புத்தரின் மரணச்சடங்கு-கவிதை-எஸ்.சிவசேகரன்

புத்தரின் மரணச்சடங்கு

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

காற்றுக்கூட அனுமதி கேட்டு
நுழையும் வேலிகளுக்குள்
நடந்துகொண்டிருந்தது
சலனித்தபுத்தரின் மரணச்சடங்கு

பிச்சைக்காரனுக்கும்
அழுகல் பிணிக்காரனுக்கும்
அனுமதியில்லையென்று
துரத்தப் பட்டார்கள்
கூட்டத்திலிருந்தும் வேலிக்கும் வெளியேயும்

புத்தரின்மேல் விசிறப்பட்ட
சுகந்தப்புனுகின் வாசனைக் கிறுக்கத்தில்
கூட்டத்திலிருந்து எதிரொலிகளாய்
ஒலித்துக்கொண்டே இருந்தது
புத்தரின் தம்மபதம்

உய்யும் போதனைகளையெல்லாம்
உவந்தளித்த காருண்யனுக்கு
தட்சணயாய் தீர்க்கப்பட்டன
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்துமூன்று வேட்டுக்கள்
வானத்தை நோக்கி..

இரண்டாயிரத்து ஒன்பது முறைகள்
பிரித் ஓதப்பட்டு
ஒருலட்சத்து தொண்ணூற்றொன்பதினாயிரத்து
முந்நூற்று முப்பத்து மூன்று பேர்கள்
புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகே
புதைக்கப்பட்டார் புத்தர்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது
“புத்தம் சரணம் ஸ்வாமி……
புத்தம் சரணம் ஸ்வாமி…..”

0000000000000000000000000

இருட்டின் கண்கள்

சாட்சிகள் இல்லாமல்
தள்ளுபடி செய்யப்படும்
பலகோடிக் குற்றங்களை வேடிக்கை பார்த்தபடி
காற்றின் மெட்டுக்கு முணுமுணுத்தபடியே
ஊர்சுற்றுகிறத்கு இருட்டு..

யாரும் பாராமல் தினமும் நிகழும்
போர்களின் கற்பழிப்புகளையும்
சிறைகளின் சுவர்களில் எதிரொலிக்கும்
சித்திரவதையின் குரல்களையும்
ஏழைவீடுகளின் தூக்கிடல்களையும்
மாடிவீட்டு மர்மச்சாவுகளையும்
பார்த்தே அலுத்துப்போகும்
இருட்டின் கண்கள்
உறக்கம் போகும் அதிசயத்தை
காண ஆசையாம் அஷிராவுக்கு

பொல்லாத சங்கதிகளை
காதுகளால் கேட்டவரே
காணாமல் போய்விடும் நல்யுகத்தில்
பல்யுகங்களாக நடக்கும் சங்கதிகளை
கண்ணால் கண்டாலும்
உயிரோடுதான் உலாத்துகிறது
இந்த இருள்

அதோ
தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டதாய்
என்னைக்கொல்லும்
குரூரத்துடன் சிவந்துகொண்டிருக்கும்
இருட்டின் கண்களை பாருங்கள்..

0000000000000000000000000

அஷிராவின் மடியோடு தொலையும் காலம்

இனி எதுவும் சாத்தியமில்லை
உனை நினைந்து உருகிப்போகவும்
எனை மறந்து எங்கோ தொலையவும்
உன் வருகைக்காய் காத்திருத்தலும்

எதுவும்….
எதுவுமே சாத்தியமில்லை..

உனக்கு
பஸ் பயணங்களும்
சாலையோர நடைப் பயணமும்
அலுத்தும் மறந்தும் போயிருக்கலாம்

நான் இன்னமும்
பஸ்களிலும் சாலையோரங்களிலும்
போய்க் கொண்டிருக்கிறேன்
காற்றுப்புகாமல் உன் கரம்பற்றியும்
நீ என் தோள் சாய்ந்தும்
இருக்கும் பிரம்மையோடு..

ஜானகியிலிருந்து சித்திராவுக்கும்
சித்திராவிலிருந்து ஸ்ரேஜாகோஷலுக்கும்
நீ தாவியிருக்க கூடும்..
நான்
காற்றில் உந்தன் கீதம் கேட்கும்
ஆவலுடனே இருக்கிறேன்..

உன்னில்
துமியளவும் எனக்கு
கோவமில்லை

என் வேண்டுதல்
ஒன்றுதான்….

நாம் பயணம் போன
பஸ்வண்டிகளின் இருக்கைகளிலும்
ஒரு அடைமழைக்கு ஒதுங்கிய
கோவில் தூணிலும்
இருவரும் ஒன்றாய் எழுதிவைத்த
எங்கள் பெயர்கள்
யார் கண்ணிலும்
எப்போதும் படாமல் இருக்கட்டும்…

எஸ்.சிவசேகரன்-இலங்கை

எஸ்.சிவசேகரன்

(Visited 243 times, 1 visits today)