நேர்காணல்-ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்-சிராஜுதீன் முஹமட்

பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பதிவு செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை. அதேவேளையில் பகை மறப்பு என்பதையும் இரு சமூகத்திற்கும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டியதும் படைப்பாளனின் கடப்பாடுதானே…

 ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

00000000000000000000000000

நாவல் என்கிற வகைமைக்குள்ளாக இதை வைக்க வேண்டுமா என்பது என்னுடைய கேள்வி..?

கடந்த 30 ஆண்டுகளாக கோவை மாநகரின் உடலில் மதங்களால் உண்டான கீறல்களின் உண்மையை அறிந்து கொள்ளும் விசாரனையே இந்த நாவல். மேலும் இந்த நாவல் அநீதி இழைக்கப்பட்டவர்களின்  ஒப்புதல் வாக்குமூலம் என்றும் சொல்லலாம். அடிபடுபவர்களின் குரலாக இந்த நாவல் பயணிக்கிறது. வேறு விதமாகத்தான் இந்த நாவலை எழுத நினைத்தேன். பல வடிவங்களில் நாவலை பல ஆண்டுகளாக  எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால்  இந்த நாவல் தன்னை இப்படியாக  கட்டமைத்துக் கொண்டது ! இதனால் சில கதாபாத்திரங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இறுக்கமான மார்க்கப்பற்று , எளிய முஸ்லிம்கள் மீதான அக்கரையின்மைதானே ஜமாத் மீதான அதிருப்தியாக மாறி தூய்னைவாத இயக்கங்கள் உருவாக காரணமாகின்றன…?

ஒரு வகையில் ஜமாஅத் மீதான அதிருப்தி காரணமாக இருந்தாலும், எல்லோருமே அல்லது பெரும்பான்மையான இளைஞர்களுக்கும் இப்படியான அதிருப்தி இருந்தது என்று சொல்ல முடியாது. இந்துத்துவம் மிக முனைப்பாக தங்களை நிலை நிறுத்தி வளர்ந்து கொண்டிருந்த அந்த சூழலில், முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவியது. அப்போது ஜமாஅத்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையில் தூய்மைவாத இயக்கங்கள் இதை பயன்படுத்திக் கொண்டன. ஆஹா, நமக்கு ஆபாத்பாந்தவான் கிடைத்துவிட்டான் என்று கொஞ்சம் இளைஞர்கள் அவர்கள் பின்னால் அணி திரண்டார்கள்.

மேலும் எளிய முஸ்லிம்களின் வாழ்வியலுக்காகவும், அவர்களின் துயரங்களுக்காக ஜமாத்தும்,  அமைப்புகளும் மட்டுமல்ல அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உட்பட  யாரும் எப்போதும் உடன்  நிற்க மாட்டார்கள். நாட்டு நடப்பும் இயல்பும் இப்படித்தான் இருக்கிறது.

20 ஆண்டுகள் நிறைவடைந்த இன்றைய சூழலில் எளிய முஸ்லிம்களின் வாழ்வாதாரம் குறித்துச் சொல்லுங்களேன்…….?

எளிய முஸ்லிம்களின் நிலை இன்றும் இங்கு கோவையில் மட்டுமல்ல, எங்கும் அதே அன்றாடம் காய்சி நிலையில்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் எப்போதும் ஒரு கேள்விக் குறிதான்..! தினம் உழைத்தால் சாப்பாடு. இல்லையேல் கூப்பாடுதான் !

பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பதிவு செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை.அதேவேளையில் பகை மறப்பு என்பதையும் இரு சமூகத்திற்கும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டியதும் படைப்பாளனின் கடப்பாடுதானே…?

ஆம். இது ஒரு எழுத்தாளனின் முக்கிய கடமையும் கூட. சமூக நல்லிணக்க மேம்பாடு குறித்து எப்போதும் சிந்திப்பவனே ஒவ்வொரு எழுத்தாளனின் கடமையாக இருக்க வேண்டும். அதற்கு தன்னலான முனைப்பும், முயற்சியும் எடுக்கவும் வேண்டும் – படைப்பின் வழியாக.

பொது உளவியலில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை இந்துத்துவ இயக்கங்களும், ஊடகங்களும் கன கச்சிதமாக செய்து கொண்டிருந்த போது இஸ்லாமிய இயக்கங்களின் பணி என்னவாக இருந்தது?

இத்தகைய அன்றைய சூழலில் இஸ்லாமிய இயக்கங்களின் பணி சிறப்பாகவே இருந்தது என்று சொல்லலாம். என்றாலும் இப்போது போல இயக்கங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கும், பொது மக்களுக்கும்  உண்மையை உரத்து சொல்லவில்லை. மேலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி, இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சியை துண்டும்படியாகவே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டன ! இதன் காரணமாகவே இஸ்லாத்தின் மீதும், அப்பாவி முஸ்லிம்கள் மீதும் அபாண்டமாக குற்றச் சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர்.

பொதுவாக தி.மு.க முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்கிற கருத்து உண்டு கலவர காலத்தில் ஆட்சியில் இருந்தது தி.மு.க. அந்த காலகட்டத்தில் அக்கட்சியின் வகிபாகம் என்ன ?

அன்றைய கோவை கலவரச் சூழலில் திமுக முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்தது என்பது உண்மைதான்! எங்கே தங்கள் ஆட்சிக்கு ஏதும் பங்கம் வந்துவிடுமோ என்கிற அச்சம் காரணமாகவே திமுக அடக்கி வாசித்தது. பிஜேபி ஆதரவு நிலையில் இருந்த திமுகவின் நிலைப்பாடு அப்படித்தானே இருக்கும். ? இதனால்தான் 19 அப்பாவி முஸ்லிம்களை போலீஸ் சுட்டுக் கொன்ற பிறகும் அரசு எதையும் கண்டு கொள்ளாமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தது. அதே போலவே குண்டு வெடிப்புக்குப் பிறகு சம்பந்தம் இல்லாத ஒட்டு மொத்த கோவை அப்பாவி முஸ்லிம்கள் போலீசாரால் வேட்டையாடப்பட்டதும் போதும் திமுக ஆட்சியில்தானே? இது ஒரு ஆறாத ரணம் – வடு. திமுக

திராவிட, மார்க்சிய இயக்கங்கள் இயல்பாகவே முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளவர்கள். முஸ்லிம்களும் திராவிட இயக்கத்தோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்தவர்கள் தானே ஒரு காலத்தில். ஆனால் அவர்களிடமிருந்து முஸ்லிம்களை பிரித்தெடுத்தது இயக்கங்கள் தான் இல்லையா..?

உண்மைதான். இன்றும் முஸ்லிம்களுக்கு இவர்கள்தான் ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால் அன்றைய மிக ஆபத்தான கட்டத்தில் முஸ்லிம்கள் இந்துத்துவத்தால் மிக பாதிக்கப்பட்டபோது,பாசிசம் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது,கோவை ரணகளப்பட்டுக்கொண்டிருந்த போது திராவிட, மார்க்சிய இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை – உடனடையாக செயல்படவில்லை உதவிடவில்லை என்கிற கோபமும் இதற்கு ஒரு காரணம். அந்தச் சூழ்நிலையில் இயக்கங்கள்தான் முன் நின்றன என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் இயக்கங்களின்பால் இளைஞர்கள் திரும்பினார்கள் என்பது உண்மை.

மார்க்ஸிய-பெரியாரிய இயக்கங்கள் கலவர காலத்தில் அமைதிப்பேரணி நடத்தியதாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது பேரணியைத் தாண்டி முஸ்லிம்களுக்கு ஆதரவான வேலைகளை அவர்கள் செய்யவில்லையா…?

இதைத்தவிர பெரிய அளவில் வேறு ஆதரவான வேலைகள் எதுவும் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களிடம் இது பற்றி  கேட்கவேண்டும். உண்மை அறியும் குழு மற்றும் பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்களின் உதவியும் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது. இதனால்தான் உண்மை மிக வெளிப்பட்டது. இல்லையேல் ஊடகங்கள் சொல்லும் பொய்யையே எல்லோரும் நம்பியிருப்பார்கள். முன்னாள் எம்எல்ஏ. அப்துல் நாசர் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரின் சமீபத்திய “கோவை கலவரங்களில் எனது சாட்சியம்” நூல் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

98 மற்றும் 99 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட அ.தி.மு.க – தி.மு.க உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதனால் தானே பா.ஜ.க வால் வெற்றிபெற முடிந்தது தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லைதானே… சட்டமன்றத்தேர்தலிலும் ?

ஆம் உண்மை. இப்போதும் பாஜக தனித்து நின்று என்றும் இங்கு வெற்றிபெறவே  முடியாது.

அழுத்தம் திருத்தமாக பழநி பாபா குறித்த பதிவுகள் ஏதும் இல்லையே… முஸ்லிம்களுக்காக தீவிரமாக இயங்கியவர் அவர். அதுவும் குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் அவர்.. ?

ஆம். பழனிபாபா குறித்து நாவலில் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் இந்துத்துவாவுக்கு பயந்து கொண்டிருந்த அன்றைய சூழலில் தனி ஒருவராக  சிறுபான்மை மக்களுக்கு தைரியமாக குரல் கொடுத்தவர் பழனிபாபதான். இதனால் இளைஞர்கள் அவர் பின்னால் அணி திரண்டார்கள் என்பதையும் நாவலில் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் கூட நிறைய சொல்லியிருக்கலாம். விடுபட்டு விட்டது.

முஸ்லிம் – தலித் என்பது இயல்பாகவே இணக்கத்தோடு தான் இருப்பார்கள் ஆனால் முரணாக கோவையில் மட்டும் எதிர் நிலையில் நிற்பதற்கான சூழல் எப்படி உருவானது…?

இந்துத்துவம் அப்படி சூழ்ச்சி செய்து தலித் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பிரித்தது. தலித் மக்கள் குடியிருப்பில் ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சி அமைத்து இளைஞர்களை கவர்ந்து கொண்டது. முஸ்லிம்கள் குறித்து பொய்யான தகவல்களை பிம்பங்களைக் கட்டமைத்து நம்ப வைத்து இதை செய்தது. பொறுப்புகள் கொடுத்து         கலவரங்களில் அவர்களை முன் நிறுத்தியது. கடைவீதி காய்கறி  மார்க்கெட்டில் ஏற்படும் சிறு சிறு கூலிப் பிரச்சனைகளையெல்லாம் இந்து – முஸ்லிம் பிரச்சனையாக்கி முஸ்லிம்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அவர்கள்  வளர்ச்சிக்காக கட்டமைத்துக்கொண்டது இந்துத்துவம். இதற்காகவே சின்னச் சின்னப் பிரச்சனைகளையெல்லாம் ஊதிப் பெருக்கி கூலித் தொழிலாளி-முதலாளி என்பதை இந்து – முஸ்லிம் என்று மதத்தை முன்னிறுத்தி மதப் பிரச்சனையாக்கி கலவரங்களை தொடர்ந்து ஏற்படுத்தியது. இதற்கு அவர்களுக்கு அடியாட்கள் வேண்டும். இப்படியாக இந்துத்துவ பாசிச வலையில் சிக்கிக் கொண்டார்கள் தலித்கள்.

இந்துத்துவ இயக்கங்களின் தோற்றத்திற்கு உலகமயச்சூழல் காரணம் எனச் சொல்கிறீர்கள் சரி.. இஸ்லாமிய இயக்கங்களின் உருவாக்கத்திற்கும் உலகமயத்திற்கும் தொடர்பு இருக்கிறதுதானே..?

இஸ்லாமிய இயக்கங்கள் என்பதை விட இஸ்லாமிய இந்த அமைப்புகளின் உருவாக்கத்திற்கும் உலகமயத்திற்கும் அப்படியொன்றும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இந்த அமைப்புகள் உருவாகின. ஒரு இயக்கம்தான் அவர்களுக்குள்ளான ஈகோ மற்றும் கருத்து மோதல்களால் பல அமைப்புகளாக  உடைந்து  இன்று இவ்வளவு இஸ்லாமிய அமைப்புகளும், தலைவர்களும் !

சிராஜுதீன் முஹமட் – இந்தியா

(Visited 134 times, 1 visits today)
 
அ.மார்க்ஸ்

நேர்காணல்-அ.மார்க்ஸ்-சிராஜுதீன்

“மக்கள் மீதான பல்வேறு வகைச் சுரண்டல்களையும் ஒதுக்கல்களையும் எதிர்கொண்டதில் கமூயூனிஸ்டுகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. “அ.மார்க்ஸ் நிறப்பிரிகையில் காலத்தில் நீங்கள் பேசிய பல விஷயங்கள் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. […]