யாக்கோபு 4:6 – சிறுகதை-மன்னார் அமுதன்

ஸ்டாலின் ஆபிரகாம் யாக்கோபு முனுசாமி, “ஆண்டவரே! என்ட பிதாவே” என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டு கால்ச்சட்டைக்குள் கிடந்த நாடாவில் கட்டிய பெரிய குருசை வெள்ளைச் சட்டைக்கு மேலாகத் தெரியும் படி போட்டுக்கொண்டான்.

மாதாவின் திருச்சொரூபம் திருத்தேரில் கோயிலை நோக்கி பவனி வந்து கொண்டிருந்தது. அன்பே உருவாக மாதா, கையில் குழந்தை யேசுவை அணைத்தபடி காட்சியளித்தார். பக்தகோடிகளின் மனமுருகும் செபங்களும் பாடல்களும் கலவையாக ஒலித்தன. தீவிர பக்தன் ஒருவன் பரவசத்தில் கிரனைட்டை வெடிக்கவைத்தான்.  கந்தகப் புகையும் அதிர்வும் வயிற்றுக்குள் பிசைந்தது.

பவனியில் சிலுவை

 பிடித்துக்கொண்டு செல்லும் பக்தர்களுக்கு முன்னால் வந்து, யக்கோபு  வரிசைகளைச் சரி செய்தான். நையாண்டியும் சிரிப்புமாக வந்த குருமட மாணவர்கள் இருவருக்குக் குட்டினான்.

“அடேய்… உன்ன செருப்புப் போட்டு வரச்சொன்னதா… பிரிஞ்சிபிள்ட கேப்பன் சரியா… ஒழுங்கா சப்பாத்து போட்டு வரனும்…”

“பொடி… நீ என்ன கட்டாக்காலியா…. ?பட்டியடிச்சதப் போல மந்தையோட போகப் பழகுடா.”

”தம்பியர்…. குருசை நெத்திக்கு நேரா பிடியுமென்ன… கீழ முட்டப்படாது… ஏசப்பாவ சுமந்த குருசல்லா… ? பின்ன படிப்பு வராம போகும்.” எனப் பயங்காட்டினான்.

சின்னச் சுவாமி முன்னால வருவதைக் கண்டதும், “தோத்திரம் சாமி… நேரமாயிட்டு … மாதாவ நீங்க கொண்டு வாங்க… கோயில்ல வேலை கெடக்கு.” என்று குழைந்தான்.

பூசை மணிச் சத்தம் கேட்க யாக்கோபு ஓட்டமாக நடந்தான்.  மாதாவின் பெயரில் உருவாக்கப்பட்ட பல சேனைகள் ஒன்றில் அவனும் உறுப்பினர்.  வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டிக்கு, ஐம்பதை தாண்டும் வயதும் உயரமும் கருமையுமென அவன் பொலிவாகத் தான் இருந்தான். முழுக்க மழித்த முகம். பின்மண்டை வரை நெற்றி ஏறியிருந்தது. பக்கவாட்டில் இருந்த கொஞ்ச முடிகளுக்கு எண்ணெய் வைத்து இழுத்துப் பரத்தி மறைத்திருந்தான். நின்றுகொண்டே வேலைசெய்வதால் சற்றுக் கூனல் விழுந்தது போல தோற்றம்.

”வாற நேரமாடா இது…. பெருநாள் பூசை தொடங்கப்போகுது. சொல்லப்போல செயல் இல்லையேடா… ஒம்பது நாள் நொவினை முடிஞ்சு…  ஒன்னும் ஆனாப்போல இல்ல…. மெழுகுதிரிகளும் பூசப்புத்தகங்களும் அப்பிடியே கிடக்கு… இண்டயோட வெளிவாசல்ல போட்டு வித்து முடிச்சிரனும்… ஓடு…ஓடு… மாதா வந்துருவா” என மெலிஞ்சியார் சத்தம்போட்டார்.

யாக்கோபு சின்னப் பொடியனைப் போல ஓடிப்போய் தனியாளாக மேசையைத் தூக்கிக் கொண்டு வந்தான். கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்று திருத்தேர் பவனி வரும் வழியைப் பார்த்துக்கொண்டு நின்றார் செபஸ்த்தி சம்மாட்டி.

”சம்மாட்டித் துரை ….. விலகிக்கோங்க ஐயா…. மேசை வருது…” என்றான் யாக்கோபு.

நின்றவாறே செபஸ்த்தி தலையைத் திருப்பி, “வண்டி வருது….. ராட்டினத்த விலக்குன்னானாம்…. விலகிப்போனா ஒனக்கு வில்லங்கமா…. வெள்ளை கட்டினா  பேச்சும் வந்திருது பாத்தியா… அஞ்சு, ஆறு ஆயிரத்துக்கு பட்டாசு வெடிக்கக் குடுத்திருக்கேன்… பாத்து வெடிச்சுவிட்டுரு…  ”  என்றார்.

யாக்கோபு முக்கிக்கொண்டே, “ஆச்சுங்க… ஆச்சுங்க…“ என்றபடி விலகிநடந்தான். சம்மாட்டி தன்னிடம் பட்டாசு வெடிக்கச் சொன்னதை நினைத்து பூரித்தான். கோயில் வாசலில் மேசையைப் போட்டு மெழுகுதிரிகளை அடுக்கத் தொடங்கினான். சுற்றுமதிலுக்கு நடுவில் கோயில் பிரம்மாண்டமாய் இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடத்தைத் தாண்டிய வரலாறு. வண்ண விளக்குகள், சோடனைகள், கொடிகள், ஊதுபத்தி மணம் என பக்தகோடிகள் கோயிலை  விக்கினமில்லாமல் அலங்கரித்திருந்தார்கள்.

மீண்டும் மணியோசை கேட்டது. யாக்கோபு “பரமபிதாவே” என அனிச்சையாக  சொல்லிக்கொண்டு மணிக் கோபுரத்தைப் பார்த்து குருசு போட்டுக்கொண்டான். தூணில் கயிற்றைக் கட்டிக்கொண்டே மெலிஞ்சியார் தூரத்தில் நின்ற ஜோனைப் பார்த்து கையை ஆட்டி ஏதோ சொன்னார். ஜோன் தலையை ஆட்டிக்கொண்டே போய் கோயில் பின்கேட்டை மூடிவிட்டு யாக்கோபுவிடம் வந்தான்.

”சம்பளத்துக்கு வச்சிருக்கிறவன் மாதிரில்லா சத்தம் போடுறான். மாதாண்ட கிருபைக்காக தானே இந்தச் சேனையில கிடந்து சாவுறோம்” என்றான் யாக்கோபுவிடம்.

”கிருபைய மட்டுமா மாதா தாறா…. ? சவமே… கவுரவம் ஒண்டும் இருக்கல்லா….? துறையும் இல்லாம வலையும் இல்லாம கிடக்கிற உனக்கெல்லாம் இதுல நிக்கற வல்லமய தந்தது யாருங்கற…. ? இந்த வெள்ளையும் சொள்ளையும் பரமபிதா தந்ததல்லா… ? விசுவாசம் வேணும்டா… பிரசங்கம் வரைக்கும் ஆளுக வந்திட்டிருப்பாங்க… அது வரைக்கும் இத வித்துருவம்…. அப்புறம் பெரிய சாமியார் முன்னால போய் கொஞ்சம் தலையக் காட்டிருவம்.”

”பெரிய கூந்தல் கவுரவம். நீ கத்தரி எடுத்தா ஆண்டவரே தலைய குனிஞ்செல்லா கிடக்கனும். அதுக்கில்லாத கவுரவமாடா … ? இதுல நிக்கிறதுக்கு நாலு பேரு மண்டையப் பாத்தா இன்னும் ரெண்டு விரலுல மோதிரம் போட்டுக்கலாம்.

”ஊதாரிக் குடிக்கு பொன்னும் துரும்படா ஜோனு…. அம்பதைத் தாண்டியாச்சு. ஆசைக்கு பெத்ததுகளையும்  சீராக் குடுத்து பேரன் பேத்தி கண்டாச்சு. சமூவத்துல நமக்கும் கவுரவம் வேணுமெல்லா… ? மெலிஞ்சியார பாரு…  அவரு மணியடிச்சாத் தான் மாதாக்கு பூசையே… திருந்தாதி அடிக்காட்டி ஊரு எழும்புமாடா… ? வந்த பேயெல்லாம் காலம் தெரியாம இங்கயே முடங்கிக் கிடந்திருமே… மடச்சாம்பிராணி… மனுசனோட மனுசனா நிக்கிறதுக்கும் கதைக்கிறதுக்கும்  பரமபிதாவா பாத்துத் தந்தது தான் சேனை. நமக்கு கவுரவம் வர்ற மாதிரி நாம தான் இத பயன்படுத்தணும். இதப் போட்டுக்கிட்டா அதிகாரம் பண்ண முடியுதுல்ல. நாம சொல்லுறத நாலு பேரு கேப்பானா இல்லையா?”

ஜோனும் யாக்கோபுவும் கதைத்துக் கொண்டே மெழுகுதிரிகளையும் பாடல் புத்தகங்களையும் விற்றார்கள். கோயிலில் ஆங்காங்கே கதிரைகள் போட்டிருந்தாலும், எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. யாக்கோபுக்கு இது தெரியும்… யாக்கோபு தனியாக ஐம்பது கதிரைகளையாவது எடுத்து கோயில் மதிலுக்கு பின்னால் வைத்துவிடுவான்.

பிந்தி வரும் பெரிய மனிதர்களுக்கு யாக்கோபு குழைந்துகொண்டே கதிரை கொடுப்பான். அவர்கள் சிரித்துவிட்டுப் போகும்போது அவனுக்கு திருப்தியாக இருக்கும். பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் யாரும் கதிரை கேட்டால்  அவர்களுக்கு கதிரை குடுக்க மாட்டான்.

”பகுத்தறிவாச் செய்யனுங்க…. ஆண்டவன் முன்னால அடிமையா இருந்தால்லா அருள் கிடைக்கும்… காலம் முழுசும் நமக்காக தொங்கி கிடக்குற மனுசன் முன்னால கதிரையப் போட்டு காலாட்டுறதா…. ?பொடிசெல்லாம் கதிரல ஏறிறுதுங்க.. பக்தி எப்படி வரும்ங்கறன்….? பாவம் தானே வரும்…. நெலத்துல இருங்க…. மாதாச்சி மடிமேலயே இருக்கிறதுக்கு சமமாக்கும் “ என அனுப்பிவிடுவான்.

“அந்தக் குட்டியப் பாத்தியா…? கனக்க படிச்சிருக்கும் போல … பாவாடய முட்டிக்கு மேலல்லா போட்டிருக்கு… ” என ஜோனிடம் கேட்டான்.

“அது ரோடுகூட்டி நச்சத்திரம் பேத்தி…. ஆறு மாசம் முன்னால கல்யாணம் நடந்துச்சு… இப்ப குழந்தையோட வருகுதே….” என நடிப்புக் காட்டினான் யக்கோவு.

”இது யாரு… தெரெசாக்கா மகனா…. ? கோயிலுக்கு பக்கத்துல வீட்ட வச்சுட்டு அரப்பூசைக்கா வருவீங்க…. மாதா கண்ணு படுறாப்புல போயிரும்….  துன்பம் தீரட்டும்.“

”புள்ள …. நீ ஜேம்சு பொஞ்சாதில்லா….? நல்ல நாளுலயாவது அவன கோயிலுக்கு கூட்டிட்டு வரப்படாதா… ?நேத்துக் குடிச்சது இன்னும் தெளிவில்லையோ…?”

ஜேம்ஸ் பொஞ்சாதி முறைத்துக்கொண்டே போனாள்.

”பெரிய ஐயாவா….?  வருசத்துல நாலு பூசையாவது பாக்கிறது நல்லது தானே…. கேரளா சாமியார்லாம் வந்திருக்காங்க…. நல்லதா தான் சொல்லுவாக… கேளுங்க மோச்சம் கிடைக்கும் … ”

”சிரைக்கிறவனிட்ட மயிருக்கா பஞ்சம்….? வக்கணையா கதைக்கிறடா யாக்கோபு… எனக்கு மோச்சம் கிடைச்சா உனக்கு மசிறு நட்டமேடா?” என பொக்கையில் எச்சில் தெறிக்க சொன்னார் பெரிய ஐயா.

“ஆச்சு… ஆச்சு… கிழப்புலின்னாலும் ஆடு கிட்ட தோக்குமா?” என அவ்விடத்தை விட்டு நகர்ந்து பீடத்தை நோக்கிப் போனான் யாக்கோபு.

மாணவர் வரிசையில் உள்ளே புகுந்து “சாத்தானுக்கே பிறந்ததுக” என பேசிக்கொண்டு குமுறிக் குமுறிச் சிரித்துக்கொண்டு நின்ற இருவரின் செவிகளை திருகிவிட்டான். கதிரையில் இருந்து ஒரு சிறுவனை எழுப்பி கதிரையை எடுத்து அருட்சகோதரி ஒருவரிடம் கொடுத்து இருக்கச் சொன்னான். கோயில் கூட்டம் ஒரு நிமிடம் திரும்பி இவனது அசைவுகளைப் பார்ப்பதை கவனித்தான். அவனுக்கு உள்ளூர சந்தோசமாயிருந்தது.

நேரே போய் பீடத்தின் முன்னால் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு சேனைகளோடு ஐக்கியமானான். அங்கு தனக்குமொரு கதிரையைப் போட்டுக்கொண்டு பெரிய சுவாமி பார்வை படுமாறு இருப்பதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.

பிரசங்கம் செய்யும் சுவாமியைப் பார்த்தான். நல்ல கோதுமை நிறத்தில் புஷ்டியாக இருந்தார்.  வெள்ளைச் சாமியெல்லா எல்லாம் நல்லதாத் தான் சொல்லுவார் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

சுவாமி “ மத்தேயு 7:12 இல் தேவவசனம் என்ன சொல்கிறதென்றால்” என நிறுத்திவிட்டு பாடல்குழாம் பக்கம் திரும்பினார். அதில் இருந்த ஒரு பெண் வேதாகமப் பக்கங்களை அவசரமாகப் புரட்டி,

“ஆகையால், பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகின்றவற்றை எல்லாம்” என்று சொல்லி நிறுத்த சுவாமியும் அதை அப்படியே சொல்லி,

”ஆமா… மேல சொல்லுங்கம்மா” என்றார்… அதற்கு அந்தப்பெண்,

“நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” என்றாள்.

”ஆமா… நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” கேட்டிங்களா இறைமக்களே?, மாதாவின் பிள்ளைகளே… சகோதரங்களே… சொல்லுங்க… அல்லேலுயா… இறைவனுக்குப் புகழ்… ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்… தேவனின்  முன்னாலே அனைவரும் சமம்…  பரிசுத்த ஆவியின் நீதிக்கு முன்பு பிள்ளைகள் எல்லாம் சமம்… யாவே…. யாஹு… அல்லேலுயா… சொல்லுங்க… மாட்சி உண்டாகட்டும்… மகிமை பொங்கட்டும்… குடும்பத்த நெனச்சுக்கோங்க… பிள்ளைகளை ஒப்படையுங்க… உங்கள் பாரங்கள் இறங்கி ஓடட்டும்  ” என கைகளை உயர்த்தி மெதுவாய் காற்றில் அசைந்து பாடினார்.

கூட்டமும் அவர் சொல்வதைத் திரும்பிச் சொல்லிக்கொண்டிருந்தது. அவரின் குரலுக்கு ஏதோ ஒரு வசியம் இருந்தது. ஏற்ற இறக்கங்களோடு அவர் பைபிளைப் பார்க்காமலேயே வசனங்களை மனதின் ஆழத்திலிருந்து மீட்டிக் கொண்டிருந்தார். அதற்குப் பல புதிய விளக்கங்கள் சொன்னார். சில இடங்களில் கூட்டத்தை சிரிக்க வைத்தார். பாடினார். மனமுருகுமாறு சின்னக் கதை சொன்னார். ஒரு நீர் வீழ்ச்சியின் நிதானத்தோடு அவரது பிரசங்கம் மக்களின் மனதை நனைத்துக்கொண்டிருந்தது. அதற்குள் சிலர் கண்ணீர் விட்டு விம்மி அழுதனர்.

ஆனாலும் யாக்கோபுக்கு பூசைக்கு நடுவுல யாரோடயும் இரண்டு வார்த்தை கதைக்க வேணும்.  யாரிடம் கதைக்கலாம். தோதாக யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தான்.

”ஏ… லெம்பட்டு… சாமி யாரு? பிரசங்கம் உத்தமமா இருக்கு… தொங்குற ஏசப்பாவ இறக்கி விட்டுருவாரு போல இருக்கே … பத்துச் சாமில ஒன்னுமாச்சும் நம்ம பங்கு மாதிரித் தெரியலயே…. நம்ம சாமிகளும் ரோமுல போயித்தானே படிக்குதுக… நல்ல மாடுன்னா உள்ளூருல வெல போகணும் தானப்பா..”

“என்னத்தக் கேட்ட… இப்ப தான சாமி சொன்னாரு… மனுசகுமாரனுக்கே சொந்த ஊருல மதிப்பில்லையாமே… எதுக்குன்னாலும் ஒரு அழைப்பு வேணாமா…?  இந்த மந்தைங்களுக்கு மேப்பனெல்லாம் வெளியூர்காரனுக தான். தீட்டுச் சாமிகளுக்கு சின்னக் கோயில்… நீ வெள்ளையப் போட்டு இங்கிலீசு பேசினாலும் ஏத்துக்கிட மனசெல்லா வேணும்? அதிகாரத்த விடனும். அதுக்கெல்லா வெள்ளையக் கட்டி அலையுறானுக. முன்னல்லாம் சங்கம், ஒன்றியம், வட்டம், சதுரம்னு திரிஞ்சானுங்க…  இப்ப சேனைக்குள்ளயும் வந்து கொடச்சல போடுறானுக… மாதா தான் கண்ணத் தொறக்கனும்.”

லெம்பட்டு சொன்ன வார்த்தைகள் தன்னைக் குத்திக் காட்டுவது போல இருந்தன. “ அட… சவமே… என்ன  குடிச்ச நாயை விட்டுட்டு… எதுக்க வந்த நாயவ அடிப்ப…. ? அதுபாட்டுக்கு போகட்டும் விடு… கவுரவத்த விட்டுக்குடுக்க முடியுமா…? அறுக்க முடியாதவன் இடுப்புல ஆயிரதெட்டு அருவாலக் கட்டித்தான் என்ன பண்ணுவ?” என்றான் சாடையாக…

லெம்பட்டு பிரசங்கத்தில் ஐக்கியமானது போல இருந்தான்.

“ஏய்… லெம்பட்டு… கழுத்துல ஒரு டையும் கட்டினா நீ சோக்கா இருப்ப…. மாதா கலரு நீலம் தானே… இந்த சூட்டுக்கு மேல ஒரு டையக் கட்ட விடணும்னு அடுத்த கூட்டத்துல முறப்பாடு ஒன்ன வப்போம். வேட்டி கட்டுறவங்க நீலத் துண்டு போட்டுக்கலாம்… ஒரு கம்பீரம் கிடைக்குமல்லா?”

“டையக் கட்டினா தலையெழுத்து மாறும்னா நினைக்குற…? புள்ள இல்லாத வீட்டுல, கிழவன் துள்ளி விளையாடின கத தான்…” என்று அலுத்தான் லெம்பட்டு.

காணிக்கை பாடல் தொடங்க யக்கோபு உண்டியலை எடுத்துக்கொண்டு கூட்டத்தை நோக்கிச் சென்றான். அடுத்து சுவாமி நற்கருணை கொடுக்கும்  போது குடை பிடிக்க வேண்டும். யாக்கோபுக்கு குடை பிடிப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. சுவாமிக்கு பக்கத்தில் நின்றுகொண்டு வரிசையை ஒழுங்கு பண்ணுவதில் தான் விருப்பம். இடையில் வருகிறவர்களை திருப்பி அனுப்பிவிடுவான்.

”ரெண்டு வரிசையில வந்தா மட்டும்  தான் அப்பம். போ… போயி வரிசையில வா” என அதிகாரம் பண்ணுவான்.

“சாமி…. இவனுங்க நாக்க வழிப்பானுங்களா இல்லையா…? வெள்ளையால்ல கிடக்கு… என்ட ஆண்டவருக்கு மூச்சுமுட்டாதா…?” என்று வெள்ளந்தியாக நடிப்பான். கூட்டம் அதிகமாக இருந்தால் எல்லோரையும் ஒதுக்கி சுவாமி போக வழி செய்வான். இப்படி எல்லாம் அமைந்த நாட்களில் அவனுக்கு மனம் நிறைவாக இருக்கும். அவனுக்கு இதுதான் கவுரவப் போதை. பீடத்தின் முன்னால் நின்ற பெரிய சுவாமி காணிக்கைகளை வாங்கிக்கொண்டு ஒவ்வொருவராக ஆசிர்வதித்தார். யாக்கோபுவும் காணிக்கை உண்டியலை பீடப்பணியாளனிடம் கொடுத்துவிட்டு கும்பிடுபோட்டான். திரும்பும் போது பீடத்திலுள்ள சுவாமி கையசைத்துக் கூப்பிடுவது தெரிந்தது. தன்னைத் தானா என்று திரும்பித் திரும்பி பார்த்து உறுதிபடுத்திக் கொண்டான். மனம் கும்மாளமிட்டது.  பெரிய சாமியெல்லாம் என்னைக் கூப்டுறாகளே என நினைத்துக்கொண்டே பவ்யமாக குனிந்து ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு காதை அவர் வாய்க்கருகில் பொருத்தினான்.

“அந்த பன்னெண்டாம் சந்தி சிலுவப்பாடு படத்துக்குக் கீழ டொக்டர் குடும்பத்தோட நிக்கிறார்…. இருக்க ரெண்டு கதிரை எடுத்து குடு.”

“கதிரை எல்லாம் முடிஞ்சு சாமி.”

”நீ கதிரையில தானே இருக்கிற…. ? அதக் கொண்டு போய்க் குடு… இன்னும் ரெண்டு எடுத்துக் குடு.. சின்னப்பிள்ளைகள் நிக்குதல்லா…? எதுக்கும் கவுரவமெண்டு  ஒண்டு இருக்குத்தானே… ?“

யாக்கோபுக்கு கால்கள் பலமிழந்து விழுவதைப் போலிருந்தது.  தனக்குள் சோர்வாக சொல்லிக்கொண்டே பெருமூச்செறிந்தான்,

“எண்ட ஆண்டவரே… எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்னுமில்லையாம்…. எட்டி எட்டிப் பாத்தவனுக்கு பத்து பணியாரமா….? டாக்குட்டர் எண்டா நெலத்துல இருக்க மாட்டாரா….? பெரிய கவுரவம் ….  ஏசப்பா… என்ட பிதாவே………………..ஆமென்……………..

மன்னார் அமுதன்-இலங்கை

மன்னார் அமுதன்

(Visited 198 times, 1 visits today)