பறப்பதற்கு வானம் தேவையில்லை-றியாஸ் குரானா

பறப்பதற்கு வானம் தேவையில்லை

றியாஸ் குரானா
பிருந்தாஜினி பிரபாகரன்

வலையில் சிக்கியிருந்த பறவை
தப்பிச் செல்ல துடித்தது
சொண்டு உசும்புவதை
முதலில் பார்த்தேன்
அதைத் தொடர்ந்து
சிறகடித்து துடிப்பதை
கற்பனை செய்தேன்
என்ன பறவை என்பதை
குறிப்பதற்கு தயங்கினேன்
கொக்கு என ஆரம்பித்து
கடைசியில் முன்பறிந்திராத
ஒரு வர்ணப்பறவையை
அடையாளம் கண்டேன்
தொடுவதற்கு நீட்டிய விரலை
கொத்திவிட்டு
சிறகடித்து மீண்டும் துடித்தது
வலையில் அகப்பட்ட
காலில் இரத்தம் கசிந்தது
சுற்று வட்டாரத்தில்
அதன் துணைக்கு
வேறு பறவைகள் இல்லை
அது எழுப்பும் ஓலம்
மனிதர்கள் அலறுவதைப்போன்று
அகோரமாக இருந்தது
கூண்டில் அடைப்பதைவிட
இது கொடூரமானது என
சிலர் தங்கள் குறிப்பேட்டில்
பதிவு செய்துகொண்டனர்
பறப்பதற்கு வானம் தேவையில்லை
என்ற தத்துவத்தை
படித்த பிறகு நடந்த கதைதான் இது
வெள்ளைத் தாளில்
ஒரு பறவையை பறக்க வைக்க
முயற்சித்தேன்
அதை ஆறு நான்களாக
பிரிந்து நின்று கவனித்தேன்
கடைசியில் பறவை
பறந்து கொண்டிருந்த தாள்
மிதந்து காற்றில் ஏறிச் சென்றது
இரண்டு நாட்களின் பின்
ஒரு மாலை நேரம்
எனது தோளில் வந்தமர்ந்தது
அந்தப் பறவைதான்.
அதற்கு நான்தான் வழிகாட்ட வேண்டும்
அதன் உணவுகளை நான்தான்
அதற்கு அறிமுகம்
செய்ய வேண்டும்
அது வசிக்க ஒரு இடமும்
துணைக்கு இன்னுமொரு பறவையும்
கண்டுபிடிக்க வேண்டும்
புதிதாக ஒரு பறவையை
வரைந்து உருவாக்குவது சுலபம்
அதற்கு பொறுப்புக் கூறுவதுதான்
மிகச் சிரமம்
கொன்று சாப்பிட விரும்பி
பலர் வருகின்றனர்
காலையில் கூவி எழுப்ப
அதற்கு பழக்கவில்லை
அது வெளியே சுற்றித் திரிந்துவிட்டு
என்னிடம் பாதுகாப்பாக
வந்து சேரப் பழகிவிட்டது.
தாளில் போய் ஒட்டி
உறங்கிவிடுகிறது
தாளில் இருந்து பிரித்து
சுவருக்கு இடம்மாற்றியிருக்கிறேன்

றியாஸ் குரானா-இலங்கை

றியாஸ் குரானா

 

(Visited 100 times, 1 visits today)