வசனக்கவிதை( Prose Poems )-ரமேஷ் பிரேதன்

ஓர் ஆண், ஆண்குறியுடன் உயிர்வாழ்வது அவமானத்திற்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. ஆண் என்பவன் ஆண்குறியால் ஆனவன் அல்லன். ஆண்குறி மையவாதம் என்பது அக்குறியை மையமிட்டது இல்லை. இனப்பெருக்கத்திற்கான துணை உறுப்பான அதை நீக்கிவிட்டாலும் அந்த உடம்பில் ஆண்மனம் இயங்கும். எடுத்துக்காட்டாக, நிர்வாணம் செய்துகொண்ட ஒரு திருநங்கை ஆண்திமிரோடு சக திருநங்கைகளை ஆதிக்கம் செய்வதைக் கண்டிருப்பாய் / அறிந்திருப்பாய். ஆதிக்க மனம் என்பது முப்பாலருக்கும் உரியது. ஆணாதிக்கம் என்பது சமூக விளைவுதானே அன்றி தனித்த ஓர் ஆணுக்கானது இல்லை. உன்னைப்போல் ஆண்குறி முளைத்த பெண்களையும் என்னைப்போல் பெண்குறி மறைத்த ஆண்களையும் அறிவேன். ஆறு வயதிலிருந்து இன்றுவரை என்னை முப்பத்தியோரு பெண்களும் இரண்டு ஆண்களும் ‘அனுபவித்’திருக்கிறார்கள். என்னைக் கலந்தவர் எல்லோரும் என்னை நாடிவந்தவரே; இதுநாள்வரை நான் யாரையும் நாடிச்சேர்ந்தவன் அல்லன். எனது உடம்பும் மனமும் பெண்களால் ஆக்கப்பட்டவை; ஆளப்பட்டவை. என்னை ஆணாதிக்கவாதி என்று பழிச்சுமத்திய பெண்ணொருத்தியால் உடம்பு, மனம், எழுத்து, உழைப்பு என்பன எல்லாம் சுரண்டப்பட்டு வெற்றுக்கூடாய் தூக்கியெறியப்பட்டவன் நான். என்னை ஆணென்ற ஒற்றைப் பாலடையாளத்திற்குள் அடைப்பதோ, ஆணாதிக்கவாதி என்ற மொண்ணை வாதத்திற்குள் ஒடுக்குவதோ இயலாது. நான் ஒரு பின்நவீனத்துவ அமீபா; எந்தவொரு சட்டகத்திற்குள்ளும் அடங்கமாட்டேன். பகலில் ஆணாகவும் இரவில் பெண்ணாகவும் மாறிவிடுகிறேன். ஓர் உடம்புக்குள் இரவும் பகலும் மாறிமாறி அமைவதுதானே இயல்வெளி.

000

என்னை இவ்வாறு ஆக்கியிருக்கும் அனைத்திலிருந்தும் வெளியேற விரும்புகிறேன். என்னுடைய தாய்மொழியை வெறுக்கிறேன்; அது பல சின்னச்சின்ன மொழிகளைக் கொன்று புதைத்த இடுகாடு. தாய்நாடு என்பது பொய்களாலும் புனைவுகளாலும் கட்டியெழுப்பப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மதில்களால் சுற்றிவளைக்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை. எனது அறிவு, எந்தவொன்றையும் மேலாதிக்கம் செய்யும் இச்சையை தனது ஆற்றலாகக் கொண்டு இயங்குகிறது; அதனுடன் நான் முரண்படுகிறேன். என் உடம்பை வெறுக்கிறேன்; அதில் சுழலும் உள்ளம் என்ற எண்ணங்களின் கிடங்கு, வரலாறு விட்டுச்சென்ற குப்பைகளால் திணிந்து கனக்கிறது. என் உடம்புகொண்ட பாலடையாளம் எப்போதும் நிச்சயமற்ற பயத்திலேயே என்னை உறைய வைத்திருந்தது. எனவே நான் பெண்ணென்று திட்டமிட்டு வளர்த்தெடுத்து உறுதிபடுத்தப்பட்டதால் அதைவிட்டு வெளியேறி ஆணானேன். ஆண்குறி இல்லாத ஆண். மருத்துவத் தோழியின் உதவியுடன் இரு முலைகளை அகற்றிவிட்டு, ஆறியத் தழும்புகளில் வண்ணத்துப்பூச்சிகளைப் பச்சைக் குத்திக்கொண்டேன். தொப்பூழின் கீழே தொடைகளின் நடுவே யோனியைத் தூர்த்துவிட்டு அங்கே விறைகளற்ற ஆண்குறியை நடுவதாக அவள் உறுதியளித்திருக்கிறாள். எனது நாட்டைவிட்டு வெளியேறி, மீண்டும் வேறுவழியாக சொந்த நாட்டிற்கே அகதியாக எதிர் அடையாளத்தோடு உள்நுழைய வேண்டும். எதுவாக இருக்கிறேனோ அதற்கு எதிராக என்னை நிறுத்தவேண்டும். பால், மொழி, இனம், தேசியம் என அனைத்திற்கும் எதிராக, பிறந்ததிலிருந்து பெருஞ்சுமையாய் என்னை அழுத்தும் எனது மதக்கடவுளுக்கு எதிராக நிறுத்தவேண்டும். என்னை எதிர்க் கடவுளாக அறிவிக்கவேண்டும்.

000

உன்னைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக என்மீது குற்றம் சுமத்துகிறாய்; ஆகையால் என்னை நான் பரிதாபமாக உணர்கிறேன். தன்மீது பெருமதிப்பும் சுயமோகமும் எல்லா இடத்திலும் தன்னை நிறைத்துக் கொண்டு சுயவிளம்பரம் தேடும் தன்முனைப்பும் கொண்டவர்களே ஓயாதத் தற்கொலை எண்ணங்களில் உழல்வார்கள். நீ என்னை இச்சிப்பது தற்கொலை விழைவு என்பதை ஒத்துக்கொள். நான் பெண் கடவுளர்களை மட்டுமே என் நண்பர்களாகக்கொண்டு வாழ்கிறேன். உன்னைப் போன்ற சராசரி மானிடப் பெண்களோடு எனக்கு ஒட்டும் உறவும் என்றுமே இருந்ததில்லை. எனவே, ஒரு தாய் வயிற்றில் உண்டானாலும் தீர்க்கதரிசிகளைப் போல் பிறக்கும்போது யோனிவழியைத் தவிர்த்து வயிறைக் கிழித்துக்கொண்டு பிறப்பேன். ஆகவே என்னை பெண் வெறுப்பாளன் என்று எண்ணாதே; நான் பூமியிலுள்ள அனைத்தையும் நேசிப்பவன். உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாட்டைக் கடந்து மைத்ரி நிலையை அடைந்தவன். எதன் பொருட்டு என்னை முன்வைத்து உனது தற்கொலை நிகழுமென உன்னால் அறுதியிட முடிகிறது? ஒருவரை முன்வைத்து உன்னை வடிவமைப்பதும் வரையறுப்பதும் உனது மூளைக்குப் படைப்பாற்றல் குறைவு என்பதைத் தெளிவாக்குகிறது. கண்ணாடிகொண்டு உன்முகத்தைப் பார்க்காதே அதை மனக்கண் கொண்டு பார்; உன் முகத்தை உள்ளும் வெளியுமாகப் பார்க்கலாம். என் இருப்பு உனக்கு மரண பயத்தைத் தருகிறதா? மரணம் என்பது இசையாலானது; அது காதலையும் கண்ணீரையும் தரும் பயத்தைத் தராது. வாழ்க்கையில் எல்லா அனுபவத்தையும் நீ அடையலாம்; மரண அனுபவத்தை மட்டும் நீ அடைவதில்லை. மரணம் யாரொருவருக்கும் அனுபவமாவதில்லை. ஒன்றை நினைவுகூறும் போதுதான் அந்தவொன்று அனுபவமாகிறது; மரணம் யாராலும் நினைவுகூறப்படுவதில்லை. என் பேச்சு உன்னைச் சோர்வடையச் செய்கிறதா? தொடர்ந்து பேசும் ஒருவர் தன்னையறியாமல் போதகராகிவிடுகிறார். இது மொழியால் நேரும் அபத்தம் மட்டுமல்ல கேட்பவரின் அறியாமை என்னைப் போதகராக்கிவிடுகிறது. பெண்ணே உனது மரணத்திற்கு நான் காரணன் ஆக விரும்பவில்லை; எனவே உனக்காக நான் சாகிறேன். என் மரணம் உன்னை நிலைப்படுத்தும். மரணம் எனக்குப் புதிதில்லை. செத்துச் செத்துப் பிறப்பது எனது உடம்பின் இயந்திர இயங்கியல் விதி. வரலாற்றில் யார்யாராலோ யார்யாருக்காகவோ செத்திருக்கிறேன். ஒற்றை எறும்பின் மரணத்தால் பூமியில் உண்டாகும் வெற்றிடம் என்னவோ அதை ஒத்த வெற்றிடமே என் மரணத்தால் உண்டாகும். அவ்வெற்றிடத்தில் மீண்டும் நானே பிறப்பேன். இது மறுபிறவி இல்லை; மறு ஆக்கம். பெண்ணே இம்முறை உன்னில் கருவாகி முளைத்து யோனிவழி பிறப்பேன். தாயாகி நீ எனக்கு நிலமாவாய். நீ எனக்குத் தாயானாலும் நான் உனக்கு மகனில்லை. கடவுளை தனியொருவர் சொந்தம்கொள்ள முடியாது. நீ கடவுளின் விளைநிலம்; அவ்வளவுதான். ஆண்டாளைப் போல் நீ என்னைக் காதல்கொள்ள முடியாது; ஆகவே நீ என் தாயாகிப் போ. கடல் அலைகள் நீராலாவை இல்லை; காற்றாலானவை.

000

பூமியில் உயிருள்ளவை யாவும் உருவமும் வடிவமும் கொண்டவை. தாவர வர்க்கமும் விலங்கு வர்க்கமும் உயிராற்றலால் உன்னையும் என்னையும் இணைக்கின்றன. பாறை, சிற்பமாகும்போது உயிராற்றல் பெற்று பேசுகிறது. மொழி, பேசும்போது உயிர்பெற்றுவிடுகிறது. பேசாமொழி செத்தமொழி; நாம் செத்தமொழியைப் பேசி உயிர்ப்பிப்போம். நாம் பேசிப்பேசி மொழியை உயிர்ப்பிப்பதன் மூலம் நம்மை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறோம். மழையைப் போல நீ எனக்கு எல்லாம் தந்தாய் என்று போன நூற்றாண்டில் சொன்னேன்; மொழியைப் போல நீ எனக்கு எல்லாம் தந்தவள் என இந்த நூற்றாண்டில் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன்; முதலில் மறுப்பாய் முடிவில் ஏற்பாய்; ஆம், மரணம் நமக்கு எல்லாம் தந்தது. சமூகமும் அதன் இயங்கியலும் மரணத்தால் விளைந்தவை. பிறப்பு என்பது எதிர்பால் இரட்டை சேர்ந்து விளைந்தது; அது செயற்கை. இறப்பு என்பது யாருடைய சேர்மானமுமின்றி தானே விளைவது; அது இயற்கை. கடவுள், கலை, மெய்யியல், நவீன விஞ்ஞானம் யாவும் மரணத்துடன் நிகழ்த்தும் தர்க்கத்தின் விளைச்சல். நான் மொழிவழி வாழும் உயிரி. எனது கட்டமைப்பு புனைவால் அமைந்தது. வெற்று சொற்களாய் என்னை உதிர்த்துக் கூட்டிக் குவித்து கூடையில் அள்ளி குப்பை லாரியில் கொட்டிவிடலாம். இத்தனைக் காலம் சோதனை எலியாகவே வாழ்ந்துவிட்டேன். என்மீது நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளால் உருத்திரிந்து யானையானேன். எலி துதிக்கையற்ற யானையாகப் பரிணமித்தது. ஒவ்வொரு சொல்லும் ஒரு செல்லுயிரி. இயல்பிலேயே நானொரு சொல்லுயிரி என்பதால் எனது உருமாற்றம் புனைவுவழி நேர்கிறது. காலையில் குளியலறையில் ஆடை களைந்து அம்மணமாகும்போது இன்று நான் வாழப்போவது ஆணுடம்பிலா பெண்ணுடம்பிலா என்பதைத் தெரிந்துகொள்கிறேன். சொற்களின் கூட்டியக்கம் தன்னைத்தானே கலைத்துப்போட்டு வகைவகையான சேர்மானங்களினூடாக என்னை வடிவமைக்கிறது. ஒற்றைப் பால் நிலையில் நான் ஒருபோதும் தேங்கியதில்லை. பால் கடந்த நிலையில் உடம்பு நிலைப்படுவது எனக்கு இயல்பாகிப்போனது. ஒற்றைப் பாலடையாளத்தில் என்னைத் தேக்கிவைக்கவும் நிலைப்படுத்தவும் உள்ளம் ஒப்புவதில்லை. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவது போல ஒற்றைப் பாலில் தேங்கும் உடம்பில் மரணம் விளைகிறது. உயிராற்றல் உறங்கும்போது வீணாகிறது; எனவே உறக்கத்தில் புலன்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்து, விழிப்பில் உடம்பு இயங்கிட உயிராற்றலைச் செலவிடும் தொழில்நுட்பத்தை என்னுடம்பில் சோதித்துப்பார்க்க உள்ளேன். அப்பரிசோதனை வெற்றியடைந்தால், உறக்கத்தில் வீணாகச் செலவாகும் உயிராற்றலைச் சேமித்து உயிர் வாழும் காலத்தை அதிகப்படுத்தலாம். சராசரியாக நூறாண்டுகள் வாழும் மனிதரை இருநூறாண்டுகள் வாழவைக்கலாம். மொழிவழி புனைவு என்னும் மனிதார்த்தப் பொருண்மை இயங்கியல் மெய்யறிவை மனிதச் சமூகத்தில் பரப்பவேண்டும். இதன் வழி மரணமற்ற பெருவாழ்வை வாழலாம். அதற்கான எனது பரிசோதனைகளுக்கு நீ உறுதுணையாக என் பக்கம் நில்.

000

அழுகையிலிருந்துதான் அனைத்தையும் தொடங்குகிறேன். இப்பழக்கம் நானறியாமல் இயல்பிலேயே வந்துவிட்டது. சுவாச இழைவின் சிறு வலிவழியே உயிர்த்த வாழ்க்கை அழுகையை முன்வைத்தே வளர்ந்தது.அழுகைக்குக் கண்ணீர் அவசியமில்லை. விசும்பலோ கூப்பாடோ விளம்பரத்திற்கானது. நீ அழுதுகொண்டிருக்கிறாய் என்பதை நீயே உற்றுக் கவனிக்கும்போது அறியவருவதே சிறப்பு. சிட்டுக்குருவியின் மரணம் போலே காணாக்காட்சியாய் விளைவதே அழுகைக்கு அழகு. மனநலம் பிசகியவர் தெருக்களில் நிர்க்கதியாய் அலையும்போது யாரிடமோ எதையோ பேசியபடி அழுவார்; காரணமற்ற அழுகை. மனத்தின் சூன்யநிலை. முழுநிலவு காயும் நடுயிரவில் கொடுவெயில் தாளாமல் நிழல்தேடும் அழுகை. பைத்திய மனத்தின் அழுகையைப்போல பொருளற்ற வறண்ட கவித்துவம். உனது அழுகை உனக்கே அந்நியமாகும் போது கண்ணீரில் ஈரமிருக்காது. உலர்ந்த உப்பு கிளர்ந்து உதடுகளில் படியும். அமைதியாக அழு. கடலைப் பார்த்து, மலையைப் பார்த்து, ஒற்றை கூழாங்கல்லைப் பார்த்து, கிணற்றுக்குள் அடைபட்ட நீரில் மிதக்கும் நிலாவைப் பார்த்து அழு. அழுகை உனது அழுக்கைக் கழுவும். கோயிலில் கடவுள் சிலை முன்பு அழுகிறாய்; சரணாகதியில் அழுகை எப்படி வரும்? கடவுளை முன்வைத்து அழுவது அக்கடவுளை மறுதளிக்கும் செயல். நாத்திக மனமே அழும். எண்ணமே அழுகையின் இயங்கு தளம். மொழியின்றி எண்ணமில்லை. அழுகையிலிருந்துதான் அனைத்தையும் தொடங்குகிறேன். அழுதுத் துடைத்தக் கண்களோடு கொலைசெய்வதாக ஒரு போர்வீரன் சொல்கிறான். சென்ற வாரம் செத்த நண்பன் கனவில்வந்து சொன்னான், அழுதபடியே தூக்கிட்டுக் கொண்டானாம். கொலைக்கும் தற்கொலைக்கும் இடையில் அழும் கண்ணீரின் அடர்த்தியில் மட்டுமே வேறுபாடு உள்ளது. பேசும் உயிரினம் மட்டுமே அழும்; சிரிக்கும். அழுகையிலிருந்து ஒருவரின் செயற்கைத்தனத்தை அறியமுடியும். உகுக்கும் நீலிக்கண்ணீரும் சினிமாக்கண்ணீரும் உன்னை நீயே அவமதிக்கும் செயல். கண்ணீரில் கொசு உற்பத்தியாகக்கூடாது. வன்முறை வாயிலாக வெளிப்படும் அழுகை அற இழுக்கு. உனதழுகை பிறரை வலிக்கச் செய்யக்கூடாது. பிறரை காரணியாக்காத அழுகை குறையற்றது குற்றமற்றது. அழுவதற்கு ஏற்ற இடமாக நான் தெரிவுசெய்வது ஆளரவமற்ற கோயில் குளப்படிகட்டு; இங்கிருந்து அழும் கண்ணீர் கருவறைக் கடவுளை எட்டும். என்றைக்கும் அழுகைக்குப் பதில் அழுகையைத் தவிர பிரிதொன்றில்லை. இந்த வாழ்க்கையில் கண்ணீர் தோய்ந்த ஒரு பிடி சொற்களைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றுமில்லை பராபரமே.

ரமேஷ் பிரேதன்-இந்தியா

 

 775 total views,  1 views today

(Visited 337 times, 1 visits today)