பெண் ஈரலிக்கும் ஆயுள் நிலம்-கவிதை-கே.முனாஸ்

பெண் ஈரலிக்கும் ஆயுள் நிலம்

உன் பாதம் பட காத்துக்கிடக்கிறது நம்நிலம்
பட்டதும், செழிக்கும் மனசும் உறவும்
சுவர்க்க இளம் ஊதாவிதழ் தூவும்
உன்மென்தடத்தின் ஈரலிப்பின் சிதறலில்,
நம் பட்ட மரமும் தளைத்து நிற்கும்
சருகும் துளிர்கும்.

சுவர்க்கத்தின் தேர்ந்தெடுத்த தேவ இளம் துண்டு நீ
உன் ஈர்கும் ஆதிவாசம் கலந்த மென்மர நிழலில்
நாம் கவலையற்ற பச்சிளம் ஆசைதீரா இருஉயிர்கள்.
நீ படரும் பெண்கொடியாக
உன்பாதம் பட்ட நிலமெங்கும் நீண்டு விரிந்து கிடக்கும்
ஆண் குருத்து இலை நான்.

தெரிவுக்காக, சுண்டி, வானுயர சுழட்டிய நானயத்தின்
இரு பக்க ரகசியம்- சில போது ஆண்,
பல பொழுது பெண்.
உயர வீசியதும் உன்ஆண்
கீழே விழுந்ததும் உன்பெண்.

இடைநடுவில், உன் ஈரலிப்புத்தென்றலில்,
இரண்டும் சரிபாதி கலந்த ஆண்பெண்.

நான், உன் ஆயுள் நிலம்.
நீ, யுகஇன்பம் சொரியும் இளதேவதை.

00000000000000000000

மலைச்சிறை

பள்ளத்தாக்குகள் கடந்து
கழுத்தில் அன்பு திரித்த கயிற்றால்
இழுத்துப்போனாள் அவனை
வெள்ளைசெம்மெறி ஆடுகள் சில
கனைத்தவாறு அவனைத்தாண்டிச் சென்றன

ம்ஹ…ம்ஹ…..!

பனிமூட்டம் கலைந்து கிடக்கும் பள்ளத்தாக்கில் இருந்து
மல்லாக்கப் படுக்கும் மலையுச்சிக்கு அவனை தள்ளிச்சென்றாள்
வழிநெடுகிலும் முயலை பூனையாக்கி,
மானை நரியாக்கிவிடும் மந்திரம் ஓதியோதி

அவன் பாவப்பட்டு பரிதாபம் தெரிவித்தால்
கோபம் கொண்டு
பூனையை சிலையாக்கினாள்

இருமருங்கிலும் சிலைகள் பெருத்தன
தலையைத் தொங்கப்போட்டவாறு உச்சி அடைந்தான்
மந்திரக்குச்சியை பெண்பைக்குள் திணித்து விட்டு
வேறு இரு கலர் குச்சியை வெளியே எடுத்தாள்-
ஊதா,
கருப்பு

தடவி பாறை மேன்பரப்பில் தூசு தட்டி
சிறையொன்றை வரைந்தாள் ஊதாவில்
கதவில் கோடுகள் இட்டு கம்பியாக்கினாள் கருப்பால்
அவனைத்தள்ளி சிறையிட்டு
திறப்பை வீசினாள் பள்ளத்தாக்கில்

சிறைமுன் தன்னை காவல் சிலையாக்கி
கால்களை மடித்து இடது முதுகை புல் தரையில் அமர்ந்தவாறு
இரு புருவங்களையும் சற்று உயர்த்தி அவன் முகம் பார்த்துக்கிடந்தாள்
வெளியேறிய சிரிப்பை அடக்கியவாறு.

கே. முனாஸ்-இலங்கை

(Visited 100 times, 1 visits today)