மாற்றத்திற்கான முதல் மணி-கவிதை-பிரகாசக்கவி

பிரகாசக்கவி
பிருந்தாஜினி பிரபாகரன்

திரை விரிகிறது
காட்சி ஒன்று
அதுவொரு பிரம்மாண்டமான அரங்கு
காட்சி இரண்டு
அங்கே
ஆண்கள் ஆயிரம் பேர்
அமர்ந்திருக்கின்றார்கள்
காட்சி மூன்று
வருடத்தில் 365 நாட்களும்
உங்கள் உள்ளாடைகளை
சிறு முகச்சுழிப்புமின்றி
கழுவிக் காயப்போடும்
உங்கள் அன்பு மனைவியரின்
மாதவிடாய் காலத்து பேன்டியை
வாழ்நாளில் ஒரு முறையாவது
கழுவிக் காயப்போட்டவர்கள்
உங்களில் எத்தனை பேர்?
கேள்வியை முன்வைத்து
ஓய்ந்தது அந்த பெண் குரல்
காட்சி நான்கு
ஒரு கணம் அரங்கமே
நிசப்தப்பட்டுக் கிடக்கிறது
காட்சி ஐந்து
ஆனாலும்
ஆயிரத்தில் ஒருவன் மட்டும் எழுந்து நின்று
மிக தைரியமாக
தனது இரு கைகளையும் உயர்த்தினான்
காட்சி ஆறு
மாற்றத்திற்கான முதல் மணி
எனது வீட்டிலிருந்தே ஒலிக்கின்றது

000000000000000000000000000000000000

கடன்பட்டவன் பற்றிய சிறு குறிப்பு

மேசையின்மீது கிடக்கும்
குறிப்புப் புத்தகத்தை
காற்று பக்கம் பக்கமாக புரட்டியதும்

புத்தகத்தின்
ஒவ்வொரு தாள்களுக்குள்ளிருந்தும்
ஒவ்வொரு நபர்கள்
வீட்டிற்குள் துள்ளிக் குதித்தார்கள்
துள்ளிக் குதித்தவர்களது பெயர்கள்
முறையே
அ, ஆ, இ, ஈ ,உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஐ, ஒள, ஃ என்றிருந்தது

அவர்கள் எல்லோரையும்
ஒன்றாக பார்த்த கடன்பட்டவனுக்கு
மூச்சு முட்டியதால்
ஓடிச் சென்று
கட்டிலின் அடியில் ஒழிந்து கொண்டான்

சம்பவத்தை பார்த்து
அவனை காப்பாற்றுவதற்காக
ஓடோடி வந்த மனைவி
புத்தகத்தை மூடிவிட்டு
காற்றின் காதைப்பிடித்து
வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டாள்

00000000000000000000000000

டுமீல் டுமீல் டுமீல்
காகம் வெள்ளை என்பதை
ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் உள்ளே வரலாம்
உங்களுக்கு
ஒரு துண்டு சுதந்திரம் பரிசாக வழங்கப்படும்
நாடு ஒன்றை வரையப்போவதாகச்சொன்ன
எமது ஜனாதிபதி வரைந்த மிகப் பெரிய காடு இது
அதோ பாருங்கள்
அதுதான் அதிசயப் பறவை
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அது பிறக்கும்

அதன் பெயரை
தேர்தல் என்பதாக அகராதி சொல்கிறது
பல நூறு கொடிய மிருகங்கள்
அந்தப் பறவையிலேறி
நம்மை கொல்ல வருகின்றன

எல்லோரும் பதுங்கிக்கொள்ளுங்கள்
நம்மிடம் இருக்கும்
ஜனநாயகமென்ற துப்பாக்கிக்குள்
உங்கள் வாக்கு என்ற ரவையை
மீள் நிரப்பி சுட்டுத்தள்ளுங்கள்
அந்த கொடிய மிருகங்களை

பிரகாசக்கவி-இலங்கை

பிரகாசக்கவி

(Visited 98 times, 1 visits today)