நெற்றிப் பொட்டில் அறையும் ஒளி-கவிதை-நுஹா

நெற்றிப் பொட்டில் அறையும் ஒளி

அது சுழன்று கொண்டுதானிருக்கிறது
வெம்மையினுள் குளித்த புறாவினை
தலைதுவட்டிய வண்ணமும்
இடைவேளையின் போது ஈசல்களை
பறக்கவிட்ட வண்ணமும்

நாட்டியங்களை உயிர்ப்பிக்கும் ஜதியின் மேல் தும்பியாக அமர விளைகிறது
பலவீனத்தின் ஒரு சொல்

நீள வாக்கில் மற்றும் குறுக்குவெட்டுமுகமாகவும்
பயணிக்கும் பாதைகளை முட்டையின்
புறவோடுபோல் நொறுக்கிவிட்டு
சிறகுகளைப் பொருத்திக் கொள்கிறேன்
தூய வெண்பட்டு
ஆயினும் சிறகு

வானவில்லின் வண்ணங்களுக்கிடையே
ஊடுருவிச் செல்லும் மகா நதி
ஏழுவர்ணங்களிலும் தாவி இன்னும்
புலனாகாத மாயவண்ணங்களும் சேர்த்துக்
குழைத்த ஓவியம் வெள்ளொளியாய்
பிரகாசித்து நெற்றிப்பொட்டில் அறைகிறது

00000000000000000000000

வெள்ளிக் குருணல்களால்
நிறைந்துள்ளது நதிக்கரை
அதன் நுண்துளைகளில்
ஊர்ந்து செல்லும் உப்புப்
பூத்த கறையான்கள்

மக்கி நிற்கும் தரித்து மீந்த
வேம்பின் அடிக்கட்டையில்
விம்மலும் புடைத்தலுமான
சுறுசுறுப்பின் சாம்ராஜ்யம்
இடை வெளியில் மினுங்கும்
துருவிய தேங்காய் கொத்துகள்

நட்சத்திரங்களின் ஒளிர்வினைத்
தாண்டிய அதிவேகத்தில் கடந்து செல்கிறது
வந்தியத் தேவனின் பரிக்குளம்பு

நதியின் மேல் படர்ந்த கிளையின்
சிலுசிலுப்பில் பிடிப்பிழந்த பழுப்பேறிய
இலையின் கூர்நுனி
உள்ளுறை உணர்வுகளை
ஓவியமாய் வரையத் தொடங்கியது

ஓவியத்திலிருந்து கசிந்த வண்ணங்களைப்
பூசிக் கொண்டதில்
விண்மீன்களால் நிறைந்தது மாயநதி

முத்தம் தவறிப் போன அபஸ்வரத்தில்
என்னிரு கயல்களும் சிணுக்கத்தோடு
நதியில் குதித்துவிட்டன

நுஹா-இலங்கை

நுஹா

(Visited 139 times, 1 visits today)