கவிதை-மணற்காடர்

மணற்காடர்
பிருந்தாஜினி பிரபாகரன்

ஊர்ப் பெரியவர் பொன்னையா
என்னைத் தேடி வந்திருந்தார்
“இந்தக் தபாலை ஒருக்கால்
எழுதி முடிச்சுத் தா, மோனை” என்றார்
அவர் எழுதிய தபால் இப்படி ஆரம்பமானது
“ஈரேழு பதினான்கு உலகங்களிலுமுள்ள
ஒன்பது மாகாணங்களையும் ஆளுகின்ற
ஏசண்டர் ஐயா அவர்களின் திவ்விய சமூகத்துக்கு
கொன்றை மரத்தடி அம்மன் கிருபையால் வாழும்
சின்னையா பொன்னையா என்னும் அடியவன்
தண்டனிட்டு எழுதிக்கொள்வது யாதெனில்…”
எதற்காக இதெல்லாமென்று எனக்கு விளங்கவில்லை
பெரியவரின் முகத்தில் புன்னகை அரும்பியது
“வீடு திருத்த நாலு பைக்கட் சீமெந்து வேணும்
எசண்டருக்கு எழுதினால்தான்
எடுக்கலாம்” என்றார்
உண்மையும் அதுதான், ஆனால்
ஏசண்டரின் அனுமதி கிடைக்க
ஒரு வருடம் கூட ஆகலாம், அதனால்
கள்ள வியாபாரிகளிடம் வாங்குவதுதான்
வழியென்று விளங்கப்படுத்தினேன்.
அப்போதும் பெரியவர் புன்னகைக்க மறக்கவில்லை
அன்புடமை பல வேளைகளில்
அறிவுடமையை மேவி விடுகிறது.

மணற்காடர்-கனடா

(Visited 63 times, 1 visits today)