ஒரு துயரினை பகிர்ந்து கொள்கிறோம் -கவிதை- லலிதகோபன்

ஒரு துயரினை பகிர்ந்து கொள்கிறோம்

லலிதகோபன்
ஓவியம் : தங்கேஸ் விக்கி

இரு வேறு நிலங்களில் ……

இது உனக்கான கோடையாயும்
எனக்கான மாரியாயும் இருக்கலாம் ….

ஆனாலும் இருளின் வேர்கள்
ஆழப்புதைத்திருக்கும்
சூரியன் பொது…..

கருமையினை சூல் கொண்ட
மழை இரு துளிகளை
ஈந்து செல்கிறது ….

உனக்கான அந்தகாரம்
எனக்கான தனிமை ……

வேலிகளால் பிளவுற்றிருக்கும்
நிலங்களை பேரலைகளால்
பிரித்து இரு வேறு தீவுகளாக்கும்
தீர்க்கதரிசனங்களினூடே
பாம்பென நெளிந்து செல்லும்
நிகழ் கணங்கள் ……

00000000000000000000000000000000

இசைவற்றிருகின்றன
இந்த நாட்கள் …..

உதிரி சொற்களும்
இசையற்றதோர் பாடலுமாய்
நிறைந்து ……

மரித்து பிறத்தல்

அல்லது

பிறந்து மரித்தல்

இன்னும் நூற்றாண்டுகளாய்
தொடரும் கதை ….

தோட்டா துளைத்த
கணத்தில் தவறிய
தசைத்துணுக்குகளிலிருந்தான
ஜனனம் …..

பெறுமதியானதோர்
கனவு …..

‘நிறை வெறிகாரனின்’
விழிகளில் இன்னும்
நிறைந்திருக்கும்
போதைக்கு முன்னானதோர்
பொழுது ….

மீள்வதுவும்
எக்காலம் …..

லலிதகோபன்-இலங்கை

லலிதகோபன்

(Visited 83 times, 1 visits today)