லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு-கவிதை-மௌனன் யாத்ரீகா

லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு

குறிஞ்சி:

கவண் வீச்சில்
பன்றியின் குறுக்கில் வலியைத் தெறிக்க விட்டான் குறவன்
பாறையைப் போல் தரைக்குப் புரண்ட
அதன் உடலில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தைத்த அம்பு
இற்றுப் போயிருந்தது
மலையின் காதுக்குள் அந்த வியப்பைச் சொல்லிவிட்டு
பன்றியைப் பிளந்தான்
வயிற்றில் புதைந்திருந்தது
லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு
அதை அகழ்ந்தெடுத்து உண்டுவிட்டு
பன்றியைத் தைத்து மலைக்குள் விரட்டினான்
அது பயங்கர உறுமலோடு ஓடி மறைந்தது.

000000000000000

காட்டுத்துறை-முல்லை

வேட்டையில் கைவசமான உடலை
கழுகால் முழுதாய் உண்ண முடியவில்லை
சதைத் தீர்ந்து எலும்பு துருத்திய
சிறிய விலங்கின் உயிர்
ஒரே கவ்வில் பிரிந்ததும் ஒரு காரணம்
தோல்வியின் கேவல் அகோரமானது
அந்தக் குரல் வானமெங்கும் கேட்டது
அவ்வழியே ஏகிய கழுதைப்புலிக்கு
காய்ந்த குருதியின் மேல் இச்சையில்லை;
எலும்பை முத்தமிடும் ஆறலைக் கள்வன்
ஒரு பட்டாக் கத்தியைப்போல்
அதைக் கூர்த்தீட்டுகிறான்
தாவிக் காட்டுக்குள் குதிக்கிறான்
அவன் முன்னால் மருள ஓடுகிறது
அவனுடைய நிழல்.

000000000000000

புறத்தூது-பாலை

மூங்கில் இலைகள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன
வண்டல் இறுகிய ஓடையின் வெடிப்பில்
வேரோடிய இருளின் ஆழத்திலும்
வெம்மையிருந்தது
பழைய நீரோட்டத்தில் குவிந்த மாவு கற்களை
நீக்கிவிட்டு தோண்டினால்
குருணைக் கிடைக்குமென்று
குவாரிக்காரன் யாரையோ அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தான்
லாப நோக்குடைய புறத்தூது அது

000000000000000000000

வயல்திணைக் கலைஞன்-மருதம்

உழத்தியர் போடும் குலவைக்குப் பின்பாட்டுப் பாடும்
அசல் வயல்திணைக் கலைஞன் அவன்
மணல் கடத்தும் பெருநிலக்கிழார்கள்
கட்சித் தொடங்கியதும்
ஏகத்துக்கு மாறிவிட்டான்
கரை வேட்டி வெளுப்பதை
என் அன்றாட வேலையாக்கிவிட்டான்
ஒரு வீசமானாலும் சொந்த நிலமிருக்கிறது என்றுதான் வரித்துக்கொண்டேன்
நிலமற்ற கூலியென்பதில் எனக்கெந்தப் பெருமையுமில்லை
பரத்தையினும் கேவலம் அரசியலை விடுத்து
நிலத்தை உழச்சொல் தோழி!

000000000000000000

பெருமணல் சிலுவை-நெய்தல்

உவர்நீர் மலர்களின் சிதைந்த கோலமும்
விளரி யாழின் நூற்றாண்டு தனிமையும்
நமக்கொன்றும் புதிதில்லை தோழி
ஜெப வீட்டின் முகடில் அமர்ந்து கரையும் காகம்
துர் நிமித்தமோ? நன் நிமித்தமோ ?
கடல் பின் வாங்கிய பிறகு
பெருமணலில் பார்த்த சிலுவை
மீன் செதில்களால் மூடிக்கிடந்தது
திணைத் தாண்டியும் உப்புக்காற்றடிக்கும் என்பான் அவன்
கரையொதுங்கிய சங்கில்
துப்பாக்கியிலிருந்து ரவை வெளியேறும் ஒலி கேட்பது போலுள்ளது
படவர்ப் பெண்கள் சதா பேதைகளாயிருக்க சபிக்கப்பட்டவர்களோ?

மௌனன் யாத்ரிகா -இந்தியா

(Visited 228 times, 1 visits today)
 

One thought on “லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு-கவிதை-மௌனன் யாத்ரீகா”

Comments are closed.