ரமேஷ் பிரேதன் கவிதைகள்

ரமேஷ் பிரேதன்

செக்கச் சிவந்த தக்காளிப் பழங்கள்
கூடைக் கூடையாக உருண்டோடுகின்றன
வெடித்துச் சிதறிய சிவந்த தர்பூசணிகள்
சாலையெங்கிலும் இறைந்து கிடக்கின்றன
போர் ஓய்ந்த கடைத்தெரு
பீரங்கி வண்டியின் குறுக்காகக் கடக்கிறது
தம் குட்டிகளோடு தாய்ப்பன்றி
மழையில் நனைந்தபடி
ஆரஞ்சுப் பழக்கள் மாதுளை கேரட் பீட்ரூட்டுகள்
மண்டைச் சிதறிய பப்பாளிப் பழங்கள்
போர் ஓய்ந்த கடைத்தெருவின்
ரத்தச் சாட்சியங்களாக
பன்றிக்குட்டி ஒன்றை தாயிடமிருந்து பறித்து
எடுத்துக் கொஞ்சியபடி
மழைக்குள் நடக்கிறான் படைவீரன்
மூலைமுடுக்கெல்லாம் காய் கனிகளின்
செஞ்சாந்துக் குழைவு
மழையில் கலந்து சாக்கடையில் ஓடுகிறது
போர் ஓய்ந்த கடைத்தெருவில்
ஓயாத மழையும் ஓய்ந்தது
தெளிந்த கீழ்வானில் ஆதிபகவனின்
செம்முகம் ஒளிர்ந்தது
கையிலிருந்த பன்றிக்குட்டியை
மேல்நோக்கி விட்டெறிந்து
துப்பாக்கியால் சுடுகிறான் படைவீரன்
குறிதவறாத தோட்டா துளைத்து
அந்தரத்தில் சிதறுகிறது குழந்தை
மீண்டும் ஈழமழை தூறலெடுக்கிறது
அறத்தின் மயானவெளியில்.

00000000000000000000000

உன் உடம்பின் எல்லா மூலைகளிலும்
அட்டைகள் அண்டிவிட்டன
தொடைகளின் கவையில் பெரிய சிலந்தி
முகத்தில் சோகத்தின் ரேகைகள்
கண்களில் ஒளி அணையவிருக்கும்
அகல்களைப் போல குன்றிவிட்டது
உனது உதடுகளில்மட்டும் அதே வனப்பு
வரலாறு கடந்து மிளிரும் தேன்
அவை எனக்குப் போதும்
எனது மிச்ச நூற்றாண்டுகளை வாழ்ந்து முடிக்க

சிந்து சமவெளியில் திரிந்த ஆதி அழகி நீ
நீ நடந்தே வந்து சேர்ந்தாய்
அரிக்கமேட்டுக் கடற்கரைக்கு
நீ போகும் திசையெல்லாம்
உன்னைப் பின் தொடர்ந்து வரும்
மயில்கள்

புதுச்சேரி வானம்
மயில் தோகைகளால்
வேயப்பட்டிருக்கிறது
இரண்டு எழுத்துக்களாலான உனது பெயரை
தன் இறகுகளில் வரையப்பட்ட வண்ணாத்தி
அதை அறியாமல் உணராமல்
கண்டம் விட்டு கண்டம் தாண்டிப் பறக்கிறது
அரிக்கமேட்டில் பரிதி
உதித்த இடத்திலேயே
நாள் முழுதும் நகராமல் நிற்கிறது
சிந்து சமவெளியில் அன்று பெய்த அதே மழை
அரிக்கமேட்டு யவனக் குடியிருப்பின்மீது
இன்றும் பெய்துகொண்டிருக்கிறது
வரலாற்றுக் காலம் நெடுகிலும்
உன் வாசனைத் தேன்
புதையுண்ட நகரங்களில் நமது கடந்த ஜென்மங்களின் ஆவிகள் நிராசையோடு அலைகின்றன. அவற்றின் அலைவரிசை ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டில்தான் நம்மோடு ஒத்துப்போகிறது. நம் உடம்புகளின்மூலம் தம்மைத் தழுவிக்கொள்ள அவை விழைகின்றன. நூற்றாண்டுகளாய்த் தடைபட்டுத் தள்ளிப்போன இச்சை இன்று இக்கணம் நிறைவேற வேண்டும். பாவம், அவற்றிற்கு நாம் துணை நிற்க வேண்டும
உன் முகம்
சிந்துவெளியின்
தேன் குடுவை
உதடுகளில் வாய் வைத்து
காலத்தை உறிஞ்சுகிறேன்

தசையின் மிருது
தீயின் கொழகொழப்பு
எரியும் திரவம் படிகமாய் இறுகிய
கங்கு

புதைந்த சமவெளியைத் தோண்டியெடுத்து
மீண்டும் சமைக்கப் போகிறேன்
புதையுண்ட உடல்களின் ஆவிகள்
அடைந்த தாழிகள் ஆதிச்சநல்லூரில் உருள்கின்றன

அரிக்கமேட்டுக் கரையோரம்
ஒட்டகங்களின்மீது
தாழிகளை ஏற்றிக்கொண்டு
கடல்காணா தேசத்தைத் தேடி பயணிக்கிறேன்

உயிரோடு கொளுத்தப்பட்ட ஒட்டகம் ஒன்று
திசைகள் தெறிக்க ஓடுகிறது
தீயணைந்து அடங்கி ஆறிய கறியை
ஆவிகள் புசிக்கின்றன.

ரமேஷ் பிரேதன் -இந்தியா

(Visited 437 times, 1 visits today)