அரசியலில் பெண்கள்-கட்டுரை-பவானி தம்பிராஜா

பவானி தம்பிராஜா அரசியல் பங்களிப்பு எனும் சொல் மிகப்பரந்த பொருளுடையது. இச்சொல் வாக்குரிமையை மட்டும் குறிப்பதன்று. முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும். வீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்களுக்கு நாட்டை நிர்வகிப்பதில் என்ன சிக்கல்? என்ற எதிர் கேள்வி தான் பெண்கள் அரசியலை பேச, அரசியலில் ஈடுபட முதல் தகுதி. குடிகார கணவனாக இருந்தாலும், இருப்பதில் குடும்பம் நடத்தி வீட்டின் பொருளாதாரத்தை செவ்வனே செய்பவர்கள், தன் பிள்ளைகளின் மேல் அக்கறை கொண்டு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்பு பணியை ஏற்றுக்கொள்பவர்கள்.

நிர்வாகத் திறனை கொண்டிருப்பவர்கள், தன் வீட்டு பொருளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துபவர்கள், நாள்தோறும் கோடான கோடி பேரின் உயிர்காக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள், இந்த பட்டம் அறுவடை செய்ததை அடுத்த பட்டத்துக்கு என்று சேமித்து வைத்து பாதுகாக்கும் தொலைநோக்கு பார்வை கொண்டுள்ள பெண்கள், வனங்களில் சுற்றித் திரிந்து சுள்ளி பொறுக்கினாலும் விலங்கினங்களிடமி௫ந்து தற்காத்துக் கொள்ளுதலிலும், அன்னியர்கள் காடுகளுக்குள் நுழைந்திருப்பதை கூர்ந்து கவனிக்கும் பழங்குடியினப் பெண்கள், இப்படி சாமான்ய பெண்கள் செய்யும் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி  அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் வரை தாங்கள் கால்பதிக்கும் துறைகளில் வெற்றி பெறும் போது, நிலைத்து நிற்கும் போது பெண்களால் அரசியல் களத்தில் காலூன்றுவதில் எத்தகைய சிக்கல் உள்ளது என்பதை பகுப்பாய வேண்டியது அவசியம்.

வீட்டிலும் நாட்டிலும் பெண்கள் பெரும்பாலும் இரண்டாம் பாலினமாகவே கருதப்படுகிற நிலையில் தற்போது வரவேற்கத்தகுந்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தூரத்து வெளிச்சமாக நம்பிக்கை தருகிறது. தங்கள் சார்பாகப் பேசவும் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் பெண்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு நாட்டில் எந்த விகிதாசாரத்தில் ஆண்கள் பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் இருக்கிறார்களோ அதே விகிதாசாரத்தில் அரசியலிலும் அவர்கள் பங்களிப்புச் செய்வதுதான் ஜனநாயகம். அப்படியான ஒரு அரசாங்கத்தினால்த் தான் சமத்துவமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். அவர்கள் பிரதிநிதிகளாக இருந்தால் மாத்திரமே அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து அவற்றிற்கு தீர்வுகாண முடியும்.

உலகம் முழுவதும் சமூக, பொருளாதார காரணங்களால் பெண்களின் அரசியல் பங்கேற்பு பின்னடைவைச் சந்தித்தபோதும் தங்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்துப் பெண்கள் களம்காண போராடி வருகின்றனர். அந்தப் போராட்டமே அரசியலில் அவர்களின் இடத்தை உறுதிசெய்கிறது. உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்து ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ நடத்திய ஆய்வின்படி 1995இல் 11.3 சதவீதமாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2020இல் 24.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பொலிவியா, ஸ்வீடன், பின்லாந்து, தைவான், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலின வன்முறைகளுக்கு எதிராக ” அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்” என்ற பணித் திட்டத்தை ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதம் பெண்களாகவுள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் 5.3 சதவீதமும், மாகாண சபைகளில் 4 சதவீதமும், உள்ளூராட்சி சபைகளில் 1.9 சதவீதமும்தான் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்டத்திலும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக இந்த பணித் திட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளரான இலங்கை பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்ப்பு அமைப்பு கூறுகின்றது. துன்புறுத்தல், பாலியல் லஞ்சம் , மிரட்டுதல் , உடல் ரீதியாக தாக்கப்படுதல் , எச்சரிக்கைகள், நிதி ரீதியான அழுத்தங்கள், எச்சரிக்கைகள், பண்பற்ற முறையிலான ஊடக தகவல்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் சேறு பூசப்படுதல் போன்றவை இந்த அமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரசியல் ஒரு வியாபாரமாக மாறிவிட்டதால், அதில் ஆண்களின் ஆதிக்கமும் போட்டியும் அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அரசியலில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை பலவீனப்படுத்தி, எளிதாக அரசியல் களத்தில் இருந்து புறக்கணித்துவிடுகிறார்கள்.அரசியல்  களத்தில் இருக்கும் பெண்கள் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும், ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளில் மட்டுமல்லாமல், பெண்கள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளிலும்கூட பெண்களின் குரல் ஒலிக்காமலே போகிறது. உரிமைகளும், அங்கீகாரங்களும் பெண்களுக்குப் பல போராட்டங்களுக்குப் பின்னரே கிடைக்கப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட போராட்டத்தை நாம் தொடர்ந்து கடந்தால்தான், அரசியலில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்கு இருக்கும் சூழலை நம் எதிர்கால சந்ததியருக்காவது பரிசளிக்க முடியும்.’’

அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியுமா ? அரசியல் களத்தில் இறங்கும் பெண்களுக்கான மரியாதை மற்றும் பாதுகாப்பு நிலைகள் எப்படிப்பட்டது? இதுவரை அரசியலில் பெண்களின் பங்கு எப்படி இருந்திருக்கிறது? அரசியலில் பெண்களுக்கான ஆர்வம் குறைவாக இருப்பது ஏன்?  போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஆராய்வதும் அவற்றிலிருக்கக்கூடிய பரச்சினைகளைக் களைவதற்கான பரிகாரங்களைத் தேடுவதும் அவசியமானது.

இத்தனை தடைகள் இருந்தாலும்கூட, அரசியல் பின்புலமே இல்லாத பெண்களாக இருந்தாலும், சமூக அக்கறையுடன் உறுதியோடு உழைத்தால் பெண்கள் அரசியலில் தங்களுக்கான இடத்தை நிச்சயம் பெறமுடியும். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும்  அரசியல் களத்துக்கு வருவது நீண்ட பயணத்துக்கான வலுவான அடிக்கல்லாக இருக்காது. சிறுவயது முதலே அரசியல் ஆர்வமும் அறிவும்கொண்டு வளர்ந்து, இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, அதன் அமைப்பு, செயல்முறைகள் பற்றி தெரிந்து, புரிந்துகொண்டு, பிறகு வேட்பாளராகி வெற்றி பெறும்போது, நீண்ட காலம் அரசியலில் தாக்குப்பிடிக்கவும், முன்னேறிச் செல்லவும் முடியும்.

பவானி தம்பிராஜாநெதர்லாந்து

பவானி தம்பிராஜா

(Visited 406 times, 1 visits today)