நிலத்தவன் விதிக்கிறான்-சிறுகதை-எஸ்.பி.லம்போ

அம்பலவாணர் வெளிக்ஹோல் கட்டிலில் படுத்துகிடந்தபடி முற்றத்தில் நடக்கும் சலசலப்பு பேச்சுவார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.அவருடைய இரண்டு மகன்களும் ,மருமகன் குணேசும் கதிரையில் அமர்ந்திருந்தபடி தீர்வானமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.செல்வி வாசல் படியில் அமர்ந்திருந்து அவர்கள் உதிர்த்து விழுத்தும் வார்த்தைகளை செவியில் போட்டுக்கொண்டிருந்தாள்.

மறுபடியும் உதயன் அதயே தான் சொன்னான்.

“இஞ்ச பாருங்கண்ணே..அப்பர் இண்டைக்கோ நாளைக்கோ எண்டு கிடக்கிறார்.இதுக்கு மேலயும் இந்த  நிலத்தை வைச்சிட்டு இருக்கேலாது.நம்மலாலயும் பாத்துக்கொள்ள ஏலாது .சும்மா கிடந்து காடாகிறதுக்கு வித்தாலாச்சும் ஏதாவது கிடைக்கும்.செத்தவீட்டு செலவுக்காச்சும் பிரயோசனமா போகும் “. உதயன் சொல்வது மூத்தவன் குமரனுக்கும் நியாயமாய் தான் பட்டது.செல்வி யும் செவி சாய்ப்பது போல் தலை அசைத்தாள்.

அம்பலவாணருக்கு குமரன்,உதயன் செல்வி என்று மூன்று பிள்ளைகள்.குமரன் அஞ்சல் அலுவலராக டவுணில் வேலை செய்துகொண்டு மனைவி இரண்டு மக்கள்களுடன் அங்கேயே வசித்து வருகிறான். எப்போதாவது இருந்து விட்டு இருபத்து நான்கு கிலோமீட்டர் தள்ளி உள்ள சொந்த ஊருக்கு அப்பாவை பார்க்க வருவது வழக்கம்.ஏதாவது சாட்டு கிடைக்காவிட்டால் அந்த வருகை கூட தள்ளி போய் விடும்.

உதயனுக்கு கஸ்ரப்பட்டு வேலை செய்வது பிடிக்காது.உடல் வருந்தாமல்,வியர்வை சிந்தாமல் ஆதாயம் ஈட்டுவதில் அவன் பேர்நிபுணம் பெற்றவன்.அதற்கு ஏற்றாற்போல வியாபாரம் ஒன்றும் ஏதோ ஏர்ஜண்ட் வேலையும் செய்கிறான். யாராவது இறந்து போனால் அல்லது ஏதாவது விசேசங்களுக்கு மட்டும் சொந்த ஊரின் திசையில் தலை வைப்பது இவன் வழக்கம்.அன்றும் அப்பிடித்தான் சித்தப்பா ஆனந்தனின் ஆண்டுத்திருதியைக்காக வந்த இவர்கள் செல்வி வீட்டு முற்றத்தில் கூடி இருந்தார்கள்.

செல்வி சொந்த ஊரிலயே தமிழ் ரீச்சராக இருக்கிறாள்.மருமகன் குணேஸ் பக்கத்து தெருவில் உள்ள ஹார்ட் வெயார் ஒன்றில் வேலை பார்க்கிறார்.செல்வி தான் அப்பாவை இப்போதும் எப்போதும் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.அம்பலவாணருக்கு பல வேளைகளில் தன்னை மறந்து படுக்கையில் சலம் போய்விடும்.சலித்துக்கொள்ளாமல் கழுவி துடைத்து, உடை மாற்றி விட்டு, அப்பாவை தூங்க வைத்து ,வீட்டுக்கு சமைத்து, குணேசை வேலைக்கு அனுப்பி வைத்து, மகன் அஸ்விந்தயும் பள்ளிக்கூடத்துக்கு தயாராக்கி தானும் தயராகி கொள்வாள்.

அஸ்விந் அம்மா மடியில் அமர்ந்திருந்து மாமன்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

“படுக்கலயோ செல்லம்..”செல்வி அஸ்விந்தை அனைத்து கன்னத்தில் முத்தமிட்ட படி கேட்டாள்.

“இல்லயம்மா””

“ஏன்.””

“எனக்கு..நித்தா வரல்ல..”

“தாத்தா என்ன செய்யிறார் எண்டு போய் பாருங்கோ செல்லம்”

அஸ்விந் எழுந்து வந்து அம்பலவாணரின் தலை மாட்டில் அமர்ந்து கொண்டான்.தலைய நிமிர்த்தி பாத்துவிட்டு அம்பலவாணர் திரும்பி படுத்துக்கொண்டார்.ஏதோ வித்தியாசமான யோசனைகளில் அவர் மூழ்கி இருக்கிறார் என்பதை ஏழே வயதான அஸ்வினால் உணர முடிந்தது.

“தாத்தா..””

“ம்ம்ம்ம்””

வழக்கமாய் அஸ்விந் அழைத்தால் “என்ன குஞ்சு..””என்பார்.இந்த முறை ம்ம் ஓடே நின்றிருந்தது.

“காணி அப்பாட பேருல தான் இருக்கு ..அப்பா இருக்கும் போது இத பண்ணிரோனும் எனி பேர மாத்தி கொண்டு நிண்டு ஆட ஏலாது …”வாய்க்குள் வைத்திருந்த வெத்தலையை துப்பிக்கொண்ட உதயன் மீண்டும் முடிவை ஆணித்தரமாக்கினான்.

அம்பலவாணருக்கு அந்த வார்த்தைகள் செவிகளில் ஈட்டிகள் பாய்ச்சி குற்றிக்கிழித்து இதயம் கனத்து வெடிப்பது போல் இருந்தது. நிகழ்காலம் மறந்து நினைவுகளில் அவர் முன்னோக்கி பல வருடம் உருண்டார்.

அப்போது அம்பலவாணருக்கு இருபத்து இரண்டு வயது.ஆறாம் வகுப்பு வரை படித்தவர் அதன் பிற்பாடு அப்பாவுடன் வயலில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.அம்பலவாணரின் உடல் கட்டுக்கும் வேலைத்திறனுக்கும் ஏட்டுக்கு போட்டியாக எவரும் அவ்வூரில் இருந்திருக்கவில்லை.

“அவன் வெத்தலைய போட்டுட்டு வேட்டிய மடிச்சு கட்டிட்டு வயல்ல இறங்கினா வேல முடிக்காம வெளில வரவே மாட்டான் “ஊர்மக்களிடயே அம்பலவாணரின் அப்பர் அருமைநாயகம் பீத்திக்கொள்வார்.அவர் முருக்கேறிய தேகத்துக்கும் உழைப்புக்கும் ஊர்முழுக்க பெண் கொடுப்பதற்காய் தட்டோடு தான் காத்து இருந்தார்கள்.ஆனால் அத்தைப்பொண்ணு பராசக்தியை அம்பலவாணருக்கு ஏற்கனவே பேசி முற்றாக்கி வைத்திருந்தார் அருமையர்.அப்பன் சொல்வதற்கு மாற்றுப்பேச்சு எப்போதும் அவனிடம் இருந்து உதித்ததாய் வரலாறுகள் இருந்திருக்கவில்லை.

அன்று வயலில் அறுவடை முடித்து ,கூட்டி வந்த கூலிகளுக்கு கூலி கொடுத்து அனுப்பி வைத்து ,நெல்லு மூட்டைகளை களஞ்சியத்தில் பத்திரப்படுத்தி விட்டு,வீட்டுக்காக மூன்று மூடைகளை மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டு வீடு சேர்ந்தார்கள் அப்பனும் மகனும்.

“தம்பி..நாளைக்கு ஒரு வேலையும் இல்ல தானே உனக்கு..” முகத்தினால் வழிந்த தண்ணீரை நுனி வேட்டியால் துடைத்து கொண்டு அருமையர் கேட்டார்.

“இல்ல ஐயா ஏன்…” மூடையை இறக்கி வைத்துக்கொண்டே பதில் சொன்னார் அம்பலத்தார்.

“பராசக்தியயும் கூட்டிக்கொண்டு விடிய வெள்ளன ஒரு இடத்துக்கு போகனும்..வண்டில தயார் பண்ணி வை” சொல்லி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

“ஆ..சரிங்க ஐயா”” என்னவாக இருக்கும் குழப்பத்திலயே ஆமா போட்டார் அம்பலவாணர்.

விடிந்தது.அமபலவாணர் ஆய்த்தமாகி வண்டிலில் நின்ற மாடுகளை தடவிக்கொடுத்து கொண்டு அப்பாவுக்காக காத்திருந்தார்.

“மோன..போவமே ..”” வெத்திலையில் சுண்ணாம்பை தடவிக்கொண்டே அருமையர் கேட்டார்.

“ஓம் ஐயா..” தம் புடித்து ஏறி துவரம்கேட்டியால் எருதுகளை மெதுவாய் விரட்ட ஆரம்பித்தார் அம்பலவாணர்.

“எங்க ஐயா போகனும்..”

“..ம்ம் அத்தை வீட்ட போய் பராசக்திய கூட்டிட்டு போகனும்..”

“சரி ஐயா..”

வண்டில் பராசக்தி வீட்டு வாசலில் போய் நின்றது. அத்தையுடன் பராசக்தியும் ஓடி வந்து அம்மாவின் பின் மறைந்து அம்பலவாணரை பாத்து வெட்கப்பட்டாள்.அம்பலவாணர் பாக்காதது போல தலையை சரி செய்து சிறிதாய் புன்னகைத்த படியே அருமையரை பார்த்தார்.

“பிள்ளை வா..””

“எங்க அண்ணா..போறியல்..”

“அது உங்கால ஒரு இடத்த..”

பராசக்தி அம்மாவின் அனுமதிக்காக முகத்தை பார்த்த படி நின்றாள்.

“சரி புள்ளை போய்ட்டு வா”  கால்களை கொலுக்கியில் வைத்து ஏறி அம்பலவாணருக்கு பின்னால் பக்கவாட்டு பலகையில் சாய்ந்த படி அமர்ந்தாள்.

“ஹெய்..ஹெய்..” வண்டில் பராசக்தி வீட்டு வாய்க்கால் தெருவால் ஏறி பிரதான தெருவால் பயணிக்க தொடங்கியது.பின்புறத்தால் பாக்கும் போது அம்பலவாணரின் ஒற்றைக்கன்னமும் அவ்வப்போது பாதி முகமும் தான் தெரியும்.அருமையர் அசரும் கணங்களில் எல்லாம் பராசக்தி அம்பலவாணரை திரும்பி திரும்பி பார்ப்பாள்.””ஏதாவது கதைக்கவே மாட்டாரா..”மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.

“மணிபுரத்து முதலாம் ஒழுங்கையால உள்ள விடு அப்பு..”வண்டில் திரும்பியது.

“ஆ அதுல இருந்து மூண்டாவது வளவுல நிப்பாட்டப்பு ..”

வண்டில் ஒரு காட்டுப்பத்தையாய் கிடந்த வளவுக்கு நேரே நின்றது.அருமையர் குதித்து இறங்க பின்னால் பராசக்தியும் இறங்கினாள்.”எதுக்கு இதுக்குள்ள வந்தம்” யோசித்த படியே வண்டிலை ஓரம் கட்டி விட்டு இறங்கினார் அம்பலவாணர்.பராசக்திக்கும் அதே கேள்வி தான் ஆனால் எதுவும் பேசவில்லை.

“எதுக்கு வந்தனாங்கள் எண்டு தெரியுமோ…”

“இல்லையே”” தலையை சொறிந்தபடி அம்பலவாணர் சுற்றம் முற்றம் பார்த்தார்.

“ம்ம் இந்தா பிள்ளை நீயும் கவனி..நேரா இந்த ஒத்தை பனை மரத்தில் இருந்து அதுல தெரியுற அந்த விளா வரைக்கும்,பக்க வாட்டுக்கு அந்த பனைல இருந்து உந்த முதிரை வரைக்கும்.மொத்தம் நாலரை ஏக்கர் உனக்கு தான் அப்பு எழுதி வைச்சிருக்கன்” அம்பலவாணரும் பராசக்தியும் அதை எதிர்பார்த்திடவில்லை .வியந்து போய் அப்பாவை பாத்திருந்தார்கள்.

அதை அம்பலவாணரிடம் குடுப்பதற்கும் ஒரு உள்நோக்கம் அருமையரிடம் இருந்தது.அவன் தொடுவது எல்லாம் பொன் ஆகும் என்கிற நம்பிக்கை இருந்தது.

“இந்த காட்டுபத்தையள வெட்டுறதுக்கு துரை ஆக்களட்ட கேட்டனான்..ரெண்டு கூலி பத்து நாள் வேணும் எண்டவங்கள்..”

வேலிகளால் எல்லை வரையறுக்காத அந்த வளவு முட் பத்தைகளாலும் நாவுண்ணிகளாலும் காட்டு மரங்களினாலும் காடாகிப்போய் கிடந்திருந்தது.அம்பலவாணர் மண்ணை கையால் சுரண்டி உள்ளங்கையில் எடுத்து பாத்த படி

“தரமான மண் ஐயா..எள்ளு விதைச்சா நல்லா அள்ளிக் குடுக்கும்” என்றார்.

“அது உன்னோட திறமையப்பு “” தன் நோக்கம் வெற்றி பெற்றதை அருமையரின் கண்களின் உதித்த சிரிப்பு உணர்த்தி நின்றது.

“துரை ஆக்கள் வேணாம் ஐயா..நான் பாத்துக்கொள்றன்..” கிடையாய் விழுந்து வளந்திருந்த பூவரசை நிமித்திக்கொண்டே அம்பலவாணர் சொன்னார்..

“பாத்துக்கொள்றன் எண்டா ..தனிய நிண்டு வேலை செய்யப்போறியே..”

“ஓம் ஐயா..??

“இல்ல..இது நீ நினைக்கிற மாதிரி லேசுப்பட்ட வேலை இல்ல..ரெண்டு மூண்டு பேராச்சும் வேணும் அப்பு.”

“இல்லை ஐயா அரிவு வெட்டு முடிஞ்சு தானே நான் செய்யுறன்.பத்து நாள் எல்லாம் தேவப்படாது..ஆறு ஏழு நாளிலயே முடிஞ்சிடும்””

“ஆ..ஏதோ உனக்கு சரி எண்டு பட்டத செய் .” அருமையருக்கு அவன் சொல்வதில் சுத்தமாய் நம்பிக்கை வரவில்லை.என்னதான் செயலில் அவன் அதி வீர சூரனாக இருந்தாலும் தனியாக அவனால்  முடியாது அதுவும் ஆறு ஏழு  நாளுக்குள் முடியவே முடியாது என்பதில் ஆணித்தரமாக இருந்தார்.ஆனால் அதன் பிறகு அவரால் மறுத்து எதுவும் சொல்ல முடியவில்லை

“என்ன பிள்ளை சரி தானே..””

“ஓம் மாமா..””

“அப்ப வெளிக்கிடுவம் என..””வண்டிலை நோக்கி நடந்தார் அருமையர்.வண்டிலை திருப்பி பிரதான வீதிக்கு ஏற்றினார் அம்பலவாணர்.

“அப்பு..அப்போ வேலை எப்ப துவங்க போற”

“இண்டைக்கே தொடங்கிடலாம் ஐயா.ஆனா சுப்புரமணி மில்லுல இருந்து இண்டைக்கு ஆளுக வாறெண்டு இருக்கு.அதனால நாளைக்கு தொடங்கிடுவன் ஐயா…” வண்டில் பராசக்தி வீட்டு கேட்டில் நின்றது.

“பிள்ளை  சாப்பாடு தண்ணியள நாளைல இருந்து நீ தான் கவனிக்கோனும்””

“சரி மாமா…நான் பாத்துக்கொள்றன்” பராசக்தி தலையாட்டிக்கொண்டே அம்பலவாணரை பாத்து வெட்கித்து புன்னகைத்தாள்.

பக்கத்துவீட்டு வெள்ளடியன் சாவல் இன்னும் கூவவில்லை. வீட்டின் முற்றத்து பக்கத்திலிருந்து “காராக் கராக்” வந்த ஒலி அருமையர் தூக்கத்தை கலைத்திருந்தது.

எட்டிப்பாத்தார் அம்பலவாணர் காட்டுக்கத்தியை கல்லில் வைத்து லாம்பு வெளிச்சத்தில் தீட்டிக்கொண்டிருந்தார்.

“என்னப்பு இந்த வெள்ளன..எங்க வெளிக்கிட்ட.”

“வளவுக்கு தான் ஐயா..”மகனை நினைத்து சிரிப்புதான் வந்தது அருமையருக்கு.

மண்வெட்டி, கோடாலி,காட்டுக்கத்தி என்று ஆயுதங்களை சரி பார்த்து வண்டிலில் ஏற்றி வைத்து விட்டு,குளித்து, துவைத்து காயப்போட்ட வேட்டியை மடித்து கட்டி கொண்டு, சுவாமி கும்பிட்டு திருநீறை மூன்றுகுறியில் நெத்தியில் அடித்து மீசையை சரி பார்த்த படி வந்து நின்றார்.

அம்மா தேத்தண்ணியும்,பனம் கட்டியையும் நீட்டினார்.குடித்து விட்டு வண்டிலை பாய்ச்சினார் அம்பலவாணர்.

வளவின் முன்னே வண்டிலை நிறுத்தி , எருதுகளை அவுட்டு, ஒதுக்குப்புறமாய் விரிந்து கிடந்த புற்தரையின் மேல் வியாபித்து நின்ற வேப்பமரத்தில் கட்டிவிட்டு ,ஆயுதங்களை சரி பாத்து எடுத்த படி ,வளவின் முன்னே வந்து நின்றவர் ,வேட்டி முடிவை ஒற்றைக்காலில் தூக்கி கையால் எடுத்து மடித்து துடை தெரிய உயர்த்தி சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு ,சட்டைப்பையில் கிடந்த வெத்திலைசரையை விரித்து வெத்திலையை கிழித்தெடுத்து சுண்ணாம்பு தடவி,பாக்கையும் சேர்த்து வாயில் வைத்தபடி,தலைப்பாகையை சரி செய்து விட்டு வளவின் முகப்பு மண்ணை தொட்டு கும்பிட்டு உள் இறங்கி காட்டுக்கத்தியால் வெட்ட ஆரம்பித்தார்.

கத்தியின் கூர்மையும் ,கைகளின் வலிமையும் ஒன்றாய் சேர்ந்து காட்டுப்பத்தைகளை கரை ஒதுக்க ஆரம்பித்திருந்தது.தேவைக்கேற்ப ஆயுதங்களை முறையாக பயன்படுத்தி வெட்டிச்சரித்து கொண்டே முன்னேற ஆரம்பித்தார்.மரங்கள் அம்பலவாணணுக்கு வழிவிட சூரியன் மேகப்புதர்களுக்கிடை வழியாக வீரனை பார்த்து விடியலை அறிவித்தது.

மேகத்திரையை பகலவன் முழுவதுமாய் விலக்கிய போது பராசக்தி தேத்தண்ணியும் சக்கரையும் கொண்டுவந்தாள்.அவள் கைகளில் பட்ட சக்கரை இன்னும் இனித்தது அம்பலவாணருக்கு.

மதியத்துக்கு மீன் குழம்பும் சோறும் பச்சைமிளகாயும் பராசக்தி கைப்பக்குவத்தில் வந்து சேர்ந்திருந்தது.மீன்குழம்பு வாசத்தை நுகர்வதற்காய் சூரியன் நடுவானில் இருந்து பூமியை மேலும் எரித்தான்.

“அம்பலத்தான் என்னடா..இவ்வளவு வேகமா இருக்கிறான்..கண் பட போகுது உன்ர பெஞ்சாதிய சுத்தி போடச்சொல்லு” தெருவால் போன ராசையா பெரியப்பா அருமையரிடம் தந்தி அடித்து விட்டு சென்றிருந்தார்.

பகலவன் அந்தி சாய்கையில் இலங்கையை எரித்த அனுமன் போல வெட்டிச்சாய்த்து ஒதுக்கப்பட்ட அரை வளவின் நடுவில் அம்பலவாணன் திமிரினான்.

துரை குழுவால் பத்து நாட்கள் கணிக்கப்பட்ட வேலை அம்பலவாணணால் வெறும் இரண்டே அரை நாட்களில் முற்றுப்பெற்றிருந்தது.வெட்டிய மரங்கள் கொண்டே வேலியும் போடப்பட்டது.

“அவன் செய்வான் எண்டு தெரியும்..தானே” அருமையர் சமாளித்தார்.சவால்களையும் காடுகளையும் தனியாக வெற்றி கொண்ட அம்பலவாணர் ஐந்தாம் நாளே எள்ளு விதைத்தலுக்கான ஏற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தார்.

அம்பலவாணரின் கணக்கு பிழைத்திருக்கவில்லை. எள்ளு நினைத்தபடி பெரும் விளைச்சலை குடுத்திருந்தது.பராசக்தியின் குறை வீட்டு புணரமைப்புக்கும்,கல்யாண செலவுகளுக்கும் எள்ளின் வருவாய் பெருவாரியாய் நின்றிருந்தது.எள்ளு,பயறு,கௌப்பி என்று மாறி மாறி விதைக்கப்பட்டு விளைச்சல் தொடர்ந்தும் புள்ளிக்கோட்டு வரபின் உயர் புள்ளியில் நின்றது.

தான் மணம் புரிந்ததில் இருந்து,வீடு கட்டி குடி புகுந்து,குடும்ப செலவு,பின் நாட்களின் மக்களின் பட்டப்படிப்பு வரைக்கும் அந்த வளவு தான் அள்ளி அள்ளி கொடுத்தது என்று அடிக்கடி சொல்வார் அம்பலவாணர்.ஆனால் கடந்த மூன்று வருடங்களாய் படுக்கையில் அவர் வாழ்வு கழிவதாலும் பிள்ளைகள் வேலை செய்ய தடைக்கல் இடுவதாலும் இரண்டு தெருக்கள் கடந்து கிடக்கும் வளவை பராமரிக்கவோ பார்க்கவோ அவரால் இப்போதைக்கு இயல்வதில்லை.

உதயன் சொல்வது சரி தான் அது காடாகி தான் விட்டது.ஆனால் விற்பதற்கு சிறிதும் இஸ்டமில்லை அம்பலவாணருக்கு.

“அஸ்விந்து…”

“என்ன தாத்தா..””

“என்ன கூட்டிக்கொண்டு போய் உன்ர மாமனுக்கு முன்னால ஒருக்கா இருத்து..” இருமிய நெஞ்சை செருமிய படி அம்பலவாணர் எழுந்தார்.அஸ்விந் தாங்கி போய் சாய்மனை கதிரையில் தாத்தாவை அமர்த்தினான்.

“அப்பா ஏனப்பா..எழும்புறியல்” உதயன் அப்பாவை நெருங்கினான்.

“நீ என்ன தொடாத..” உதயனை தள்ளி விட்டார்.

“ஏனப்பா..நான் என்ன செஞ்சனான்..”

“அந்த வளவ பத்தி உனக்கு தெரியுமோடா கனக்க..ஆ..அதால தான் உங்கட வயிறு நிறைஞ்சது, அதால தான் படிச்சு நீங்கல்லாம் பெரிய மனுசர் ஆகினியல்..அள்ளித்தந்த தாய விக்க சொல்லி எனக்கு நீ ஓடர் போடுற என..” அம்பலவாணருக்கு கோபத்தில் குரல் தழு தழுத்தது.

“அப்பா இப்ப நல்ல விலைக்கு கேட்கிறாங்கள்..இத விட வேற சந்தர்ப்பம் வராது..நிலமை விளங்காம கதைக்காதீங்கோ..” பேச்சு வார்த்தை கலவரம் ஆகியது கடைசி வரை இருவரும் தம் தம் கொள்கைகளில் இருந்து விடுபடவில்லை.

“ஒண்டுமே விளங்காது இவருக்கு..வயசு முத்தி அறளை பேந்திட்டு”” புறு புறுத்தபடி உதயன் புறப்பட்டான்.

சலசலப்புக்கள் அமைதியாக அம்பலவாணர் யோசனைகளில் ஆழ்ந்தபடி படுக்கைக்கு போனார்.

மம்மலாய் விடிந்திருந்தது. “சர்க்க்க்..சர்க்க்..” என்று சத்தம் கேட்பதை கேட்டு செல்வியும் அஸ்விந்தும் எழும்பி வந்தார்கள்.பின்னால் தாழிடப்பட்ட கொட்டகையில் கிடந்த காட்டுக்கத்தியையும்,மண்வெட்டியையும் தேடி எடுத்து தீட்டிக்கொண்டிருந்தார் அம்பலவாணர்.

“என்னப்பா செய்றியல்..”

பதில் இல்லை.எதுவும் பேசாமல் செல்வி குசினிக்குள் ரீ ஊத்தும் பணியை ஆரம்பித்தாள்.

“அப்போய்…சுடுதண்ணி வைக்கவா..குளிக்க போறியலே”” பதில் வரவில்லை.”ஐயோ பெத்தவரும் பைத்தியம் ..பெத்ததுகளும் பைத்தியம் இடைல நான் படுற பாடு இருக்கே..என்னவோ செஞ்சு துலைக்கட்டும் ..” செல்வி தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

பச்சைத்தண்ணியில் குளித்து முடித்து, சுவாமி அறையில் சூட்கேசில் கிடந்த லோன்றிக்கு அனுப்பப்பட்டு வந்திருந்த வேட்டி,சட்டைகளை கட்டிக்கொண்டு மூன்றுகுறியில் திருநீறு தப்பியபடி பராசக்தியின் படம் முன் கைகளை கூப்பியபடி ஏதேதோ மனசுக்குள் பேசிக்கொண்டார்.

“எங்கயப்பா வெளிக்கிட்டியல்..””செல்வி ரீ யை நீட்டினாள்.பதில் இல்லை ரீயை வாங்கி குடித்து விட்டு நரைத்த மீசைய சரி பார்த்தபடி காட்டுக்கத்தியை தோள்களில் சுமந்தவாறு மண்வெட்டியை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

முகம் கழுவி விட்டு வந்திருந்த அஸ்விந் க்கு தாத்தாக்கு பின்னே போகுமாறு செல்வி கட்டளையிட்டாள்.

“நேற்று வரைக்கும் படுக்கைல கிடந்த மனுசன் இண்டைக்கு கத்திய தூக்கிக்கொண்டு போகுது அண்ணா.வளவுக்கா தான் இருக்கும்..” செல்வி அண்ணண்களுக்கு தந்தி அடித்தாள்.

“என்னவோ செஞ்சு துலைக்கட்டும் விடு..””சலிப்பாய் சொல்லிமுடித்தனர்.

“தாத்தா நானும் வாறன்..”  பின்னே அஸ்விந் ஓடினான்.

“ஆ ..வா..”

பெட்டிக்கடையில் ஐம்பது ரூபாவுக்கு வெத்திலை கூறு வாங்கிகொண்டு வளவை நோக்கி நடந்தார்.வளவின் முன்னே வந்தவருக்கு ஞாபகங்கள் மறுபடியும் வருடங்கள் கடந்து உருள ஆரம்பித்தன. ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து நெத்தியில் பூசிக்கொள்ள கண்ணில் இருந்து நீர்த்துளிகள் வளவை முத்தமிட்டன.

வெத்திலையை சுருட்டி வாயில் வைத்தபடி, வேட்டியை உயர்த்தி துடை தெரிய கட்டிக்கொண்டு,தோளில் போட்டிருந்த சிவப்பு துவாயால் தலைப்பாகை கட்டிய படி கத்தியுடன் களம் புகுந்தார்.வளர்ந்திருந்த மரங்களும் கொடிகளும் மறுபடியும் விலகி வணக்கம் சொன்னது.சூரியன் வீரனை மறுபடியும் கண்டதில் வியந்தபடியே விடியலை அறிவித்தது.

தன் வீரக்கதைகளை அஸ்விந் க்கு சொல்லிப்பெருமிதம் கொண்ட படியே காட்டுப்பற்றைகளை கரை ஒதுக்கினார்.தாத்தாவின் வீரத்தையும் செயலையும் வியந்து கேட்டு கொண்டிருந்தான் அஸ்வின்.

அப்பாவின் வீரம் பற்றி பராசக்தி முன்னரே பல தடவை செல்விக்கு சொல்லி இருக்கிறாள்.ஆதலால் அப்பாவின் இந்த எழுச்சி செல்விக்கு பெரு உவகையாய் தான் இருந்தது.சிவத்த சோறுக்கு ஊர்க்கோழி இறைச்சியும்,கத்தரிக்காய் வெள்ளக்கறியும் சமைத்து அப்பாவிடம் சேர்த்தாள்.சாப்பிட்டு முடித்து விரலை நக்கியபடி செல்வி உருவத்தில் பராசக்தியை மறுபடியும் கண்டார் அம்பலவாணர்.

அறுபது வருடத்துக்கு முன்பாக முதல் நாளில் எவ்வளவு பரப்பை வெட்டிச்சரித்தாரோ அதே அளவில் துளி கூட வித்தியாசம் இல்லாமல்  செயல் முடிந்திருந்தார் அம்பலவாணர்.

“அப்பா தாத்தா என்னல்லாம் பண்ணாரு தெரியுமாப்பா…அவரு சூப்பர் மான் ப்பா..” அஸ்விந் அப்பாவிடம் சொல்வதை சாய்மனைக்கதிரையில் காலுக்கு மேல் கால் போட்டிருந்து ஒட்டுக்கேட்டபடியே ரீயை நீட்டிய செல்வியை பெருமிதப்பார்வை பாத்தார்.

“என்ர அப்பாச்சி…” கன்னத்தை தடவிய செல்வியின் முதுகை வருடி விட்டு புன்னகைத்தார்.

மறுநாள் பாடசாலைக்கு போன அஸ்விந் ஆசிரியர்களிடமும் தன் சக தோழர்களிடமும் தாத்தாவின் கதையை “எங்க தாத்தா ஒரு சூப்பர் மான் தெரியுமா” என்று ஆரம்பித்து அலுப்புத்தட்டாமல் ஒவ்வொருவரிடமும் புளுகி தட்டிக்கொண்டிருந்தான்.

“ரீச்சர் அஸ்விந்த வீட்ட கூட்டிட்டு போகனும்” தமிழ்பாடத்தை இடைமறித்தார் குணேஸ்.

“எதுக்கு..”

“அவனோட தாத்தா மோசம் போய்ட்டார்..”

செத்தவீட்டுக்கு பல ஊர்களில் இருந்தும் சொந்த காரர்கள் தெரிந்தவர்கள் வந்தார்கள்.அஸ்விந் ஒவ்வொருவருக்கும் தாத்தா வீரத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.தன்னுடைய சூப்பர்மான் கைகளை ஒரு முறை பிடித்துப்பாத்துக்கொண்டு தாத்தாக்கு விடை கொடுத்தான் அஸ்விந்.

செத்தவீட்டு பிலாதி முடிந்த ஒரு சனிக்கிழமை  விடிந்தது.செல்வி கட்டிலில் அஸ்விந்தை தேடினாள் காணவில்லை.

“அஸ்விந்…அஸ்விந்…” கத்தினாள் பதில் இல்லை

“என்னங்க அஸ்விந்த காணல்ல..” தூங்கிய குணேசை எழுப்பினாள்.தெருக்கள்,வீடுகள் என்று ஊரெல்லாம் தேடினார்கள் கிடைக்கவில்லை.

“குணேஸ் அண்ணை..மகனையா தேடுறியல் அவன்..அந்த அதுக்குள்ள நிக்கிறான்..நான் கூப்பிட்டனான் வரமாட்டானாம்..”குணேசும் செல்வியும் வளவை நோக்கி ஓடினார்கள்.

தாத்தாவின் துவாயை தலைப்பாகையாய் சரியாக கட்டத்தெரியாயமல் கட்டிக்கொண்டு காட்டுக்கத்தியால் பற்றைகளை தட்டு தடுமாறி தறித்து கொண்டிருந்தான் அஸ்விந்.

“ஹலோ….”

“சொல்லு அண்ணை…”

“உறுதி அஸ்விந் பேருல எப்ப மாத்தினது..” உதயன் கேட்டார்.

“……” செல்விக்கு அழுகை தான் வந்தது.

எஸ்.பி.லம்போ-இலங்கை

எஸ்.பி.லம்போ

(Visited 923 times, 1 visits today)
 
எஸ்.பி.லம்போ

யாமினி…(கொன்றையில் பூத்தவள்) -சிறுகதை-எஸ்.பி.லம்போ

யாமினி……அவளை எனக்கு நன்றாகவே தெரியும். என் வீட்டு பக்கத்து தெருவின் மூன்றாவது வீட்டில் குடி இருந்தவள். அடிக்கடி நானும் அவளும் எதிர் எதிரே சந்தித்ததுண்டு. முகங்கள் சிரித்ததுண்டு. அது ஒரு […]

 

One thought on “நிலத்தவன் விதிக்கிறான்-சிறுகதை-எஸ்.பி.லம்போ”

Comments are closed.