சமகால விஷம்-கவிதை-சமயவேல் கருப்பசாமி

சமகால விஷம்

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

கொஞ்சம் கொஞசமாகத் தன்போக்கில்
நகர்கிறது பொழுது.

கண்ணாடிச் சிறைகளுக்குள் இருந்து
குதித்து வெளியேறி
கணிதத்தின் சைன்-கோசைன் அலைகளாக
வளைந்து வளைந்து ஊர்கிறது காலநாகம்.

மனிதர் யாரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை
அவ்வப்போது தலையைத் திருப்பிப் பார்த்து
உறுதி செய்கிறது
தனது ஏழு நாக்குகளையும் நீட்டி நடனமாடுகிறது.

காலப் பீங்கானின் வெள்ளைக் கோப்பைகளில்
மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் நிரப்புகிறார்கள்.
காலம் தப்பிய மலையடிவாரங்களில்
அவர்கள் மிடறு மிடறாக விஷம் அருந்துகிறார்கள்
சூரியன் இல்லாத வனத்திலிருந்து பெய்யும் விஷமழையை
நாக்குகளில் ஏந்தி சப்புக்கொட்டுகிறார்கள்.

ஏதோவொரு தேசத்தில் விஷம்
ஆலங்கட்டிகளாகப் பெய்து
மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிகிறார்கள்.

ராணுவ ரகசியங்களை ஒளித்து வைத்திருந்த பங்கர்களில்
விஷக்குடுவைகள் வரிசை வரிசையாக
அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து
எவரும் அதிர்ச்சியடையவில்லை.

துளித்துளியாக மனிதத் தொண்டைகளில்
கிசுகிசுக்கிறது சமகாலவிஷம்.

0000000000000000000000000000

என்றென்றைக்குமாக

கண்மாய் சந்தோஷமாக இருக்கிறது
மீச்சிறு காற்றிலும் மெல்ல அசைந்து
சிறிய சப்தங்களுடன் கரைகளை முத்தமிடுகிறது
தவளைக்கூட்டம் குதித்தாடுகையில்
வட்டவட்டமாய் அலைபரப்பி மினுமினுக்கிறது

புறாக்கள் சந்தோஷமாக இருக்கின்றன
கணக்கில்லாமல் கூடிக் கூடி களிக்கின்றன.
நாலு குச்சிகளைப் பொறுக்கிக் கூடுகட்டி
முடையிட்டு குஞ்சுகளுக்கு இரையூட்டிப் பறக்கவிட்டு
அடுத்த காதலுக்குத் தயாராகின்றன.

வேப்பமரம் சித்திரையை வரவேற்க
பூத்துப் பூத்து பூத்து
தெரு முழுதும் பூக்கள் சிந்திக் குதூகலிக்கிறது

தன்னுடைய இடை நில்லாக் காதல் கருவாக
வினோதமான நிறத்தில்
வளையல்களின் இசையோடு நடந்து திரிகிறாள்
ஒரு நிறைசூலி.

என்றென்றைக்குமாக
துயரைத் திருமணம் செய்துகொண்ட கவியொருவர்
எல்லாவற்றையும் தழுவியவாறு
இங்கே காற்றாய் அலைகிறார்.

0000000000000000000000000000

ஆகும்

வாடாமல்லி நிற நைட்டியில் இருந்தவளை
முதல் சந்திப்பிலேயே முத்தமிட்டதில் தவறேயில்லை
பெண்ணுடலை உயிர்ச்சிற்பமாக்கி
பாதாதிகேசம் வரை ஆராதிக்கவே
கண்டுபிடிக்கப்பட்டனவோ ஆடைகள்.

கண்கள் மோதிச்சுழன்று திகைக்கும் நொடியில்
உடற் சிற்பங்களில் இருந்து எழுகின்ற சூறைக்காற்றில்
அது மட்டுமே சாத்தியம்.

உதடுகளின் கவ்வுதலில் கடிப்பில்
நாக்குகளின் தொடுநடனத்தில் துழாவலில்
எச்சிலின் இனிப்பூற்றுகள்
மலைப்பாம்புகளென உடல்கள் அணைத்து முறித்து
ஒன்றையொன்று விழுங்கும் மங்கல நொடிகளில்
நம்முடைய பெயர்கள் ஆகாயத்தில் எழுதப்படுகின்றன.

இப்படி ஆகும் என்று எனக்கு நேற்றே தெரியும் என்கிறாள்
அடிப்பாவி நேற்றிலிருந்து நீ இதையே தான்
நினைத்துக் கொண்டிருந்தாயா?
இப்போது நம்மையே அள்ளுகிறது பார், நமது ஆகாயம்.

0000000000000000000000

கேள்விக்குரிய கேள்விகள்

தண்ணீரின் மேல் நடப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை
என்கிறது நீர்க்கோழி.
குளத்தில் மீன்கள் துள்ளும் இடங்களை நோக்கி
மிதக்கும் இலைகளின் மேல் விடுவிடுவென்று நடந்து போகிறது
தாமரைக்கோழி.
இலைகளற்ற இடத்தில் நீந்துகையில்
மொத்தக் குளமே அசைந்து ஆசீர்வதிக்கிறது.

தாமரைக்கோழி இந்தக் குளத்தின் குழந்தை.

துள்ளும் மீன்கள்
வட்டவட்டமாக முத்துக்கள் ஏந்தி
வழுவழுப்பாய் அசையும் தாமரை இலைகள்
தாமரைக்கோழிகள், நீர்க்காகங்கள், குருட்டுக் கொக்குகள்,
குளத்தின் மடிக்கட்டில் நீருக்குள் ஒளிரும் கால்கள்
ஆலமரங்கள், அடிவானத்தின் மலைத்தொடர்கள்
எல்லாம் மாறிமாறிப் பருகும்
நான் யார்?

சமயவேல் கருப்பசாமி-இந்தியா

சமயவேல் கருப்பசாமி

(Visited 277 times, 1 visits today)
 
ஓவியத்துக்கு நன்றி : ரவி பேலட்

புனைவாகும் நினைவுகள்:எனதூர்-கட்டுரை-சமயவேல் கருப்பசாமி

எங்கள் ஊர் பற்றிய ஞாபகங்கள், மன்னார் வளைகுடாவின் பவளப் பாறைத்திட்டுகளாக எனக்குள் எனது ஆழ்மனம் மேல்மனம் எல்லாவற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. சதா எனக்குள் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் எங்களூர், நான் வாழ்ந்து […]