அந்த மீசையைக் கண்டுபிடிப்பது கஷ்டம்-கவிதை-செல்வசங்கரன்(அறிமுகம்)

அந்த மீசையைக் கண்டுபிடிப்பது கஷ்டம்

செல்வசங்கரன்

ஓவியம் : டீன் கபூர்

கண்ணாடியில் மீசை வரைந்து
தன் முகத்தை அதில் பொருத்திக் கொள்பவன் ஒருவன் இருந்தான்
தன் முகத்தை அதில் நிறுத்திக் கொள்வதிலேயே
அவனுக்கு நாட்கள் கழிந்தன
முகத்தை அதிலிருந்து கழட்டிக் கொள்வதும் மாட்டிக் கொள்வதும்
அவனுக்கு கை வந்த கலை
சந்தோச மனநிலையென்றால்
உடம்பெங்கிலும் ஒட்ட வைத்துச் சிரித்துக் கொள்வான்
மீசையைத் தெரிவு செய்துகொண்டிருந்த நாட்கள் தான்
அவனுக்கு சவாலான காலகட்டமெனச் சொல்லலாம்
எங்களையெல்லாம் ஒரு கூத்துக் கலைஞரிடமாவது கொடுத்துவிடலாமே
என தேர்ந்தெடுக்காமல் போன மீசைகள் நச்சரிப்பதை
அவன் கண்டுகொள்வதேயில்லை
வீட்டிற்கு வந்ததும் கண்ணாடி முன் நின்று அதை மாட்டிக் கொள்வான்
அவனுக்கும் மீசைக்கும் ஒரு சினேகம் உருவாயிருந்தது
உன்னோடே வந்துவிடுகிறேனென கொஞ்சநாட்களாக அந்த மீசை
கெஞ்ச ஆரம்பித்திருந்தது
தன்னுடைய படு ரகசியம் அம்பலமானால் எவ்வாறிருக்குமென
அவனது மனக்கண் முன்னால் வந்து போனது
அந்த ஒரு ஷணத்திற்காக கண்ணாடியில் வரைந்திருந்த மீசையை
துப்பாக்கியெடுத்துக் குறி பார்த்தான்

00000000000000000000000

எதிர்காலத்தைத் தூக்கிப் பறத்தல்

இன்றைக்கு இனி சாக்லேட் கேட்கக் கூடாது
ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் தான்
சாப்பிட்ட பின் வாயைக் கொப்புளிக்க வேண்டும்
சாக்லேட்டை வாயிலிருந்து கையிலெடுக்கக் கூடாது
எச்சில் வடியாமல் சாப்பிட வேண்டும்
அவனுக்கு ஒரு சாக்லேட்டின் சுவை இவ்வளவு தூரத்திலிருந்தது
சரி என்று கத்தினான் அந்தச் சிறுவன்
இன்னும் நீங்கள் சொல்லப் போகும் எல்லாவற்றுக்குமே
இந்த ஒரு சரி தான்
தூர தேசம் போய்க்கொண்டிருந்த சாக்லேட்டின் சுவையை
சரி ஒன்றால் சடக்கென இழுத்து வாயில் போட்டான்
சாக்லேட்டின் சுவை ஒரு சிறிய காலத்தில் கரைய
இந்நேரத்திற்கு காலத்திற்கும் கடக்க முடியாத ஒரு காலத்தின் முன்னால்
பறந்துகொண்டிருக்கும் சரி

செல்வசங்கரன்-இந்தியா

செல்வசங்கரன்

 175 total views,  1 views today

(Visited 40 times, 1 visits today)