மொழிபெயர்ப்பு நேர்காணல்-இனாம் கச்சாச்சி-தேசிகன் ராஜகோபாலன்

“புலம்பெயர்ந்து வாழ்வதைவிட சொந்தநாட்டில் அகதியாக வாழ்வது அதிக வலியைத் தரவல்லது.”

இனாம் கச்சாச்சி

தேசிகன் ராஜகோபாலன்அல்-முஸ்தஃபா நஜ்ஜார்: முரண்நகையாக அமெரிக்க இராணுவம் 2003ஆம் ஆண்டு பாக்தாத்தை ஆக்கிரமித்ததிலிருந்து இராக்கின் புனைகதை இலக்கியம் வளர்ச்சியடைந்து வருகின்றது. மெசபட்டோமிய எழுத்தாளர்கள் பலர் அரேபிய புனைகதை இலக்கியப்பரப்பில் கால் பதித்துள்ளனர். அவர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் வரலாற்றில் இராக்கின் அடையாளத்தை  மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் துணிச்சலுடன் எழுத்தாக்கங்களைப் படைக்கிறார்கள். 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாவல் இலக்கியம் ஏற்றம் பெற்றுள்ளது. அதில் ஒரு பெண்ணின் இலக்கியக் குரலும் வெளிவந்துள்ளது. அதுவே இனாம் கச்சாச்சியின் குரல். பிரான்ஸைத் தளமாகக் கொண்ட இராக்கிய எழுத்தாளரான இவர் தனது இலக்கியப் பிரவேசத்தை வசந்தகால இதயம் (Heart Springs-2005) மற்றும் அமெரிக்க பேத்தி (American Granddaughter -2008)  ஆகிய நாவல்களின் ஊடாக மேற்கொண்டார். இது அரேபிய நாவலுக்கான சர்வதேச விருதிற்காகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்த நாவல் பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. கச்சாச்சியின் மூன்றாவதும் மிகச் சமீபகாலத்திய நாவலுமான த~hரி (Tashar -2013) யும்கூட இந்த ஆண்டின் பரிசிற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல் ஒரு இராக்கிய கிறிஸ்தவ பெண் வைத்தியரான வைத்தியா என்பவரும்கூட தனது ஆயுளின் இறுதிப்பகுதியில் எண்பத்து நான்காவது வயதில் பிரான்சில் அகதித்தஞ்சம் கோருவதற்கு நிற்பந்திக்கப்பட்டதையும் அவளது குடும்பம் பூமிப்பந்தின் அனைத்துப் பகுதியிலும் தனது குடும்பத்தினர் சிதறிக்கிடப்பதைப் பற்றியும் பேசுகிறது.

அல்-முஸ்தஃபா நஜ்ஜார்: “த~hரி” ( Tashar ) என்பது வித்தியாசமான தலைப்பு, அது இராக்கியரல்லாத வாசகர்களுக்கு புத்திசாலித்தனமற்றதாகவும் தோன்றக்கூடும். அதன் பொருள் என்ன? எப்படி அந்தத் தலைப்பைத் தேர்வு செய்தீர்கள்?

இனாம் கச்சாச்சி: தலைப்பு வேண்டுமானால் வித்தியாசமானதாக இருக்கலாம், ஆனால் நாவலின் சூழலில் அதன் பொருள் ஆழ வேரூண்றியுள்ளது. (இராக்கின் வட்டார வழக்கில்) தா~ரி Tashar என்பது பல திசைகளில் தெறித்தோடும் பறவைகளைக் குறிப்பதாகும். அதன் அன்னியத் தன்மையைத் தற்போது நான் உணர்கின்றபோதிலும் தற்போதைய இராக்கிய புலம்பெயர்வை விவரிப்பதற்கு இதனைவிட என்னால் வேறு சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

முஸ்தஃபா நஜ்ஜார்: “இது எலிசி அரண்மனை” என்று கூறும் இராக்கிய வைத்தியப் பெண்மணி வைத்தியா பின்னர், பிரான்சில் தஞ்சமடைந்துள்ள இராக்கியர்கள் த~hரியை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த வாக்கியம் தெளிவான பொருளைக் கொடுக்கவில்லை. இது அகதியின் ஏமாற்றத்தைப் பிரதிபலிககிறதா அல்லது அவர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்ட அன்னிய நாட்டின் மீதான ஈர்ப்பைக் குறிக்கிறதா?

இனாம் கச்சாச்சி: இல்லை. வார்தியா எலிசி அரண்மனையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் அவள் அதன் முன்பு நிற்கும்போது அவள் சாதாரண பாதுகாவலர்களைக் கொண்ட ஒரு பழைய கட்டடத்தையும் அதன் அருகில் மிக இயல்பான பாதசாரிகளுக்கான நடைபாதை இருப்பதையும் காண்கிறாள். அங்கு அவர்களின் வழியை மறிக்கின்ற ஒரு சீமெந்துத் தடுப்புச் சுவரையோ அவர்களைத் தடுத்துநிறுத்தும் பொலிஸ்காரர்களையோ அவள் காணவில்லை. தனது நாட்டில் தான் அறிந்த ஜனாதிபதி மாளிகைகளையும் அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களையும் தற்போது தான் பார்ப்பவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.

முஸ்தஃபா நஜ்ஜார்: த~hரி வார்தியாவின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது, இராக்கிய வைத்தியர் ஒருவர், மொசூல், பாக்தாத் மற்றும் அல்-திவானியா ஆகிய நகரங்களிலிருந்து பிரான்சுக்கு வரும்வரையிலான அவரது அனுபவத்தைப் பதிவு செய்கிறது. இராக்கில் கிறிஸ்தவர்களின் துயரத்தை அது எதுவரையில் பிரதிநிதித்துவம் செய்கிறது? மத்திய கிழக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் தங்களது அடையாள நெருக்கடியால் துன்பப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இனாம் கச்சாச்சி: அடையாள நெருக்கடி? நிச்சயமாக இல்லை! அவர்கள் நாட்டின் மிகப் பண்டைய உள்நாட்டு மக்கள் என்பதுடன் அதன் சமூகக் கட்டமைப்பின் உண்மையான பகுதியினர். கிறிஸ்தவர்களுக்கு சோகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உண்மையில், அனைத்து ஒரு கசப்பான யதார்த்தம் அனைத்து இராக்கியர்களையும் அதிகமாக அழுத்துகிறது அதனால் அது இராக்கிய குணாம்சத்தின் உறுப்புகளுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. மத்திய கிழக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலற்ற மனோநிலை உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அடையாள நெருக்கடி இருக்கலாம். சில குறுங்குழுவாத  மக்கள் கற்பனையில் நம்புவதைப் போன்று கடந்துசெல்லும் குடிமக்களுக்கோ அல்லது ஒரு “சமுதாயத்திற்கோ” அத்தகைய நெருகக்டி இல்லை.

முஸ்தஃபா நஜ்ஜார்: நாவலின் தொடக்கத்தில், “நாட்டு மக்களை (இராக்) உலகின் நாலாக்கத்திற்கும் விரம்டும் சூன்யக்காரி” என்று வார்தியா குறிப்பிடுகிறார். “சூன்யக்காரி” என்ற சொற்பதம் இராக்கிய சமுதாயம் துண்டு துண்டாக சிதறுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிய ஒரு தரப்பைக் குறித்துக்காட்டுவதற்கான ஒரு மறைமுக அடையாள சின்னமா?

இனாம் கச்சாச்சி: நாவலாசிரியர் எவர்மீதும் குற்றச்சாட்டுக்களை நிரவாமல் யதார்த்தபூர்வமான கற்பனையை கற்பனையுடன் இரண்டறக் கலக்கச் செய்யலாம். இருப்பினும், சமூகங்கள் வெளிக்காரணிகளால் மட்டும் பிளவுபடுவதில்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். “மனிதனே அவனுடைய மோசமான எதிரி” என்னும் பொன்மொழிக்கேற்ப எனது எழுத்துக்களிலும் “சூன்யக்காரி குறியீடுகள்” இடுவதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

முஸ்தஃபா நஜ்ஜார்: தந்தையால் சவக்குழி தோண்டுபவர் என்று அழைக்கப்படும் இஸ்கந்தர் என்னும் பருவ வயது இளைஞன் இராக்கியர்களின் ஆன்மாக்களை ஒருங்கிணைப்பதற்காக மரணித்துப்போன புலம்பெயர் இராக்கியரகளை அடக்கம் செய்ய ஒரு இலத்திரனியல் மயானத்தை நிர்மாணிக்கிறார். இந்தப் பணி அவரை தனது சொந்த நாட்டின் உடனான உறவை மீளக் கட்டியெழுப்புகிறது. ஆனால், குறிப்பாக அவர் பாரிசில் இருந்த காலப்பகுதியில் அவருக்கு அது தெரியவில்லை. நினைவுகளைக் குழிதோண்டிப் புதைப்பதில் புலம்பெயர்ந்தவர்கள் கைதேர்ந்தவர்களா?

இனாம் கச்சாச்சி: அராபிய உலகில் உள்நாட்டில் வசிப்பவர்களும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் நினைவுகளைக் குழிதோண்டிப் புதைப்பதில் வல்லவர்கள். பார்சா, அலெப்போ, குவைத் நகரம், பெய்ரூட் மற்றும் அலெக்சான்டிரியா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் நினைவலைகளால் தாக்கப்படுவதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “எமக்கு என்ன நேர்ந்தது?” என்னும் கேள்வி அவர்களை துளைத்தெடுக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்வதைவிட சொந்தநாட்டில் அகதியாக வாழ்வது அதிக வலியைத் தரவல்லது.

முஸ்தஃபா நஜ்ஜார்: இஸ்கந்தரின் உண்மையான கல்லறை, தாய்மார்களின் வயிற்றிலிருந்து குழந்தைகளை வெளியிலெடுக்கும் மகப்பேற்று வைத்திய நிபுணரான வார்தியாவின் பண்பு ஆகியவற்றின் ஊடாக வாழ்வையும் மரணத்தையும் ஊடறுத்துச் செல்லும் பாதையைக் கருப்பொருள்கள் விளக்குகின்றது. இன்றைய இராக்கில் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் எந்தளவிற்கு ஒளி கலங்கிப்போயுள்ளது?

இனாம் கச்சாச்சி: இந்தக் கேள்விக்கான பதிலை செய்தித்தாள்களிலும் சஞ்சிகைகளிலும் காணலாம். இந்தக் கேள்வி ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்த வல்லது. மக்கள் எந்தளவிற்கு வாழ்க்கையை நேசிக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருப்பதால் அதனை நான் எனது மனதிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் விலக்கிவைக்கிறேன். வாழ்க்கையில் பிடிப்புகொண்ட நாடுகள் மட்டுமே நாகரிகத்தைக் கட்டியெழுப்பும். அவர்கள் மிருகங்களை வீட்டில் வளர்ப்பதுடன், சூரியவொளி, மழை, வெள்ளம் மற்றும் மணற்புயல் போன்ற இயற்கை செயற்பாடுகளுடன் ஒத்திசைந்ததாக அன்றாட வாழ்க்கையை மாற்றி வாழ்க்கையை இனிமையாக்குவார்கள். நகரத்தை உருவாக்குவார்கள், சக்கரத்தைக் கண்டுபிடிப்பார்கள், சட்டங்களை வகுப்பார்கள், நினிவே மற்றும் பறக்கும் குதிரைகளின் சிற்பங்களை வடிப்பார்கள். நாம் எமது முன்னோர்களைவிடவும் மனவலிமை குண்றியவர்களா? இந்தக் கேள்வி எழுந்தபொழுது எனது இளம் கதாநாயகன் இஸ்கந்தர், தனது இலத்திரனியல் இடுகாடு திட்டத்தைக் கையிலெடுத்ததினூடாக சிலவேளை என்னைக் காப்பாற்றியிருக்கலாம். அது வாழ்க்கையை நேசிப்பவர்களையும் அதனைத் தேடிப் பயணிப்பவர்களையும் தொலைதூர கண்டங்களுக்கிடையில் சிதறிக்கிடக்கும் மக்களையும் திருப்திப்படுத்துவதற்கான ஒரு தற்காலிகத் தீர்வே. அவர்களுடைய பயணங்கள் சீரற்றதாக இருப்பதால், அவரவர் தனித்தனிப் பாதைகளில் பயணிப்பதால் அவர்கள் கவலையடைகின்றனர். ஒரு கல்லறையில் சை, வண்ணங்கள், மரங்கள் மற்றும் ஓவியங்களால் நிறைந்து கற்பனைகள் சிறகடித்துப் பறக்கிறது.

முஸ்தஃபா நஜ்ஜார்: வார்தியா, “ஏக்கத்தின் குழியில் சறுக்கிவிழ விரும்பவில்லை…. அது பலவீனமானவற்றைத் தாக்கி தோல்விடைந்தவர்களைப் பாதித்துவிடக்கூடிய ஒரு மனநோய்” என்று கூறுகிறார். இராக்கிற்கு வெளியில் நீங்கள் பல தசாப்தங்கள் வாழ்ந்துள்ளீர்கள். தா~hரி எழுதும்போது  நீங்களும் ஏக்கத்திற்கு உள்ளானீர்களா?

இனாம் கச்சாச்சி: ஏக்கத்தை ஒரே ஓருமுறை மட்டும் உணரவில்லை. அது ஒருபோதும் தனது வலையை விரிப்பதை முப்பதாண்டுக்குப் பின்னர்வரை ஒத்திவைக்கவும் இல்லை. அரேபிய கலாசாரத்துடன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற்றதால் நான் அதிஷ்டசாலி. மொரோக்கோவைச் சேர்ந்த எனது நண்பரும் எழுத்தாளருமான மொகமட் அல்பாகி, அரபின் இதயத்துடிப்பு என்று பாரிசைப் பற்றி அடிக்கடி விபரிப்பது வழக்கம். நான் ஒரு அகதியாகவோ அல்லது புலம்பெயர்ந்தவராகவோ இல்லாமல் வாழ்வதால் பாரிசில் வாழ்வதற்கான எனது விருப்பத்தேர்வானது சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற அதீத ஆசையிலிருந்து எழுந்தது.

வைத்தியர் வார்தியாவின் வாழ்க்கைக் கதையை மீட்டுப்பார்க்கையில், கடந்தகால இராக்கின் முன்னுரையாக அமைகிறது. ஒரு தாயாக நான் எனது மகனுக்கும் மகளுக்குமான பொறுப்பை நிறைவேற்றுகையில் அதில் அவ்வளவு ஏக்கம் இருக்காது. கடந்தகாலங்களில் நாட்டின் மக்களும் அவர்களின் உறவினர்களும் தொலைக்காட்சியைப் பார்த்திருப்பார்கள், அதில் தீயிட்டுக் கொளுத்துவதும் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதுமே நாளாந்த நடவடிக்கையாக இருந்தது. மேலும் ஒரு துண்டு நிலம்கூட குண்டுவிழாத, கொலைநிகழாத இடமாகக் காணமுடியாது. இருப்பினும் அது தயாள குணமும், அன்பும் நிறைந்த, மனிதர்கள் வாழ்வதற்கேற்றதாகத் திகழ்ந்த ஒரு பண்டைய அழகிய நாடு.

முஸ்தஃபா நஜ்ஜார்: குறிப்பாக 2013ஆம் ஆண்டு இராக்கின் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஏராளமான பிரசித்தி பெற்ற இராக்கிய எழுத்தாளர்கள் தோற்றம் பெற்றுள்ளனர். ஹாஸன் ப்லசிம், அஹமட் சாடாவி மற்றும் சினான் அன்டூன் போன்றோர் இராக்கின் இரத்தம் தோய்ந்த காட்சியினை கையாண்டுள்ளனர். தா~hரி நாவலின் தோற்றுவாயே வன்முறைதான் என்ற உண்மையையும் தாண்டி அது வன்முறைப் பொறிமுறைகளை நேரடியாகக் கையாள்வதிலிருந்தும் பலதூரம் விலகிச்செல்கிறது. அதில் உங்களது எடுகோள் என்ன?

இனாம் கச்சாச்சி: வன்முறை என்னைச் சலிப்படையச் செய்வதுடன், களத்தில் திறமையாக முன்னெடுக்கப்படும் வன்முறைப் பொறிமுறையுடன் நான் அளிக்கின்ற விளக்கம்  பொருந்தாது. எனக்கு அமைதியைக்கொடுத்தால் அதனை உங்களுக்கு கதாபாத்திரங்களினூடாகப் படைத்து விளக்குவேன். இதமானதும், நன்கு பிரகாசிக்கக்கூடிய அறையும் எமக்கு இருளை மட்டுமே  உணர்த்துகிறது என்று நீங்கள் எண்ணவில்லையா?

முஸ்தஃபா நஜ்ஜார்: அரேபிய நாவலுக்கான சர்வதேச பரிசிலுக்கு 2009ஆம் ஆண்டின் உங்களது படைப்பான அமெரிக்க கிரேண்ட்டாட்டரைத் தொடர்ந்து நீங்கள் இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்? அரேபிய நாவலை உலகம் முழுவதும் பரப்புவதில் அரேபிய நாவலுக்கான சர்வதேச பரிசு எத்தகைய வகிபாகத்தைக் கொண்டுள்ளது என்பது குறித்து உங்களது பார்வை என்ன?

இனாம் கச்சாச்சி: மிகச் சரி. நான் மகிழ்ச்சியடைகிறேன். அரேபிய நாவலுக்கான சர்வதேச பரிசோ அல்லது வேறு ஏந்த இலக்கியப் பரிசோ அரேபிய நாவலை அரேபிய வாசகர்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்தால்; அதுவே போதுமானது என்பதுடன் நன்றிக்கடனாகவும் அமையும்.

முஸ்தஃபா நஜ்ஜார்: இரண்டு இராக்கிய நாவல்கள் அரேபிய நாவலுக்கான சர்வதேச பரிசிற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இது இராக்கிய புனைகதை இலக்கிய பரப்பில் முன்னேற்றத்தைப் பிரதிபலித்துள்ளதா? அல்லது இது வெறுமனே தற்செயல் நிகழ்வா?

இனாம் கச்சாச்சி: அது இராக்கிய புனைகதை இலக்கியத்தில் ஒரு முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை நாவல்கள் வெளியிடப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது. இராக்கிய புனைவு இலக்கியப் பரப்பில் நாம் ஒரு உண்மையான எழுச்சியை அனுபவித்து வருகின்றோம். எம்மைப் போன்ற எழுத்தாளர்கள், இராக்கில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளைத் துணிவுடன் பதிவுசெய்வதற்கும் அவற்றின் அதிர்வலைகளை எமது கண்ணோட்டத்தில் கண்காணிப்பதற்கும் முயற்சிக்கிறோம். அரபு உலகில் பதிப்பிப்பதற்கான சூழல் சாதகமாக இல்லை என்பதையும், இளம் புனைகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான கலாசார அமைப்புகள் எதுவும் இல்லை என்பதையும் இது கவனத்தில் கொள்கிறது. தெரிவுசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நாவலாசிரியர்கள் பெருமளவிலான எழுத்தாளர்கள் இருப்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த உதாரணம் மட்டுமே.

0000000000000000000000000000000

நேர்காணல் செய்தவர் பற்றிய குறிப்பு :

சிரியா நாட்டின் உடகவியலாளரான அல்-முஸ்தஃபா நஜ்ஜார் அ~hர்க் அல்-அவ்சத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகிறார். இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 1900க்குப் பிந்திய இலக்கியங்கள், கோட்பாடு மற்றும் கலாசாரம் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து முதுமானிப் பட்டம் பெற்றுள்ளார். இலண்டனை வாழிடமாகக் கொண்டுள்ளார். இந்த நேர்காணல் அரேபிய மொழியில் மேற்கொள்ளப்பட்டு அல்-~hர்க் அல்-அவ்செட்டில் வெளியாகியிருந்தது.

அராபிய புதினத்திற்கான சர்வதேச பரிசிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் மூலம் ‘இராக்கிய புதினத்தில் நாம் உண்மையான எழுச்சியை அனுபவித்து வருகிறோம்’ என்று ‘தா~ரி” (Tashari) என்னும் நாவலைப்படைத்த இனாம் கச்சாச்சியுடனான நேர்காணலின் பின் அல்-முஸ்தஃபா கூறுகிறார். அவருடைய நேர்காணலின் முழுவிபரம்.

This interview was originally conducted in Arabic and appeared on al-Sharq al-Awsat.

அல்-முஸ்தஃபா நஜ்ஜார்

0000000000000000000000000000000

இனாம் கச்சாச்சி

தேசிகன் ராஜகோபாலன்தேசிகன் ராஜகோபாலன்

0000000000000000000000000000000

தமிழில் : தேசிகன் ராஜகோபால்-இலங்கை 

தேசிகன் ராஜகோபாலன்

 

 320 total views,  1 views today

(Visited 94 times, 1 visits today)