கடவுளின் நறுமணத்தை நுகர்தல்-கவிதை-மௌனன் யாத்ரீகா

இந்தக் கோடையில் நானொரு தொரட்டியைத் தயார் செய்துள்ளேன்
ஒரு வளர்ந்த பனை உயரத்துக்கு
போத்திலிருந்து மூங்கில் எடுத்தேன்
மந்தைகள் பெருகிவிட்டது மட்டுமின்றி
என் கிராமத்துக் காடுகளில்
தின்னத் தகுந்த பழங்கள்
நிறைய விளைந்திருக்கின்றன என்பதும்
தகுந்த காரணம்
கருவேலம் தன் திரண்ட காய்களால்
ஆடுகளை மண்டியிட வைத்தபோது
நானும் மண்டியிட்டு சேகரித்தேன்
நிகழும் பருவகாலத்தின் சிவந்த கனிகளை.

0000000000000000000

அறுவடைக்கு முந்தைய நிறத்தால்
வயல்கள் மின்னிக் கொண்டிருந்தன
பாசன ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து
மலைப்பாம்பு உரித்த தோலைப்போல்
நீண்டு நெளிந்துக் கிடந்தது நீர்
மீன்கள் ஓரிடத்தில் குவியும் பள்ளங்களில்
நாரைகள் தூங்கி வழிந்தன
முயல் இறங்கிய தடக்குறியைத் தேடி
புதர் வரைக்கும் சென்ற எனக்கு
இந்தக் காட்டை நிறைக்கும் முயல்களுக்காக
நடந்த கலவியே கண்ணில் பட்டது
பிறகு நான் நாரைகள் நீங்கிய பொழுதில்
ஆரால்கள் பிடித்துச் சென்றேன்.

000000000000000000

காட்டு உணவின் புதிரான மணத்தை
சுவைத்து அறியவே
நானொரு மேய்ப்பனாக விரும்பினேன்
மூன்று இரவு பகல்கள் உதிர்ந்த
எனது நூறு ஆடுகளின் புழுக்கைகள்
இந்தப் பருவகாலத்தின் விளைச்சலை
அதிகரிக்கும் என்ற விவசாயி ஒருவன்
துவரைக்காய்களை அவித்துக் கொண்டு வந்தான்
கடவுளின் நறுமணத்தை நுகர்ந்தேன் நான்.

00000000000000000000

வசந்தத்தின் ஏழு மூலிகைகளை
சுவையறிய புறப்பட்டேன்
ஒன்று பதற்றத்தைத் தணித்தது
மற்றொன்று மனதை அமைதிப்படுத்தியது
இன்னொன்று உடலுக்கு குதிரை வேகத்தைக் கொடுத்தது
நான்காவது பசியூக்கியாக இருந்தது
அடுத்தது தாகத்தைப் போக்கியது
ஆறும் ஏழும் முறையே
காமத்தையும் கலவியையும் அதிகப்படுத்தியது
இயற்கையிடம் முழு திருப்தியடைந்தேன் நான்.

000000000000000000000

தரிசுக் காட்சியை நிலத்திலிருந்து நீக்க வேண்டும் எனில்
உணவுப்பயிர்களால் வயல்கள்
முழுமையடைய வேண்டும்
பணப்பையை சற்றே மடித்து வைத்துவிட்டு
பசியை மீண்டும் காமுறுங்கள் மக்களே
இப்படியாக நான்
சுற்றியுள்ள கிராமங்களின் கதைசொல்லியாகிப் போனேன்
மக்கள் மெதுவாகத் திருந்தத் தொடங்கியிருக்கிறார்கள்
இப்போதெல்லாம் அவர்கள் என்னோடு காட்டுப்பழங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்

மௌனன் யாத்ரீகா-இந்தியா

மௌனன் யாத்ரீகா

(Visited 100 times, 1 visits today)