மா னீ கவிதைகள்

மா னீ கவிதைகள்

இரவின் நிசப்தம்
நீளுகின்ற
மூன்றாம் சாமத்தில்
எழுந்தமர்கிறது மனம் .

எதோ ஒன்றை
எழுதாத இரவு
கொடியது .

எழுதியும் பதியாத
சொல்லின் வீரியம்
வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி.

தாலாட்ட யாருமில்லா
எழுத்து
தனித்து வாழும்
குழந்தை .

ஏதோஒன்றை எழுத
எண்ணி
வெற்றுக்காகிதத்தை நிரப்பி
ஓய்கிறது பேனா.

உலகம் நாளை
அதை கவிதையென்றோ
காவியமென்றோ
நிச்சயம் சொல்லிக்கொள்ளும்

பேசுபொருளை எழுதுவது
சுலபம்
மனதின் மௌனவெளியை
எழுதாமல்
தோற்கிறது என்
இரவுகள்.
*
சம்பள நாளில்
எண்ணி வாங்கும் தாளில்
எவரெவர் முகமோ
தெரியும்
என் முகத்தை
தவிர .
*
எறிந்த பிறகுதான்
தெரிந்தது
அது
சந்தன மரம்
*
சிறு தொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
அசுத்தம் நீக்கி நிரப்பிய தூய நீர்
நீரில் மிதக்கும் செயற்கைத் தாவரங்கள்
மிதமான சூரிய ஒளி
மின் சூடாக்கியின் கணகணப்பு
பதமாக தயார்செய்யப்பட்ட உணவு
நேரம் தவறாத உபசரிப்பு
சொகுசு சிறைக்குள்ளிருந்து
தன் வாழ்வைப் பாடுகிறது
மீன்குஞ்சு
*
மா னீ -இந்தியா

(Visited 114 times, 1 visits today)