நாவல்கள் எழுதிய கதை-சிறுகதை-க.வசந்த் பிரபு

நீண்டதொரு யோசனைக்கு பிறகு 1996 ல் புரிசையிலிருந்து சென்னைக்கு கலையை சான்றிதழுக்காக கற்க வந்த ஒரு பெண்ணுக்கும், ஜெர்மனியின் ஒரு ஊரிலிருந்து அதே நோக்கோடு வந்த உயரமான வெள்ளை நிறக் காரனுக்கும் இடையே உண்டான காதலை ரசமோ விஷமோ சொட்டாமல், அற்புதமான அவர்களின் காதலை சொல்லி விட வேண்டும் என்று கதையை துவங்கி கிட்டதட்ட 4,5 பக்கங்களை கடக்கையில் கொஞ்சம் ரசமும், 7,8 பக்கங்களை கடக்கையில் நிறைய விஷமும் சிந்தியிருந்தது. விஷத்தை கடந்து பேனா மை எழுத்தாக மாற மறுத்தது.

காதலை தவிர்த்து ஏதாவது புதிதாக என யோசித்துக் கொண்டே ஒவ்வொரு காலையையும் புலரவைத்து மனதை புனரமைத்து ஒன்றும் தேறாமலே ஓடிக்கொண்டிருந்தது. பின்னொரு நாளில் நண்பர் கேட்டிருந்த புத்தகமொன்றை தேடிக் கொள்ளச் சொல்லி அவரை புத்தக அடுக்குகளில் அனுமதித்திருந்தேன். பெரும்பாலும் யாரையும் அனுமதிப்பதில்லை, காரணம் சில லைப்ரரியினுடைய சீல் போட்ட புத்தகங்களும், சிலசமயம் தேடுபவர்களின் புத்தகங்களும் கூட இருக்குமென்பதால் தான்.

அவர் அதில் ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து 1993 வாக்கில் கல்லூரி காலத்தில் எழுதியிருந்த,

“மழைகளால் மறுபிறப்பெடுக்கும்,
உன் நினைவுகள் சில..
மழைத்துளிகளை
எண்ணச் சொல்வாய்…
குடையின்றி, நனையாமல்
வர சொல்வாய்…
தேங்கியிருக்கும் நீரில்
ஷுவோடு கடக்க அடம் பிடிப்பாய்
மழைக்கு பின்
மரக்கிளைகளை ஆட்டி
மழை பெய்ய வைப்பாய்..
காகித கப்பல்களை
விட விருப்பப்பட்டதே இல்லை..
குருவிகள் என்ன செய்யும் என்பாய்…
தவளைகள் பாவம் என்பாய்…
மீன் தொட்டியை தூக்கி
மழையில் வைக்க அடம்பிடிப்பாய்..
உன் பள்ளியின் கிறிஸ்துமஸ்
கொண்டாட்டங்களுக்கு பிறகு
நானில்லாமல், நீ மட்டும்
ஷுவோடு தேங்கிய நீரை
கடக்கையில்…
தேவதையாய் மறைந்தாய்
நீர் குதித்துக் கொண்டிருந்த
மூடப்படாத பாதாள
சாக்கடைக் குழிக்குள்…
உன்னை எரிக்க எடுத்து
சென்ற நொடிகளில்
மழை இருந்தது…”

கவிதையை சிலாகித்து விட்டு இதையே சிறியதொரு நாவல் போல மாற்றலாம். அதற்கான வாய்ப்பு இதிலிருக்கிறது என கூறி நாவலிலிருந்து சிறியதொரு நாவலுக்கு எண்ணத்தை மாற்றிவிட்டு அவர் கேட்ட புத்தகம் மட்டுமல்லாமல் அவருடைய சில புத்தகங்களையும் மீட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்.

நான் ஓரிரு முறை அந்த கவிதையை படித்துவிட்டு அவர் கூறிய வாய்ப்பை உணர ஆரம்பித்தேன்.

“மழை சத்தத்தையும் மீறி சுமித்ரா அழுது கொண்டிருந்தால், அப்போது நனைந்தபடியே உள்ளே வந்த அழகேசன் மனைவியை திட்டியபடியே குழந்தையை சமாதானப்படுத்தி என்னவென்று கேட்டான்.”

குழந்தை விசும்பிக்கொண்டே,

“மீன் தொட்டிய தூக்கி மழையில வைக்க சொன்னா அம்மா வைக்க மாட்றா”

“அழகேசன்………. வைக்க மாட்றா சொல்லக்கூடாது, நம்ம அம்மால பாவம்… வைக்க மாட்றாங்க சொல்லு,சரியா… அப்பா எடுத்து வைக்கிறன் வாங்க………………. “

என கதை தொடங்கி,

“……… அழகேசனின் வலது தோளில் மூங்கில் அழுத்திக்கொண்டு இருந்தது, வலிகளெதையும் உணரும் மனநிலையை சுமித்ராவின் மரணம் பறித்திருந்தது. மழைத்துளிகள் ஒன்றிரண்டு போடத் துவங்கியது. அது மட்டும் அவன் மீது மிகுந்த வலியை ஏற்படுத்தி அவன் மேலேயே வழிந்து கொண்டிருந்தது. ”

என கதையை 30 பக்கங்களில் எழுதி முடித்து, மிக முக்கிய நண்பர்களிடம் மட்டும் படிக்கக் கொடுத்து இருவரை தவிர அனைவரும் ஓகே என கூற….

அடுத்து என்ன புத்தகமாக்க வேண்டியது தான்.

எந்த பதிப்பகம் ?

யாரை பார்கலாம் ?

நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலில் இருக்கிற அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பதிப்பக ஓனரை சந்தித்தேன். அவர் ஒரு காதலிக்கும் இளைஞனை போன்ற ஆடை மொழியோடும், வார்த்தை ஜாலங்களோடும் பேசியது என்னை திகைப்பிலாழ்த்தியது. பின் அவர்களின் அலுவலகத்திலிருந்து வாசல் வரை வந்து, என்னோடொரு சிகரட்டை பகிர்ந்து கொண்டு கதையை படித்துவிட்டு அழைக்கிறேன் என்றார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 5 மணிக்கு மேலிருக்கும் அவர் அழைத்து, உங்களுக்கு என்னோட வீடு தெரியுமா? என கேட்க.. நான் “”இடம் சொல்லுங்க சார் வந்தர்றன்” என..

அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்து எனக்கு வழி சொல்ல சொன்னார்.

நான் பைக்கை நிறுத்திவிட்டு வாசலிலிருந்து குரல்கொடுக்க, நேராக உள்ளே வரச்சொல்லி குரல் வந்தது. அவர் யாரோ சிலரோடு டீ குடித்துக் கொண்டிருந்தார். என்னை அமரச் சொல்லிவிட்டு

அவர்களிடம்,

“இப்ப கேட்டீங்கள அந்த கத இவரு தான் எழுதுனாரு” என கூறிவிட்டு…

அவர்களையும் அவர்களின் இலக்கிய பங்களிப்புகளையும், சாதனைகளையும் கூறிவிட்டு

ஆசுவாசப்படுத்திட எனக்கொரு டீ கொடுக்கச் சொன்னார்.

அவர்கள் ஓரிரு வார்த்தைகளுக்கு பின் கிளம்ப, அவர்களை அனுப்பிவிட்டு, என்னோடு சிகரட்டையும் அவர்களுடனான தன் தொடர்பையும் பகிர்ந்து முடித்து பின் “கதை ஓ.கே. ஆனா பக்கம் ரொம்ப கம்மியா இருக்கு, அப்பிடியே போட்டா விலை கம்மியா தான் போட முடியும். எழுத்து அளவ அதிகமா போட்டு இரண்டு வரிகளுக்கு நடுவுல வர இடைவெளிகள அதிகப்படுத்தினு போட்டா கூட 3 ல இருந்து 4 பக்கம் அதிகமாகும் அவ்ள தான். ஏதாவது கதையில இன்னும் சேர்க்க முயற்சி பண்ணுங்க.. இன்னும் ஒரு பதினஞ்சு பக்கம் மட்டும்…” என முடிக்க…

அவர் பகிர்ந்திருந்த பிம்பங்களின் பொருட்டு தலையசைத்து பின் வீட்டை அடைந்தேன்.

பின்னொரு இலக்கிய நிகழ்வில் நண்பரின் அறிமுகத்தோடு, தன் நூலுக்காக  முக்கிய விருதுகளை பெற்றிருந்த அவரோடு அறிமுகமாகி உரையாடிக் கொண்டிருக்கையில் இந்த கதையை சொல்லி, அதை எப்படி பெரிதாக்குவது என வினவ அவர், எழுத்துப் பிரதியை கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறேன் என…

இரண்டு நாட்களுக்குபின் அழைத்த அவர்… பெரிதாக்குவது எப்படி என சொல்லிவிட்டு

அதன்படி,

“……… அழகேசனின் வலது தோளில் மூங்கில் கணுக்கள் அழுத்திக் கொண்டே வந்தன, வலிகளேதையும் உணரும் மனநிலையை சுமித்ராவின் மரணம் பறித்திருந்தது. மழைத்துளிகள் ஒன்றிரண்டு பூமி நோக்கி வந்து கொண்டிருந்தன. மேகங்களை கடந்து காற்றை கடந்து வந்தபோதும் வேகமேதும் குறையாமல், அது அவன் மீது விழுந்து மிகுந்த வலியை ஏற்படுத்தி உடலுரசி இறங்கிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் இருந்து வழிந்த நீரைப்போல ”

என நீட்டலாம்.. ஆனால் இந்த கதைக்கு அப்பிடி தேவையில்லை. அடுத்து எழுதுகிற கதைகளில் இதை செய்து பாருங்கள் எனவும், வேண்டுமானால் இன்னொரு கதை எழுதி இரண்டையும் சேர்த்து புத்தகமாக்குங்கள் என புது ஆலோசனையோடு, எழுதிவிட்டு அழையுங்கள். என முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து பயிற்சியிலேயே ஓடிக்கொண்டிருந்தேன்….

யார்னா என்ன சாப்பாடுனு கேட்டா… பதில்ல என் பயிற்சி தெரியும்..

“சின்ன வெங்காயத்த தாளிச்சு, கிள்ளி போட்ட சாம்பாரு, தேங்காய துருவி போட்டு அவரக்காய ஒரே அளவுல வெட்டிபோட்டு பொறியலு, கூடவே மிளகு சரியான அளவுல ரசம். ”

பயிற்சியில் ஓரளவு தேற ஆரம்பித்ததாக நான் உணர, அடுத்து எங்கெல்லாம் புழங்கினேனோ அங்கெல்லாம் கதைகளை தேடிக் கொண்டிருந்தேன். தினம் சலூனில் படிக்கிற பேப்பரில் ஏதாவது செய்திகளை கதையாக மாற்றும் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கையில், முடி வெட்ற ராஜா அண்ணன் நெத்தில பளிச்சுனு பட்டையோட கடைகுள்ள பூந்து வேலைய ஆரம்பிக்க, என்ன ராஜா எந்த மண்டபம் என, முடிவெட்டிக்கொள்ள காத்திருந்தவர் கேட்க..,

ஏன் ராஜா அண்ணனோட இரட்டை தொழில் சங்கடங்களையும் வசதியையும் பற்றி ஒரு கதையை பின்னலாமே என தோன்ற, அவரையும், அவரது பேச்சுக்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். புலங்குமிடம் குறைந்து, ராஜாண்ணன் சகவாசம் அதிகரித்தது.

ராஜண்ணன் நிறைய பேசிப்பேசி மிக நெருக்கமாக ஆரம்பித்தார். அது எனக்கு வசதியாகிப் போனது. எதுவாக இருந்தாலும் நேராக கேட்க ஆரம்பித்தேன். அவரும் கூட.. அதன் பிறகான ஓர் நாளின் பிற்பகல் பொழுதில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், எங்களை முறைத்தபடி கடையை கடந்தார் மண்ணு.

நான் உடனே, “ஏன்னா உனக்கும் இவருக்கும் ஏதாவது பிரச்சனையாணா? ” என கேட்டு முடித்த  பின் ஒரு கொட்டாவியோடு “,

“இல்லடா தம்பி. ஏன் அப்பிடி கேக்கற ? ” என்றார். “அவர் நம்ம கடைக்கே வரமாட்றாரு.. எப்ப பாத்தாலும் மொறச்சிகிட்டே போறாரு…. அதான்… என்றதும், ஒரு சிரிப்புக்கு பின் அவர்,

“நான் 5 வது படிக்கும் போது, எங்கப்பா கிட்ட காசு கேட்டு கடையில நின்னுகிட்டு இருந்தன். அப்ப இவருக்கு எங்கப்பா அக்குள் வழிச்சிகிட்டே இவருகிட்ட பேசிகிட்டு இருந்தாரு. எங்கப்பாகிட்ட, ஏண்டா ராமா, எங்க மச்சான், வீட்டு பெரியவருக்கு சவரம் பண்ண வரச் சொன்னான்டான் உன்ன… என, அப்பாவும் சரினு சொல்லிட்டு அடுத்த அக்குள்ள வழிக்க ஆரம்பிச்சாரு.. ”

நான்  இவருகிட்ட,

“ஏன்ணே அந்த தாத்தா உடம்பு சரியாயி நடக்க ஆரம்பிச்சிட்டாராணா ?” என,

இவரு,

“அது தேறாதுனு சொல்லிட்டாங்க.. அது எங்க நடக்க போது.. ”

நான்,

“அப்புறம் என்னாத்துக்கு சவரம் வேற பண்ணிகிட்டுனு ” சொல்ல,

இவரு வெடுக்குனு கைய அசைச்சி அக்குள்ள கோடு போட்டுகிட்டாரு.

அதுக்கப்பறம், எங்கப்பாவயே மொறச்சிகிட்டு தான் போவாரு, அந்த தாத்தா செத்ததுக்கும் கூட நம்மள சவரம் பண்ணவும் சடங்கு பண்ணவும் விடல.. அவங்காளுங்க கொஞ்சம் பேரும் நம்ம கடைக்கு வர்ரது இல்ல.. இவரு பேத்தி சடங்கானதுக்கு வச்ச பங்ஷனுக்கு மட்டும் நாதஸ்வரம் வேணும்னு வந்தாரு, நான் ஒத்துக்கல.

நான் மனதிற்குள், கதைக்குள் வருகிற ஒரு முக்கிய காட்சியை மனதிலேற்றி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அவர் அவருடைய மேளக்காரருடன் போனில் பேசிக்கொண்டே வீட்டுக்குள் போய்விட்டார்.

இதற்குமுன் அவர் சொன்ன சில விஷயங்களையும், நான் கவனித்ததையும் சேர்த்து ஓரளவிற்கு கதைக்கான கரு உரு ஆகிவிட்டது. ஆனால் நாதஸ்வரம் குறித்த போர்ஷன்களுக்காக கதை காத்து ஏங்கியது, உண்மையில் தூங்கியது.

சில வாரங்களுக்கு பின், அவர் எனக்கு கட்டிங் செய்து கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நாதஸ்வர கச்சேரி குறித்த பல அனுபவங்களை சொல்லிக் கொண்டே, என்னிடம் அக்குளை காட்ட சொன்னார். அவர் வழித்து கொண்டிருக்கும் போதே, நான் அவரிடம், அண்ணா கட்டிங், ஷேவிங் ரெண்டுல எது உங்களுக்கு புடிக்காது என்றேன். அவர் சட்டென, “இரண்டும் இல்லடா தம்பி… இந்த அக்குள் வழிக்கிறது தான்” என்ற வார்தைகளை கொண்டு தோலை உரசும் பிளேடின் சத்தத்தால் என் மனநாக்கை அறுத்து மனதைக் கீறிக்கொண்டிருந்தார்.

எங்களின் குரல்கள் அமைதியாகி கிடந்தன. பக்கத்து கடையில் ஓடிக்கொண்டிருந்த இளையராஜாவின் பாடல் ஒன்று எங்களின் குரலை மீட்க முயன்று தோற்றது. கத்தியிலிருந்த மயிரைத் துடைக்க கிழித்த பேப்பரின் சத்தம் தான் எங்களை மீட்டது என் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்திற்கு வந்த அவர், நான் கைகளை உசத்த மறுக்க.. ஆறேழு நொடிகள் காத்திருந்து பின் உரிமையோடு என் கையை உசத்திவிட்டு வழித்துகொண்டே, இடுப்புக்கு கீழ மயிரெதும் வழிக்கவாடா ? என்றபடியே சிரித்தார். அச்சிரிப்பு என் நாக்கையும் மனதையும் தோலை உரசும் பிளேடு சத்தத்திலிருந்து வேகமாய் மீட்டது.

எனக்கு தெரிந்து ராஜா அண்ணன் யாரிடமும் கேட்டிராத கேள்வி இது.

எளிதான கேள்வியென எண்ணி, அங்கு நானே செய்வேனெனச் சொல்லி முகத்தில் பெருமையேற்றி இருந்தேன். அவர் முறுக்கிய மீசையையோ, அக்குள் மயிரையோ வழித்து பேப்பரில் தொடைத்து எரிவதை போல், உயிரே அங்கதான் இருக்குங்கறாங்க.. அங்க தைரியமா கத்திய கொண்டு போறீங்க.. ஆனா அக்குள்ள வழிக்க மாட்றீங்க என்ற வார்த்தைகளை வீசிவிட்டு, பக்கத்து கடையில்

ஓடிக்கொண்டிருக்கிற பாடலுக்கு காதை கொடுத்துவிட்டு, படிகாரத்தை எடுத்து அக்குளில் தேய்த்து விட்டு கோவமாடா என்றவர், பதிலுக்கு காத்திராமல்.,

“ஒரு வேள அக்குளுக்கு ஒன்னுன்னு அது இரண்டுனு மொத்தம் மூணு இருந்தா பொசுக்குனு கையத் தூக்குவானுங்களா….? ” என்றபடியே பவுடரை என் அக்குள்களில் அப்பி முடித்திருந்தார்.

நான் பின்னிரவுக்கு பின்னும், யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த கதையை எப்படி எழுத வேண்டும் என்பதை பற்றியும், கதைக்கான தலைப்பைப் பற்றியும்.

க.வசந்த் பிரபு-இந்தியா

(Visited 618 times, 1 visits today)