யாமினி…(கொன்றையில் பூத்தவள்) -சிறுகதை-எஸ்.பி.லம்போ

எஸ்.பி.லம்போயாமினி……அவளை எனக்கு நன்றாகவே தெரியும். என் வீட்டு பக்கத்து தெருவின் மூன்றாவது வீட்டில் குடி இருந்தவள். அடிக்கடி நானும் அவளும் எதிர் எதிரே சந்தித்ததுண்டு. முகங்கள் சிரித்ததுண்டு. அது ஒரு மென்மையான புன்னகை. அவள் முகத்தின் அமைதியை கலைத்து எனக்காய் பூத்திட்ட புன்னகை. அவளை எனக்குப்பிடிக்கும். ஏன் என்று அறியாமலயே ஒரு காதல். ஒரு பேரன்பு அவள் மேல் எப்பொழுதும். இப்பொழுதும் அவள் பால் நினைவின் கற்பனைகள் முப்பொழுதும்.

அவளை அவளின் பதின்ம வயதுகளில் இருந்தே அறிவேன். அவள் ஒரு பேரழகு பெட்டகம். கிட்டத்தட்ட அவள் தரம் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்த போது தான் அவள் முகம் எனக்கு அறிமுகமானது. ராதிகா ரீச்சர் வீட்டு ஆங்கில வகுப்பில் அடுத்த வகுப்புக்காக இவளது கூட்டம் காத்திருக்கும். அப்பொழுதே அவ்வளவாக அவள் பேசுவதில்லை. யாவருக்கும் சிரிப்பை மட்டும் பதிலாக சொல்வதற்கு பழகி இருந்திருந்தாள்.

அப்பொழுதெல்லாம் வேர்த்து களைத்து எண்ணை வழிய சிரிப்பால் மட்டும் முகத்தை ஒளியூட்டி திரிந்தவள், என்ன மாயமோ மந்திரமோ உயர்தரத்தில் அவள் படிக்க ஆரம்பித்த போது  மின்மினிப்பூச்சிகளை பிடித்து சிலை வார்த்தது போல மின்னி ஒளிர ஆரம்பித்து விட்டாள். ஒரு பேரழகுக்கு மொத்த அர்த்தமாக,பூரண பெண்மையில் பூத்த மென்மையாக சாந்த சொரூபமாக மாறி நின்றாள்.

ஒரு பேரழகை பார்த்து உடன் காதல் கொள்வது ஆண் வர்க்கத்தின் தலையாய கடமை. அத்தகு கடமைக்கு நானும் சளைத்தவன் இல்லையே………!ஆனால் அப்பேரழகை விட வேறு பல காரணங்களும் காதலிக்க காரணங்களாய் அவளிடம் கொட்டி கிடக்கிறது.

அவளை தேடி அலைந்திருக்கிறேன். ஒரு தலையில் காதல் பூத்திருக்கிறேன். ஒரு அடை மழையில் அவள் நனைந்து வீடு சேர அவள் பின் வளர்ப்பனை தொடரும் நாய் குட்டி போல நனைந்து,தோய்ந்து பின் தொடர்ந்திருக்கிறேன். அவளோடு பேச எத்தனித்து தோற்று போயிருக்கிறேன்.

பல முறை அந்த கொன்றை மரத்தின் நிழலில் அவளுக்காக காத்திருந்திருந்திருக்கிறேன். கொன்றை மரத்தின் பூக்களை போலவே அவளும் சிரிப்பால் பூத்து மஞ்சள் நிறத்தில் ஒளிருவாள். ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்த ஆடம்பரமற்ற அழகு தேவதை அவள்.

அவள் வருவாள் என்பதற்காகவே வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் கால் நனைப்பதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். என் வீட்டின் அருகிலேயே மூன்று கடைகள் இருக்க நான் அவள் வீட்டுத்தெருக்கடைக்கே வாடிக்கையாளன் ஆகி இருந்தேன். அதென்னவோ தெரியவில்லை, அவள் முகம் பார்க்கையில் மட்டும் ஏதோ ஓர் களிப்பு,ஒரு மன கொண்டாட்டம். இளமையின் தூறல்கள் என்னை நனைத்திருப்பதை முழுமையாய் உணர்ந்திருக்கிறேன். அதற்கு ஒரு தலைக்காதல் என்று நான் பேர் வைத்து விளித்திருக்கிறேன்.

இதெல்லாம் பத்தாது என்று அவள் பின்னால் சுற்றியவனை போட்டு வெளுத்திருக்கிறேன். அந்த அப்பாவியின் சைக்கிளை மறித்து அவனின் மூக்கை பதம் பார்த்திருக்கிறேன்.

“டேய் என்னடா உனக்கு இப்பிடி எல்லாம் கோபம் வருமாடா…?” கூட சேர்ந்த குற்றத்துக்காக வந்தவனை தாக்கிய நண்பன் வினோ கேட்டான்.

“அதான் எனக்கும் தெரியல்ல.” சிரிப்பும் வெட்கமும் ஒன்றாய் வந்தது,

அப்போதெல்லாம் அவளுக்காய் எழுந்த அந்த கோபம், பக்கத்து நாட்டுக்கு கூட படை எடுக்கும் அளவுக்கு வந்த தைரியம், என்னை நானே ரசித்திருக்கிறேன். ஒரு வீரனை போல உணர்ந்திருக்கிறேன். இற்றை வரை அவள் கண்களில் காதல் கொண்டு என்னை ஏறிட்டு கூட பார்த்தது இல்லை. ஏதோ தெரிந்தவன் என்பதற்காய் சிறு புன்னகை உதிர்ப்பாள். அதற்காகவே இந்தளவு நிலை பேறு கொண்டிருந்தேன்.

தீபாவளிப்பண்டிகை ஒன்றில் வீட்டுத்தெருவில் வெடிகளை போட்டு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அவள் என் தெருவுக்கு பிரசன்னம் ஆகி இருந்தாள். நாவல் நிற சல்வாருடன் ஒரு நாவல் பழத்தில் இருந்து பூத்திட்ட கொன்றைப்பூ போல அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். என்னை கடக்கும் கணத்தில் வேண்டும் என்றே என் நண்பன் கைககளில் இருந்து போடப்பட்ட வெடியின் சத்தத்தில் வெருண்ட அவள் என் பின்னால் அடைக்கலம் புகுந்திருந்தாள். ஒரு கொன்றைப்பூ உடுத்தி வந்த புதுஆடை என் கைகளை வருடிச்சென்றதையும்,அப்பூவின் வாசனையையும் நான் அப்பொழுது உணர்ந்திருந்தேன். பயந்ததாய் உணர்ந்து உருவாகிய வெட்கம் முகம் வழித்தெரிய அவள் கை விரல்கள் கொண்டு வெட்கத்தை மறைத்த படி முன்னோக்கி நடந்து போனாள். ஒரு முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைந்தது போல. வெட்கம் அவள் விரல்களில் மறைந்து தான் போனது.

அவள் குரலை ஒரே ஒரு முறை தான் கேட்டுருக்கிறேன். அதுவும் கோவில் அன்ன தானம் முடித்து விட்டு கை கழுவ வரிசையில் நின்றவளை அவள் அம்மா ‘யாமினி’ என்று அழைத்த போது ‘ஓம் அம்மா’ என்றவாறு ஒரு முறை திரும்பி பார்த்தாள். பார்த்தவள் என் பார்வையை கண்டு அவள் அம்பு பூட்டிய வில் விழிகளால் ஒரு முறை ஒரே ஒரு முறை என் கண்களை குறி பார்த்தாள். யாமினியின் பார்வையில் யாவையும் தொலைத்த நான் யாதுமற்றவனாக உணர்ந்து சோற்றுப்பருக்கைகள் கைகளோடே காய்ந்து போக அவள் அசைவை வாய் பிளந்து ரசித்து நின்றேன்.

அவள் அதன் பின் என்கனவில் வருவாள். தினமும் அதே குரலில் நிறைய பேசுவாள். என் தோள் சாய்வாள்,என் தலை முடியை பிடிப்பாள்,அவள் பேச்சில் ஒரு இசை இருக்கும்,ஒரு காதல் இருக்கும்,என் மீதான பரிதவிப்பு இருக்கும்,இவைகள் எல்லாம் என் கனவில் மட்டுமே இருக்கும். கனவுக்காதலி யாமினி மட்டுமே என் மனதில் இருக்கும்.

கோவிலில் தெருக்களில் ரியூசனில் கடைகளில் என்று அவள் போகும் இடங்களில் எல்லாம் நான் தெரிந்தும் தெரியாமலும் பின்னால் சுற்றி இருக்கிறேன். அவள் என்னை அறிந்திருப்பாள் கட்டாயம் அறிந்திருப்பாள். அதனால் தான் என்னவோ ஒரு நக்கல் புன்னகையுடன் என்னை கடந்து சென்று விடுகிறாள்.

என்னைப்பார்த்தால் அவள் முகத்தில் ஒரு வெட்கம் படர்வதை நான் கண்டிருக்கிறேன். அந்த மின்னல் முகத்தில் அவ்வெட்க நரம்பியல் கோடுகளை நான் இனம் கண்டிருக்கிறேன். அதை அவள் கஸ்ரப்பட்டு மறைப்பதையும் பாத்திருக்கிறேன்.

அவள் பேரழகுக்கு அந்த மின்மினிப்பூச்சியின் மனித உருவத்துக்காக கட்டாயம் தெருவுக்கு ஒருவன் அவள் பின்னால் அலைந்திருப்பான். ஆனால் என்னைப்போல மழை,இடி,இரவு என்று பாராமல் அவளோடு பேசாமல் ,அவள் அறிந்திராமலே, அவள் பின்னால் ஒரு காந்த விசையை தொடரும் இரும்பை போல சுற்றியவன் இருந்திருக்க முடியாது. அன்றும் அவளுக்காகவே அவள் வரும் நேரத்திற்காகவே கோவில் செல்ல காத்திருந்த எனக்கு செய்தி வந்தது.

“மச்சான். டேய் ..உன்ர யாமினி சூசைட் பண்ணிட்டாளாம் டா..” மண்டை நரம்பில் விறைப்பை தெளிவாக உணர முடிந்தது. முகத்து தாடைகள் வலித்து இதயத்தின் துடிப்பு எல்லை கடந்திருந்ததை என் உடலால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

“சத்தியமா டா?” கண்களின் கேள்விக்கு நண்பன் பதில் அளித்து கொண்டிருந்தான். எதுவும் புரியவில்லை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

காதுகள் இவை கனவாகிட வேண்டும் என்று கண்களிடம் சொல்வது எனக்கு கேட்டது. நொருங்கி போயிருந்தேன்.

அவள் தெருவை நோக்கி நெருங்கி நகர ஆரம்பித்தோம். அழுகை சத்தம் தெருவை ஆண்டு கொண்டிருந்தது. கேட்டது எல்லாம் கனவு இல்ல நிஜம் தான் என்பதை நம்பவே நிமிட இடைவெளிகள் தேவைப்பட்டது. அவளின் அம்மா தன்னை தானே அடித்து கதறினாள். சுவரோடு தலையை இடிக்க போனாள். ஒரு மகளை பிரிந்த தாய்மையின் வலியை உணர்த்திக்கொண்டிருந்தாள்.

அவள் உடல் அப்போது தான் வந்திருந்தது. மின்னல் ஒளி கண்கள் மூடி இருப்பதை, கொன்றைப்பூ நிற உடல் நிரந்தரமாய் உறங்குவதை, பறந்து திரிந்த மின்மினிப்பூச்சி அசைவற்று கிடப்பதை என்னால் பார்த்து நிற்க முடியவில்லை. என் தலையும் சுவரோடு மோத போனது, சுதாகரித்துக்கொண்டேன். என் காதலும் தாய்மைக்கு இணையானது தானே. இயலவில்லை, இன்னும் சில வினாடி நின்றாலே என்னால் என்னை இயக்க முடியாது போய் இருந்திருக்கும்.

அவள் என் காதலி. என் ஒரு தலை காதலி,கனவுக்காதலி என்பதற்காக எல்லாம் என்மனது இவ்வாறு நொருங்கி போயிருக்கவில்லை. அவள் ஒரு அமைதியுள் விளைந்தவள். அவளுக்கு என்ன பிரச்சனை? இது வரை எவனையும் ஏறெடுத்து கூட பார்த்திருக்க மாட்டாள். அவளுக்கு என்னாகியது?

அவள் நடந்தால் புல்லு கூட சாகாது. அப்படி இருந்தவளை எந்த வலி இம்முடிவுக்கு ஆளாக்கியது? அவள் புன்னகைகளில் சோகம் இருந்ததாய் எனக்கு இந்நாள் வரை தெரியவில்லை. அவள் பேசினால் காற்றுக்கு கூட இசையாக தானே இருக்கும்!?

தெருவில் கூடி நின்றவர்கள் பல வாறு பேசிக்கொண்டார்கள். அயலவர்கள் கேலித்து கொண்டார்கள். காரணங்களை கப்பல் கணக்கில் ஆளுக்கொருவர் சொல்லி திரிந்தார். வகை வகையான காரணங்களில் அவளை கொலை செய்தார்கள்.

தெருக்கடையில் கூடிய கூட்டத்தில் ஒரு வயதானவள் சொன்னாள் “பெட்ட யாரயோ விரும்பி இருந்ததாம்..அவன் ஏமாத்தி போட்டானாம்…”

மற்றவள் சொன்னாள் “ஏன்டி வயித்துல ஏதும் வளர்ந்திட்டோ? ” பெரிதாய் சிரித்தார்கள். கேலித்தார்கள். சொல்லிப்போனவள் அவளின் சித்தி முறை என்பதை அறிவேன். அவள் இவரின் பெறாமகள் அல்லவா? ஒரு வேளை பெறாமகள் என்பதால் தான் துர்வசன ஈட்டியை இவளில் பாய்ச்சிவிட்டு போகிறாளா..? பெற்ற மகள் என்றால் அவளை உணர்ந்திருக்க முடியுமல்லவா?

முகப்புத்தகம் இவள் கதையில் களைகட்டியது. யாரோ ஒருவர் உண்மைக்காதலுக்காய் உயிர் விட்ட்டாள் என்று எழுதி இருந்தார். இன்னொருவர் ஏதோ ஒன்றை ஏதோ வாறாக சித்தரிக்க முயன்றிருந்தார். கூட்டமாய் கூடி அவள் உடலை மீண்டும் தோண்டி எடுத்து,அதற்கு உயிர் கொடுத்து,சிலுவையில் அறைந்து அதனை சொல் ஆயுதங்களால் குத்தி கிழித்து அவளை அம்மணமாக்கி மீண்டும் புதைத்துக்கொண்டிருந்தது சூழ் சமூகம். அவளும் ஓராயிரம் முறை செத்துயிர்த்து மீண்டும் செத்துக்கொண்டிருந்தாள்.

அவள் மனதுக்கு ஏதுவான ஒன்றை முடிவாக எடுத்து விட்டாள் என்று யாரும் விட்டு விடவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசினார்கள். ஒரு கலங்கமற்ற தெய்வச்சிலையில் சாணி அடித்துக்கொண்டிருந்தார்கள். ஊர் வாயை மூட முடியாது என்பதை நிரூபித்தார்கள்.

‘ஏன் யாமினி?’ மறுபடி மறுபடி என்னை நான் கேட்டுக்கொண்டேன். என் கண்களின் நீர்த்துளிகளுக்கு அணை இட என்னால் இயலவில்லை. ஒவ்வொரு முறை இவர்களின் கதைகள் காதுகளை தாக்கிய போதெல்லாம் அறையின் கதவுகளை அடைத்து கதறி அழுதேன். என் காதலிக்காக அல்ல, ஒரு சமூகத்தின் சொல் பாரத்தை சுமக்கும் ஒரு அப்பாவியின் ஆன்மா க்காக. நான் பார்த்த ஒரு பரி பூரண பெண்மைக்காக.சரியாக பேசவே தெரியாத அமைதியின் சொரூபத்துக்காக.

சில நாள் கடந்தது ,அவள் முகத்தை  என்கண்களினால் இலகுவாய் கழுவி விட முடியவில்லை. அன்றும் அவள் கனவில் வந்தாள்.அதே சைக்கிள், அதே நாவல் வர்ண சட்டை ,அதே கொன்றை மரம்.. இம்முறையும் யாமினி பேசினாள்.

“ஏன் யாமினி…?”

“என்ன…?”

“ஏன் இந்த முடிவு…?”

“ம்.” புன்னகைத்தாள்..

“நீ வாழ்ந்திருக்கனும் யாமினி…”

“யாருக்காக?”

“சமூகத்தின் வாய்களுக்காக…”

எஸ்.பி.லம்போ-இலங்கை

எஸ்.பி.லம்போ

(Visited 594 times, 1 visits today)
 

நிலத்தவன் விதிக்கிறான்-சிறுகதை-எஸ்.பி.லம்போ

அம்பலவாணர் வெளிக்ஹோல் கட்டிலில் படுத்துகிடந்தபடி முற்றத்தில் நடக்கும் சலசலப்பு பேச்சுவார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.அவருடைய இரண்டு மகன்களும் ,மருமகன் குணேசும் கதிரையில் அமர்ந்திருந்தபடி தீர்வானமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.செல்வி வாசல் படியில் அமர்ந்திருந்து அவர்கள் உதிர்த்து […]

 

One thought on “யாமினி…(கொன்றையில் பூத்தவள்) -சிறுகதை-எஸ்.பி.லம்போ”

Comments are closed.