பாவியம்-ரமேஷ் பிரேதன்

பச்சைத் தவளை

ரமேஷ் பிரேதன்

ஓரடிச் சதுரம் இறுகியச் சேற்றில்
ஆயிரம் முட்டைகள் மீன்பொ ரிக்கும்
நாளைய மழையில் நிரம்பும் குட்டை
உயிர்மை நெரிசலில் ஆம்பல் பூக்கும்
சென்ற ஆண்டின் ஐப்பசி மழையில்
தொண்டை மண்டலக் கடற்கரை யோரச்
சவுக்குத் தோப்பில் கண்டுவி யந்தேன்
பச்சைத் தவளைப் பிடிக்கும் ஒருவன்
அச்சு அசலாய் என்னைப் போலவே
இருந்தான் பேசும் தமிழில் வழக்கில்
இல்லா முதிர்ந்த சொற்கள் பலநூ
றாண்டு பழயவை பேசும் போது
மூச்சுக் காற்றில் மட்கிப் புழுங்கிய
கோயில் கருவறை பண்டைய வாடை
வயதைக் கேட்டேன் இயேசு கிறித்து
தன்னைவிட ஏறக் குறைய எழுநூ
றாண்டு மூத்தவ னென்றான் ஆளும்
துதிக்கை இல்லா கட்டைப் பிள்ளையார்
போலே இருந்தான் குட்டையைச் சுற்றிச்
சுற்றி வந்தே தவளை மேலே
சவுக்குக் குச்சியை வீசிய டித்தான்
ஊரைக் கேட்டேன் வடக்கில் வாதாபி
தெற்கில் சிற்பியின் நகரம் என்றான்
தொணத்தொண வென்றே பேசினால் தவளை
நீரடிச் சேற்றில் பதுங்கிக் கொள்ளும்
ஊர்வன பறப்பன நீந்தி நடப்பன
எல்லா உயிரும் இந்த நிலத்தின்
செந்தமிழ் அறியும் என்னைப் போலே
வந்தேறிக் கடவுளும் அறியும் என்றான்
தன்னைத் தானே ஒருமுறை சுற்றிப்
பார்த்துக் கொள்ள ஒருநாள் பிடிக்கும்
உடம்பு கொழுத்தவன் பேச்சைத் தவிர்த்தான்
நாளின் முடிவில் தவளையைக் கொன்றான்
செத்தையைக் கூட்டிக் குவித்துக் கொளுத்தி
தோலை உரித்துச் சுட்டுத் தின்றான்
இந்த ஆண்டின் ஐப்பசி மழையில்
காய்ந்த குட்டை நிரம்பித் தேங்கும்
நீரும் பழையது துள்ளும் மீனும்
தவளையும் பழையவை பூக்கும் ஆம்பலும்
வீசும் சவுக்கைக் காற்றும் பழையவை
என்னைப் போலவே தோற்றம் கொண்ட
வாதாபி மனிதனும் பழையவன் சவுக்குக்
குச்சியின் வீசலில் தப்பித் தாவிடும்
பச்சைத் தவளை நீரில் மோதி
வட்டமாய் விளையும் ஓளம் மட்டுமே
ஒவ்வொரு கணமும் புதியது தொன்மை
யானவன் மேலும் தொடர்வான்; தவளையைக்
கொன்று தின்பது எனது நோக்கம்
அல்ல; தேங்கிய குட்டையும் தவளையும்
நானும் சேர்ந்தே நிகழ்த்தும் குறுஅலை
மட்டுமே ஒவ்வொரு கணமும் புதியது
மற்றவை எல்லாம் பழையவை அறிவாய்
கடவுளை விடநீ தொன்மை யானவன்
கால மையம் நீயென நின்றால்
சவுக்குத் தோப்பில் குட்டையும் நீயே
தவளையும் நீயே உன்னை உரித்துச்
சுட்டுத் தின்னும் நானும் நீயே
அவனும் மழையும் ஒன்றாய் வருவர்
சவுக்குத் தோப்பில் காய்ந்த குட்டை
இறுகியச் சேறு தூறலில் இளகி
பெருமழை வலுக்க நிறையும் பச்சைத்
தவளை பிடிக்க எனது இரட்டை
பேருந்தில் வருவான் தொப்பைக் குலுங்க.

0 0 00000000000000

இறுதிச் சொல்

நான்நீ அவன்அவள் அதுஎனும் நாடக
வழக்குச் சொல்லால் இயங்கு வெளியை
பொதுவில் சமைத்தே விதிகள் வகுத்தோம்
மொழியின் இலக்கணம் உன்னை என்னை
கட்டுப் படுத்த வழிவகை செய்தோம்
வார்த்தைக ளாலொரு வாக்கியம் கோர்த்து
வாக்கிய அடுக்குக ளாலொரு சட்டகம்
செய்ததைப் போலொரு போலி உருவில்
சமூகம் என்றொரு கட்டடம் கட்டினோம்
கோயிலும் சிறையும் இருநிலை எதிரிடை
தெரிவு செய்வதில் அரசியல் கண்டோம்
மொழியின் இலக்கண விதிகளி னாலே
உள்ளம் என்னும் உருவகம் புனைந்தோம்
சுற்றி வளைத்துச் சொன்னால் தோழா
சாராயக் கடைஎனும் தத்துவப் பள்ளியில்
உனக்கும் எனக்கும் நடுவே அறம் ஓர்
ஊறுகாய் மட்டை முழுநிலா இரவில்
போதை உச்சியில் சுடுவெயில் தகிக்கும்
கட்டப் பட்ட மொழியின் அமைப்பே
பாசிசம்; இலக்கண விதிகளை ஒழுகும்
முறைமை ஏற்கும் உள்ளம் மொழிவழி
அமைதல் பாசிசப் படுத்துதல்; தோழா
மொழியால் அமைவது உள்ளம் எனுமோர்
புதிர்வழிப் பாட்டை முட்டியும் மோதியும்
இருட்டில் புதைந்து கத்திக் கதறிட
வெளிவரும் வழித்தெரி யாமல் கூப்பிடும்
குரலுக்கு வந்தெதிர் நிற்பது கடவுளைத்
தவிர யாரும் இல்லை; பெண்குறி
என்னும் சாவி ஓட்டையில் ஆண்குறி
என்னும் சாவியால் புதிர்வழிக் கதவைத்
திறந்திடச் சொன்ன யோனிச் சித்தர்
அருளிய வாக்கு காலம் கடந்தது
அவர்வழி வந்த யோனி தாசன்
சாராயம் மீதே சத்தியம் செய்வேன்
உறங்கிக் கடப்பது பகலிற் காணது
புணர்ந்துக் கடப்பது இரவுக் காணது
உறங்கும் போதும் புணரும் போதும்
ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
பால்வழி பிரிந்த உடம்புகள் அழியும்
மொழிவழி நிலைத்த அறமும் சிதையும்
காலம் பிளந்து விளிம்பில் தொங்கும்
இறப்பின் முனையில் மனிதர் நினைப்பதை
அடுத்துள் ளவரிடம் சொல்லுவ தில்லை
சொல்லப் படாத இறுதிச் சொல்லில்
தன்மை முன்னிலை படர்க்கை இல்லை.

0 0 000000000000000

நாகலிங்கப்பூ

நட்ட நடுநிசி நீந்தும் வான்மீன்
வட்டக் கருமுகம் பொலிந்த பருக்கள்
காய்க்கும் பழுக்கும் வெடிக்கும் வேர்ப்பலா
தோலை உரித்து முகமூடி அணிந்ததாய்
பார்ப்போர் மருள கேட்போர் திகைக்க
உள்ளம் புழுங்கி ஊர்பல திரிந்து
சித்த வைத்தியர் தாழ்ப்ப ணிந்தேன்

“அரும்பும் பருக்கள் பருவத் திற்கழகு
தரையில் படர்ந்த நெருஞ்சி முட்கள்
முகத்தில் தைத்தவை கொழுப்பின் குரூரம்
மருந்து இல்லை மந்திரம் இல்லை
தெய்வம் போலொரு பூவில் வழியும்
பாலால் முகத்தை நித்தம் கழுவித்
துலங்கச் செய்யலாம் மரம்செடிக் கொடியில்
பூவாப் பூவில் லிங்கம் காய்க்கும்
நாக லிங்கப் பூவைப் போலொரு
பூவை மனம்கொள் நாட்டை நடந்து
காட்டைக் கடந்து எதிர்ப்படும் குன்றின்
வயிற்றடி ஆழக் குகையில் காண்பாய்”

விடுகதை போலொரு சித்தர் மருந்தைத்
தேடிச் சென்றேன் நடையின் கதியில்
நாடு நகர்ந்தது காட்டின் பச்சையம்
பார்வை மறைத்தது விலங்கினம் துரத்திட
பயந்து ஓடினேன் பறக்கும் பறவையின்
நெடுநிழல் தாவிப் பற்றிப் பறந்தேன்
நிழலே பொருளாய் நிறைந்து கனக்கும்
மாயத் தோற்றம் நேர்நிமிர் குன்றின்
உச்சித் தலைமுடி கால்களை இடறிட
தடுக்கி விழுந்து ஒற்றைப் பாறையின்
நெட்டை உடலின் மார்பில் உருண்டு
வயிற்றில் வழுக்கி ஆழக் குகையின்
இருட்டுள் புதைந்தேன் உயிருள்ள இருட்டு
பழகிய பார்வையில் காட்சித் துலங்கிட
பாறை மேடையில் ஆவுடைப் படிமம்
சடைமுடி தரித்த அம்மண உருவம்
லிங்க உச்சியில் பசும்பால் வார்த்தது
மரம்செடிக் கொடியில் பூவாப் பூவில்
லிங்கம் காய்க்கும் பறித்திட பால்வரும்
வைத்தியர் அருளிய சித்தர் மருந்து
யோனிப் பூவில் லிங்கம் முளைக்கும்
பச்சையம் இல்லா பாறை மலரின்
பாலைப் பருகி முகத்தைக் கழுவினேன்
சடைமுடிச் சிவனார் நடுக்கண் திறந்தார்
கும்பிட்ட படியே குப்புற விழுந்தேன்.

ரமேஷ் பிரேதன்- இந்தியா

ரமேஷ் பிரேதன்

(Visited 90 times, 1 visits today)