பழகா வாதை-சிறுகதை-க.வசந்த் பிரபு

க.வசந்த் பிரபு சுகந்தன் முன்பு போல எல்லாம் அறைக்கு போவதேயில்லை. அவன் தூங்குவதற்கும், உடைமைகளை வைத்துக் கொள்வதற்கும் மட்டுமே அறையைப் பயன்படுத்தினான். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து அறையை விட்டு வெளியேறி ராமச்சந்திரன் கடையில் டீ குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டின் உள்புறம் உள்ள கட்டண கழிவறையையும், குளியலறையையும் பயண்படுத்திவிட்டு அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு பட்டறைக்கு வேலைக்கு சென்றுவிடுவான். மாலையே வேலை முடிந்தாலும், வீட்டிற்கு இரவு தூங்க மட்டுமே வருவான். வாரத்தில் ஒருநாள் மட்டும் உடைகளை துவைக்க அறைக்கு மாலையில் வருவான்.

மற்ற நாட்களிலெல்லாம் அவன் பயன்படுத்தாத அந்த அறையின் குளியலறை துவைக்க மட்டுமே பயன்பட்டது. கழிவறையை இரவு நேரங்களில் விருப்பமிருந்தாலும், நல் உறக்கமிருந்தாலும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டான். அதுவும் சிறுநீர் கழிக்க மட்டுமே. இரவில் பலநேரங்களில் வெளியே சாலையோரம் சிறுநீர் கழித்துவிட்டு, அறையின் அருகிலிருக்கும் வாரச்சந்தை மைதானத்தில் மஞ்சள் நியான் விளக்குகளுக்கு அடியிலோ, இல்லை பஸ் ஸ்டாண்டின் பயணிகளின் இருக்கையிலோ இருப்பான்.

பெருவயல்களின் நடுவிலிருக்கும் பம்ப்செட் ரூமைப் போல, அப்பகுதியில் தனித்துத் தெரியும் அறை அது, காலரா தொற்றுக் காலத்தில் மருத்துவ அறையாக பயன்படுத்தப்பட்ட அறையை இரண்டாக தடுத்ததில் ஒன்றில், பூ மாலைக்கட்ட மொத்தமாக வாங்கி வைத்திருக்கும் காய்ந்த வாழைமட்டை நார்கள் இருக்கும். மற்றொன்று இந்த அறை, அறையில் ராகம் என்பதை இழந்து, பாடல்களைச் சொல்லும் ஒரு ரேடியோ இருக்கும். அறைக்குள் நுழைந்ததும் லைட்டை போடும் போதே அதையும் போடுவான். ஆனால் ஒருபோதும் ரேடியோவில் என்ன நிகழ்ச்சி ஓடுகிறது என்று கவனித்ததே இல்லை. ஆனாலும் அவனுக்கு அது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதைப்போலவே, சீலிங்பேன் ஒன்று இருக்கும். அதுவும் நின்று நிதானமாக மட்டுமே இயங்க முயலும். தகுந்த இடைவெளியில் அது எழுப்பும் சத்தம் சில நேரங்களில் பாடல்களோடு ஒன்றிப்போகும். சத்தம் போடுவதாலேயே சீலிங்பேனை எப்போதாவது தான் சுகந்தன் பயன்படுத்துவான்.

அவன் அறையில் மூன்றுபேர் தாராளமாக தங்கலாம். ஆனாலும் அவன் இப்போது தனியாய் தான் இருக்கிறான். அறையில் உள்ள சுவர்களில் கைக்கு எட்டிய வரையிலும் அங்கங்கு மனித ரத்தக்கறைகள், சில இடங்களில் கொசுக்களோடு.. எப்போதாவது திறக்கப்படுகிற ஜன்னல் வழி வருகிற காற்று சாக்லேட்டை இழந்த கவர்களையும், பஸ் நம்பர் எழுதிய கசக்கி உருண்ட பேப்பர்களையும், முடிகளையும் அறையின் ஒரு மூலையில் சேர்த்து முன்னமே அங்குள்ளவற்றோடு சேர்த்து ஒரு சுற்று சுத்திவிடும். அவைகள் அங்கேயே தான் சுற்றும். இந்த அறையில் அவனை விட அதிகமாய் இருக்கக்கூடிய ஈரவாடையைப் போல..
அறையின் சுவர்களில் இருந்த படங்கள் ஒன்றுக்கொன்று முரணோடு இருக்கும். கருப்பு வெள்ளை நிறத்திலிருக்கும் ஒரு ஒற்றைக்கண். நீர்மறந்த பாசியின் வண்ணத்திலொரு அன்னை தெரேசா படம். தன் சொந்த முடியோடிருக்கும் சூப்பர் ஸ்டாரின் பழைய படம். அவனுக்கு உறவினரோ, இல்லை நெருங்கிய நண்பர்களோ இப்போது கிடையாது. அவன் யாரோடும் நெருங்கிப் பழகவும் விரும்பாமல் இருந்தான்.

சில மாதங்களுக்கு முன் உதய் என்பவன் இவனோடு அறையில் தங்கியிருந்தான். அவனுக்கு 24 வயதிருக்கும். ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ என்ற தசைநோய் இருந்தது. அந்த நோய் இருப்பதால் உதய் -ஆல் சுத்தமாக நடக்க முடியாது. சிறிது நேரத்துக்குமேல் உட்கார முடியாது. அதிகமாய் படித்திருக்க மட்டுமே முடியும். மெல்ல மெல்ல உடலின் ஒவ்வொரு பகுதியாக செயல் இழந்து கொண்டே போகும்படியான தசை நோய் வகைகளில் ஒன்று.

அப்போதெல்லாம் சுகந்தன் வேலை நேரம்போக மீதி நேரமெல்லாம் உதய் உடன் அறையிலேயே இருப்பான். உதய்-ன் அம்மா இருந்த வரை உதய் அவன் வீட்டிலேயே தான் இருந்தான். அவனது அம்மாவின் மரணத்திற்கு பிறகு அவன் அண்ணன் உதய்-யை சரியாக கவனிக்காமல் இருப்பது உதய்க்கு பிடிக்காமல், சுகந்தனின் அறிமுகம் ஏற்பட்டு சுகந்தனோடேயே தங்கிக் கொண்டான். அரசு ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் கொஞ்சம் பணம் தரும். அதையும் உதய் நேரில் போய் வாங்கி வரவேண்டும்.

ஓட்டலில் உணவு வாங்கி வந்து அறையில் உண்பார்கள். அப்போதெல்லாம் இரண்டு பேருக்கும் முக்கால் உலகம் இந்த அறை தான். அவர்களின் உரையாடல்கள் பலதரப்பட்டது. அனைத்தும் அவர்களால் பேசித் தீர்க்கப்பட்டது போல இருக்கும். உதய்-க்கு சுகந்தனுக்கு அடுத்து புத்தகங்கள் தான்.

சுகந்தனுக்கு தன் தாய் தந்தை பற்றியோ அல்லது உறவுகள் பற்றியோ பேச, கடந்து போன எந்த ஒரு நிமிடத்தையும் அவன் சேகரித்து வைக்கவில்லை. எல்லாமும் யாரோ ஒருவருக்கு கீழாக திட்டுகளையும், சிலநேரம் உதைகளையும் வாங்கிக் கொண்டு இருந்தபடி வேலை செய்ததும், வயிற்றை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்ததும், பிறகு நடந்தே வெகுதூரம் வந்து, நடுவில் லாரியில் ஏறி இந்த இடத்திற்கு வந்து வேலைக்காக அலைந்தது, திருடியது, பஸ் ஸ்டாண்டிலேயே சில காலம் தங்கியிருந்தது. பட்டறைக்கு பேருந்தில் வருகிற பார்சல்களை வாங்க வந்த பீட்டர் அண்ணன் மூலம் பட்டறையில் வேலைக்கு சேர்ந்தது, பீட்டர் அண்ணனின் வேலையை இவனும், ஓனரின் வேலையை பீட்டர் அண்ணனும் என மாறியது, அவரின் உதவியோடு இந்த அறையைப் பிடித்தது, போன்ற நிகழ்வுகள் மட்டுமே உதய்யிடம் சொல்லும்படிக்கு சுகந்தனின் மனதில் இருந்தது.

ஆனால் உதய்-கு அப்படியில்லை நோயுறும் முன் செய்த குறும்புத்தனங்கள், 8 ஆம் வகுப்பு வரையான பள்ளி வாழ்க்கை, அப்போதிருந்த நண்பர்கள், காதல், அதனுடனான இன்பங்கள் துன்பங்கள், தாயின் அரவனைப்பு, தந்தையின் மரணம், அண்ணனின் அறிவுகெட்ட செயல்கள், இயலாமல் வீட்டிலேயே கிடந்தது. வீட்டிலிருந்து தனியே கிளம்பி அரசு உதவிப்பணம் வாங்க வந்து, திரும்பி வீட்டுக்கு போகாமல், வாரச்சந்தை மைதானத்தில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தது, இன்னமும் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன உதய்க்கு சுகந்தனிடம் பேச… ஆனாலும் சுகந்தனுக்கு உதய் அதிகமாக கூறியது, ஏப்ரல்-1 ல் வெளியாகிறது உங்கள் சுட்டிகளுக்காக, சுட்டிவிகடன் என சுட்டிவிகடனின் விளம்பரம் நிரப்பியிருந்தது அந்த 4 வது பக்கத்தை….

பீச்சுக்கு வந்த கிஷோர், வாங்கிய கடலை மடித்திருந்த பொட்டல பேப்பரில் மீதிக்கதை இல்லை. ஆனாலும் கிஷோருக்கு மீதிகதையை படிக்க வேண்டும் போல இருந்தது. சென்னை வந்து தனித்துத் தங்க ஆரம்பித்து 8 வருடங்களுக்கு மேலாகிறது. இதே போல பலமுறை சுண்டலோ, மசாலா பொறியோ, கடலையோ சாப்பிட்டபின் அந்த பேப்பர்களில் உள்ளதை படிப்பது வழக்கம் தான். ஆனால் இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட மீதியை படித்துவிடத் துடித்ததில்லை. பக்கம் 89 என்பதையும், 29.03.2006 ஆனந்த விகடன் என்பதை மட்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ரூமுக்கு போகிற வழியில் பழைய பேப்பர் கடையில் தேதியைச் சொல்லி தேடி வைத்தால் பணம் தருவதாகவும் சொன்னபின் ரூமுக்கு கிளம்பினான். பேப்பர் கடையில் இருந்த பையன், அவனிடம் அண்ணா, உன் ரூம் பக்கம் தான் போறன், வா உட்டுறன் என்றான். கிஷோர் அதை மறுத்து தலைஅசைத்துவிட்டு, முடிஞ்சா புக்க சீக்கிரம் தேடி தா.. என்றான். கிஷோர் மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும் போது, பேப்பர் கடை பையன் ஒரே புத்தகத்தை 7 பிரதிகள் வைத்திருந்தான். ஒன்றை மட்டும் 6 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு அறைக்கு போனான். கடை பையன் மீதமிருந்து 6 புத்தகங்களை பார்த்து ஏமாந்து போனான்.

சுட்டி விகடன் விளம்பரத்திற்கு பிறகும் கூட வழுக்கை தலையில் முடிவளர வைப்பதை பற்றிய ஒரு விளம்பரம் இருந்தது.

அடுத்தபக்கத்தில்,

அவன் தாயின் மரணத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகளைத் தான். உதய்-கு தேவையான அனைத்து உதவிகளையும், சுகந்தன் செய்து கொடுத்தான். எந்தவொரு உதவியின் போதும் முகம் சுளிக்கவோ, கோபப்பட்டதோ இல்லை, இதுவே அவர்களுக்குள்ளான நட்பை நன்றாக்கி இருந்தது. இருவருமே விருப்பமில்லாமல் போனால் கூட, ஒருவரையொருவர் பேசும் போது கவனிப்பதை போல நடிக்கக் கற்றக் கொண்டார்கள். துவக்கம் மட்டுமே அப்படி இருக்கும் உரையாடல்கள் முடியும் போது இருவருக்கும் விருப்பமான உரையாடலாய் மாறியிருக்கும்.

இரவுகளில் சில நாட்களில் உதய்-யை சுகந்தன் அறையிலிருந்து வெளியே தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் வாரச்சந்தையின் நுழைவிலிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்தும், படுத்துமாக நியான் விளக்கொளியில் பேசிக் கொண்டும் பாட்டு பாடிக் கொண்டுமிருப்பார்கள், சிலநேரம் அதிகாலையில் மாடுகள் பால் ஸ்டோருக்கு வரும்வரை கூட அங்கிருப்பார்கள்.

ஒருமுறை இருவரும் முதல்முறையாக பீர் குடிக்கலாமென ஆளுக்கொரு பீர் பாட்டிலும், கொஞ்சம் மாட்டுக்கறி வருவலும், ப்ரைடு ரைஸ்-ம் ஆக அறையில் அமர்ந்தனர். வெகுநேரம் பேசிக்கொண்டே இருந்தனர். நடுநடுவே உதய் படுத்துக்கொண்டும், பிறகு பிடித்து எழுவதற்காக கட்டித் தொங்கும் கயிறை பிடித்து எழுந்து அமர்வது என இருந்தான். சுகந்தன் பீர் பாட்டில்களை திறந்து வைத்தான். வருவலும், ரைஸ÷ம் தீர்ந்து போனது. ஆனாலும் அவர்கள் பீரை அருந்தவே இல்லை. அதை சிலநாட்கள் அறையிலேயே வைத்திருந்தனர்.

உதய்க்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்று தெரிந்த பிறகு, ரஜினி கருப்பு உடையில் மாலை போட்டு நிற்கும் படம் ஒன்றையும், அவனது ஓனரின் வீட்டை சுத்தம் செய்தபோது ஒதுக்கப்பட்ட அன்னை தெராஸôவின் படத்தையும் அறைக்கு எடுத்துவந்து ஒட்டினான்.

உதய்-ன் உடல் மிக வேகமாக செயலிழந்து கொண்டே வந்தது. அடிக்கடி சுகந்தன் கூடவே இருக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது உதய்-ன் உடல்நிலை. சுகந்தனும் வேலைக்கு போகாமல் அவனோடே இருந்தான்.

பெரும்பாக்கம், சேரன் நகர்ல, கருணாகரன்னு ஒரு ஸ்பெசல் டாக்டர் இருக்காரு. அவர பாக்க இவர்களிருவரும் போய் வருவார்கள். ஒருமுறை அவர் அறையிலிருந்த டேபிள் காலெண்டரில் இருந்த ஒற்றைக்கண் படம் மிகவும் பிடித்திருப்பதாக உதய் சொல்லியிருந்ததால், அதை டாக்டருக்கு தெரியாமல் திருடிக்கொண்டு வந்து விட்டான் சுகந்தன். அன்றிரவு முழுக்க திருட்டு குறித்த கதைகள் அறைமுழுக்க கிடந்தது. வேலை கிடைப்பதற்கு முன் திருடியது. அதன்பின் சிலமுறை நூலகங்களில் இருந்து உதய் படிக்க எடுத்து வந்திருக்கிறான். அங்கு உறுப்பினராக சேரத்தான் சுகந்தன் முயன்றான். ஆனால் அதற்காக அங்கு சொன்ன வழிமுறைகள் நிச்சயம் அவனை உறுப்பினராக்காது என்று அறிந்த பின்னரே திருட ஆரம்பித்தான். சில சமயம் திருப்பி வைக்கவும் செய்தான்.

பேச்சின் நடுவே, உதய் சுகந்தனிடம்…. :

“நான் படித்த புத்தகங்களில் பாதி அடித்த புத்தகங்கள்’‘ என்று சொல்லி சிரித்தான்
,”சுகந்தன் யார் எழுதுனது இது ? ”
உதய், ” நா.முத்துக்குமார்”
சுகந்தன், ” யாரவர்? ”
உதய், ” ஹேய், 7ஜி ரெயின்போ காலனி படத்துல கண்பேசும் வார்த்தைகள் பாட்டு…, அப்புறம் அந்த படத்துல எல்லா பாட்டுமே அவர் தான்… ஜூலி கணபதி படத்துல கூட ஒரு சூப்பர் பாட்டு, எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..னு..”
அவர்களின் உரையாடல் நீளுகிற மாயவித்தை யாரும் அறியாதது.

உதய்-ன் உடல்நிலை மோசமான இரவுகள் வார்த்தைகள் அற்று கடந்தன. சில நாட்கள், சுகந்தனிடம், எங்க அம்மா மடியில நான் தலைவச்சு படுத்துக்குவன். எங்கம்மா மடிய ஆட்டி ஆட்டி, கூடவே என் தலைமுடிய கோதி விட்டுகிட்டே, என்கூட பேசிக்கிட்டே தூங்க வைப்பாங்க, அதே மாதிரி நீ எனக்கு பண்ணுடா…. என்று நடுக்கங்களிலேயே உடைகிற குரலில் கேட்பான்.

பெரும்பாலும் தனிமையில் இருக்கும் போதுதான் மனம் சகல தவறுகளையும் நோக்கி நம்மை நகர்த்தும். புத்தகங்கள் படிப்பதிலிருந்து வேறு எண்ணங்களை அசைபோட துவங்கினான். சுகந்தன் தனக்காக உழைப்பதும், உதவுவதும், அவனை சங்கடமடையச் செய்தது. பலரது பரிதாபப் பார்வைகளும் கூட சேர்ந்து எண்ணங்களிலிருந்து அவன் எழதாபடிக்கு பார்த்துக் கொண்டது.

அன்று இரவு குறை பேச்சுக்கு பிறகு சுகந்தன் உறங்கி விட்டான். காலையில் எழும் போது உதய் உறங்குவதை போலவே படுத்திருந்தான். சுகந்தன் வேலைக்கு கிளம்பி விட்டு, பார்த்த போதும் அவன் எழவில்லை. சுகந்தன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, பூரியும் இரண்டு புல் பாயிலும் வாங்கி கொண்டு வந்து அறையில் வைத்து விட்டு உதய்-யை எழுப்பினான். அவனோ, தூக்கத்தில் இருப்பவனைப் போல.. “போயிட்டு வா. நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறன்…” என்றான்.

உதய் சாப்பிடாமலே படுத்திருந்தான். சோகங்களும் மனக்குழுப்பங்களும் மிகுந்த மனதிற்கு தனிமை நிச்சயம் சரியானதல்ல. அவனுக்கு பிடித்த நா.முத்துக்குமாரின் பாலகாண்டம் புத்தகத்தின் முதல்பக்கத்தில்…

” குண்டுகள் துளைக்கும் வலியை விட…
என் நோய்மையின் வலியை விட…
மற்றவர்களின் பரிதாபப் பார்வைகள் கொடுமையானது.
சுகந்தன் சந்தோஷமாய் இரு…..”

என்று எழுதிவிட்டு,

படுத்துக்கொண்டு விட்டத்தில் வெயில் ஊடுறுவும் சிறு ஓட்டையை பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிடவும் இல்லை. மூச்சை அடக்கிக்கொண்டு செத்துப் போக முயன்றான். முடியவில்லை. சுகந்தன் இல்லாத நேரங்களில் உதய் எழுந்து அமர கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறு அவன் கைகளைத் தவிர்த்து அவனது கழுத்தைத் தாங்கியிருந்தது.

மாலையில் அறைக்கு வந்த சுகந்தன், அழுதுகொண்டே இருந்தான். யாரையாவது அழைக்க வேண்டும் என்ற எண்ணமின்றி அழுதுகொண்டே இருந்தான். உதய்யோடு பேசிக் கொண்டே இருந்தான். பதிலே வராமல் போனாலும் கூட ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்டே அழுதான்.

காலையில் அறையை பூட்டிவிட்டு பட்டறையில் உடன் வேலை செய்பவர்களிடம் சொல்லி அறைக்கு அழைத்து வந்தான். பரிதாபப்பட்ட பலரும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். பட்டறைக்காரர்களோடு போய் புதைத்துவிட்டு வந்தான். சுகந்தன் மட்டும் அறைக்கு வந்தான். அறையில் யாருமே இல்லை. வெறுமனே அமர்ந்திருந்தான்.

உதய்-ன் படுக்கையும், நேற்று காலை வாங்கி வைத்த உணவும், அறுத்தது போக மீதி தொங்கிக்கொண்டிருக்கும் கயிறும், உதய்-ன் மூத்திரப் பாத்திரமும், முதல்முறையாக அவனை ஏதோ செய்தது. படுக்கையை எடுத்து மேலே கட்டைகளுக்கு இடையே உள்ள பரணில் வைத்து விட்டு, பாத்திரத்தையும், உணவையும் எடுத்து அறைக்கு வெளியே வைத்துவிட்டு அறையை கழுவி விட்டான். அறையெங்கும் ஈரம். அறையை விட்டு வெளியேறி அறைக்கு கொஞ்சம் அருகிலுள்ள நியான் விளக்குகளின் அடியில் அமர்ந்திருந்தான்.

அதன் பிறகான நாட்களிலும் நியான் விளக்குகளின் அடியில் நின்று அதைக் கடப்பவர்களின் நிழல்களின் அலைவுதலை பார்த்திருப்பான். ஒளியை நெருங்கும் வரை நடப்பவரின் பின்னும் ஒளிக்கு அடியில் வரும் போது தொடங்கி ஒளியை கடக்கையில் நடப்பவரின் முன்னும் ஓடும் நிழல்களின் அலைவுதலில் மனிதனின் மனம் குறித்த ஏதோ ஒரு சூத்திரத்தை அவன் கணக்கிட்டு வைத்திருந்தான். நிழல்களின் வருகை குறைகையிலோ, தூக்கம் அவனை நெருக்கும் போதோ அறைக்கு திரும்புவான். பிறகொருமுறை கூட பட்டறைக்கு புதிதாய் வந்த பையன், அவனுடன் அறையில் தங்கிக் கொள்கிறேன் என்ற போது, ”

” இல்லை என்னுடன் யாரும் தங்குவதில் எனக்கு விருப்பமில்லை.” என்று கூறிவிட்டான்.

அவன் பிரிவுகளை தாங்கிட பழக்கப்படவில்லை. இனியும் யாருடனும் பழகிக் கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை.

கதை முடிந்ததும் தன் இயங்கா கால்களை கைகளால் நீட்டி வைத்துவிட்டு படுத்துக்கொண்ட கிஷோர் மீண்டும் கதையின் துவக்க பக்கத்திலிருந்து கதைக்காக வரையப்பட்ட ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்தான். கதையிலிருந்த சுகந்தனின் தனிமையையும், உதய்-ன் உடல் வாதைகளையும் பல ஆண்டுகளாக ஒன்றாக அனுபவிப்பதாலோ என்னவோ கிஷோர் கதையைத் தேடிப் படித்திருக்கிறான்.

க.வசந்த் பிரபு-இந்தியா

(Visited 524 times, 1 visits today)
 

2 thoughts on “பழகா வாதை-சிறுகதை-க.வசந்த் பிரபு”

Comments are closed.