நேர்காணல்-அ.மார்க்ஸ்-சிராஜுதீன்

“மக்கள் மீதான பல்வேறு வகைச் சுரண்டல்களையும் ஒதுக்கல்களையும் எதிர்கொண்டதில் கமூயூனிஸ்டுகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.

“அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ்நிறப்பிரிகையில் காலத்தில் நீங்கள் பேசிய பல விஷயங்கள் இன்று பேசு பொருளாகி இருக்கிறது.

அ. மாற்றுக்கல்வி

ஆ.  மாற்றுப்பாலினம்

இ. தன்பால் ஈர்ப்பு

உண்மை. உங்களைப் போன்றவர்கள் அதை ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நாங்கள் இவற்றைப் பேசியபோது, ஏதோ முக்கிய அரசியல் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் உள் நோக்கத்துடன் நாங்கள் அதை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டோம். ‘மணிக்கொடி’ காலம் முதல் தமிழகத்தில் சிறு பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. பல புதிய மேலைச் சிந்தனைகளை எல்லாம் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவற்றுக்கு ஊண்டு. ஆனாலும் ஒரு சில பிரச்சினைகளி அவை கண்டுகொண்டதே இல்லை.  மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்தும் தந்தை பெரியாரின் பங்களிப்புகள் குறித்தும் அவை எதுவும் எழுதியதே இல்லை. முதல் முதலில் புதுச்சேரி தோழர் அருணன் அவர்கள்தான் கூவாகத்திற்கு நேரடியாகச் சென்று மூன்றாம் பாலினத்தவரின் வருடாந்தர ஒன்றுகூடல் குறித்த கள ஆய்வுக் கட்டுரை ஒன்றை வடித்துத் தந்தார். பெரியார் குறித்த எங்களின் கூட்டு விவாதமும் அதற்கான முன்னுரைப்பாக நண்பர் ராஜன்குறை வடித்துத் தந்த விவாதக் கட்டுரையும், “ஓ ! பெரியாரை இப்படியும் பார்க்க இயலுமா?” என்கிற வியப்பை அன்று தமிழ் கூறும் நல்லுலகில் ஏற்படுத்தியது.  பாவ்லோ ஃப்ரேயரின் மாற்றுக் கல்வி குறித்த என் கட்டுரை நிறப்பிரிகையில் வெளி வந்தபோது ஏராளமான ஊர்களில் அது குறித்து உரையாற்ற அழைகப்பட்டேன். மாற்றுக் கல்வி மட்டுமல்ல, மாற்று அரங்கு குறித்தும் அகஸ்டோ போவால் போன்றோரின் முயற்சிகள் குறித்தும் ஒரு முழு நாள் கருத்தரங்கையும் நிறப்பிரிகை புதுச்சேரியில் நடத்தியது. தலித் இலக்கியம், தலித் அரசியல் குறித்த தொடக்க ஆய்வுகளையும், கலந்துரையாடல்களையும் நிறப்பிரிகைதான் ஏற்பாடு செய்தது. கூட்டறிக்கையாக வெளியிடவும் செய்தது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியைக் காய்தல் உவத்தல் இன்றி மிக்க கரிசனத்துடனும், துணிச்சலுடனும் தமிழ்க் களத்தில் பேசியதும் எழுதியதும் நாங்கள்தான். பெண்ணியம், குடும்ப அமைப்பின் வன்முறை ஆகியன குறித்து நாங்கள் பேசியவையும் தமிழகத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. அது உண்மையில் ஒரு சிந்தனை விகற்சிகளின் பொற்காலமாகத்தான் இருந்தது.

தலித் அரசியலின் தொடக்க காலத்தில் அதாவது 1993 ஆம் ஆண்டு ”தலித் அரசியல் அறிக்கை” எழுதுமளவுக்கு இருந்துள்ளீர்கள் அது குறித்து..?

மேற்கூறிய செயற்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் அதையும் காண வேண்டும். பல்வேறு மாற்றுக்களையும் சிந்தித்துக் கொண்டும், முன்வைத்துக் கொண்டும் இருந்த நாங்கள் அந்த வகையில், சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் பின்னணியில் முன்வைத்த கருத்தாக்கம் தான் தலித் அரசியல். உருவாகி வந்து கொண்டிருந்த தலித் அரசியலுக்கு ஒரு கோட்பாட்டு வரையரையை உருவாக்க வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை முவைத்து எங்களத் தூண்டியது தோழர் கல்யாணி (பேரா.கல்விமணி) தான். நான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் பொதுச் செயலாளராக உள்ள ரவிக்குமார், கல்யாணி மற்றும் நண்பர்கள் கூடி ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்தோம். பின் அதை விவாதித்து ஒரு நகலறிக்கையாக உருவாக்கி அதைத் தமிழக அளவில் உள்ள இந்தப் புதிய அரசியலில் ஆர்வம் உள்ள பலருக்கும் அனுப்பினோம்.  தஞ்சையில் ஒரு திருமண மண்டபத்தில் விவாதம் ஒன்றை ஒரு நாள் முழுக்க நடத்தி ஜனநாயக முறையில் அதில் திருத்தங்கள் செய்து, இறுதி வடிவு கொடுத்து வெளியிட்டோம். விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழகத்தின் முக்கிய தலித் அமைப்புகள் அனைத்தும் பிரதிநிதிகளை அனுப்பி இருந்தன. முதலில் 2000 பிரதிகள் அச்சிட்டோம். இதுவரை நான்கு பதிப்புகளுக்கு மேல் அது வெளிவந்ந்துள்ளது. கோவையில் மறைந்த தோழர் விடியல் சிவா ஒரு விரிவான ஒரு நாள் விவாதம் ஒன்றை அந்த அறிக்கையின் மீது ஏற்பாடு செய்தார். மறைந்த கருணா மனோகரன், ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், கோவை ஞானி முதலானோர் அதில் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

தலித் அரசியலின்   தொடக்க காலத்திற்கும் தற்போதுள்ள சூழலுக்குமா நிலைமை குறித்து உதாரணமாக

அ. பெரியார் ஒரு தலித் விரோதி என தலித் அறிவிஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டது

ஆ. கம்யூனிஸ்டுகள் தலித்துகளுகளுக்கு எதிரானவர்கள் என பிரச்சாரம் செய்வது

இ. தென் தமிழகத்தில் இருக்கும் பறையர்- பள்ளர் முரண்பாடு

ஈ. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இருக்கும் பறையர்- அருந்ததியர் முரண்பாடு

நாங்கள் வெளியிட்ட அந்த தலித் அறிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு கான்ஷிராம் அவர்களின் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பகுஜன் எனும் சொல்லாக்கத்தை உருவாக்கியவர் புத்த பகவன்.. “பகுஜன் ஹிதய, பகுஜன் சுகய” என்பது புத்த வாக்கு. அது சிறுபான்மையாக ஒதுங்குகிற அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையாகத் திரள்வது. ஏனெனில் ஒடுக்கப்பட்டவர்களே நாட்டில் பெரும்பான்மையினர். ‘பகுஜன்’ என்பது அதிக அளவிலான ‘வெகு மக்கள்’ என்பதைக் குறிப்பது. கான்ஷிராம் என்ன தலித் உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பது இன்றுவரை யாருக்கும் சரிவரத் தெரியாது. தலித் உட்சாதி வேறுபாடுகளைத் தாண்டி அவர் மக்களைத் திரட்டினார். தலித் உட்சாதி ஒற்றுமைக்கு அவர் முன்னுரிமை அளித்தார். வடநாட்டு சாதி அமைப்பு இங்குள்ளதைக் காட்டிலும் வெறுபட்டது. அங்கு சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் குறிப்பிட்ட அளவு உள்ளனர். தமிழகத்தில் சத்திரியர்களே கிடையாது. வைசியர்களும் இங்கு பெரிய அளவில் இல்லை. அதே போல வடக்கில் பார்ப்பனர்கள் 10 சதம் வரை உள்ளனர்.ஐங்கே இரண்டரை சதம்தான். இந்தப் பின்னணியில் கான்ஷிராம் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து, உட்சாதி வேறுபாடுகளுக்கு அப்பாலான தலித் பிரிவுகள் மற்ரும் மிகவும் அடித்தள நிலையில் உள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைத் திரட்டினார். ஆனால் இங்கோ தலித் உட்சாதிகளை மட்டுமாவது ஒன்றாகத் திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளைக்கப்படவில்லை. கிருஷ்ணசாமி நாங்கள் தலித்களே இல்லை என்றார், ரவிகுமார் போன்ற தலித் தலைவர்கள் பிற தலித்களுடன் ஒற்றுமை பேணுவதைக் காட்டிலும் பார்ப்பனர்களுடன் ஒற்றுமை பேணுவதரற்கு முக்கியத்துவம் அளித்தனர். பார்ப்பனீய எதிர்ப்பு என்பது இங்கு தலித் அரசியலின் முக்கிய கண்ணியாக அமையவே இல்லை. அதற்குப் பதிலாக பெரியாரும் திராவிடக் கருத்தியலும் இங்கே முக்கிய எதிரியாகக் கட்டமைக்கப்பட்டனர். தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பெருஞ்சரிவு அன்றுதான் தொடங்கியது. இன்றுவரை அது சரி செய்யப்படவே இல்லை. பெரியாரைக் கடுமையாகவும், அநீதியாகவும் விமர்சித்து வி.சி.கவின் பொதுச் செயலாளரான ரவிகுமார் எழுதிய தொடர் கட்டுரையை திருமா அவர்கள் தங்களின் அதிகாரபூர்வமான ‘தாய் மண்’’ இதழில் வெளியிட்டதை எல்லாம் என்ன சொல்வது. நாளெல்லாம் இப்படியான அரசியலைச் செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது அந்தக் கூட்டணியும் உண்மையாக அமைவதில்லை. அதே போல இங்கே தலித் அமைப்புகள் உருவாகும் முன்பு பெரும்பாலும் விவசாயத் தொழிலாளிகளாக இருந்த தலித்களை கம்யூனிஸ்டுகள்தான் இயக்கமாக்கி வைத்திருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க விவாசாயப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். அவர்களது நடைமுறைகளில் பல விமர்சனத்துக்குரிய குறைபாடுகள் இருந்தபோதும் தலித் மக்கள் மீதான பல்வேறு வகைச் சுரண்டல்களையும் ஒதுக்கல்களையும் எதிர்கொண்டதில் கமூனிஸ்டுகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஆனால் தலித் அமைப்புகள் உருவானபோது அவர்களுக்கான் அணிகளை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்தே உருவி எடுக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில் கம்யூனிஸ்டுகள் இங்கே முக்கிய எதிரிகளாக்கப்பட்டனர். இந்த நிலையைக் கம்யூனிஸ்டுகளும் சரியாகக் கையாளவில்லை. விளைவு? இன்று கிழக்குக் கடற்கரையோரம் பெரிய அளவில் ஆர்.எஸ்.எஸ் நிலை கொண்டுள்ளது.

பள்ளர் – பறையர் முரண்பாடு என்பது தீரும் என நம்புவதற்கு இடமே இல்லை. பளளர்கள் மத்தியில் அப்படியொரு சாதி உயர்வுக் கருத்து எல்லா மட்டங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளது. அவர்கள் தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தை எதிர்க்கவில்லை. அவர்களின் எழுத்துக்கள், பிரகடனங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது அவர்கள் தீண்டாமையை ஆதரிக்கிறார்கள் என்பது விளங்குகிறது. அவர்கள் சொல்வதெல்லாம் தங்கள் மீது தீண்டாமை கூடாது என்பது மட்டும்தான். வாஜ்பேயீ ஆட்சியின்போது முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட இதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அப்போது நாங்கள் சுய மரியாதை இயக்கம் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் சார்பாக அந்த முயற்சியைக் கண்டித்து நாங்கள் ஒரு பொது மாநாட்டைச் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் கூட்டியபோது அதில் கலந்து கொள்ள கிருஷ்ணசாமி மறுத்தார். தங்கள் மீது தீண்டாமை எல்லாம் கிடையாது என்றார்.

அருந்ததியர் – பறையர் ஒற்றுமைக்கான நிபந்தனை என்பது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை தயக்கம் இன்றி ஏற்பதில்தான் உள்ளது. வி.சி.க அமைப்பு தெளிவாகவும் வெளிப்படையாகவும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு தேவையில்லை எனச் சொல்லும் கிருஷ்ணசாமியின் குரல் குறித்து.

மிகவும் கண்டிக்கத் தக்கது.

அருந்ததியர்கள் தெலுங்கர்கள் எனப்பேசும் தமிழ்த் தேசியர்கள் சொல்லுகிறார்களே….

அவர்கள் தமிழ்த் தேசியர்கள் அல்ல. பெங்களூரு குணா வழி வந்த அவர்கள் தமிழ் பாசிஸ்டுகள். அவர்கள் கணக்குப்படி திமுக தலைவர் கருணாநிதி உட்பட எல்லோரும் தெலுங்கர்கள்தான். தெலுங்கு மொழியை தமிழ் நட்டில் உள்ளவர்கள் யாரும் வீடுகளில் இப்போது பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் கூட 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழுகிற தெலுங்கு பேசுவோரை நாடு கடத்தவா முடியும். அல்லது அஸ்ஸாமில் இன வெறியர்கள் சொல்வது போல அவர்களை “ஐயத்துக்குரிய வாக்காளர்கள்” (D voters)“ பட்டியலில் வைத்து விட முடியுமா? காலம் காலமாக இங்கே மிகவும் கீழான பணிகளுக்கும் கடுஞ் சுரண்ட்டலுக்கும் ஆட்பட்டுள்ள அருந்ததிய மக்களைத் தெலுங்கர்கள் என முத்திரை குத்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது எனச் சொல்வதைப் போல மனிதாபிமானமற்ற பாசிச வெறித்தனம் ஏதும் இருக்க இயலாது.

கள்ளர், மறவர், அகமுடையோர் என முக்குலத்தோர் என ஓர் பெயரில் ஒன்றிணையும் போது அருந்த்ததியர், பறையர், பள்ளர் என தலித் என்ற அடையாளத்துக்குள் ஒன்றிணைவதில் உள்ள  சிக்கல்..குறித்து…..?

கள்ளர், மறவர், அகமுடையார் என்போர் ஆதிக்க சாதிகள். தலித் மக்கள் மீது தீண்டாமையையும் சாதி ஒடுக்குமுறைகளையும் கடை பிடிப்போர். அவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து விட்டனர். ஆனால் ஒன்றிணைந்து தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்க வேண்டிய பள்ளர், பறையர், அருந்ததியர் சாதியினர் ஒன்றிணையாத நிலை மிகவும் வருந்தத் தக்க ஒன்று. அந்த ஒருங்கிணைவு சமீப காலத்தில் சாத்தியமில்லை. தலித் அரசியல் என்றெல்லாம் நாம் அவற்றை மேன்மைப்படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் அவையும் சாதி அரசியலாகவே தேங்கிப் போனது வேதனை.

அம்பேத்கர் தன்னுடைய சமகாலத்தில் வாழ்ந்த சமூக சிந்தளையாளர்களோடு கொண்ட உறவு குறித்து..

அ. அயோத்திதாசப் பண்டிதர்

ஆ. காந்தி

இ. ரெட்டைமலை சீனிவாசன்

ஈ. பெரியார்

அண்ணல் அம்பேத்கருக்கும் அயோத்திதாசருக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கர் மிகவும் நவீனமான சிந்தனைப் போக்கு உடையவர். பௌத்தத்தை ஏற்றுக் மொண்டதில் அம்பேத்கருக்கு முன்னோடியாக அயோத்திதாசர் இருந்தபோதும் அவரை அம்பேத்கர் அளவு நவீன சிந்தனையாளர் எனக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக அயோத்திதாசர் அருந்ததியர் மீதான தீண்டாமையை நியாயப்படுத்தியதைப் போல அம்பேத்கரிடம் எதையும் காண முடியாது. அம்பேத்கர் காந்தி உறவைப் பொருத்த மட்டில் அவர்கள் காலத்தில் நெருக்கமான உறவு அவர்களுக்கிடையில் சாத்தியமில்லாமலேயே இருந்தது. பூனா ஒப்பந்தம் அவர்களுக்கிடையில் நட்புக்கான பெருந் தடையாக இருந்தது. ஆனால் அந்தப் பிரச்சினையைக் கூர்ந்து அவதானித்தால், பேராசிரியர் அருணன் தன் குறுநூலில் கூறியிருப்பதுபோல அன்றைய சூழலில் தலித்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்துவதற்கே பொது ஒப்புதல் இல்லாமல் இருந்ததை அறிய முடியும். இங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் அதற்கு ஒப்புதல் பெறுவதற்கே காந்தி பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருந்தது. சிறையில் காந்தி இருந்த உண்ணாவிரதம் டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக நடத்தப்பட்டது எனச் சொல்வதைக் காட்டிலும் இட ஒதுக்கீடு என்கிற கோட்பாட்டையே எதிர்த்த காங்கிரசுக்கு எதிராகவும் காந்தி நடத்திய போராட்டம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காந்தி, அம்பெத்கர் இருவரும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை சில அம்சங்களில் அவர்கள் இணைந்தும் செயல்பட்டிருக்கக் கூடும். தான் இரண்டாவது திருமனம் செய்து கொண்டபோது காந்தியில் செயலாளர் மகாதேவ தேசாயிடம் அழைப்பிதழைத் தந்த அம்பேத்கர், “காந்தி இருந்திருந்தால் இந்தத் திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” எனச் சொன்னதாக ஒரு பதிவு உண்டு. ரெட்டைமலை சீனிவாசனுடன் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட போதும் மிக நெருக்கமான உறவு இருவருக்கும் இடையில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக தலித் தலைவர்களில் சிவராஜுடன் அண்ணலுக்கு நெருக்கமான உறவிருந்தது. எம்.சி.ராஜாவுக்கும் அவருக்கும் இடையில் அப்படியான உறவு இல்லை.  பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நிறைந்த கருத்தொற்றுமையும் நெருக்கமான உறவும் இருந்தது. மதமாற்றம் உட்பட அண்ணலின் எல்லா முயற்சிகளிலும் தந்தை பெரியார் அவருக்குத் துணையாகவே இருந்தார்.

திராவிட இயக்கங்கள் செய்தது செய்யத்தவறியது குறித்து….

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். இந்த அரை நூற்றாண்டுகும் மேற்பட்ட காலத்தில் எந்த நாட்டிலும் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்குந்தானே. அதைய்யெல்லாம் பெரிய சாதனை எனச் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் கருணாநிதி மறைந்தபோது அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சிப்பவர்களும் அவரது ‘சாதனைப் பட்டியலை’ப் பதிவு செய்தோம். அவர் இந்த ஐம்பது ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்துள்ளார், ஏதாவது செய்திருப்பார்தானே.

திராவிடக் கட்சிகளின் சாதனை என்றால் இந்தியாவிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதைச் சொல்லலாம். இந்த அடிப்படையில் மனித வளக் குறியீட்டில் மேலாக உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. செய்யத் தவறியவை என்பதைப் பொருத்த மட்டில் காவிரி நீர் உட்பட மாநில உரிமைகள் பலவற்றையும் தமிழகம் கோட்டை விட்டுள்ளதைச் சொல்லலாம். எக்காரணம் கொண்டும் பதவியை இழக்க அவர்கள் தயாராக இல்லை. அப்புறம் அவர்களின் படு மோசமான வாரிசு அரசியல். ஈழப் பிரச்சினை அதன் உச்சத்தில் இருந்தபோது கருணாநிதி தன் பிளைகளுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு டெல்லிக்குப் பறக்கவில்லையா?

இடதுசாரிகள் உலக அளவில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள் இது குறித்து மிகவும் விவரித்துச் சொல்லுங்கள்.

இதென்ன, இது எல்லோர் கண்ணிலும் அன்றாடம் காட்சிப் பொருளாக இருப்பதுதானே. ருஷ்யா கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிவிட்டன. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியிலேயே முதலாளித்துவ நடைமுறைகள் செயலாக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன. இவற்றையெல்லாம் நான் மிக்க கவலையோடும் கரிசனத்தோடும்தான் இங்கு சொல்கிறேன். அது மட்டுமல்ல. இதைவிட ஆபத்தான விடயம் என்னவெனில் புதிய தலைமுறை இளைஞர்கள் முழுக்க முழுக்க முதலாளித்துவ மதிப்பீடுகளுக்குப் பலியாகியுள்ளதுதான் இன்னும் பெரிய கொடுமை. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆழமான ஆய்வுகள் உலக அளவிலும், இந்தியாவிலும் போதுமான அளவுக்குக் கிடையாது. கம்யூனிசத்தின் இந்த வீழ்ச்சி பல உயரிய மானுட மதிப்பீடுகளை நாசம் செய்துள்ளது. இன மத வெறுப்புகளும், வெறுப்பு அரசியல்களும் இன்று மேலுக்கு வந்துள்ளன. இந்தியாவை எடுத்துக் கொண்டோமானால் இன்று நூற்றுக் கணக்கான இந்துத்துவ அமைப்புகள் பல்வேறு மட்டங்களில் செய்யும் பணிகளில் பத்தில் ஒரு மடங்கு கூட நாம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் தொலைதூரத் திட்டமிடலுடன் காய்களை நகர்த்துகின்றனர். அவற்றுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்குச் செயலபட முடியாமல் நாம் சோர்ந்து கிடக்கிறோம்

சர்வதேச அளவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். என்பதும் உங்கள் அவதானிப்பு அது குறித்தும் மிக விரிவாக… சொல்லலாம்.

இதுவும் அன்றாடக் காட்சிகளாக நாம் கண்டு கொண்டிருப்பவைதான். உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த “இஸ்லாமோபோபியா” – எனும் இந்த இஸ்லாமிய வெறுப்பு ஒரு தொழிலாகவே மாறி உள்ளது எனப் பல நூல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன. நாடன் லீன் என்பவர் எழுதியுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் கொல்லப்படுதல் – Iynching  என்பது ஏதோ மாட்டுக் கறி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்திய முஸ்லிம்கள் மீது மட்டும் மேற்கொள்ளப்படும் கொலைவெறித் தாக்குதல் அல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் கூட இப்படி நடந்து கொண்டுதான் உள்ளன. தாடி வைத்திருப்பது, பெண்கள் ஹிஜாப் அணிவது, பெரிய அளவில் தொழுகைத் தலங்களைக் கட்டுவது முதலியன இன்று மேலை நாடுகளில் கடும் எதிர்ப்புக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன. இப்படியான சூழல் பெருகும்போது முஸ்லிம்கள் இயல்பாகவே ஒரு வகையான “பதுங்கு குழி” மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதாவது அவர்களின் அடையாளங்களையே அவர்கள் தமக்கு ஒரு பாதுகாப்பாகக் கருதி அதற்குள் ஒடுங்குகின்றனர். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்களானால் முஸ்லிம்கள் மீதான இப்படியான தாக்குதல்கள் அதிகமான பின்புதான். அவர்களிடம் அதிக அளவில் தாடி வைத்துக் கொள்வது, தவறாது தொழுகைக்குச் செல்வது முதலிய வழமைகள் அதிகமாகியுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள  முடியும்.. ஆக இது ஒரு முடிவற்ற தொடர்ச்சியாகத் தொடரும் நிலை ஏற்படுகிறது.

இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த புரிதல் இடதுசாரி அமைப்பினரிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இடதுசாரி அரசியலிலும், பாசிச எதிர்ப்பிலும் அக்கறையுள்ளவன் என்கிற வகையில் இதை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முஸ்லிம்கள் இன்று தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றை நம்புகிற அளவிற்கு இடதுசாரி அமைப்புகளை நம்புவதில்லை. இதை உங்கள் மீதான குறையாக மட்டும் நான் கருதவில்லை. முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சிந்தனைகள் மீது ஒரு வெறுப்பு இருக்கவே செய்கிறது. என்னதான் இருந்தாலும் அது ஒரு வணிகச் சமூகம். அவர்களுக்கு இயல்பில் பொது உடைமை எனும் கருத்தில் ஈர்ப்பு இருப்பதில்லை. அவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை நான் சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை.

இது குறித்து இரு தரப்பும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். குறிப்பாக இன்று இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசத்தைப் பொருத்த மட்டில் அதற்கு முஸ்லிம்கள் எந்த அளவுக்கு எதிரியோ அதுபோல கம்யூனிஸ்டுகளும் எதிரிதான். இந்நிலையில் முஸ்லிம்களும் கம்ய்யுனிஸ்டுகளும் இணைந்து நின்று பொது எதிரியை எதிர்கொள்வது அவசியம். அது இன்று குறைவக உள்ளது.

காந்தியார்.. ?

காந்தியார் பறறி நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன். கடந்த பத்தாண்டுகளில் நான் அவரைப் பற்றி நிறையவே எழுதிவிட்டேன். என் அப்பா ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நாடுகடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் கடைசி வரை கதர் ஆடைதான் உடுத்துவார். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த நூற்களில் “மார்க்ஸ் – எங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலும் இருந்தது; “சத்திய சோதனை”யும் இருந்தது. நேரு இறந்த அன்று அப்பா சுதேசமித்திரன் நாளிதழ் நெஞ்சில் கவிழ்ந்திருக்க கண்ணீருடன் அவரது சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த காட்சியை என்னால் மறக்க இயலாது. காந்தியை இ.எம்.எஸ், ஹிரேன் முகர்ஜி.. இப்படி எத்தனையோ கம்யூனிஸ்டுகள் வியந்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் காந்தியை வெறுப்பதற்கு ஏதுமில்லை. என் பிரியத்துக்குரிய ஜெயகாந்தன் காந்தி குறித்த ரோமன் ரோலந்தின் நூலை மொழியாக்கவில்லையா? காந்தியைப் படியுங்கள். மேன்மையுறுவீர்கள்.

சிராஜுதீன் முஹமட்-இந்தியா

(Visited 250 times, 1 visits today)
 

நேர்காணல்-ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்-சிராஜுதீன் முஹமட்

பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பதிவு செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை. அதேவேளையில் பகை மறப்பு என்பதையும் இரு சமூகத்திற்கும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டியதும் படைப்பாளனின் கடப்பாடுதானே…  ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் […]