தமிழ்ச்சூழலில் கி பி அரவிந்தனது வகிபாகமும் கவிதைகளின் பரிமாணமும்-கட்டுரை-ரூபன் சிவராசா

ரூபன் சிவராசாகி.பி அரவிந்தன் தமிழ்ச்சூழலில் முக்கியமானதொரு ஆளுமை. ஓற்றைப்பரிமாணத்தில் அவரை அணுகமுடியாது. குறிப்பாக ஒரு தளத்தில் என அவரது ஆளுமையையும் வகிபாகத்தையும் வரையறுக்க முடியாது. அவர் இயங்கிய தளங்கள் பன்முகப்பட்டவை. ஆதலால் அவரது வகிபாகமும் பல்பரிமாணமுடையது. ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடக இதழியல் துறை, சமூக கலை பண்பாட்டுத் தளம் என நாற்பதாண்டுக்கும் மேலான செயற்பாட்டு நீட்சி கொண்டவர். தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசம் என முத்தளங்களில் செயற்பட்டவர். மூன்று தளங்களுக்குமிடையிலான காத்திரமான உறவுப்பாலமாக, குறிப்பாக கருத்தியல், கலை இலக்கியப் பாலமாக, தொடர்பூடகமாக இயங்கியவர்.

தாயகத்தில் விடுதலைப் போராட்டம் முகிழ்த்த ஆரம்ப காலங்களில் தியாகி பொன்.சிவகுமாரனோடு இணைந்த செயற்பாடுகள் அவரது போராட்ட வாழ்வின் முதற்கட்டம். தொடர்ந்து ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினராக தாயகத்திலும் தமிழகத்திலும் அரசியல், கருத்தியல், இதழியல் சார்ந்த செயற்பாடுகள் அமைந்தன. 1990 களிலிருந்து 2015 மறையும் வரையிலான கால்நூற்றாண்டுகள் பிரான்சில் வாழ்ந்த காலங்கள், புலம்பெயர் சமூக, அரசியல், கலை, பண்பாட்டுத் தளங்களிலும் இலக்கிய, ஊடக, இதழியல் தளங்களிலும் அவரை இயங்கவைத்தது.

மேற்சொன்ன தளங்களில் அவரது விசாலமான பார்வையும் தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட முன்கையெடுப்புகள் பிரான்ஸ் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்த ஏனைய நாடுகளுக்குமான முன்மாதிரியாக, உந்துதலாகவும் அமைந்திருக்கின்றது. ஒட்டுமொத்த சமூகத்தினதும் மேன்மைக்காகச் சிந்திக்கும் ஆளுமைகளால் மட்டுமே இத்தகையை நேர்மறையான தாக்கங்களைச் செலுத்தமுடியும். அந்த வகையில் கி.பி.அரவிந்தனின் வகிபாகம் என்பது தமிழ்ச்சூழலில் காத்திரமானது. முற்போக்கான உலகப்பார்வையும் சிந்தனையும் அவரிடம் இருந்தது. அவரது சிந்தனை ஒன்றினை எடுத்துக்காட்டாக இங்கு பகிர்வது பொருத்தமாகும்,

“ஜனநாயகம், வெளிப்படை என்பவையே எமது அடிப்படைகளாக மாறவேண்டும். ஜனநாயகம் என நான் குறிப்பிடுவது வெறும் தேர்தல் ஜனநாயகத்தை அல்ல. நமது உளப்பண்பாட்டையே ஜனநாயகம் ஆக்குதல்”

உளப்பண்பாட்டை ஜனநாயகமாக்குதல் என்ற இச்சிந்தனை ஆழம் மிக்கது, அறிவார்ந்தது. தனிமனிதனுக்கு மட்டுமல்ல. சமூகத்திற்கும் தேசத்திற்குமான பொருத்தப்பாடுடைய கூற்று.

அவரது மறைவிற்குப் பின்னரான ஓராண்டுக்குள் அவர் பற்றிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றமை அதற்கு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு காலகட்டங்களில் அவரோடு பயணித்த, பணிபுரிந்த, அவரை அறிந்த தோழமைகள், கல்வியாளர்கள், இலக்கியகர்த்தாக்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் அவர் பற்றிய கட்டுரைகள், பதிவுகள், நினைவுக்குறிப்புகள் அம்மூன்று நூல்களிலும் தொகுக்கப்பட்டுள்ளன. அரவிந்தன் எனும் ஆளுமையின் கணிசமான பரிமாணங்கள் அந்நூல்களில் பதிவாகியுள்ளன.

‘நடு’ இணைய சிற்றிதழின் “கவிதைச் சிறப்பிதழுக்கான” இந்தப்பதிவு அவரது கவிதைகளை மையப்படுத்த விழைகிறது. கவிதைகள் ஊடாக அவரை நினைவுகொள்ளுதல் எனும் வகையில், அவரது கவிதைகளின் பேசுபொருள், கவித்துவம், அழகியல், படிமங்கள் பற்றிய வாசிப்பனுபவத்தை, அவதானத்தைப் பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.

‘இனியொரு வைகறை (1990)’, ‘முகம் கொள் (1999)’, ‘கனவின் மீதி (1999) ஆகிய அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தவிர இந்த மூன்று தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகள், 2000இற்குப்பின்னர் உதிரிகளாக வெளிவந்த கவிதைகளையும் உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு 2014இல் ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்தத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது கவிதைகள் பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கப்பட்டு ஒரு தொகுப்பாக 2014இல் வெளிவந்தது. ‘Le messager de l’hiver’ – ஒரு உறைபனிக்காலக் கட்டியக்காரன்’ என்பது அதன் தலைப்பு. பிரெஞ் வெளியீட்டு நிறுவனத்தின் ஊடாக இத்தொகுப்பு வெளிவந்தமை கவனத்திற்குரியது.

ரூபன் சிவராசாகி.பி அரவிந்தன் கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞரல்ல. நான்கு புத்தகங்களிலுமாக 100 வரையான கவிதைகளே தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தின் அற்புதமான கவிஞர்களின் வரிசையில் அவருக்கு முக்கிய இடமுண்டு. தனித்துவ அடையாளம் உண்டு. இவருடைய கவிதைகள் தாயகம், தமிழகம், புலம்பெயர் வாழ்வனுபவங்களின் தொகுப்பு என்ற வரையறைக்குள் வருவன. புலம்பெயர் வாழ்வனுபவம், அதன் மனிதர்கள், தாயகம் நீங்கிய துயர், விடுதலை ஏக்கம், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் நம்பிக்கையீனங்களுமாக கவிதைகளின் பேசுபொருளைக் காணலாம். மனித நேயம், விடுதலை வேணவா, அநீதிக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் என்பன அரவிந்தன் கவிதைகளின் அடிநாதம்.

‘இனியொரு வைகறை’ பரவலான வாசகர்களைச் சென்றடையவில்லை. ஆயினும் கவனிப்பிற்குரிய கவிதைகள் அதில் உள்ளன. அவை அரசியல் கவிதைகள். எண்பதுகளின் பிற்பகுதியின் தாயக நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன. போர் தந்த அவலம், ஒடுக்குமுறைத் துயரங்களைப் பேசுகின்றன அக்கவிதைகள். மற்றைய இரு தொகுப்புகளும் பரவலான வாசிப்பிற்கு உட்பட்டவை. மட்டுமல்லாது துலக்கமான கவிதைமொழி கைவந்த கவிஞனாக அரவிந்தனை அடையாளப்படுத்தியது.

‘இனி’ எனும் தலைப்பிலான இந்தக்கவிதை குண்டு வீச்சு ஏற்படுத்தும் அழிவுகளை, சிதைவுகளை காட்சிகளாக விரிக்கின்றது.

குண்டுகள் சப்பித்தின்று
துப்பிய எச்சத்துள்..
..
எனக்கென்றொரு வீடு!
அதுவும் இல்லையென்றாயிற்று இனி..

‘இனி வரும் காலை’ எனும் மற்றுமொரு கவிதை, மனித அழிவை மட்டுமல்ல இயற்கை, பறவைகள் என ஒட்டுமொத்த உயிரினங்கள் மீதான சிதைவைப் படிமங்களாக்கியுள்ளது.
..
மரங்கள் தலைவிரித்தாட
ஊளையிடும் இலைகள்
குந்தியிருக்க இடமின்றி
புரிதவிக்கும் பறவைகள்
மரத்துண்டமடுக்கி
மணல் மூட்டை
ஏற்றுவர் மனிதர்!
கைப்பிடிக்குள் உயிர்
நழுவியும் போகலாம்
அதுவாயினும் மிஞ்சலாம்

‘முகம் கொள்’, ‘கனவின் மீதி’ ஆகியவை கவிஞர் பிரான்ஸ்சுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்ட கவிதைகள். அந்தப் புலம் பெயர் வாழ்வு இயந்திரமயமானதாய் இருப்பதை இப்படிச் சொல்கிறார்,

மனிதம் சிறுமையுற
சூத்திரங்கள் அச்சுறுத்த
இயந்திரங்கள் காவு கொள்ளும்

துருவங்கள் எதிரெதிராய்
துயரங்கள் சமாந்தரமாய்
இனி என்ன….

போர்த்தீயில் எரியும் தேசத்தை விட்டு நீங்கிய துயரத்தையும், புதிய தேசத்தில் அகதியாகிய நிலையையும், விடுதலை ஏக்கத்தையும் சில வரிகளிலேயே கூர்மையாகப் பதிவுசெய்கிறது இந்தக் கவிதை,

துப்பாக்கி வயப்பட்ட
என் சிறு தேசம்
..
அகதி முகம் பெறவா
உயிர்க் களையை நான் இழந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

புலப்பெயர்வு என்பது வெறுமனே தாயக அரசியலின் விளைவு என்பதாக அவர் கருதவில்லை. அந்தக்கருத்து பெருவாரியாக நம்பவைக்கப்பட்டிருப்பினும், வெளிநாட்டுக் கனவினதும் தாயக அரசியலினதும் கூட்டுவிளைவே புலப்பெயர்வு என்பது அரவிந்தனின் எண்ணம். அதனை அவருடைய படைப்புகளில் குறிப்பாக, ‘கனவின் மீதி’ தொகுப்பிலுள்ள கவிதைகளில் தரிசிக்க முடிகிறது.

அவருடைய கவிதைகளின் தனித்துவமான அம்சங்களாக எனக்குத் தெரிபவை அவரது சொற்கையாளுகை, புதுமையான படிமக்கையாளுகை, அழகியல் தொடர்பான அவரது கோட்பாட்டுப்புரிதல். அத்தோடு நவீன புதுக்கவிதைகள் (மரபை, யாப்பை அறிந்து) மரபை, யாப்பை மீறிய கட்டமைப்பைக் கொண்டவை. அதனால் சந்தம், லயம், சொற்கட்டு இல்லாமல் எழுதப்பட வேண்டுமென்ற ஒரு போக்கு அல்லது புரிதல் நிலவுகின்றது. ஆனால் அரவிந்தனின் புதுக்கவிதைகளில் ஒருவகை ஓசை நயம் ஊடுருவி இருக்கும். வாசிப்பு ஓட்டத்திற்கு அதன் அமைதிக்கு இடைஞ்சலில்லாத வகையில் ஒரு சுவையும் சொற்களில் ஒத்தியைவும் இழைந்திருக்கும்.

சொற்கையாளுகை எனும்போது, மிகச் செறிவான சொற்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். தேவைக்கு அதிகமாக அல்லாத இரத்தினச்சுருக்கமான சொற்கள். அவசியமற்ற அரிதாரச் சொற்களை அவரது கவிதைகளில் காணமுடியாது. அதேவேளை அவை வாசகனுக்குக் கடத்தும் உணர்வு, மனதிற்குள் கிளர்த்திவிடும் உணர்வு, புரிதல் ஆழமானது. அதேபோல அவர் பயன்படுத்தும் படிமங்களும் வழமையாக கவிஞர்கள் பலரும் கையாளும் படிமங்களிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும்.

திசைகள் என்ற அவரது கவிதை இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அந்தக் கவிதை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதையும்கூட.

காலைச் சூரியனுக்கு
முகம் காட்டி நின்றால்
புறமுதுகில் மேற்கிருக்கும்
எனத் தொடங்கும் அக்கவிதை,
இப்போவெல்லாம் திசைகள்
எனக்குத் துலக்கமாயில்லை
பெயர்கள் செல்லும்படியான
காற்றுகளும் ஏதுமில்லை.
..
எங்கிருந்து வந்தேன்
எத்திசையில் செல்கிறேன்?
என் விந்தணுவில் முளைத்தவையும்
குரலெழுப்புகின்றன
எத்திசையில் முகங்கொள்ளது?

எனத் தொடரும் அக்கவிதையில், தேசம் பிரிந்த தவிப்பு, திசைகளெங்கும் சிதறுண்ட சமூகத்தின் சவால்கள், விரக்தி, அடையாளச் சிக்கல், அந்நியமாதல் போன்ற புலப்பெயர்வினால் விளைந்த அலைந்துளல்வு வாழ்வின் உச்சமான வெளிப்பாடாக இந்தக்கவிதை வெளிப்படுகிறது.

கி.பி.அரவிந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 2014இல் முனைவர் அப்பாசாமி முருகையன் அவர்களால் பிரெஞ்சிற்கு மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. இதுவொரு முக்கிய செயல். ‘கனவின் மீதி’ தொகுப்பிற்கு தமிழின் முக்கிய இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வரும் கூற்றினைக் குறிப்பிட்டிருந்தார்,

‘கி.பி அரவிந்தனுக்கு மட்டும் மாத்திரம் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவரது வாசகர் வட்டம் நிச்சயம் விரியும். ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகத்தின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளது என்றே கருதுகின்றேன்.’

இந்தக்கூற்றுத்தான் அவரது கவிதைகள் பிரெஞ்சுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதற்கான உந்துதலாக அமைந்தது.

எந்த நாட்டுப்பின்னணியோடும் புலம்பெயர் நாடொன்றுக்கு வந்துசேரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்களுக்கு பொருந்தக்கூடிய கவிதைகள் பல இந்த மூன்று தொகுப்புகளிலும் உள்ளன. புலப்பெயர்வுக்கான பின்புலம், புதிய நாடொன்றுக்குள் நுழையும் போது; எதிர்கொள்ள நேரும் கலாசார, பண்பாட்டு அதிர்ச்சிகள், புதிய சூழல் பற்றிய அச்சங்கள், நிச்சயமின்மைகள், நிராகரிப்புகள், முகம்கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள், அடையாளச் சிக்கல்கள் சார்ந்த அனுபவங்கள் புலம்பெயர் சமூகங்கள் அனைத்திற்கும் பொதுவானவை. குறைந்தபட்சம் பொருந்திப்போகக்கூடியவை என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று அமைந்தது.

தவிர புலம்பெயர் சூழலில் இலக்கியம்; என்பது இரு தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கும் இந்த மொழிபெயர்ப்பு சான்றாகவும் உற்துதலாகவும் கொள்ளத்தக்கது. அதாவது தமிழிலிருந்து வாழி மொழிகளுக்கும் வாழிட மொழிகளிலிருந்து தமிழுக்கும் இலக்கியங்கள் பரஸ்பரம் மொழிபெயர்க்கப்படுதல் ஆரோக்கியமான இலக்கியச் சூழலுக்கு மேன்மை சேர்க்கும்.

படைப்பிலக்கியத்தில் அழகியல் என்பதனை அவர் எவ்வாறு பார்க்கின்றார், தன் நிலைப்பாட்டினை, தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டுப் புரிதலை அழகியல் என்ற தலைப்பில் படிமங்களைக் கொண்ட ஒரு கவிதையாகவே எழுதியிருக்கின்றார்.

என்னிடத்தே நாருண்டு
எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது
பூக்களை விற்பதற்கல்ல

இலக்கியத்தில் அழகியல் என்பது ஒரு கருவி மட்டுமே என்பது அவரது நிலைப்பாடு. மாலையைக் கவிதைக்கு அல்லது இலக்கியப்படைப்பிற்கு உவமையாகவும், பூக்கள் அழகியலின் குறியீடாகவும் நார் உள்ளீட்டின் (பேசுபொருளின்) குறியீடாகவும் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்ச்சமூக அகமுரண்பாடுகள், சாதிய ஒடுக்குமுறை, பிற்போக்குத்தனங்களைச் சாடுகின்ற கவிதைகளும் உள்ளன.

புலப்பெயர்வின் நிறவெறி அச்சுறுத்தலை அல்லது சலாலை எதிர்கொள்ளும் வரிகள் இவை,

சாதிய வெக்கையிலும்
வேகாத உயிர்
நிறவெக்கையிலா வேகும்?
அந்நியன் எப்போது நேசிக்கப்பட்டான்?
இருநூறு முன்னூறு
ஆண்டுகள்
நாங்கள்
உன்னைப் பொறுத்திருந்தோமே
கொஞ்சம் பொறு

நிழலும்
குறுகிக் கரைய
நெஞ்சுக்குள் கூச
பனியில் உறைந்திருக்கின்றேன்.

இந்தக் கவிதை சகிப்புத் தன்மைமையைக் கோருகின்றது. ஒரு வரலாற்று அனுபவப் பார்வையோடு ஆக்கப்பட்டுள்ள கவிதை இது. அரவிந்தனின் கவிதைகளில் இத்தகையை பண்புகள் நிறைந்து கிடக்கின்றன. கவிஞனின் வரலாற்று, சமூக, உலகப் பார்வை விசாலமானதாகவும் வாழ்வியல் அனுபவங்கள் பரந்துபட்டவையாகவும் இருக்கும் பட்சத்தில் காத்திரமான கவிதைகளை அவனால் படைக்க முடியும்.

அரவிந்தனின் கவிதைகள் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசம் என மூன்று தளங்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. அந்த அனுபவங்கள் ஒன்றோடொன்று பிணைந்தவையாக வெளிப்படுகின்றன. மூன்று வாழ்விட அனுபவங்களையும் தொடர்புபடுத்தி, அதனை தனிமனித அனுபவங்கள் என்பதற்கு அப்பால் சமூக வரலாற்று அனுபவங்களாக பொதுமைத்தன்மையுடன் பிரதிபலிக்கின்ற கவியாளுமையை அரவிந்தனின் கவிதைகளில் உற்றுணரலாம்.

ரூபன் சிவராசா -நோர்வே

ரூபன் சிவராசா

(Visited 102 times, 1 visits today)