எரியும் காடு- கவிதை-பாலைவன லாந்தர்

எரியும் காடு

எரியும் பனிக்காடொன்றின்
குரல் கேட்கிறதா
தும்பிப்பூச்சி போன்ற வாகனத்தில்
அமர்ந்துகொள்
எரியும் காட்டினை வட்டமிடு
அனல் மேவும் பகுதிக்குள்
உன்னை வற்புறுத்தி தாழ்த்து

பார்
ஒரு துளி
நெருப்புக்கோடு போதும்
உன்னை கருப்புப் புகையாய் மாற்ற
கண்களை குறுக்கி
குழியாடியில் உற்று நோக்கு
என்ன தெரிகிறது
வாயிலிருந்து ஆசனவாய் வரை கூர்ந்து கவனி
அதுதான் காட்டின் வயிறு
ஆம்
கர்ப்பம் சிதைவுறும் தருணமிது

முட்டைகளின் மீது கவிழ்ந்தபடியே
கருகும் பறவைகளை
பொந்துகளில் விழிகள் மிளிர
பூஞ்சையாகும் முயல்குட்டிகளைப்பார்

ஓடிப்போக மனமற்று
மரணத்தை உப்புக்கொள்ளும்
யானைகளை பார்
பாதி மரித்தபடி வாழத்துடிக்கும்
புள்ளி மான்களையும்

சர்ப்பங்களின் தோல்களை
ஒன்றிலிருந்து
ஒன்றை
பிரித்தெடுக்க முயற்சிக்காதே
அவை
பின்னிப்பிணைந்து மரிக்கும் இனமாகும்

கரும்பாறையின் மீது நிற்கும்
சிங்கத்தின் சாயலில் யாரையேனும்
உன் வாழ்வில் சந்தித்திருக்கிறாயா
அதன் கர்ஜனையை கேள்
யுத்தத்தின் இறுதி
சங்கொலியின் சப்தத்தை நினைவுறுத்தும்

மானிடா
காடுகளைப் போன்றதல்ல
உன் வீடு
நினைவில் கொள்
அங்கே நீயும் ஓர் எரிபொருள்

000000000000000000

புத்தனின் ரத்தம்

உடலுக்கு வெளியே வழியும் குருதி
உப்புச்சுவையை உலர்த்திவிட்டு
எட்டு வழிச்சாலையில்
நதிகளாக பெருக்கெடுத்து பல்கிப்பெருகி

ஒவ்வொரு சாலையின் நாசித்துவாரங்களும்
முகர்வதற்கு முன்பு
இருபத்தேழு முறை
உயிருக்கு போராடும் ஒருவனின் சாயலை பெறுகின்றன

விரிசல் விழுந்த மதில்களினூடே
வலை பின்னிக்கிடந்த சிலந்தியின்
கண்களில் தெரித்தது
புத்தனின் ரத்தம்

நாய்கள் நக்குவதற்கு
பிரத்யேக ரத்தங்கள்

தானொரு யுத்தக்களத்தில்
புறமுதுகிட்டு வந்தவன் என்றவனின் ரத்தம்
புட்டங்களில் கசிந்து கருகுகிறது

அறுத்த கால்நடைகளின் ரத்தம்
பூர்வக்குடி வாசத்தில்
ஆவியாதலாகி உறைந்து பிறகு
சிகப்பு மழையாகப் பொழிகிறது

ஆல்கஹால் ரத்தங்கள்
புனித வேதங்களின் பழுத்த தாள்களை
பார்வையால் கழுவுகின்றன

செங்கல் சூளையில்
ரத்தம் எது
செங்கல் எது
வியர்வை எது
என்று தெரியாமல் முத்து முத்தாக
வடியும் திரவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்
இந்த கவிதை

பாலைவன லாந்தர்- இந்தியா

(Visited 225 times, 1 visits today)