலில். அதை நான் என்ர தொகுப்பிலை – இப்படிச் சில கதைகளைச்- சேர்க்கவில்லை. ஆனா இப்பயோசிக்கைக்க நான் மடத்தனம் செய்திட்டேனோ என்று கோசிக்கிறன். என்ரை வளர்ச்சியைப் பார்க்கிறதுக்கு வசதியா ஆவணமாக அதுகளும் வந்திருக்கலாம். என்னர அந்தக் கதைகளை நான் சேமித்து வைக்கவில்லை. இப்ப தேடி எடுக்கலாமா எண்டு தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்கு பிறகு கனகசெந்திநாதன் எல்லாத்தையும் ஆவணப்படுத்திவை எண்டு சொன்னதுக்குப் பிறகு தான் நான் ஒழுங்காகச் சேர்க்கத் தொடங்கினனான். அதுக்குள்ளை விடுபட்டவை விடுபட்டே போயிட்டுது. இந்த சேகரிப்பிலையும் சில யாழ்ப்பாணப் பிரச்சினைக்குள் விடுபட்டுப் போயிட்டுது.

கூட்டு இயக்கம்

நாங்கள் எப்பவுமே கூட்டாகத்தான் இயங்கினோம். எங்களுக்கிடையில் எப்போதுமே உரையாடல் இருந்தது. இந்த உரையாடல் எல்லாத்தைப் பற்றியதாகவும் இருந்தது. இதுகளோடையேதான் நான் என்னை வளர்த்துக்கொண்டேன். இது நான் புகழடைய வேண்டும் என்ற தனிமனித ஆவலை எங்களிடையே இல்லாமல் செய்திருந்தது. எனக்கு இரண்டு மூன்று நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தன. ஒன்று அழகு சுப்பிரமணியத்தின் தொடர்பு. அவர் ஒரு சர்வதேச எழுத்தாளர், யாழ்ப்பாணத்தில் 1ஆம் குறுக்குத்தெருவில இருந்த பிரிமியர் கபே என்ற ஹொட்டலிலை தான் நாங்கள் சந்திப்போம். 6 மணி முதல் 9 – 10 மணிவரை அங்கை இருந்து நாங்கள் பேசுவோம். அங்கைதான் ஏ.ஜே. கனகரத்தினாவையும் சந்தித்தேன். கிட்டத்தட்ட ஒரு 5 வருடத் தொடர்பு எனக்கு அழகு சுப்பிரமணியத்துடன் இருந்தது. மாதத்தில் குறைந்தது 4 – 5 தடவையாவது சந்திப்பம். அவர் தனது ஐரோப்பியத் தொடர்புகள், எழுத்துக்கள், சமூகப்பயிற்சிகள் பற்றி எம்முடன் உரையாடுவார். ஏ.ஜே. கனகரத்தினா மிக உயர்ந்த ஆங்கிலப் புலமை கொண்ட ஒருவர். எம்மிடமிருந்த ஆங்கிலத் தகமை இன்மையை ஏ.ஜே. கனகரத்தினா அவர்களது உறவு காரணமாக ஓரளவுக்கு ஈடு செய்யக் கூடியதாக இருந்தது எனலாம். இது நான் திட்டமிட்டு அவர் மூலமாகத் தேடிக்கொண்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். எந்தக் கதையை எழுதினாலும் அவருக்கு ஒரு தடவை படித்துக் காட்டி அவரது ஆலோசனைகளையும் கேட்டு திருத்திக் கொள்கிறதை நான் செய்துள்ளேன். அவற்றை ஒத்துழைப்பு எனக்கு கிடைத்தளவுக்கு வேற எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். தண்ணீரும் கண்ணீரும் தொகுப்பை நான் தொகுக்கும்போது ஏ.ஜே. கனகரட்னாவின் ஆலோசனையோடு தான் அதனை நான் தொகுத்தேன். அதில் ஒரு கதையை வாசிச்சுக் காட்டி அதுக்கு அழகு சுப்பிரமணியம் சொன்ன அபிப்பிராயத்தை அடிப்படையாகக் கொண்டு – கரும்பலகை என்ற கதை என்று நினைக்கிறேன் – அதன் முடிவை மாற்றி எழுதினேன். இப்படி யாழ்ப்பாணத்தில எனக்கு இலக்கியக்காரர்களின் உறவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராக இருந்தபடியால் எனக்கு வேகமாக இயங்கும் வாய்ப்பு இருந்தது. அப்பெல்லாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்கள் மத்திய கல்லூரியில் தான் நடக்கும். அதிபர் எங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் சுதந்திரமாக நாம் இயங்கினோம். கூட்ட அறிவிப்பு நோட்டீசை அடித்துப்போட்டுத்தான் அதிபரிடம் அனுமதி கேட்கப்போவோம். அவ்வாறு சுதந்திரமாக இயங்கினோம்.

ஐரோப்பிய வாசகர்கள் பற்றி

இண்டைக்கு ஐரோப்பாவில் உள்ள காலம் வாசகர்களும் ஈழத்து வாசகர்கள் தான் அவையளுக்கு மல்லிகை புதுசல்ல. அடுத்த தலைமுறை இன்னும் வரவில்லை. அந்தத் தலைமுறை வரும்போது அது புதிய தேடல், சிந்தனைகளுடன் வரும். இப்ப உள்ள வாசகர்கள் இங்கிருந்து போனவர்கள்தான். ஆனால் ஒண்டைச் சொல்ல வேணும். ஐரோப்பிய தமிழ் வாசகர்கள் இந்தியப் படைப்புகட்கு கொடுக்கும் ஆதரவையும் இலக்கிய அந்தஸ்தையும் எங்கள் நாட்டுப் படைப்புகளுக்கு கொடுக்க பஞ்சிப்படுகினம். அது என்ன காரணம் எண்டு தெரியவில்லை. அதுக்கு காரணம் அவர்களது விளம்பரமோ என்னவோ, ஆனால் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை. என்குத் தெரியவில்லை. இது ஈழத்தவர்களுக்கு தற்காலிகமாக திருப்தியாக அல்லது லாபமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது சுலபமாக நல்லது என்று நான் நினைக்கேல்லை.

தலித் இலக்கியம்

தலித் இலக்கியத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தலித்துக்கள் தாங்கள் தங்களது பிரச்சினையை எழுதிய முறை, பச்சையாகச் சொன்னால் நானும் டானியலும் இலங்கையில் கையாண்ட முறை. மற்றையது தலித் அல்லாதவர்களால் எழுதப்படுவது. தலித் இலக்கியம் தலித்துக்ளால்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் அல்ல. எங்களை உருவாக்கினதுகூட தலித்துக்கள் அல்ல. எங்களிடம் சிந்தனையை தந்ததும், பின்னணியாக நின்றதும் தலித் அல்லாதவர்களே. பச்சையாகச் சொல்லப்போனால் இலங்கையிலிருக்கிற மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த இடது சாரிகள் தான் எம்மை இப்படிச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

தலித் இலக்கியம் தலித் இலக்கியம் என்று ஒரு காலகட்டம் வரைக்கும்தான் சொல்ல முடியும். அதற்கு மேலை சொல்ல எதுவும் இருக்க முடியாது. தலித் இலக்கிய போராட்ட அம்சங்கள் இருக்கலாம். வெறும் தலித் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஏனெண்டால் இண்டைக்கு சமூகம் விரிந்துகொண்டு வருகிறது. கல்விக்களம் விரிவடைகிறது. அரசியல் போராட்டம் விரிவடைகிறது. அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவும் தலித்துக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தலித் இயக்கத்திற்கும் இங்கத்தைய நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கை தலித்துக்கள் மிகப் பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள். முழுத் தமிழ் நாட்டிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை விட்டால் மற்றைய பிரதேசங்களில் தலித் பிரச்சினை அவ்வளவாகக் கூர்மையடைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இது மிக மோசமாக உள்ளது. ஆக தமிழ் நாட்டான் தலித்தியத்தை அணுகுவதற்கும் நாங்கள் அணுகுவதற்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு.

தவிரவும் இப்பதான் தலித்திலக்கியம் எண்ட ஒண்டு வந்து கொண்டிருக்கின்றது. ஏன் இது கல்கி காலத்தில் வரவில்லையா? அகிலன் காலத்தில் வரவில்லையா? ரகுநாதன் காலத்தில் வரவில்லையா? அப்போது அந்த மக்களின் குரல்கள் வெளிவர முடியாத அளவுக்கு அவர்கள் மண்புழுக்களாக இருந்தார்கள். இப்போது அது வெளிவருகிறது. தலித் இலக்கியத்தில் இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆரோக்கியமான அம்சம் அதாவது விடுதலை. மற்றது “நாங்கள் விடுதலை” முதல் விடுதலை மானிட குலத்தோடு சேர்ந்தது நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற சிந்தனை. மற்றையது நாம் மட்டும் விடுதலை பெற்றால் போதும் என்கிற விடுதலை. இரண்டாவது போக்கின் காரணமாகத் தான் இன்றைய தலித்தியக்கத்தின் போக்கு மோசமாகி விடுகிறது. இலங்கையில் அந்த உணர்வு இல்லை. இந்தியாவில் அது வெறும் தலித் விடுதலை பற்றியே பேசுகிறது. முழு இந்தியாவுக்குமான தலித்துக்கள் பற்றிப் பேசுகிறது. எனவே அது முழு இந்திய விடுதலைக்கான போராட்டத்துடன் இணைந்து நடக்க வேண்டும்; அனைத்து நேச சக்தியையும் இணைத்து நடக்க வேண்டும். ஈழத்தில் உள்ளது ஒரு பிரதேசம் சார்ந்த ஒடுக்கு முறையே. இலக்கை அரசில் சாதிய ஒடுக்குமுறை அம்சம் பெரிய ஒன்றாக இல்லை. ஆனால் இந்திய அரசில் அது அடிப்படையாக உள்ளது. அங்குள்ள தலித்துக்கள் இந்தியாவின் விடுதலையையும் சேர்த்து யோசிக்க வேண்டும். அப்பதான் அது வெற்றிபெறும் அல்லது தலித்துக்கள் தனிமைப்பட்டுப் போவார்கள்.

இப்போது தலித்துகட்கு இடையேயும் இரண்டு விதமான போக்கும் தமிழ்நாட்டில் வெளிப்படுகிறது. இப்ப நான் சொன்ன அடிப்படையில் வைத்துக் கொண்டு இது வருகிறது அங்குள்ள தலித்துக்கள் பற்றிய கருத்தை அங்குள்ள மக்களின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்துகொண்டு தீர்மானிக்க முடியாது. ஏனென்டால் அவர்கள் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். அந்த ஒடுக்குமுறையின் குரலாக தலித்திலக்கியம் வரும்; வருகிறது.

நாம் அவர்களது முடிவுகள் தொடர்பாக இங்கத்தைய நிலமையின் அடிப்படையில் கருத்து சொல்வது, அவர்களுடைய போராட்டத்துக்கு நியாயம் சேர்க்கிறதாக இருக்கும் எண்டு நான் நம்பவில்லை.

பிற்குறிப்பு : இந்த கலந்துரையாடல் 2005,2006 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘காலம்’ இதழ்கள் 25, 26 இல் வெளியானது

00000000000000000000000000000

டொமினிக் ஜீவாவுக்கு அறிமுகம் தேவையில்லை. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மல்லிகை இதழைத் தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும். அவரது அர்ப்பணிப்பான உழைப்பு சாதாரணமான ஒன்றல்ல. மல்லிகையையே தனது வாழ்வின் முழுமையாகக் கொண்டு செயற்பட்டு வரும் அவரைக் காலம் 25-வது இதழ் வருகையோடொட்டி கௌரவிக்க விரும்பினோம். அந்த நோக்குடன் கொழும்பில் அவரது இல்லத்தில் நடந்த நீண்ட உரையாடலிலிருந்து ஒரு சில பகுதிகளைக் காலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இந்த உரையாடல் உண்மையில் ஒரு உரையாடல் என்பதை விட ஜீவாவின் அரை நூற்றாண்டு கால நினைவு மீட்டலாகவே அமைந்தது, நாமும் அது அப்படி அமைவதையே விரும்பினோம். ஒரு பத்திரிகையாளராக, படைப்பாளியாக, சமூகச் செயற்பாட்டாளராக அவர் தனது சிந்தனைகள், தன்னை வழிநடாத்திய உந்துதல்கள் பற்றி இங்கே எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்

எஸ்.கே.விக்னேஸ்வரன்-கனடா

எஸ்.கே. விக்னேஸ்வரன்

(Visited 77 times, 1 visits today)
 
எஸ்.கே. விக்னேஸ்வரன்

ஒரு இதழை இயக்கமாக்கியவர் டொமினிக் ஜீவா-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்- எஸ்.கே.விக்னேஸ்வரன்

எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர்,சமூக ஜனநாயக போராளி என்ற பன்முக ஆற்றல் கொண்ட  ஆளுமையும், ஓய்வொளிச்சலில்லாத செயற்பாட்டாளருமான மதிப்புக்குரிய டொமினிக் ஜீவா அவர்கள் தனது தொண்ணூற்றி மூன்றாவது வயதில் கடந்த தை […]