அரவம் புணர்ந்த அடவி – ஒரு பார்வை-சப்னாஸ் ஹாசிம்

சொற்களின் அர்த்தங்கள் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தருவிப்புகளான நடத்தைவாதம் (behaviorism) சார்ந்தோ நடைமுறைவாதம் (pragmatism) சார்ந்தோ மொழியும் சொற்களும் அடுத்த தளத்தை நோக்கி உந்தப்பட்டன. இந்நிலையில் லுட்விக் விட்கென்ஸ்டைன் போன்ற தத்துவியலாளர்கள் அதனை விளக்க முற்பட்டனர். கோ. நாதனின் அரவம் புணர்ந்த அடவி கவிதை தொகுப்பை வாசிக்குமிடத்து இந்த தத்துவ கரிசனையை நோக்கிய உதிப்பு எழுகிறது. கவிதைகள் கட்டமைப்பு சார்ந்து இன்னுமொரு வடிவத்தை அடைய எத்தனிக்கும் போக்கில் சொல் பற்றி மொழி பற்றிய தத்துவ விவாதங்கள் உருவாகின்றன. நாதனின் கவிதைகள் படிமங்களூடாக விரிவாகின்ற பேசுபொருள் மீது பல கோணங்களிலான புரிதலை ஊடாட்டமாய் ஒப்புவிக்கின்றன. ஆசிரியன் இறந்துவிட்டான் என்கிற தொனியில் எல்லாவற்றையும் வேரோடு சாய்க்க முடியும் என்று நம்புவதை அபத்தமென்கிறார் சி. சிவசேகரம். இன்றைய கவிதை வடிவம் பின் அமைப்பியலின் பேரால் ஏற்பட்ட மாற்றங்களாக இன்று சொந்தம் கொண்டாடும் பல அதற்கு முன்னரே நிகழத்துவங்கியவை.

“வெறுமைப்பட்ட அறை
இரவு நுழையும் இடைவெளியுள்
சொற்களின் வேட்கை நிரைகள் நிறைந்து
சுவரில் படியும் இருளில் தனித்தற்ற உடல்
ஒலித்தலையும் பல்லியின் புணர்வு
வெறுப்பின் கணத்தை காலம் சப்பி மெல்லும்.

சாளரமற்ற அறை முழுவதும்
மது வாசனையின் நிரம்பல்கள்
விம்பங்களை கரைத்து ஒளிரும்
காலியான போத்தல்கள்
கொல்லப்பட்ட உடலிருந்து இரத்தம் சேமிப்பு.”
( வெறுமை பருகும் கொலைக் கணம் )

எனப் படிமங்கள் விரிந்தடுக்கும் காட்சிமொழி வாசகனின் மனநிலையோடு பொருளை பரிகரிக்கிற நிமித்தமாக வருகிறது. படிமங்கள் ஊடாடுகை மூலம் முன்னரே வாசகர் மனதில் முடிவான ஒன்றை ஐயப்படுத்துகிறது. பின் நவீனவாத கவிதைகளின் இயல்பான ஆதாரமற்ற தன்மையை நாதனின் கவிதைகள் கட்டுடைப்பாக பேச முயல்கின்றன. பெரும்பாலான கலை, இலக்கிய, விஞ்ஞான மற்றும் சமூகவியல் தத்துவம் போன்ற கூறுகளில் உண்மையென கூறப்பட்ட விடயங்களில் நிறைய குறைபாடுகளைக் காணலாம். அவற்றையே ground less ஆக பின்நவீனவாத இலக்கிய போக்கில் நிதானமாக கையாள முனைகிறார் நாதன்.

“கத்தி,
குருதி,
பலி,
கருணையற்ற மருத்துவ கணங்கள்
அதி பயங்கரத்தின்
கிருமி தின்ற நுரையீரல்
மரணங்களின்
விவரக்குறிப்புக்களை எழுதுகிறது இடுகாடு.

பூட்டுண்ட ஆலயக் கதவுகள்
இரும்பு கறல்களால் ஒழுகிறது.
பிரார்த்தனைகள்,
தீபச்சுடர்கள்,
நம்பிக்கைகள் இழப்புகளை வருடிய
கடவுளின்
முகத்தில் சாவோலங்களின் குறியீடு”

என்ற வரிகளில் நாதனின் பாடுபொருளின் இருமை தெரிகிறது. உணர்வுகளை நகர்த்தும் சாமர்த்தியமான மொழியாடல் நாதனிடம் இருக்கிறது. கழிவிரக்கம் பேசுகிற நான் என்ற தனிமை போன்ற கவிதைகளில் அதை இயல்பாக இருகுறியீட்டு வடிவமாக பேசியிருப்பார். அதிகபட்ச வாதம் ( maximalism ) பற்றி பின்னவீன இலக்கியங்கள் கவனமாக இருப்பன. ஒரு இறுக்கமான சொல்லாடலை, வரையறையை அல்லது பரிணாமங்கள் சார்ந்த விவாதங்களை அவை கொண்டிருக்காது.

“அந்நியமாகின்ற போதெல்லாம்
புலிப் பல்லின் அகோரத்தில் காமம்
ததும்பும் விஞ்ஞானத்தின் உடலுடல்
வியாபித்து மரத்தின் புணர்வில் தாவுகிறேன்.

அவளிருந்து ஒழுகும் மென் கலவியின்
பிறழ்வு சத்தமற்று மான்
கொம்புகளைப் புணர்ச்சியில் பட்டைத் தீட்டுகிறேன்.

அவளின் அகன்ற மார்பகங்கள்
முயல் தோலின் மயிர்ப்பீலிகளை
நெஞ்சறையெல்லாம்
கிளை கிளையாக அவிழ்கிறாள்.
அவளான மரம்
தளை விட்டு பருமனாகத் தளிர்க்க தொடங்குகிறது.
காய்களின் காம்புகளை
ஆட்டுக் குட்டிகள் மேய்கிறது.

அவளினது மரத்தின் இதழ்க் கனிகளை
கிளியின் சொண்டில்
விரிந்து விரிந்து அவிழ்து வெடிக்கும்
முத்தத்தின் மெல்லிய ருசி சுவைக்கிறேன்.

நான் உடும்பின் தோற்றத்தில்
ஊர்ந்து மரமெங்கும் ஏறுகிறேன்.
மரப் பல்லியாய்
நச்சரிக்கத் தொடங்கி பொந்தில் அடங்கினாள்.”
(காமத்தின் விஞ்ஞானம்( விலங்கியலும், தாவரவியலும்)

இந்தக்கவிதையிலும் காமம் சார்ந்த அதிகபட்ச உரையாடல்களை கவிதை மொழி பறைசாற்றுவதையும்,

“மேசை மரத்தின் கீழ் உதிர்கின்ற
வெள்ளை இலைகள்,
சருகாகி காற்றில் மிதந்து அலைகின்றன.
தேநீரில் மிதக்கின்ற முத்த மிகுதியை எறும்புகள்
உதட்டில் சுமந்து முத்தமிட்டே செல்கின்றது.
“(தேநீர்க் கோப்பை முத்தங்கள்)

என, முத்தம் பற்றிய குறிப்புகள் பொருண்மையில் சுருங்குவதையும் காணமுடியும். இதையே பின்னமைப்பியலில் குறிப்பிடத்தகுந்த அடைவாக கருதுபவர்கள் உண்டு. அதீத யதார்த்த ( hyperreality ) புனைவுகளோ சொல்லாடல்களோ இப்போது ஆழமான சமூகப் பார்வைகளை, நிலப்பரப்பு சார்ந்த எல்லா உணர்சிகளையும் பேசுபவனவாக வருவது அவதானிக்கத்தக்க போக்காக இருக்கும். வில்லியம் கிப்சனுடைய நாவல்களில் வருவதைப்போல உண்மை அல்லது யதார்த்தத்தை கொள்முதல் பொருளாதார சுய இயங்குதல் சார்ந்த எழுத்துக்கள் தெருக்களில் சந்தைகளில் யதார்த்தம் பற்றிய புதிய தூண்டல்களை வெளிப்படுத்தின. கேர்ட் வொன்னகேட்டின் படைப்புகளிலும் அந்த சாயல் தெரியும். தமிழ் கவிதைப் பரப்பிலும் அப்படியான கவிதைகள் ஆங்காங்கே விரவியிருக்கும்.

“நீர்த்தாவரத்தின்
இலையின் அடியில் ஊரும்
நீர்ப்புழுவை விழுங்கும் மீனைச்
சற்றைக்கெல்லாம் கவ்விவிட்டது
அக்கொக்கு
கொக்கின் தொண்டைக்குள்
மீன் நீந்தி இறங்கிகொண்டிருக்கையில்
கொக்கின் கால்களைப்
பற்றி இழுக்கிறது ஏரி முதலையொன்று
ஒரு குறியில்
ஒரு பாய்ச்சலில்
ஒரு வாயில்
ஊர்வன நீந்துவன பறப்பன என
அம்முதலை மூன்று இரையை
கவ்விக்கொண்டிருக்கிறது
இப்போது”

என, நரனின் முதலை கவிதை வரும்.

“இத்தனை உன்மத்தமுடன் சூல் கொள்ளும்
அந்த மீனை
அடுத்த மீன்பிடிப்பு காலத்தில்
பிடித்துப் பார்க்க வேண்டும் என
நினைத்துக் கொண்டான்.
உப்புக் காற்று நெடுநேரம்
தூங்கவிடாமல் அடித்துக்கொண்டிருந்தது.”

என, மௌனன் யாத்ரீகாவின் கவிதை முடியும்.

“என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.”

என, ரமேஷ் பிரேதனின் கவிதை வரும்.

இப்படியான பின்னவீன அல்லது பின் காலனித்துவ போக்குகளை நாதனின் அரவம் புணர்ந்த அடவி தொகுப்பெங்கும் காணமுடியும்.

“வானம் உயர்ந்து பறக்கும்
பறவையின் உதிர்ந்த இறகு
மரத்தின் கிளையில்
பூவில் முளைத்து வளர்கிறது.
அதன் மேலால் காற்று
இசையை இலையில் அசைத்தது.

மாடி வீட்டின் நீள் சுவர்கள்.
புறாக்களின் சப்தங்களில்
சலனம் உடையும் தருணம்..
சச்சரவற்று
சாளரத்தின் வழியே
இரை தானியங்கள் பொறுக்குகின்றன.”
( நினைவொழுகும் மிகுதி)

என நாதனுடைய பார்வை நுணுக்கமாக செல்லும். பின்னவீன இலக்கியங்களில் இரண்டாம் உலகப்போரின் பிற்பட்ட காலத்திலிருந்து துண்டாடுதல் ( fragmentation) உத்தியை பரவலாக பயன்படுத்த துவங்கி இருந்தனர். முழு படைப்பிலும் கருவும் கதாபாத்திரங்களும் களமும் படிம உருக்களும் துண்டுகளாக வரும். இது வாசகர்களை அந்நியப்படுத்துகிற உத்தியாக கூட இருக்கும். நாதனிடமும் இந்த தொகுதியில் அந்த இயல்பை காணலாம். இயற்கையின் ஏழாவது குழந்தை கவிதையிலும் ஒரு துண்டு சூரியன் கவிதையிலும் நாதனின் புதுமை தெரிகிறது. நாதனின் இயற்கை பற்றிய புரிதல் அலாதியானது. அவர் வாழ்ந்த சூழல் சார்ந்தும் உயிர்ப்பல்வகைமை சார்ந்தும் அவர் கொண்டு வருகிற குறியீடுகளும் உருவகங்கள் இயல்பாகவும் வித்தியாசமாகவும் இருப்பன. அந்நியமான புதினங்களை நாதன் அரிதாகவே உபயோகப்படுத்தியிருக்கிறார். மனவெழுச்சி சார்ந்து இறுக்கமான உணர்வை பெரும்பாலான கவிதைகள் சொல்கின்றன அல்லது அப்படிப் புரியப்பட அநேக வாய்ப்புகள் உள்ளன. நாம் யாருமற்ற சூழல், எதுவுமற்ற நிலை, தனிமை ஒரு பயங்கரம் போன்ற கவிதைகளும் வெறுமை பற்றிய இழப்பு பற்றிய அநேகமான பாடுபொருள் கொண்ட கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள் இழையும் உணர்வு மொத்த தொகுப்பு பற்றிய முன்முடிவை அல்லது பாதிப்பை கழிவிரக்கம், தனிமை சார்ந்து வெளிக்கொணரும். அதனால் உணர்வுகளின் சமநிலையொன்றை, பாடுபொருளின் பரந்த வீச்சொன்றை, கோட்பாடுகள் பற்றி சமூக விளிம்புநிலை சார்ந்த பிரஸ்தாபிப்பை அதிகமாக காணமுடியாது. இலை மரங்கொடிகளிலிருந்தும் பூச்சி ஊர்வனவற்றிலிருந்தும் நாதன் நம்மை வித்தியாசமான இடமொன்றுக்கு அழைத்து செல்கிறார். அது paranoia வகை தீர்மானமான வடிவமொன்றை கொடுத்தாலும் அதனுள் ஒரு வாழ்வியல் சார்ந்த ஏதேனும் உண்ர்வையோ சிக்கலையோ அலசியிருக்கும் அளவு போதாது அல்லது இன்னும் வீரியமாக அவை கருத்தூன்றலை எடுத்து பேசியிருக்க வேண்டும். ஆனாலும் தேர்ந்த வாசகரையும் படிமங்களாலும் எடுத்துக்கொண்ட கருவினாலும் கட்டிப்போடுகிற மொழி நாதனுடையது. அந்த இறுக்கமான சொல்லாடலுக்கு இன்னும் நிறைய பாடுபொருள்களும் பரிசோதனைகளும் காத்திருக்கின்றன. ஈழத்து கவிதைப் பரப்பில் நாதன் மிக முக்கிய பாதிப்பை அடுத்த தலைமுறை வரை கடத்துவாரென்ற நம்பிக்கையை அரவம் புணர்ந்த அடவி கவிதை தொகுப்பு தருகிறது.

“காடுடைய ஆன்மா
காடு ,
கடவுள் மறைந்து வாழும் குகை.
என மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னிருந்து உலாவும் ஐதீகக் கதை.

காடுகளுக்கு எவ்வித உருவமில்லை.
அது ஒரு நிலமாகவும்,
அது ஒரு மலையாகவும்.
அது ஒரு பரந்த வெளியாகவும்
தூரத்து வெளிப்பாட்டின் தோற்றம் மட்டுமே.

காடுகளின் இளமையை
எங்கும் அலைந்து திரியும் வண்ணத்துப்பூச்சி
புற்செடிகளில்
மேல் அமர்ந்து பரப்பி விடுகிறது.

மழை நீரில் கர்ப்பம் தரிக்கும்
காடு,
நதிக் குழந்தைகளின் தாலாட்டில்
இசைப்பாடல் ஒளிர்வது அபூர்வமானது.

தாகம் நனையும் விலங்குகள்.
ஆயிரமாயிரம்
காலடிகளில் மிதிபடும் குளக்கரை.
காட்டின் பலிபீடம்
பழித்த பாஷைகளையும் கழுவியது.

பிரபஞ்ச தோற்றத்தின் முதல் மூலம்
காடு எனவும்
மரண மிகுதியாய் கொம்புகளில் மிளிரும்.

எந்த காடும் பறவைகளின்
சலசலப்பில் தான் விழித்து கொள்கிறது.
அதன் பெயர் காடாகும் வரை.”

என கவிஞர் நாதனின் தாகம் அழுத்தமாக இந்த கவிதையில் தெரியும். அவர் மரங்களுக்காக மனிதர்களுக்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இயல்பாக்கத்திற்காக கவிதை சொல்கிறார். அவர் கவிதைகள் அதற்குண்டான ஆழமான விவாதங்களை காத்திரமான கேள்விகளுடன் அதற்குரிய மொழிமையில் பிசகின்றி எழுப்புவன.

சப்னாஸ் ஹாசிம்-இலங்கை

சப்னாஸ் ஹாஷிம்

(Visited 156 times, 1 visits today)