மௌனன் யாத்ரீகா கவிதைகள்

தானியத்தைத் தேடி

தகப்பன் கூற்று

ஆந்தைகள் கூட்டமாக அலறுதைப்போல்
இந்த இரவு நடுங்க வைக்கிறது
மேட்டிலிருந்து சரிந்த கனத்த கல்லாய்
மனம் பயத்தை நோக்கி உருண்டோடுகிறது

நம் சுருங்கிய வயிற்றுக்குள்
உடைத்துப் போட தானியம் தேடி
போயிருக்கிறான் நம் குட்டி

மக்காச்சோள தட்டைகள் மீது
உக்கிரமான வெய்யில் ஏறுவதைப் பார்க்கும் அவன்
தலைக் கொதித்த சாரைகளாக அவற்றை உணர்வான்

பச்சைக்கட்டிய ஒரு நிலத்தை
தன் தலைமுறைக்கு
கை மாற்றித் தர வக்கில்லாத
அறம் பிழைத்த குமுகம் கீழானது
நினைவிருக்கிறதா என் காதல் கிழத்தியே?
அவனை ஈன்ற நாளில்
ஊரெங்கும் இலுப்பைப் பூ நாறிற்று.

0000000000000000

கொடிய பாதையின் எலும்புகள்

பூமியின் பேருயிரான புற்களை
வேர்த்திரளோடு எரித்துவிட்டது முதுவேனிலின் வெய்யில்

நிறைசூல் முயலின்
கனிந்த மடியிலிருந்து
குட்டிகள் இறங்கிக் கொண்டிருக்கும்
ஈச்சம்புதரில்
முற்றிய காய்களைப் பறித்துக் கொண்டுபோய்
கஞ்சி பொங்கும் பாலைச் சிறுக்கியே

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு
எலும்புகள் காய்ந்து கிடக்கும்
கொடிய பாதையில்
கொம்பு மட்டும் இளைக்காத
அடிமாடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறான் நம் தலைவன்

உப்புக்கண்டம் தீர்ந்த பானையில்
ஒட்டியிருக்கும் கறி நாற்றத்தை
நுகர்ந்து நுகர்ந்து மருகுகிறேனடி
அது ஏன் அவனது வியர்வை நெடியைப்போல்
என் பித்தத்தை எகிறச் செய்கிறது?

00000000000000000

குரவை மீன் பிடிக்கப் பிரியும் தலைவன்

பொழுதுக்கும் பன்றிக்குட்டிகள் உடல் தணிக்கும் ஒடப்பில்
மீன்கள் அனத்துவதாக வலையோடு
பிரியும் தலைவனே
புளித்து நாறும் சகதியில் நீ இறங்கும்போது
பசியால் கருகிவிட்டதோவென நினைக்கும்படி
குருகொன்று நிற்பதைக் காண்பாய்
மல்லிக்காடுகளில் மொக்கெடுத்த சிவந்த என் தலைவியின் கைகள்
கொடிய வெய்யிலில் சுள்ளிப் பொறுக்கும்போது
வாட்டத்தில் கருகி அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கின்றன
சகதி கலங்கியவுடன்
வாய் பிளந்து வான் வெறிக்கும்
கெண்டை மீனின் கண்களைப் பார்
அது அந்த நீல ஆகாயத்திடம் இறைஞ்சும் நீர்
இப்போது தலைவியின் கண்களில் திரண்டுள்ளது.

0000000000000000000

நற்குறி பாலை

மாலைப்பண் பாடிய பாணன்
வேலத்தில் பட்டை உரிக்கும்
கொடிய பாதையில்;
இடுப்பெலும்புகள் புடைத்த சிறு மந்தையொன்றை
ஓட்டிச்செல்லும் இடையன்
மறிகளின் பரிதாபமான கண்களை எதிர்கொள்ள முடியாமல்
இலைகள் காய்ந்த வாகையின் மீது
அலக்கைப் போடுகிறான்;
விலாவில் வலியெடுத்த சினைக் கொறாவின்
சுருங்கிய முலைக்காம்புகள் அக்கணம் விடைத்து துவள்வதைப் பார்க்கும் ஊரன்;
ஒரு பாறைச்செடியின் நிழலில் ஊர்ந்து போகும்
காட்டு அட்டையைப்போல்
காமத்தின் கொதிப்பால் உந்திச் சுருண்ட என் நிலையறிவான்
இனிய தோழியே!
பாலையாகத் திரிந்த காடு
வாழ்வதற்கோர் அற்புத நற்குறி.

மௌனன் யாத்ரிகா-இந்தியா

(Visited 368 times, 1 visits today)
 

3 thoughts on “மௌனன் யாத்ரீகா கவிதைகள்”

Comments are closed.