அரசியல் குருடு-கவிதை-கே முனாஸ்

அரசியல் குருடு

கே முனாஸ்

ஆரம்பத்தில், உரிமை கோரி, பின் முறிந்து,
கிளைவிட்டுத்தாவி, வேறுகட்சிக்கூடு கட்டிய வெகுநாள்
அரசியல் வெயிலில் காய்ந்தசருகொன்றுக்கு
எரிப்புக்கொள்கை வகுக்குமரச தலைவனின்
அண்ணனுடன் பெரும் அந்நியோன்னியம் இருக்கிறது
அண்ணன்சார்பே, கட்சிக்கொள்கை

ஊரின்மத்தியில் வயசால்முதிர்ந்த மனிசி, மென்றுதுப்பிய
வெற்றிலைக்கலர் சீலைதொங்கும் கழுத்து அவருக்கு
தொன்மம் நிறைந்த இன்னொரு சமூகத்தின்
இருப்பைச்சிதைக்கும் ரத்தம்துவைந்த தூக்குக்கயிறாகவே
தென்படுகிறது.
அப்படி, மற்றோரினத்தைக் கொன்றுகுவித்த ஆறாக்காயம்
இன்னும் படிந்து கிடக்கிறது அவர்கள் உள்ளங்கையில்

சிவப்போ, சாயமோ என்று வைத்துக்கொள்.
இப்போதைக்கு, மறுபக்கத்திலிருக்கும் எதற்குமான
கலரை பிரித்தறியத்தெரியாதுள்ளது

அதற்காக, மிகவும் மெனக்கெட்டு
பச்சப்பிழையைச்சரியென்று பிதற்றவேண்டியுள்ளது
சிலருக்கு.
மனிசனால், ஊரில், தொழில் கிடைத்தது, உண்மை
றோட்டு வந்தது, மெய்
வீதியில் விளக்கு எரிந்தது, ஓம்.

அதற்காக, அந்த அண்ணன் குடும்பம்,
உன் வீட்டைக்கொழுத்தும்போதும்
உன் வியாபாரத்தை சாம்பலாக்குகையிலும்
மரணித்த உன்பெண்ணை எரிக்கையிலும்
அவர் கைமுகர்ந்து, வாலாட்டித்திரிவது, நக்குவார அரசியல்
என்றான் என் கவிஞன்

நக்கியும் என்ன,
ஒரு மயிரையும் பிடுங்க முடியாது என்றான்
என் இன்னொரு
கவிஞன்.
துவேஷம் கக்குகிறது மறு தொங்கலில்.
அவருக்கு நன்குதெரியுமது.
சும்மா, பெயருக்கு, ஒரு கத்து கத்தியதாக கூட்டத்தில்
செய்தியைப் பரப்புவதைத்தவிர

அதற்கும், அரச அண்ணனின் முன்சம்மதம் வேண்டும்.
முன்னேற்பாட்டோடே, கூட்டமும் கூத்தும் நடந்தேறுது
பின்,
வேறொருவன் எரிப்பைத்தடுக்க முடியாதென்றும்,
தட்டிக்கேக்க மட்டுமே இயலுமென்றும்
அரசடிமைத்தனத்தைப் பொதுவெளியில் கூவித்திரிகிறான்

கொள்கை வகுத்தலின் பின்னுள்ள
இனத்துவ அரசியலில் அவர்கள் கண்
பொட்டையாகியிருக்கிறது

இந்தக்குருடே, சூம்பிச்சிதைந்த சருகுக்கு, தான்
பிரதிநிதித்துவப்படுத்தும் காய்ந்த இலைகளுக்கு தலைமை
வகிக்கத்தகுதி என்றானது.
அவருக்கு, எப்படியோ, எரிநெருப்பையடுத்து வரவிருக்கும்
ஆட்சியில் கதிரையொன்று வேண்டும்.
அதற்கு, கொள்ளிக்கட்டைகள் சேகரிக்க வேண்டியுள்ளது.

கே. முனாஸ்-இலங்கை

கே. முனாஸ்

 

(Visited 104 times, 1 visits today)