“பி”னா வியாபாரம் – சிறுகதை- மன்னார் அமுதன்

பிளாஸ்டிக் கப் ஒளிவுமறைவின்றி அதனுள் வார்க்கப்பட்டிருந்த திராவகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. மூன்று பனிக் கட்டிகள் அதனுள் ஒன்றையொன்று நெருக்கியபடி மிதந்து கொண்டிருந்தன. மின்விளக்கின் ஒளி தங்கத்திராவகத்தில் பட்டு சுவரில் தெறிப்பை உண்டுபண்ணியது. அருகில் ஒரு போத்தல் உப்புச் சோடாவும், உறைப்புக் கொண்டைக்கடலையும் பரவியிருந்தன. திராவகத்தினுள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு எறும்பைப் பார்ப்பது போல் அவன் தன் பார்வையை அதற்குள் குவித்திருந்தான். பார்வை குவிந்திருந்தாலும் அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. உள்ளே சென்ற திராவகமும் சஞ்சலமான மனதும் அறையின் வெக்கையும் அவன் முகத்தில் பிரதிபலித்தது.

“தலைகள் குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா – யாரும்
விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா ”

என புதுவையின் வரிகளை அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். புது இலக்கம். ஏற்கனவே மூன்று அழைப்புகள் தவறவிடப்பட்டிருந்தன. யார் அழைத்திருப்பார் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அழைப்பு வந்தது.

பச்சை பொத்தானை அழுத்தி எதுவும் சொல்லாமல்  காதில் வைத்தான். எதிர்ப்பக்கம் இருந்து எதுவும் கேட்கவில்லை. சிகப்பு பொத்தானை அழுத்த நினைக்கையில் செழியன் எனக் கேட்டது. இந்தப் பெயர் தெரிந்திருந்தால் நிச்சயம் பழைய ஆளாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு “தவறான இலக்கத்துக்கு அழைச்சிட்டிர் … அப்படி யாரும் இல்லை…” என்றான்.

எதிர்முனை செருமிக்கொண்டு, “தம்பியான்… நான் வெற்றி கதைக்கிறன் …  வெற்றி…. பிசினஸ் இருக்கு…. கதைப்போமா என்றான்.”

“வெற்றியண்ணையோ… என்ன புது நம்பரா கிடக்கு…?”

“தேவைப்பட்டுது தம்பியான்… கொஞ்ச நாளைக்கு இதான் நம்பர்… கதைப்போமா…. இல்லாட்டி பிந்திக் கதைக்கவா…?”

“விசேசத்தை சொல்லுங்க அண்ணை… யாரும் இல்லை…”

“ஒரு கிலோ பீனா இருக்கு தம்பியான்… உனக்கும் எனக்கும் தெரிஞ்சவன் தான்… ஆனா ஆள் ஆரெண்டு சொல்ல மாட்டன். வீசா கிடைச்சுட்டு… நாளைக்கு அவன் வெளிக்கிடுறான். கடைசி நேரத்துல புதைச்சு வச்சிருந்த நாலு கிலோவுல மூண்டு கிலோ வித்துப் போட்டான். நான் தான் வித்துக் குடுத்தன்.

செழியனுக்கு தெரியும்…. கடைசி நேரத்தில் செத்தவர்கள் செத்துக்கொண்டிருக்க உயிரோடிருந்தவர்கள் சிலர் என்ன செய்தார்கள் என… அவன் அப்படி எதையும் எடுக்க போகவில்லை… பீனா என்பது ஒரு குறிச்சொல்… அது பவுணைக் குறிக்கும்… தங்கம் ஒரு கிலோ …. எட்டு கிராம் ஒரு பவுண்.. ஒரு கிலோ என்றால் நூற்றி இருபத்தைந்து பவுண்…. வழிகெட்டுச் செல்லும் நினைவை எதிர்ப்பக்க ஒலி கலைத்தது.

”சும்மா செய்யத் தேவையில்லை தம்பியான்… இந்தக் காலத்துல யார் சும்மா செய்யிறது… கிலோவுக்கு இருபத்தைந்து பவுண் கொமிசன். என்ன…. செய்ய விருப்பமா..? ” என்று கொக்கியைப் போட்டான் வெற்றி.

மனம் சலனப்பட்டது…. என்ன சொல்வதென்று தெரியவில்லை… மூன்று வருட புணர்வாழ்வையும் அதைத் தொடரும் புலனாய்வுத்துறை தொல்லைகளையும் நினைத்துக்கொண்டான். மீண்டும் எதிலாவது பிடிபட மனம் ஒப்பவில்லை… சிவப்பு பொத்தானை அழுத்தினான்.

00000000000000000

செழியன் மூக்கின் கீழே முற்றாக வழித்து வாய்க்குக் கீழே கற்றையாய் முடி வளர்த்திருந்தான். வலது கண்ணின் மேல் இமையிலும் இடது புறத்தாடியிலும் வெண்மை படிந்திருந்தது. தொடர் பயிற்சி செய்பவர்களுக்கு உரிய திரட்சியும், ஒடுக்கமும் முகத்திலிருந்தது. மோவாய்க்கு முட்டுக் கொடுத்திருந்த கையில் வளைவுகள் தெரிந்தன. இடது புஜத்தில் வாய் திறந்த இராஜிளியின் தலையையும், பின் கழுத்தில் பிணைந்து சஞ்சாரிக்கும் பாம்புகளையும் பச்சை குத்தியிருந்தான். பாம்புகளின் வால்கள் தட்டுவடத்தின் வழியாக இறங்கிக் கீழே சென்று கொண்டிருந்தன. உடலில் பொதிந்திருக்கும் கந்தக உலோகச் சிதறல்களின் வலியிலிருந்து மீட்சி பெறுவதற்காக அவற்றைக் குத்தியிருப்பதாகக் கேட்பவர்களிடம் சொல்லிக்கொள்வான். மாதச்சம்பளத்தில் ஒரு வேலை செய்தாலும் அது போதுமானதாக இல்லை. உடலும் மனமுன் நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே செல்வதாக நண்பர்கள் வட்டத்தில் சொல்லுவான். ஐம்புலன்களும் ஒன்றித்து நின்ற நாட்களோடு ஒப்பிட்டால் அவனுக்கு இந்த நாட்களின் மீது எரிச்சல் வரும். நான்கு மணிக்கு எழுந்து பழகியவனுக்கு எட்டுமணி வரை தூக்கமில்லாமல் புரளும் சலிப்பைப் போன்றது அது. ஒவ்வொருநாளும் ஒரே மாதிரியான சாகசங்கள் அற்ற  வாழ்க்கை.

‘தலைகள் குனியும் நிலையில் இங்கே  …’ என மீண்டும் மீண்டும் புதுவையின் குரல். நிமிர்ந்து அமர்ந்தான்.  அந்தக்குரலும்  வரிகளும் அவனுக்குள் எழுச்சியைச் தூண்டிய நாட்களை நினைத்துப்பார்த்தான்.

‘கருப்பைக்குள் எம்பிள்ளைகள் அசையும் போதே
நெருப்புக்குள் நீந்தப் பயிற்சியெடுக்கின்றனர்.
எங்கள் அத்திவாரமே வித்தியாசமானது.
விரைவில் உணர்வாய் பகையே!
உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே! ‘

புதுவை மீண்டும் மீண்டும் மூளைக்குள் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். வெற்றியெல்லாம் வெறுங்கனவாகிவிட்டதே என வாய்விட்டுச் சொன்னான்.  தேகம் சிலிர்க்க தலையை ஒருமுறை சிலுப்பி நினைவுகளைக் கலைத்தான். மீண்டும் புதுவையின் குரல்,

“என்ன தம்பியான் யோசிக்கிற….? விருப்பமில்லையோ….? கொமிசன் 30 வேணுமெண்டாலும் எடு. பிரச்சினையில்லை. இங்கால வச்சிருக்கிறது கொஞ்சம் கஸ்டமா கிடக்கு. ஒரு பினா பத்தாயிரம் படி எடுத்தா போதும். சும்மா எல்லாருட்டயும் போய் குடுக்க முடியாது பாரு… நம்பிக்கையான ஆக்கள் வேணுமடா… அதான் உன்னட்ட கேக்கிறன்.”

”இல்லையண்ணை… விருப்பம் தான்… ஆனா இதுல அனுபவமும் இல்லை… மற்றது…. தொகையா காசும் இல்லையேண்ணை…” என்று போனில் கதைத்துக்கொண்டே மண்டையைச் சொறிந்தான் செழியன்.

”அடேய் தம்பியான்… நீ என்ன தெரியாத ஆளா? நீ எங்க கொண்டு ஓடப் போறாய்? ஒரு ரெண்டு இலட்சத்தை மட்டும் தா. நான் ஒரு கிலோவையும் தாறன். பிறகொரு மூணு மாசத்துல வித்துப்போட்டு மிச்சத்தை தாவன். அவசரமடா… இதயெல்லாம் போனுல கதைச்சுக்கொண்டும் இருக்க முடியாது. இங்க எல்லாம் நோட்டமெண்டு தெரியும்தானே..” என்று தொடர்ந்தான் வெற்றி.

”நாளைக்கு காலையில 4 மணி பஸ்சுக்கு ஏறு… முழங்காவில் சந்தியில நான் ஏறுவன்… யாருக்கும் ஒண்டும் பறைய வேணாம்… ”

காசுக்கு என்ன செய்யலாம் என யோசித்தான். எதுவுமே செய்ய வாய்ப்பில்லை. யாரிடம் பிரட்டினாலும் இரண்டு இலட்சம் என்பது சாத்தியமில்லை. உத்தியோகத்தில் இருக்கும்  நண்பன் நகுலனுக்கு அழைப்பெடுத்தான்.

00000000000000000

தங்கத்திராவகத்தை  ஒரே மூச்சில் முழுங்கிவிட்டு துப்புவதற்கு இடம்தேடினான் நகுலன். அவனுக்குக் குடித்தவுடன் எச்சிலைக் கூட்டி எங்காவது துப்ப வேண்டும். வெளியில் துப்புமாறு சைகை காட்டிய செழியன் சிகரட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தான்.

“தம்பியான் செழியா… இந்தக்காலத்தில யாரையும் நம்பேலாது. அங்கால இருக்கேக்க உன்னோட பழகியிருக்கலாம். அப்ப எல்லாம் கட்டுப்பாட்டுல இருந்துது. பிழை செஞ்சு பிடிபட்டா சுடுவாங்களெண்டு பயமிருந்தது. இப்ப எல்லாரும் எல்லாரையும் ஏமாத்தித்தான் பிழைக்கிறான். காசு நான் ரெடி பன்றன்.. ஆனா ரெண்டு ஏலாது… இருக்கிறதக் குடுப்பம்.. சாமானைத் தந்துட்டு இன்டலிஜெண்டுக்கு சொன்னாலும் சொல்லிருவான். காலையில போறதுக்கு ரெடி பண்ணு.”

00000000000000000000

வெற்றிக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. அவன் ஒரு கிலோ எடைக்கு ஏற்ப கற்களை சின்ன சூட்கேசுக்குள் சமன்செய்து கொண்டிருந்தான்.  இரண்டு மூன்று முறை செய்து பழகியிருந்தாலும் பரிட்சை ஹோலில் உண்டாகிற ஒரு பயத்தைப் போல நெஞ்சு பதைக்கும். வெற்றி ஒரு இராஜாவைப் போல நகர்வலம் வந்த காலங்களும் இருந்தன . அதெல்லாம் 2009 க்கு முன்பு.  அதன் பின்பு உண்டான வலிகளும் வேதனைகளும் வார்த்தைகளற்றவை. மனைவியின் நகையையும் இருந்த காணியையும் விற்று தொழில் தொடங்க நினைத்தபோது தான் இரண்டு இலச்சத்துக்கு ஒருகிலோ தங்கம் என ஒருவன் வந்தான். நம்பி வாங்கியதில் மீண்டும் நாசமாய் போனான். மனைவி தலையிலடித்துக் கொண்டு பிலாக்கணம் பாடினாள். சந்தியில் முகத்தைக் கண்டதும் ஒப்பாரியைத் தொடங்கி விடுவாள்… எப்படியாவது நகையை திருப்பித்தருகிறேனென மூன்று மாத தவணை கேட்டான். நெஞ்சு வலிப்பது போலிருந்தது. போன முறை இருபத்தஞ்சாயிரம் குடுத்து வாங்கினவன் திரும்பி கண்டுபிடித்து வந்து அடித்துவிட்டுப் போனதில் உண்டான கால்நோவும் நெஞ்சு நோவும் இன்னும் குறையவில்லை. இந்தமுறை தான் போவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான். மனைவியிடம் பேச்சு வாங்குவதைவிட எவனிடமாவது மாட்டி அடிவாங்குவது சுகமாக இருந்தது.

0000000000000000000000000

”இதுல ஒரு லட்சம் தான் இருக்கு…. முழங்காவிலில் இதக் குடுத்திரு.  அவன் தருவதை வேண்டிக்கொண்டு வாடியடியில் இறங்கு…. நான் மோட்டர்பைக்கில் அங்க நிப்பன்…. இன்னொரு விசயம்… எனக்கு  உங்கட தொழிலில பங்கெல்லாம் வேண்டாம்… எவ்வளவு லாபம் வந்தாலும் நீயே எடுத்துக்க… இந்தக் காசுக்கு  வட்டி போட்டு ஒண்டரை லச்சமா தந்திரு…” என்றபடி ஒரு சூட்கேசை செழியனிடம் குடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டான்.

குளிர் நிறைந்த அந்தக் காலையிலும் செழியனுக்கு வியர்த்துக்கொட்டியது. பின் கதவுக்கருகில் இருந்த கடைசி ஜன்னல் இருக்கையில் இடம்பிடித்து அமர்ந்துகொண்டான். அவன் நினைத்த அளவிற்கு எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை…  பயணிகள் தேநீர் அருந்துவதற்காக முழங்காவிலில் பேருந்து நின்றபோது செழியன் இறங்கவில்லை. வெற்றியின் முகம் எங்காவது தெரிகிறதா என சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். பத்து நிமிடம் கழித்து பேருந்து மீண்டும் பயணத்தை தொடங்கிய போது ஒருவன் முகத்தை மறைக்கும் குரங்குத்தொப்பி போட்டுக்கொண்டு ஓடிவந்து ஏறினான். முன்வாசலால் ஏறியவன் இருக்கையில் அரைநித்திரையில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி வந்தான்.

செழியனுக்கு விளங்கிவிட்டது. இது வெற்றியாகத்தான் இருக்கும் என்று. செழியன் தனது பெட்டியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். வெற்றி அருகில் வந்ததும், செழியன் தெரியாதவன் போல வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். வெற்றி செழியனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

”பினா இருக்கு” என்று சூட்கேசைக் காட்டினான்.

”முகத்தை ஏன் மறைச்சிருக்கிறீர்? முகம் தெரியாம என்னெண்டு தொழில் செய்யிறது? நீர் தான் வெற்றி எண்டு எனக்கெப்படித் தெரியும்?” என்று குழம்பினான் செழியன்.

தம்பியான்… எல்லாம் நம்பிக்கை தான்… முகத்துக்கா காசு தரப்போறாய்… ?பெட்டியப் புடி… என்று கைக்குள் திணித்தான். அதைப் பிடிப்பதற்குள் செழியனின் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு,

“இப்ப திறக்கவேணாம்… வீட்ட கொண்டுபோய் ஆறுதலாப் பாரும்”.  என்று மெதுவாக காதுக்குள் சொல்லிவிட்டு முன்னோக்கிச் சென்றான். ‘ஒரு லட்சம் தான் இருக்கு’ எண்டு சொல்லுவதற்கு முன்பே பாய்ந்துசென்று  ஓட்டுனரிடம் கதைத்துவிட்டு, பேருந்து வேகத்தைக் குறைக்க இறங்கிப் போய்விட்டான் வெற்றி.

அடுத்த நிறுத்தத்தில் இறங்கிய செழியனை, அவனுக்காக காத்துக்கொண்டு நின்ற நகுலன்  ஏற்றிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரம் போனதும் நகுலன் சொன்னான் “பெட்டி பாரமா தான் இருக்கென…. திறந்து பாப்பமா?”

”ஓம் கொஞ்சம் ஓரமா விடு திறப்போம்” என்று பைக்கை ஓரமாக்கினார்கள்.

00000000000000000000000

வெற்றிக்கு பெருத்த சந்தோசம். இந்தமுறை எந்தப் பழுதுமில்லாமல் பெட்டியைக் கைமாற்றியாகிவிட்டது. முதல் வேலையாக இந்த சிம் கார்டை உடைத்து எறிந்துவிட்டு வேறொன்று வாங்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பெட்டியைத் திறந்தான்… பெட்டி முழுவதும் செய்திப்பத்திரிகை தாள்கள் கிழித்து அடுக்கப்பட்டிருந்தன… வெற்றிக்கு மீண்டும் நெஞ்சு நோகத் தொடங்கியது.

அதே நேரம் செழியனும் ஆவலோடு சூட்கேசை உடைத்துப் பார்த்தான். உள்ளே உடைக்கப்பட்ட செங்கற்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன…. செழியனுக்கு அழுகையே வந்துவிட்டது….

“என்னடாப்பா… இப்படி செஞ்சுட்டான்….. ஒரு லச்சமும் போச்சா” என்று தலையைக் கையால் அமத்தியபடி அதிலேயே இருந்துவிட்டான்.

நகுலன் செழியனைத் தேற்றுவதைப் போலச் சொன்னான். “பாத்தியா… நான் சொன்னன் தானே ஏமாத்துவான்கள் எண்டு. நல்ல காலம் ஒரு லட்சம் மட்டும் குடுத்தது…. தம்பியான் செழியா…. கேட்டியோ இப்படி நட்டப்படுவாய் எண்டு நினைக்கல… எனக்கு வட்டியெல்லாம் வேண்டாமடா… முதலை மட்டும் தந்திரு” என்றபடி மோட்டர்பைக்கை உயிர்ப்பித்தான்.

மன்னார் அமுதன்- இலங்கை

மன்னார் அமுதன்

(Visited 128 times, 1 visits today)