‘சகிப்புத்தன்மையுடன் நடமாடிய ஏராளமான படைவீரர்களின் கதை’ பிரெஞ்சில்: ஜுசெப் விட்லின் மற்றும் ‘பூமியின் உப்பு’ (ஆலிஸ்-கேத்தரின் கார்ல்ஸ்) என்னும் புத்தகத்தின் திறனாய்வுகள்-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டு ஜுசெப் விட்லின் மாநாட்டிற்காக பிரான்சுடன் விட்லின் தொடர்பு பற்றி ஒரு கட்டுரை எழுத பேராசிரியர் அன்னா ஃப்ராஜ்லிச் என்னை அழைத்தபோது ஜுசெப் விட்லினின் படைப்புடனான எனது தொடர்பு தொடங்கியது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸிற்கு வடக்கே அமைந்துள்ள மைசன்ஸ்-லாஃபிட்டேவுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியமைக்காக நான் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன், அங்குதான் விட்லினிக்கும் ஜெர்சி கெய்ட்ரோய்க்குமிடையிலான கடிதப் பரிமாற்றத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்டது. அங்கு, போருக்குப் பிந்திய விட்லினின் இரண்டாவது இலக்கிய வாழ்க்கையின் மூலம்  நான் அவருடன் நெருக்கத்தை உணர்ந்தேன். அந்த மாநாட்டில் நான் விட்லினின் மகளான எலிசபெத் விட்லின் லிப்டனைச் சந்தித்தேன். அவர் என்னை மகிழ்ச்சியுடன் சிறப்பாக வரவேற்றார். அவரை சந்தித்த எவரும் அவரது நட்பைப் பெறாமல் இருப்பது சாத்தியமற்றது என்று கூறுவார்கள். அவரது ஆற்றலும் அர்ப்பணிப்பும் கவர்ந்திழுக்கக்கூடியவை. அவர் எனக்கு அவரது தந்தையின் முற்றுப்பெறாத சாகசங்கள் நிறைந்த பயணக்கட்டுரைகளின் தொகுப்பான சோல்ஸியிமியை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், எனது மாநாட்டுக் கட்டுரையை பதிப்பிப்பதற்காக திருத்திக்கொண்டிருந்த பொழுது, அந்த நாவலைப் பதிப்பிப்பதற்கான பிரெஞ்சுப் பதிப்பகத்தாரைக் கண்டுபிடித்தேன். நொயர் சர் பிலான்க் ஆர்வமாக இருந்தார். எனது மொழிபெயர்ப்பு 2000ஆம் ஆண்டு வெளிவந்தது, அது இன்னமும் பாரிசிலுள்ள ஜெர்மெயினின் பௌலிவார்ட் வீதியில் உள்ள வெளியீட்டுக் கழகத்திற்குச் சொந்தமான பொலிஷ் புத்தக அலுமாரியில் வைக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டின் கொலம்பியா மாநாடும் அந்த நாவலின் எனது மொழிபெயர்ப்பும் போர் நடைபெற்ற ஆண்டுகளிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் பிரெஞ்சுமொழிபெயர்ப்பில் முதலாவதாக வெளிவந்தவை என்பதுடன், விட்லினை ‘வலிசுமந்த இலக்க்pய’ பரப்பிற்கு அப்பாலும் கொண்டுசென்றன.

தேசிகன் ராஜகோபாலன்ஜோசப் விட்லின் 1896ஆம் ஆண்டு எல்விவியில் பிறந்து வளர்ந்தார். 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போலந்து படையணியில் தன்னைப் பதிவு செய்துகொண்டதன் பின்னர், அவுஸ்திரேலிய-ஹங்கேரி இராணுவத்தில் தனது நண்பர் ஜோசப் றோத்துடன் 1916ஆம் ஆண்டில் இணைந்துகொண்டார். 1924ஆம் ஆண்டின் அவரது படைப்பான ஹோமரின் சாகசப் பயணத் தொடரின் மொழிபெயர்ப்பு சிறந்ததாக அமைந்தது. யுத்தத்தைப் பற்றி நிறைய கவிதைத் தொகுப்புகளையும் ஏராளமான கட்டுரைகளையும் அவரது பேனா பிரசவித்திருக்கிறது. 1933 இல் வெளியிடப்பட்ட ஒரு ஈட்டாபி (பயணக் குறிப்புகள்), போலந்தில் அவரை நன்கு பிரபலப்படுத்;தியிருந்தது. அவர் ஃபிரான்ஸ் வெர்பெல் மற்றும் ஹெர்மன் கெஸ்டனின் நட்பைப் பெற்று போலந்து மற்றும் ஐரோப்பிய இலக்கிய சமூகத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார், அந்த நட்பானது 1940 இன் இருண்ட நாட்களில் குடும்பத்தை காப்பாற்ற உதவியிருக்கக்கூடும். இரண்டாம் உலகப் போரின்பொழுது, முகிழ்விட்டிருந்த விட்லினின் இலக்கிய வாழ்க்கை யூத எதிர்ப்பின் எழுச்சி காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளானது.

விட்லினின் முதல் நாவலான (The salt of the earth, The saga of the patient foot soldier ,பூமியின் உப்பு: சகிப்புத்தன்மையுடன் நடமாடிய போர்வீரனின் கதை) போலந்தில் முதன்முதலில் 1935 இல் வெளிவந்தபோது, ​​அதற்கு 1936 ஆம் ஆண்டில் “வயடோமோசி லிடராக்கி” (இலக்கியச் செய்தி) பரிசு வழங்கப்பட்டது. 1937 இல் போலந்து இலக்கிய அகாடமியினால் ஸ்லோட்டி வவர்சின் (போலந்து நாணயமாலை) (தங்க லாரல் மாலை) (Literary news, gold laurel wreath )அணிவிக்கப்பட்டது. அது உடனடியாகவே செக், ஹங்கேரி, ஜேர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, இரான், ருஷ்யா மற்றும் ஸ்வீடன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜெர்மன் மொழியில் இஸிடோர் பெர்மன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட இதனை ஜெர்மனியில் வெளியிட முடியவில்லை ஆனால் 1937ஆம் ஆண்டு ஆம்ஸ்டெர்டாமில் வெளியிடப்பட்டதுடன் அமோக வரவேற்பையும் பெற்றது. ரேமண்ட் ஹென்றி எழுதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு முதன்முதலில் டிசம்பர் 1938 மற்றும் மே 1939 க்கு இடையில் லு டெம்ப்சில் தவணைமுறையில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அல்பின் மைக்கேல் எழுதிய புத்தக பதிப்பு 1939 கோடையில் வெளிவந்தது. யுத்தத்திற்கு முன்னரான இத்தகைய மொழிபெயர்ப்புகளும் கௌரவங்களும் போருக்கு முன்னரான ஆண்டுகளில் ஜோசப் விட்லின் அனுபவித்த சர்வதேச வெற்றிக்கு சான்றளிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, ஸோல் ஸியிமி 1939ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விட்லின் தனது படைப்பு மூன்று தொகுதிகளைக் கொண்டது என்றும் இரண்டாவது தொகுதி ஆரோக்கியமான மரணம் என்ற பெயரிலும் மூன்றாவது தொகுதி வானத்தில் ஒரு ஓட்டை என்ற பெயரிலும் வெளிவரவிருப்பதாகக் கூறினார். எனவே ஸ்டாக்ஹோம் குழுவினர் அவரது ஏனைய இரண்டு தொகுதிகளும் வெளிவந்து மூன்று தொகுதிகளும் முழுமை பெறும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தது. இந்த நினைவுச்சின்ன வேலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த விட்லின், 1925க்கும் 1935 க்கும் இடையில் ஆஸ்திரிய மற்றும் பிரெஞ்சு இராணுவ காப்பகங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் தொகுதியை எழுதி முடிப்பதற்கே அவருக்கு பத்து வருடங்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு தொகுதிகளையும் அவர் விரைவில் எழுத வாய்ப்பில்லை.

இரண்டாம் உலகப்போர் வெடித்ததுடன் விட்லினின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புறட்டிப்போட்டது. விட்லின் பிரான்சில் ஒரு பெட்டி நிறைய ஆவணங்களுடனும் நகல்களுடனும் வாழ்ந்திருந்த காலப்பகுதியில், நாஸிக்களின் படை 1939ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி போலந்திற்குள் நுழைந்ததன் பின்னர், ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த வார்சாவிலிருந்து தனது மனைவியையும் மகளையும் வெளியேற்றுவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பியாறிட்சில் 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் குடும்பம் இணைந்ததன் பின்னர், அவர்கள் பிரான்சை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜூன் 1940 இல் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பிறகு விட்லினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது: அவரது பெயர் நாஜிக்களின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றிருந்ததுடன், ஜேர்மன் துருப்புக்கள், ஆல்பின் மைக்கேல் வெளியீடுகளைத் தாக்கியதுடன், லு செல் டி லா டெர்ரேவின் அனைத்து நகல்களையும் அழித்துக்கொண்டிருந்தன. அவர் குடும்பத்துடன்; பிரிட்டிஷ் படகொன்றில் ஏறவிருந்தவேளையில், ​​ஒரு சிப்பாய் விட்லினின் விலைமதிப்பற்ற ட்ரங்குப் பெட்டியை கடலில் வீசினார். அது செயின்ட் ஜீன்-டி-லூஸ் துறைமுகத்தின் அடிப்பகுதியில் மூழ்கியது. அமெரிக்க மண்ணில், அவரது கால் பதிந்ததும் அவரது வாழ்க்கைப் பயணம் புனிதத்துடன் புத்துயிர் பெற்றதாகத் தோன்றியது. 1940 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட பவுலின் டி சாரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை 1941 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஷெரிடன் பிரஸ் வெளியிட்டது, விட்லினுக்கு அமெரிக்க கலை மற்றும் கடிதங்கள் அகாடமி மற்றும் தேசிய கலை மற்றும் கடிதங்கள் ஜiஎஸநிறுவனம் ஆகியவற்றிலிருந்து 1943 ஆம் ஆண்டு பரிசு கிடைத்தது. ஹீப்ரு மொழிபெயர்ப்பு 1943 இல் டெல் அவிவிலும், 1943 இல் ஜாக்ரெப்பில் ஒரு குரோசிய மொழிபெயர்ப்பும் மேலும் 1945 இல் புவெனஸ் அயர்ஸில் ஸ்பெயின் மொழிபெயர்ப்பும் வெளிவந்தன.

தேசிகன் ராஜகோபாலன்விட்லினின் இரண்டாம் கட்ட இலக்கிய வாழ்க்கை பனிப்போரினால் செதுக்கப்பட்டது. விட்லின் ஓரு புலம்பெயர்ந்த எழுத்தாளராக இருந்ததினால் தனது படைப்புகள் போலந்தில் வெளியிடப்படவிருப்பதை அவரால் நம்ப முடியாமல் இருந்தது. இப்பொழுது அவர் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழத்துடன் இணைந்திருந்தார் அது யுத்த காலப்பகுதியிலும் யுத்தத்தின் பின்னரும் கிழக்கு ஐரோப்பிய புத்திஜீவிகளுக்கு சொர்க்கமாகத் திகழ்ந்தது. அவர் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவிற்கான இலக்கியக் கட்டுரைகளை வாசித்தார் அத்துடன் லண்டனில் “வைடோமோசி லிடராக்கி” ஐ தொடர்ந்து வெளியிட்ட மிச்சிஸ்வா கிரிட்ஜெவ்ஸ்கியுடன் நெருக்கமாக இருந்தார். மேலும் அவர் தனது முக்கிய வெளியீட்டாளராக மாறப்போகும் இன்ஸ்டிடட் லிடராக்கியின் நிறுவனர் ஜெர்சி கெய்ட்ரோய்குடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார். போருக்குப் பின்னரான அவரது பிரதான இருபடைப்புகளான மோஜ் லவ் (மை லிவிவ் My Lviv) மற்றும் (இருபதாம் நூற்றாண்டின் நரகத்தில் ஆர்ஃபியஸ்Orpheus in the hell of the twentieth century) ஆகியவை உண்மையில் முறையே 1946 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் இன்ஸ்டிடட் லிடராக்கியின் தொகுப்பில் “குல்தூரா” வில் வெளியிடப்பட்டன. . 1960 களின் நடுப்பகுதியில், விட்லின் ஜெர்சி கெய்ட்ரோய்குடன் இணைந்து இன்ஸ்டிட்யூட் லிடெராகினால் வெளியிடப்படவிருந்த தனது ஒருங்கிணைந்த படைப்புகளுக்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.

விட்லினிடம் போருக்கு முன்னர் அவர் சேகரித்த நுணுக்கமான ஆராய்ச்சியை மறுகட்டமைப்பதற்கான வலிமையை ஒருபோதும் காணமுடியவில்லை, அவர் மெய்சிஸ்லா கிரிட்ஜெவ்ஸ்கி மற்றும் ஜெர்சி கெய்ட்ரோய்க் ஆகியோரிடமிருந்து பலமுறை ஊக்கங்களைப் பெற்றிருந்தபோதிலும், சோல் ஜீமியையே போலந்தின் போர்க்கால சிறந்த இலக்கிய படைப்பாகக் கருதினார். பிரான்சில் அவரது சார்பில் போருக்கு முன்னரான காலப்பகுதியின் இரண்டு நண்பர்கள் பணிபுரிந்தனர்: பெர்னார்ட் சாம்பினுல்லே ஆல்பின் மைக்கேலிடம் வேண்டுகோள் விடுத்தார், இது முத்தொகுப்பின் மூன்று தொகுதிகளின் பிரெஞ்சு பதிப்பிற்கான உரிமைகளை இன்னும் வைத்திருப்பதால் முத்தொகுப்பை முடிக்க ஜாக் அல்லியர் பலமுறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். 1954 ஆம் ஆண்டில் முதலாவதாக போலந்து வெளியீட்டாளரான ரோஜ், அமெரிக்காவில் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார், சோல் ஜீமியின் (பூமியின் உப்பு) புதிய போலந்து பதிப்பை வெளியிட்டார். 1960 களின் நடுப்பகுதியில், விட்லின் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஆராய்ச்சியைத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டில், நாவலுக்கான பிரத்யேக உலகளாவிய மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகளை இன்னும் வைத்திருக்கும் பிஷ்ஷர் வெர்லாக், ஐசிடோர் பெர்மனின் மொழிபெயர்ப்பில் தாஸ் சால்ஸ் டெர் எர்டேவை மீண்டும் வெளியிட்டார். 1970 ஆம் ஆண்டில் ஸ்டாக்போல் பவுலின் டி சாரியின் ஆங்கிலத்தின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டார்

இந்த ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், விட்லின் ஒரு ஆரோக்கியமான மரணத்தின் முதல் இருபத்தைந்து பக்கங்களை மட்டுமே தயாரித்தார். அவை 1972 இல் “குல்தூரா” பத்திரிகையின் பக்கங்களில் வெளிவந்தன. நான் அவற்றை மொழிபெயர்த்தேன், மேலும் அவை எனது சிந்தனையுடன் 2000இல் கறுப்பு வெள்ளையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு முடிக்கப்படாத படைப்பின் விறுவிறுப்பை அவை வெளிப்படுத்துகின்றன, விட்லினின் படைப்பாற்றலின் அந்த சூன்ய மையம் அவரை தொடர்ந்து அசைபோட வைத்திருந்தது. அதனைப் பற்றிக்கொண்டு அவர் தொடர்ந்தும் கட்டுரைகள் மற்றும் பயணக் குறிப்புகள் என்னும் இருவகைகளில் தனது மனோபாவத்திற்கு மிகவும் பொருத்தமாக எழுதினார், எவ்வாறாயினும், 1976 இல் அவரது மரணமோ அல்லது தொடர்ச்சியான பனிப்போரோ சால்ட் ஆஃப் எர்த் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 1979 ஆம் ஆண்டில் வார்சாவில் மரணத்திற்குப் பிந்தைய ஒரு பதிப்பு தோன்றியது, மேலும் நாவலின் விமர்சனத்தையும் சரியான பதிபபையும், 1991 இல் ஒசோலினியம் வெளியிட்டது. 2014 இல் நாவலின் புத்தக வடிவம் போலந்தில் வெளியிடப்பட்டது. 2014 இல் இத்தாலிய மொழியில் மொழிபெயரப்பு வெளிவந்தது. பிஷர் வெர்லாக், தாஸ் சால்ஸ் டெர் எர்டேவை தொடர்ந்து, ஐசிடோர் பெர்மனின் மொழிபெயர்ப்பில், திருத்தப்பட்ட முன்னுரைகளுடன் தொடர்ந்து வெளியிடுகிறார்.

பொருமையுடன் நடமாடும் படைவீரர்கள் என்னும் படைப்பு விட்லினின் இலக்கியப் படைப்பின் மரபுரிமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கியமாகத் திகழ்வதும் திகழ்ந்ததும் அவரது மகள் எலிசபெத் விட்லின் லிப்டன் ஆவார். 2017 இல் வெளிவந்த விட்லினின் போருக்குப் பிந்தைய பிரதான படைப்பான ஆóத டுறóற இன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு  முக்கியமான தருணமாக அமைந்தது. ஆனால் இன்றுவரையிலும் மிகப்பெரிய வெற்றியாகப் போற்றப்படுவது சோல் ஜீமியின் ‘பூமியின் உப்பு) மீதான ஆர்வத்தை புதுப்பிப்பதாகும். கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாம் உலகப் போரின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் சரியான தருணத்தில் இந்த நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளிவந்திருக்கிறது. பேட்ரிக் ஜான் கார்னஸ் இதனை மொழிபெயர்த்திருப்பதுடன் பிரிட்டனில் புஷ்கின் பிரஸ் வெளியிட்டுள்ளது, புதிய வெளியீடான தி சால்ட் ஆஃப் தி எர்த் – பூமியின் உப்பு (The Salt of the Earth) உயிர்த்துடிப்புடன் இருக்கிறது. முதலாம் உலகப் போருக்கு முன்னரான ஆஸ்திரிய-ஹங்கேரிய முடியாட்சியின் கலாசார படிமங்களை கண்ணியத்துடன் வெளிப்படுத்துவதில் விசுவாசமாகவும் உணர்திறன் கொண்டதாகவும் இந்த நாவல்  அமைந்திருக்கிறது.. ஸ்பெயின் மற்றும் டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பூமியின் உப்பு (The Salt of the Earth ) நாவல் பல மொழிகளில் மூன்றாம் மொழியினூடாகவோ அல்லது அதன் துணையுடனோ மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. போலந்து மொழியை அறியாத றேமன்ட் ஹென்றி, இஸிடோர் பெர்மனின் ஜேர்மானிய மொழிபெயர்ப்பிலிருந்து பணியாற்றியுள்ளார். நான் 1999இல் பூமியின் உப்பை (The Salt of the Earth ) பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கையில் எனக்கு முன்னால் எலிசபெத் விட்லின் பாதுகாத்து வைத்திருந்த இஸிடொர் பெர்மினின் அருமையான மொழிபெயர்ப்பு இருந்தது. அதே எழுத்து ஐந்தாண்டுகளுக்குள் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்ததுடன் ஒவ்வொன்றும் எனக்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தின் கலாசார சூழ்நிலையை கூடிய அளவு முழுமையாக ஆய்வை மேற்கொள்வதற்கு உதவியது. போலந்து மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் முதலாவது நபராக நான் இருந்ததினால் விட்லினின் உரைநடையின் ஒத்திசைவிலும், படங்களிலும், உச்சரிப்புகளிலும் ஆழமான பார்வையைச் செலுத்தினேன். மிக அண்மையில் அதாவது 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டச்சு எழுத்தாளரிடமிருந்து டச்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்காக எனது மொழிபெயர்ப்பின் பிரதியைக் கேட்டு எனக்கு ஒரு வேண்டுகோள் வந்தது. எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பிய விட்லின் இந்த முறையையும் அங்கீகரித்திருப்பார்.

யுத்தத்திற்கு எதிரானவராகவும் மனிதநேயராகவும் திகழ்ந்த விட்லின், முதலாம் உலகப் போர் வெடித்ததை எதிர்கொண்ட ஒரு சாதாரண இராணுவ சிப்பாயின் திகைப்பு பற்றி பூமியின் உப்பில் – சோல் ஜீமியில் விவரிக்க முயன்றார். ஹோட்ஸ்பர்க் அரண்மனையில் ஜூலை 28, 1914 இல் அவுஸ்திரிய-ஹங்கேரிய முடியாட்சி, செர்பியாமீத தொடுத்துள்ள போரின் காரணமாக மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பதற்றம் குறித்த விளக்கத்தின் பின்னரான நடவடிக்கையை விட்லின் கண்டறிகிறார். இங்குதான் சக்கரவர்த்தி ஃபிரான்ஸ்-ஜோசப் அணிதிரட்டல் ஆவணத்தில் கையெழுத்திட்டார். நாவலின் முதல் அத்தியாயம் தெரு குழப்பத்திற்கும் ஏகாதிபத்திய அரண்மனையின் தனித்துவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. ஹ_ட்சுல் நாட்டில், கலீசியாவின் உட்பகுதியில், புக்கோவினாவிற்கும் ஹங்கேரிக்கும் இடையில், “அறியப்படாத தந்தையின்” என்ற பெயரில் ஒரு இரயில் பாதை மனிதர் பியோட்ர் நிவியாடோம்ஸ்கி டோபரி-செர்னிலிகா என்னும் சிறிய தொடரூந்து நிலையத்திற்குச் செல்கிறார். அந்த இரவின் அமைதியை உரத்த சப்தத்துடன் இறுதி அமைதியைக் குலைக்கும் வகையில் கண்மூடித்தனமாக வந்த தொடரூந்தினால் கெடுகிறது. அதன் பாதை விரைவில் அணிதிரட்டல், ஆயுதங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்க ரயில்களின் வடிவத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பேரழிவுகளை குறிப்பால் உணர்த்துகிறது.

இந்த நாவல் கிழக்கு முன்னணியில் போர் வருவதைப் பற்றிய ஒரு அரிய பார்வையைத் தருவதுடன் ஒரே மொழியைப் பேசாத ஆண்கள் மீது அதன் தாக்கத்தைக் காட்டுகிறது மேலும் அவர்களின் அடையாளத்தையும் தாயகத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு போரில் அவர்களை தூக்கியெறிகிறது. இந்த ப்ரூஸ்டியன் வகை நாவல் பியோட்டர் நிவியாடோம்ஸ்கி, டோபரி-செர்னிலிகாவிலிருந்து தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் இராணுவக் தளத்திற்கு வரும்வரையான பயணத்தை விவரிக்க கிட்டத்தட்ட முந்நூறு பக்கங்களை எடுத்துக்கொள்கிறது, டூவானியர் ரூசோவின் நுட்பமான தூரிகை மூலம், விட்லின் தனது முக்கிய கதாபாத்திரத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆச்சரியங்களையும் வரைகிறார், மற்ற வீரர்களுடனும் இராணுவ அதிகாரிகளுடனும் அவர் சந்தித்ததை விவரிக்கிறார், மேலும் மூழ்கும் ஈடன் பற்றிய தனது அச்சங்களையும் கனவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். இந்நாவல் பகுதியளவில், மறைந்துபோன உலகத்தின் வீட்டு நினைவு, பகுதியளவில் ஏக்கம் நிறைந்த பண்டைய மரபுகளின் சாட்சி, மற்றும் 1914 கோடையில் சமாதானத்தின் கடைசி நாட்களின் வரலாற்று புனரமைப்ழபையும் யுத்தம் முடிந்து திரும்பி வரும் வீரர்கள் அந்நியப்படுதலையும் மத்திய ஐரோப்பாவில் யுத்தத்திற்கிடையில் அகப்பட்டுக்கொண்ட சமூகத்தின் ஆழமான காயங்களையும் அதனால் ஏற்பட்ட மனவலியையும் எடுத்துச்சொல்ல முற்படுகிறது.

00000000000000000000000

ஆலிஸ்-கேத்தரின் கார்ல்ஸ் பற்றிய சிறுகுறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்ஆலிஸ்-கேத்தரின் கார்ல்ஸ் டாம் எலாம் அம்மையார் மார்ட்டினில் உள்ள டென்னசி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக கடமையாற்றுகிறார். சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் இராஜதந்திர மற்றும் கலாசார வரலாற்றாசிரியர் என்பதுடன் அவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் பல ஆசிரிய சபைகளிலும் ஆணைக்குழுக்களிலும் பணியாற்றுகிறார்.

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை 

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 58 times, 1 visits today)