எதுவரை நீளும் இது…?-கவிதை-அலெக்ஸ் பரந்தாமன்

எதுவரை நீளும் இது…?

காலவெளியில் நகரும்
பயணத்தைச் சபித்தபடி…
பெருமூச்செறிகிறது
விழிநீரைச் சுமக்கும் வாழ்வு.

வெளித்தெரியாப் பொய்களையும்
வேசம் கலையா முகங்களையும்
போர்வைகளாய் போர்த்தியபடி…
மாற்றியபடி…
புன்னகைத்து நகர்கிறது
போதாத காலம்.

நெருங்கியிருந்த குருதியுறவுகள்
நிதம்
நிஜமென்ற நம்பிக்கையை
தகர்த்தெறிகிறது வழியில்
‘தனிமைப் பொழுதுகள்’

கூடி எதுவும் வராதென்ற சேதிகளை
குறிப்பாலுணர்த்துகிறது இழவு ஓலங்கள்.

பள்ளியறியாப் பாடங்களை
பக்குவமாகக் கற்றுக் கொடுக்கிறது
அவமானம்.

உயிர் விலகி
உடலைப் பிணமென்று பெயரிடமுன்
ஒருகவள உணவை இடாத
இழி கயமைகள் நிறைந்த இவ்வுலகு
சபிக்கப்படுவதாக.

” உன்னைப்போலவே
உன் அயலானையும் நேசி”
வேதம் கூறுகிறது
வெகு விளக்கமாக!

ஆயினும்,
தான்தோன்றித் தனங்களுக்கு ; இந்த
வேதவார்த்தைகள் விளங்குவதாயில்லை.

தலை கவிழ்ந்து கிடக்கிறது மனிதம் ; துயர்
தாளாமல் சுழல்கிறது பூமி.

000000000000000000000000000000

வெண்நரை வேட்டிகளின் எதிர்ப்பரசியல்

எதையும் எதிர்த்து… எதிர்த்து
வாழப் பழகிக்கொண்டுவிட்ட மனதுள்
சஞ்சரிக்க மறுக்கிறது
சமாதான இசைவாக்கம்.

எதனோடும்
பசையற்ற ஒட்டுதலாகி நிற்கும்
வாழ்வியலையும் மீறி
கிளை பரத்தி நிற்கின்றது
பகையுணர்வு.

ஏழ்மைப்பட்ட இயலாமைகளின்
பலவீனத்தைப் பற்றிப் பிடித்தபடி…
தனது
இருப்பைத் தக்கவைத்து நகருகிறது
எதிர்ப்பரசியல்!

தம்நிலை தவறி நிற்கும்
பல சுயபுத்திகள்
சொல்புத்திகளின் பின்னால்
வழித்தடம் மாறிய பயணங்களின்மீது
மோகம் கொண்டனவாக
அள்ளுண்டு போகின்றன
அடிமை விரும்பிகளாக!

உலகத்தின் முன்
வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற
வைராக்கியத்தை
வலுவிழக்கச் செய்வதற்கு
மேலும்மேலுமாக
உற்பத்தி செய்யப்படுகின்றன
மன வயல்களுக்குள்
உசுப்பல் வார்த்தைகள்.

“அடைந்தால் தமிழ் ஈழம்!
இல்லையேல் வீரமரணம்…”.

“தூக்குங்கள் துப்பாக்கி
துணிந்து விட்டால் எவன்பாக்கி…”

காலாவதியாகிப்போன வசனங்களை
முற்றிப் பழுத்த ‘ வெண்நரை வேட்டிகள்’
இன்னமும் கட்டிப்பிடித்தபடி…

இயலாமைகளின்முன் நகர்த்துகின்றன
தாம் குந்தும் கதிரைகளுக்காய்!

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 101 times, 1 visits today)