கங்கை பிறந்த கதை-கவிதை-ரமேஷ் பிரேதன்

கங்கை பிறந்த கதை

ரமேஷ் பிரேதன்

அமைதியாய் ஓடும் ஆறு போலே
உறங்கும் உடம்பின் இருகரை எதிரெதிர்
குத்துக் கோட்டில் வெட்டப் பட்ட
பாதி சிவமும் ஆதி சிவையும்
ஒற்றைக் காலில் நின்ற நிலையில்
தூண்டில் போட்டு மீன்பிடிக் கின்றார்
சிவத்தின் கழுத்தில் வெட்டப் பட்ட
பாதி பாம்பு மீதி பாம்பு
முள்ளில் இரையாய் வலியில் நெளியும்
அன்னை வீசிய தூண்டில் முள்ளில்
இரையும் அவளே எதிரில் தயங்கும்
மீனும் அவளே யாதும் ஆகி
நிற்கும் அணங்கு; உறங்கும் ஆறு
புரண்டுப் படுத்தது அலைகள் மோதிட
கரைகள் பதறின ஒற்றைக் காலை
அலைகள் இடறிட நீரில் விழுந்தவன்
கோலம் கண்டு அடக்க முடியா
சிரிப்பில் வெடித்துச் சிதறும் அன்னையின்
ஏளனப் பழிப்பில் பிணக்க முற்று
ஓடும் நீரில் மூலி உடம்பை
ஓட விட்டுத் துணையைப் பிரிந்தான்
மாறியக் காட்சியில் ஆற்றங் கரையில்
பாதி உடம்புடன் தனியாய்த் தவித்தாள்
பெண்ணைத் தனிமைப் பேயாய்த் திரிக்கும்
ஒற்றைக் காலால் ஆற்றை உதைத்தாள்
மருண்ட ஆறு ஊரை விலகி
ஓட்டம் பிடித்தது கரையில் வாழ்ந்தக்
குடிகள் குழம்பினர் உழவம் பொய்த்தது
பஞ்சம் பட்டினி செத்தவர் பிழைத்தவர்
ஆற்றைத் தேடியே எண்திசை ஏகினர்
அப்பனைத் தேடி அன்னையும் அலைந்தாள்
வடதிசை பறந்தாள் உச்சிச் சிகரம்
பாதம் உரசக் குனிந்துப் பார்த்தாள்
பனிமலை வெளியில் எரியும் உருவம்
ஆதியும் அந்தமும் அறுத்தச் சோதியாய்
தணன்றவன் அன்னையின் பாதம் கண்டதும்
தத்தித் தோமெனக் குதித்துத் தாவி
எட்டிக் காலைப் பிடித்து இழுத்தான்
பொதிப்பனித் தூவலில் விழுந்த உடம்பை
எரிய எரிய அள்ளிப் புணர்ந்தான்
இழையும் உடம்பின் வெப்பப் பெருக்கில்
சிகரம் உருகிக் கங்கை பிறந்தாள்
நடந்த வழியெலாம் குடிகள் குழுமினர்
ஆறும் ஊரும் செழித்தக் கரையில்
‘இங்கே யாரும் மீன்பிடிக் காதீர்’
அரசுகள் வைத்த விளம்பரப் பலகை
தாங்கியக் கம்பம் உச்சந் தலையில்
இறங்கிட உறக்கம் கலைந்தேன் நானே
அமைதியாய் ஓடும் ஆறு போலே
உறங்கும் உடம்பின் இருகரை எதிரெதிர்
நானும் நீயும் சிவனும் சிவையும்.

00000000000

வெற்றின் நிறை

புணர்ச்சியின் நீளம் அகலம் யாதெனக்
கேட்டாய்; அகமும் புறமும் பிரியா
இயல்வெளி கடந்த தென்றேன்; அன்பே
உனக்கும் எனக்கும் இடைவெளி தூரம்
அளத்தல் இயலுமா?; நமக்கு இடையே
இரண்டு கோள்களின் இடைவெளி தூரம்
நம்மை அளக்க ஒளியின் வேகம்
உதவும்; என்னில் நுழையும் உன்னை
விழுங்கும் கருந்துளை ஈர்ப்பு ஆனேன்
ஆரத் தழுவிப் புணரும் காமம்
தெய்வமும் கவிதையும் கலந்த சோதி
உடம்பில் திரியும் பரிதித் திகிரி
வெற்று என்பதே நிறைந்த இருப்பு
தொடையிடை வாயால் விழுங்கும் அரவம்
ஆதியும் அந்தமும் இல்லா இருப்பு
கணுக்கள் தவிர்த்த துண்டுக் கரும்பு
எரிந்து அடங்கிய எனது சிதையில்
சாம்பலைச் சீய்த்தால் எலும்புத் துண்டுகள்
மண்டை யோட்டுச் சில்லுடன் குருதிச்
சுண்டிய பச்சை தசைத்திரள் யோனியும்
கிடக்கும்; நீரும் நெருப்பும் சமைத்த
உயிர்ப்பொருள் நீரில் நெருப்பில் எப்படி
அழியும்? ஆயிர மாயிரம் புள்ளிகள்
கோர்த்தக் கோடென நீளும் பால்வெளி
பூத்துப் பொரியும் விண்மீன் மாப்பு
நீந்தும் தொப்பூழ்க் குழியில் முளைத்தவன்
உன்னைப் புணர்வது என்னைப் படைத்த
கடவுளைப் புணர்வது; ஒருசெல் உயிரி
அமீபா போன்ற வடிவம் இல்லா
கடவுளின் நீளம் அகலம் அளவிடும்
கருவியால் பெண்ணை அளந்திடும் மூளையின்
இயக்க விதிகளின் தர்க்க அமைப்பை
கலைத்து அடுக்கும் புதிர்விளை யாட்டின்
சாத்தியப் பாடுகள் எண்ணில் அடங்கா
உன்னையும் என்னையும் பல்கிப் பெருக்கும்
படுக்கைப் பரப்பில் தலைக்கீழ் முரண்நிலை
சமைந்து எதிர்பால் உறுப்புகள் கவ்விச்
சுழலும் தந்திர எந்திர போகம்
மரணம் இல்லா மாபெரும் வாழ்வு
தோழனே தோழனே தோழிசொல் கேட்பாய்
யோனியைத் தின்றவன் மரணிப்ப தில்லை.

0000000000000000000000

இரட்டைக் கிளவி

மொழியால் உன்னை மூடிக் கொள்கிறாய்
மொழியால் உன்னைத் திறந்து வைக்கிறாய்
மொழியைக் கொண்டு என்னைத் தொடுகிறாய்
மொழியால் என்னைப் புணர்ச்சி செய்கிறாய்
மொழியைக் கடந்த வேறோர் ஊடகம்
உனக்கும் எனக்கும் இடையில் இல்லை
மொழியைத் தவிர்த்த பிரிதோர் இயல்வெளி
இயக்கம் நிகழ்த்த இதுவரை இல்லை
மூளை என்பது மொழியால் திரண்டது
குருதியும் தசையும் மொழியால் சமைந்தவை
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும்
மொழிவழி நிகழ்வால் தொகுத்த வாழ்க்கை
என்னைத் திறந்துப் படிக்கும் பனுவலில்
உந்தன் கதையைக் கட்டுடைக் கின்றாய்
சமூகம் என்பது திரட்டித் தொகுத்து
அடுக்கி வைத்த உடம்புகள் அடைந்த
நூலகக் கட்டடம் குறுக்கும் நெடுக்கும்
புதிர்வழிப் பாட்டைகள் கால வரிசையில்
அடுக்கப் பட்ட சொற்கள் சமைத்த
உடம்புப் பிரதிகள் வெளியில் இருந்து
உள்ளே நுழைந்து எடுத்துப் படித்தவர்
யாரும் இல்லை வேற்றுக் கோளகர்
பூமியில் இறங்கி உன்னையும் என்னையும்
வாசித் தறிந்து புதியப் பொருளும்
விளக்கமும் தந்தால் தர்க்க முரணால்
நமக்குள் விளையும் உடம்புகள் அழிக்கும்
ஆயுதம் எல்லாம் அர்த்தம் இழக்கும்
உனக்கொரு வார்த்தை எனக்கொரு வார்த்தை
இரட்டைப் பெயர்களால் அடையாள மானோம்
உண்மையைச் சொல்வேன் உரக்கச் சொல்வேன்
உலகச் சரித்திர நூலில் தேடினால்
நானும் நீயும் இரட்டைக் கிளவி.

ரமேஷ் பிரேதன்-இந்தியா

ரமேஷ் பிரேதன்

 436 total views,  1 views today

(Visited 156 times, 1 visits today)