நெடுஞ்சாலைப் பயணங்கள்-கவிதை-தேன்மொழி சதாசிவம்

நெடுஞ்சாலைப் பயணங்கள்

நெடுஞ்சாலையின்
அழகும் அவலமும்
சொல்லுந்தரமன்று.

வழியெங்கும் பூத்துச்சொரியும்
சரக்கொன்றை மரங்கள்
யார் நட்டவை?
அவன் குலம் விளங்கப்
பிரார்த்திப்போம்
வாருங்கள்.

மோட்டார் சைக்கிளை
நிறுத்திவிட்டுப்
பேசியும் பேசாமலும்
மணிக் கணக்கில்
கசிந்துருகும் காதலர்கள்.
காணக் கிடைக்குமா அக்காட்சி!
காணாதவன் வாழ்விங்கு வீண்!

தலைகீழாய் கவிழ்ந்த லாரி.
சரிந்து கிடந்தன
வாழைத் தார்கள்.
ஆற்றுத் தண்ணீர்.
ஐயா குடி.
அம்மா குடி.
கணப்பொழுதில் காணவில்லை
வாழைத்தார்கள்.

இளநீர் கொட்டி விற்கிறாள் பெண்.
சீவச் சீவத் ததும்பின.
எவ்விளநீர் ருசியதிகம்?
கண் ருசியா?
நா ருசியா?
ரசிக்கவும் ருசிக்கவும்
சிலருக்கே வாய்க்கிறது.

நெடுஞ்சாலைப் பயணங்களில்
கரும்புச் சாறு பிழிபவர்கள்
கணவன் மனைவியாகவே
இருக்கிறார்கள்.
அவள் கூந்தலும்
கரும்புச் சக்கையும்
வேறுபாடற்றிருந்தது.
அவர்களுக்கும் காதலுண்டு.
கண்கள் மயங்கின.

ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்
திடீரென முன்னாலோடி விழுந்து
நசுங்கிச் சாகும் முயல்.
படீரென அறை வாங்கிப்
படபடத்துச் சாகும் மைனா.
நீதிநாளில் அனைவரும்
நியாயம் கேட்க வருவீர்களா?

அன்று நான்
உங்களிடம்
முழங்காலிட்டுத் தலை குனிந்து
மன்னிப்பை இறைஞ்சுவேன்.

00000000000000

அப்பா

உடலெங்கும்
மாம்பழச்சதை.
கொலுசதிர
ஓடி வருகையில்
கால்களில் கொக்கியிட்டுப்
பிடிப்பார் தாத்தா.
“என்னக் கட்டிக்கிறேன்னு சொல்லு
அப்பத்தான் விடுவேன்”
“போ, தாத்தா,
நா அப்பாவத்தான்
கட்டிக்குவேன்”
கண்கலங்கி நிற்பாய் அப்பா.

பின்னாளில்
பூத்து மறைவினுள்ளிருக்க
“ஆம்பளயப் பாக்கக் கூடாதுடி
பரு வரும்”என்றாள் பாட்டி.
“போ, பாட்டி,
அப்பாவப் பாக்காம
எப்டி இருக்கிறதாம்?”
கண்ணீருகுத்து
உள்வந்து
அள்ளிக் கொண்டாய்.

அப்பா மடியில்
உட்கார்ந்தால் தப்பு.
அப்பாவுடன்
படுத்தால் தப்பு.
சதிகாரிப் பாட்டி.

தாவணி நாட்களில்
கண் சிமிட்டுவாள்,
“என்னடி,
ராஜகுமாரன்களுக்கு
ஓலை அனுப்பட்டா?”
“ஒண்ணும் வேணாம் போ,
உன் மகனே போதும்”
பதில் கண் சிமிட்டுவேன் நான்.
விக்கித்துப் போய்
அமர்ந்திருப்பாய் அப்பா.

எல்லாப் பெண்குழந்தைகள் போல
எனக்கும் நீதானே
முதற்காதலன்.
பார்க்கும் ஆண்களிலெல்லாம்
உனைத்தானே
தேடுகிறேன்.

உனைப் போலொருவன்
உலகில் உளனா?
உளனெனில்
உயிர் விடுமுன்
காணக் கிடைப்பானா?

என் பெயர் நீ
உச்சரிக்கையில்
என் உயிரிலன்றோ
பூ பூக்கிறது.
முரணாக என்
வயிற்றுத் தணல்கள்
விசிறப் படுகின்றன.

இப்போதெல்லாம்
உன் பிறந்த நாட்கள்
எனக்குப்
பிடிப்பதில்லை அப்பா.
காலத்தைக் கட்டிப்போட
நினைக்கிறேன்.
என் கைக்குள்
அடங்கவில்லை.
கடவுளையும் காணவில்லை.

தேன்மொழி சதாசிவம்-இந்தியா

(Visited 324 times, 1 visits today)
 

2 thoughts on “நெடுஞ்சாலைப் பயணங்கள்-கவிதை-தேன்மொழி சதாசிவம்”

Comments are closed.