காகிதக் கப்பல்-சிறுகதை-விஜய ராவணன்

அடித்துப் பெய்த மழை சற்று நின்றிருக்க, மேகமும் இளைப்பாறியது.. அழுது தீர்த்த வானம் வெளுக்கவும், அந்தக் கப்பல் எப்போதும் போல் பயணிக்கத் தொடங்கியது…..

சலனம் இல்லாத நீரோடையில் அமைதியாக நீந்திச் செல்லும் வாத்தைப் போல், அலை இல்லாத நீரில் இந்தக்கப்பலும் அமைதியாய்ப் பயணித்தது, தன் பாதையில் இருக்கும் பாறையில் தட்டும் வரையில்.!..

“அப்பா, சீக்கிரம் போப்பா , போய் அந்தக் கல்ல எடுத்துவுடு! ….”

எண்ணி வைத்ததைப் போல் சில செங்கல்களும் அதன் தலையில் கவிழ்த்து வைத்த மேற்கூரையும் மட்டுமே கொண்ட ஓலைக் குடிசையின் வாசலில்,தன் அப்பாவைக் கூப்பிடும் ஒரு சிறுமியின் குரல் தான் அது.. அவளின் கைகள் அப்பாக்கு தெருவைக் காட்டியபடி இருந்தன..

வரிவரியாய்ச் செல்லும் எறும்புக் கூட்டம் போல், சாலையின் ஓரத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் வரிசையாயிருக்கும் ஏழெட்டுக் குடிசைகளில் ஒன்று தான், அந்தச் சிறுமியின் குடிசை.. மேகம் இறக்கிவைத்த மழைத் துளிகளில் கடைசி சில சொட்டுக்கள், அந்தக் குடிசையின் ஓலைக்கூரையில் சறுக்கிக் கொண்டிருந்தன..

ஓலைக் கூரை மேல், போர்வையாய் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாய், வாசல் பக்கம் கொஞ்சம் நீண்டிருக்க, அதன் அடியில் சுவரோடு சுவராய் நின்றிருந்தாள்..

அவள் கை காட்டும் திசையில் தெரிகிறது, ஒரு கப்பல்!..மழை பொழியும் நாட்களில் மட்டுமே பயணிக்கும், காகிதக் கப்பல்!!!

சில நிமிடங்கள் முன்பு, அது கப்பலாய்ப் பிறப்பெடுக்கும் வரை, வெறும் காகிதமாய் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது..பின் ஒரு சிறுமியின் வற்புறுத்தலில், அவள் அப்பாவின் கைவரிசையில் கப்பலாய் மாறி, பின் தெருவில் ஓடும் மழைநீரில் பயணித்தது..

மழைநீர் பயணிக்கும் சாலையோர ஓடையின் பக்கம் தான், சிறுமியின் குடிசையும் இருப்பதால் மழைக்கும் இவளுக்கும் நெருக்கம் அதிகம்.. அந்த நெருக்கத்திலும் உரிமையிலும் இவள் மழைநீரில் செய்து விட்ட ஆசைக்கப்பல்,  அதன் பாதையில் எதிர்பட்ட கல்லின் மீது மோதி பயணம் தடைபட்டு நிற்கிறது..

“அப்பா சீக்கிரம்…”

காகிதக் கப்பலின் பயணம் கடல் கப்பலைப் போல் நீண்டதில்லை.. ஆங்காங்கே ஓடும் மழைநீரில், தனக்கென ஒரு பாதையை அமைத்துப் பயணிக்கும் காகிதக்கப்பலின் பயணநேரம் மிகவும் குறைவு தான்..இந்த விவரமெல்லாம் மகளோடு கப்பல் விடும் அப்பாவுக்குத் தெரிந்தது தான்..இருந்தாலும், நின்று போன அதன் பயணத்தை, மகளுக்காக மீண்டும் அவன் துவக்கியாக வேண்டும்…

கட்டிக் கிடக்கும் மழைநீரில் லுங்கியைத் தூக்கி பிடித்து ஓடும் அப்பாவைக் கைதட்டிப் பாராட்டினாள். நீரின் ஓட்டத்தில் சில நிமிடம் முன்புவரை பயணித்த காகிதக்கப்பலின் பாதையில், சிறிய கல் விதித்திருந்த தடை இப்போது அவள் அப்பாவால் நீக்கப்பட்டது.. கூண்டின் கதவு திறக்கப்பட்ட கிளி போல், பாதை கிடைத்ததும் நின்று போன தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தது …..

‘மனிதன் பயணிப்பதும் ‘பணம்’ என்னும் காகிதக் கப்பலில் தானே!!! ‘என்று அந்தக் கப்பல் நினைத்ததோ என்னவோ, மீண்டும் ஒய்யாரமாய்த் தன் பயணத்தைத் தொடர்ந்தது!!

மாலுமிகள் இல்லை.. பயணிகள் இல்லை.. போகும் இடத்தைப் பற்றிய தகவலும் இல்லை.. இருந்தும் பயணம் நிற்கவில்லை..

கடற்கரையின் கலங்கரைவிளக்கம் போல் காகிதக்கப்பலை வேடிக்கைப் பார்த்தபடி ஓடையின் ஓரம் நிற்கும் சிறுமியின் முகத்தில் ,காற்றில் திசைமாறி வந்த மழைத்துளிகள் முத்தமிட்டுச் சென்றன..

“சூப்பர்ப்பா!….” எனத் தன் படகைக் காப்பாற்றிய தந்தைக்குப் பெய்யும் மழையோடு பாராட்டு மழையும், முத்த மழையும் பரிசாய் தந்தாள்..மகளிடம் பரிசுப் பெற்ற சந்தோஷத்தில் ,“அடுத்துக் கத்திக் கப்பல் செஞ்சு தரவா?” எனப் பாதியில் நின்று போயிருந்த தன் காகிதக்கப்பல் செய்யும் வேலையை மீண்டும் தொடர்ந்தான்..

அவன் கையில் கிடைக்கும் காகிதத்தின் நிறத்தையும் அளவையும் பொறுத்து, காகிதக் கப்பலின் உருவமும் நிறமும் மாறும்..

“கத்திக் கப்பல்னா என்னப்பா?.”

“இந்தக் கப்பலுக்கு அடியில பெரிய கத்தி இருக்கும். கடல்ல போகும்போ, கப்பலக் கவுக்கச் சுறா வந்துச்சுனு வை, இந்தக் கத்தி சுறாவைக் குத்திக் கப்பல காப்பாத்திரும்” என விளக்கம் கொடுக்க, அவளும் தன் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்..

உண்மையில் கத்திக் கப்பல் என்று ஒன்று உண்டா? பாதையில் எதிர்படும் மீன்களை தன் கத்தியால் குத்திக்  கொல்லும் அதன் செயல் சரியா? தவறா? என்ற கேள்விகள் எல்லாம் அந்த சிறு வயதில் தோன்றுவது இல்லை.அது தோன்றும் வயதில் யாரும் இதைப் போல் கத்திக் கப்பல் செய்து விளையாடுவதும் இல்லை..

தந்தையும் மகளும் தண்ணீரில் விடும் ஒவ்வொரு கப்பலிலும் வேவ்வேறு பெயர் எழுதப்படும்.. பெயர் வைக்க அது மனிதன் பயணிக்கும் நிஜமான கப்பலாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று இருவரும் நம்பினர்.

இவர்கள் உண்டாக்கும் கப்பல்களுக்குப் பெயர் வைக்கும் உரிமையும் இருவருக்கு மட்டுமே உண்டு.. கத்திக் கப்பலுக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று யோசித்து முடிவில் தங்கள் பெயரையே வைப்பது என்று முடிவு செய்தனர்..

தன் குடிசையின் வாசலில், சேலை முந்தானையால் தலையை மூடி உட்கார்ந்திருக்கும் பக்கத்து வீட்டு கிழவிக்கு, இந்தக் கப்பலைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.., அவளது புறை விழுந்த கண்கள், மழைநீரில் மகளும் அப்பாவும் நடத்தும் கூத்தைக் கண்டுகொள்ளாமல் சாலையின் ஓரம் அவள் வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்தைப் பார்த்தபடி இருந்தன.. அந்தச் சிகப்பு நிற பிளாஸ்டிக் குடத்தின் வயிறு, மழைநீரால் பாதி நிரம்பியிருந்தது…

எப்படியாவது இன்று பொழுது சாயும் முன், முழுக்குடம் தண்ணீர் பிடித்தே தீருவது என்ற பேராசையுடன் வானத்தையும் குடத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

“குடம் நிறையுணுமாம்.. கிழவிக்கு ஆசையப் பாரேன்… வாயப் பொளந்து வானத்தப் பாத்துட்டு இருக்கு .“

கிழவியையும் அவளின் சிகப்புக் குடத்தையும், மொத்தக் குடும்பமும், அவர்களின் வளர்ப்பு நாயும்,குடிசைக்குள் இருந்தபடியே வேடிக்கை பார்த்தனர்…

தபால் பெட்டியில் இரண்டாய் மடித்துத் திணிக்கப்படும் கடிதத்தைப் போல அந்த ஒற்றை அறைக் குடிசைக்குள் அடைந்திருக்கும் மொத்தக் குடும்பத்தையும், அதிசயமாய்ப் பார்த்தபடி கப்பல் போய்க் கொண்டிருந்தது…

ஏற்கனவே தெருவில் பயணிக்கும் கப்பலுக்கு மகளின் பெயர் வைக்கப்பட்டதால் இந்தக் கத்திக் கப்பலில் தந்தையின் பெயர் பேனாவால் பொறிக்கப்பட்டது… தண்ணீரில் பயணிக்கும் கப்பலில் பேனாவால் எழுதிய பெயர்கள், அவர்கள் கனவு போல் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து போகும் என்பது தெரிந்தும் மகளுக்காக ஏழுதினான்..

செய்யும் கப்பலின் அகலத்தைப் பொறுத்து அதில் வேறு என்ன எழுதலாம் என்று இவர்களால் முடிவு எடுக்கப்படும்.. எப்போதும் பெயருக்கு அடுத்தபடியாக கப்பலின் முதல் பயணத் தேதி தான், அதில் இடம் பெறும்..

அப்படி, இந்தக் கப்பல் சுமந்து செல்வது இவர்களது தெருவோர வாழ்க்கையில் கிடைத்த சிறு சந்தோஷங்களை…மறக்க விரும்பாத சில நினைவுகளை.. இவர்கள் நினைவுகளுக்கு அந்தக் கப்பல் உருவம் கொடுக்க, இவர்கள் அந்தக் கப்பலுக்குப் பெயரும் பிறந்த தேதியும் கொடுத்தனர்…அந்த பெயரையும் பிறந்த தேதியையும் தன் அடையாளமாய்ச் சுமந்து, இவர்களைப் போல் இந்த காகிதக் கப்பலும் மழைநீரில் தன் பயணத்தைத் துவங்க ஆயத்தமானது..

“அப்பா!இந்தக் கப்பல் எங்கப்பா போகுது?”

“புது இடத்துக்குப் போகுது….”

“அந்த இடம் ,நம்ம வீடு மாதிரி இருக்குமா இல்ல பெருசா இருக்குமாப்பா?”

“ம்ம்ம், ரொம்ப பெருசா இருக்கும்!..”

“அது எங்கப்பா இருக்கு?”

“நம்ம கண்ணுக்குல்லாம் தெரியாத ரொம்ப தூரத்தல இருக்கு..” என்று அவன் சொன்னபோது, வெளுக்கத் தொடங்கிய வானம் மீண்டும் அழத் தயாரானது.. இன்றே மொத்தமாய் அழுது தீர்ப்பது என்ற எண்ணத்தில் மேகங்கள் ஒன்று திரண்டன!!..

“நம்மளும் இந்தக் கப்பல மாதிரி புது இடத்துக்கு போவோம்ப்பா!…” என்று தன் கைகளின் ஈரத்தைக் கிழிந்த தன் பாவடையில் துடைத்தபடி, கேட்கும் மகளின் கழுத்தை உற்றுப் பார்த்தான்.. போன வருடம் வாங்கிக் கொடுத்த பாசி மாலையில் இப்போது மினுமினுப்பு இல்லை….

‘முடியாது’ என்ற வார்த்தையை கேட்க விரும்பாத பிள்ளைப் பருவத்துக்கு, அது கேட்க விரும்பாத பதிலை ஏன் கொடுப்பானேன் என்று யோசித்தவன், “ம்ம்ம் நம்மளும் போலாம்!!….”

அவன் பதிலைக் கேட்டதும், வானம் மீண்டும் இடியோசையுடன் சிரித்தது..

மேலே பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்த கிழவியின் சுருக்கம் விழுந்த முகத்தில், மழைத் துளிகள் விழுந்து சிதறத் தொடங்கின.. தன் பாதிக்குடத்தை, நனைந்தபடியே தெருவின் நடுவில் வைத்தாள்.. குடம் நிறையத் தொடங்கியதும், அவளின் சுருக்கம் விழுந்த முகத்தில், அபூர்வ சிரிப்பு..

“எப்போப்பா போவோம்?” என்று மகள் கேட்க, பதில் இல்லாமல் வானத்தைப் பார்த்தான்.. மழை அடித்துப் பெய்யத் தொடங்கியதும், குடிசைக்குள் குனிந்தபடியே நுழைந்தான். தலைக் குனியும் ஏழையின் பிழைப்பு, குடிசையின் வாசலில் இருந்தே துவங்கி விடுகிறது!!

அவன் கண்கள் மழைக்குக் குடையைத் தேடின.. வெறும் ஒற்றை அறை மட்டுமே உள்ள தீப்பெட்டி வீட்டில் தேடுவதற்கு என்ன இருக்கிறது? மழை பழகிய அளவுக்கு குடை பழகாதவன் வீட்டில், குடை கிடைப்பது கடினம் தான்.. குடையைத் தேடிப் பார்த்து ஏமாந்து போனவன் , வாசலில் இருக்கும் வாளியை எடுத்துக் குடையாய் மகளின் தலையில் கவிழ்த்தபடியே கப்பலைப் பார்த்தான்..

அது பெய்யும் மழையில் தத்தளித்துக் கொண்டிருந்தது!…மகளின் ஆசையும் காகிதக் கப்பலின் பேராசையும் அவனுக்கு ஒன்றாய்ப் பட்டது..

குடத்தை நிரப்பும் கிழிவியின் பேராசை கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவேறிக் கொண்டிருந்தது.. குடிசைக் கூரையின் அடியில் முகத்தில் விழும் மழைநீரைத் துடைத்தபடியே நிரம்பும் குடத்தை ஆசையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. தெருவில் வேகமாய் சென்ற பைக் ஒன்று இடித்ததில் , நிரம்பியிருந்த பிளாஸ்டிக் குடம் கவிழ்ந்து மொத்த நீரும் தெரு ஓடையோடு போனது… பைக்கின் பின்னால் குரைத்த படியே நாயும் ஓடியது..

தன் பெயரைச் சுமந்து செல்லும் காகிதக்கப்பலை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு, பதில் கிடைக்காத தன் கேள்வி நினைவு வந்ததும், “எப்போப்பா நம்மளும் புது இடம் போவோம்?” என்று தன் பெரிய கண்களை உருட்டியபடி கேட்டாள்..

அவன், “கூடிய சீக்கிரம்…” என்ற போது, மழையில் மொத்தமாய் ஊறிப் போயிருந்த காகிதக் கப்பல் நின்று போனது.. பிய்ந்து போன தன் ஆசைக் கப்பலைப் பார்த்து, நிற்காமல் அழுதாள்… கொட்டும் மழையின் சப்தத்தில் அவளின் அழுகைச் சப்தம் வெளியே கேட்கவில்லை…

பைக்கின் பின்னால் ஓடிய நாய் தன் குடிசைக்கு மீண்டும் திரும்பியது.. மழையில் நனைந்த தன் உடலை சிலுப்பியபடிஅது தெருவைப் பார்த்த போது , அதே இடத்தில் மீண்டும் காலிக் குடம் நிரம்பிக் கொண்டிருந்தது…

விஜய ராவணன்-இந்தியா

(Visited 328 times, 1 visits today)