ஜென்மக் காப்பீடு-சிறுகதை-அ மலைச்சாமி

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

சில காலமாகவே முகத்தெதிரே படமெடுத்து பார்த்துக் கொண்டேயிருந்த பொன்னாகம், சீறி அதன் விஷப்பல்லை தன் நெற்றியில் பதித்த அதிர்ச்சியில் விழித்து எழுந்தார் பெத்தனன்.  விஸ்தாரமான அந்த வீட்டில் எந்த கொத்தலுக்கும் ஆட்படாமல் பெத்தனனின் மனைவியான ரேணுகா மட்டும் அயர்ந்துறங்கிக் கொண்டிருந்தாள். சலனமற்ற அவளின் உறக்கத்தை ஏக்கங்கலந்த அன்போடு பார்த்தார் பெத்தனன். இத்தனை வசதிகள் கொண்ட இந்த வீட்டில் தனக்கு ஏன் தூக்கம் வர மறுக்கிறது? லெளகீக வெற்றிகள் நிம்மதியான தூக்கத்துக்கு எந்த உத்தரவாதமும் அளிப்பதேயில்லை. தன் வயதொத்த எல்லா அரசதிகாரிகளும் இவ்வேளையில் தூங்கியிருப்பார்களா என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது. உலகின் அனைத்து ராஜ்யங்களின் அரசதிகாரிகளுக்கும் தூக்கம் விற்பவனொருவனிருந்தால் அவனுக்குத்தான் இந்த உலகமே அடிமையாக இருக்கும். தலையணை அருகே இருந்த செல்போனை எடுத்து மணி பார்த்தார். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. பத்தரை மணிக்கு மாத்திரை போட்டும் ஒரு மணிக்குதான் உறக்கம் வந்தது. எட்டு மணி நேர உறக்கத்திற்கு உத்தரவாதம் என்பதை நம்பித்தான் மாத்திரை வாங்கினார். ஆனாலும் தனக்கு தூக்கம் வரவில்லை. எனவே இந்த ஒரு மணி நேர தூக்கம் மாத்திரையால் வந்ததல்ல. இந்த ஒருமணி நேர தூக்கத்திற்கு தான் என்ன யோக்யதை செய்திருக்கிறோம்? அதே போல இத்தனை மணி நேர தூக்க இழப்புக்கு என்ன அயோக்கியத்தனம் செய்திருக்கிறோம் என்ற சிந்தனையும் அவருக்கு வந்து தொலைத்தது. எழுந்து கழிவறைக்குச் சென்று மூத்திரம் பெய்தார். கடுக்கியவாறே பத்திருபது சொட்டுகள் மட்டுமே விழுந்தன. கானாத்தலத்தில் உஷ்ண வலி எடுத்தது. கட்டிலுக்கு வந்து அருகில் வைக்கப்பட்டிருந்த சொம்பில் இருந்த நீரை கடகடவென குடித்தார். சமையலறைக்கு சென்று கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினார். மீண்டும் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டார்.

இத்தனை நாள் தன்னைப் பார்த்து வெற்றுச்சீறல் சீறிக் கொண்டிருந்த நாகம், இன்று ஏன் தன்னை கொத்தியது. லெளகீக வெற்றிகளுக்கான பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் தாட்சண்யமின்றி கடமையாற்றிய சராசரி நாளாகவே அன்றும் கழிந்தது. கனவில் வந்த பொன்னாகத்தினை நினைத்து பார்த்தார். முன்பொரு நாள் தன் வீட்டு பூசையறையிலிருந்து  அந்நாகம் வெளியேறிய போது விதிர்த்தெழுந்தார். அப்படியே சில நாட்கள் வீட்டினுள்ளிலும், வீட்டை சுற்றிலுமாக ஊர்ந்துலவியது. நாள்தோறும் பார்த்ததால் நாகத்தின் உலாவலை பெத்தனர் பழகிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் தன் மேல் ஊர்வதாக உணர்ந்த போது விழித்து பார்த்தார். அவர் மனைவியின் கைதான் அவரின் மேலிருந்தது. அவள் கையை எடுத்து அந்தப் பக்கமாக போட்டார். தன் மேல் ஊரத்தொடங்கிய பின் பெத்தனரின் உறக்கம் வற்றத் தொடங்கியது. காக்கா கண் மூடுவது போல் உறங்குவதும் விழிப்பதுமாக சில நாள்கள் போயின. பின்னர் ஒரு நாள் நெஞ்சிலேறி சீறியதிலிருந்து உறக்கம் பெரும் அச்சமூட்டுவதாக மாறியிருந்தது. பதவி, பணம், அதிகாரம் போன்ற இன்னபிற இக சுகங்களின் மீது கொண்ட பற்றினை ஆதாரமாக கொண்டு அதனடிப்படையில் அரசலுவல் கோப்புகளை வாசித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் பெத்தனருக்கு அவரின் கனவுகளை வாசிக்க நேரமேயில்லை. கோப்புகளுடன்  தன் ஆசைகளின் சமன்நிலையை பேணுவதற்கு பெத்தனர் மிகவும் சிரமப்பட்டார். எனவே கனவுகள் அவரின் கவனத்திலிருந்ததேயில்லை. அப்படியும் இப்படியுமாக அரற்றி உருட்டிக்கொண்டிருந்த பொன்னாகம் இன்று கொத்தியே விட்டது. மீண்டும் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். தெளிந்த உறக்கத்திலிருந்தாள். எவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரி என நினைத்தார். அதேபோல் இவளின் துரதிர்ஷ்டமாக தாம் இருக்கக் கூடும். நிதானமாக அவள் நெற்றியில் தன் இடக்கரம் வைத்து நீவி விட்டார். அந்த நீவலின் அன்பை உணர முடியாத அசதியின் ஆழத்தில் அவள் சஞ்சரித்து கொண்டிருந்தாள்.

எல்லா சொத்துக்களையும் தானே சம்பாதித்திருந்த போதும் எந்த சொத்தும் அவர் பேரில் இல்லை. எல்லாம் அவர் மனைவி ரேணுகாவின் பெயரில்தான் இருந்தன.  பெண் பெயரில் இருக்கும் சொத்துகளுக்கு கிடைக்கும் வரிச்சலுகையை அனுபவிப்பதற்காக எந்த சொத்தையும்  பெத்தனர் தன் பேரில் வைத்துக் கொள்ளவேயில்லை. குடிமை பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் ரேசன் கார்டை கூட அவர் மனைவி ரேணுகா பேரில்தான் வாங்கியிருந்தார்.  தன் பேரில் இல்லையென்பதால் அந்த சொத்துகளெல்லாம் தனதில்லை என நினைக்க அவருக்கு சம்மதமில்லை. ஆனால் மனைவி ரேணுகாவுக்கோ  தன் பேரில் சொத்துகள் இருக்கின்றன என்ற நினைப்பே இல்லை. இத்தனையாண்டுக்காலம் தான் சேமித்த சொத்துக்களையெல்லாம் அரைக்கணத்தில் அவளால் தூக்கி எறிய முடியும்.

தான் சேர்த்த சொத்துகள் எதுவும் தன்னுடன் பேசுவதில்லை. தான் பேச விரும்பும் போதெல்லாம் தன்னுடன் பேசுவதற்கு அவர் எதை சம்பாதிக்க வேண்டும் என பெத்தனருக்கு தெரிந்திருக்கவில்லை.

இந்த அடர்ந்த இரவில் யாரும் அவருடன் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அவர் செவிகளில் பேச்சொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. காதைப் பொத்தினாலும் அந்தக் குரல் கட்டுப்படுவதாயில்லை. தன்னிடம் திரண்டிருக்கும் இந்தப் பெருஞ் செல்வத்தை ஈட்டுவதற்கு அவர் பட்ட பணிஅவமானங்களும்,  அதன் பொருட்டு தான் கொண்ட வைராக்கியத்தை விடவும் வலிமையானதாக அந்தக்குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தனக்கு மட்டும் கேட்கும் அந்த ஒலிபரப்பு தன் கட்டுப்பாட்டில் இல்லை என உணர்ந்தார். இந்த நீண்ட இரவில் அந்த பொன்னாகத்தின் கொத்தல் பிரக்ஞைக்கு வந்த போதெல்லாம், தன்னுடல் அதன் அத்தனை ரோமக் கண்கள் வழியாகவும் அழுவது போலிருந்தது.  துடைத்த எந்த துணியிலும் துளியும் ஈர மேயில்லை . அந்த அறையில் எதையும் துல்லியப்படுத்தும் சக்தியற்ற பூஜ்ய வாட்ஸ் பல்பு போல துலங்கியும், துலங்காதது போலவுமாய் எரிந்து கொண்டிருந்தது.  இன்னும் விடியாததால் அந்த ஒளி அவருக்கு தேவையாகவுமிருந்தது.

இரண்டு :

பெத்தனரின் தட்டில் இரண்டு இட்டலிகளுடன் புதினா சட்னியும் கத்தரிக்கா கொத்சுவும் பரிமாறப்பட்டிருந்தன. ஒரு துண்டு இட்லியை பிய்த்து கொத்சுவுடன் தோய்த்து வாயில் போட்டார். சுவையாகத்தான் இருந்தது. அந்த சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையில் விக்கியது. தம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்தார். மீண்டும் இட்டலியைப் பிய்க்கும் போது ஏனோ பழைய சோற்றின் ஞாபகம் வந்தது. இந்த இட்டலியைப் போல் பழைய சோறு ஒரு நாளும் விக்கியதேயில்லை. சோளச் சோற்றுக்குத்தான் வெஞ்சனம் தேவை. நீரில் ஊறிய  கம்மஞ்சோற்றுக்கும், நெல்லுச்சோற்றுக்கும் எந்த வெஞ்சனமும் தேவைப்படாது. தான் உண்டபோது அந்த பழைய சோற்றில் வறுமையை உணர்ந்த அளவுக்கு ருசியை உணர்ந்ததேயில்லை. இந்த ருசியான உணவுகளெல்லாம் உயிருக்கே ஆபத்தான விக்கலைத் தோற்றுவித்து விடுகின்றன. எளிய உணவுகளான கூழும், களியும், கஞ்சியும் உயிராபத்தை விளைவிப்பதேயில்லை. தனக்கு அவையெல்லாம் ஏன் ருசிக்காமல் போய்விட்டன என ஆச்சர்யப்பட்டார் பெத்தனர்.  ஆனாலும் இன்று காலையுணவாக பழையசோறு  சாப்பிட்டேன் என்று சொல்வதை விட இட்டலி, தோசை சாப்பிட்டேன் என்று சொல்வதில் இருக்கும் கெளரவம் அவருக்கு தேவையாயிருந்தது. அரசலுவலரல்லவா?

வழக்கத்துக்கு மாறாக மிக அமைதியாக பெத்தனர் சாப்பிடுவதை கவனித்த ரேணுகா அவரருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து “இராத்திரி தூக்க மாத்திர போட்டுக்கலயா?” எனக் கேட்டாள். மிகவும் அயர்ந்துறங்கிய ரேணுகா தன் தூக்கமின்மையை எங்ஙனம் அறிந்தாள் என பெத்தனருக்கு ஆச்சர்யமாகவும் பெருமிதமாகவுமிருந்தது.

“அதெல்லாம் தோத்து போயிருச்சு. ”

“ஏதும் ஆபீஸ் தொந்தரவா ?”

“இப்பல்லாம் அது மரத்து பழகிருச்சு.” என்றவர் நேற்றிரவு தான் கண்ட கனவைப் சொன்னார்

“பாம்பு நம்மள விரட்டக் கூடாதுன்னுதே சொல்லுவாக. தீண்டுனா நல்லதுன்னுதே சொல்லுவாக.”

“அதோட கிழிஞ்ச நாக்கும் ஊசிப்பல்லும் என்னய நடுங்க வக்கிது.”

“மனுசனுக்கு நாக்கு அழகா இருந்தாலும் அது பொய் பேசும். கிழிஞ்ச நாக்கு வச்சிருந்தாலும் பாம்பு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது.  தேவையில்லாம யாரையும் அது கடிக்காது. நீங்க ஒன்னும் வெசனப்பட வேணாம்.”

“என்னய கடிக்கணும்னு அதுக்கு என்ன அவசியம் வந்திச்சு.”

“அது உங்களுக்கு வந்த ஒரு கட்டளைய கொத்திச் சொல்லியிருக்கு.”

“எனக்கு கட்டள போட பாம்பு யாரு?”

“பாம்பு ஒங்களுக்கு கட்டள போடல. சத்தியத்தோட கட்டளய அது கொத்திச் சொல்லியிருக்கு. பாம்பு ஒரு சத்திய ரூபம்.”

“சத்தியத்துக்கு எங்கிட்ட என்ன சோலி. பாம்பு என்ன சத்திய தூதனா?”

“சிலர கடிக்கணும்கறதும் சிலர் கண்ணுலயே படக்கூடாதுங்கறதும் அதுக்கிருக்கற சோலி. அதுதான் பாம்புக்கு இருக்கும் சத்திய வாக்கு. சத்தியம்கிறது யாராலயும் வாங்கவோ விக்கவோ பாக்கவோ முடியாத ஒன்னு. கனவும், தூக்கமும், முழிப்பும் அதோட ராசாங்கம்தான். ”

“இந்த மாதிரி கனவு எனக்கு வராம இருக்க நானென்ன செய்யணும்? ”

“அதய நெனக்காம இருக்கணும்.” என்று சொல்லியபடியே கேலிச்சிரிப்பொன்றை தன் முகத்தில் ரேணுகா தவழவிட்டாள்.

உரையாடலின் நீளத்தை அசெளகர்யமாக கருதிய பெத்தனர் ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தையோடு எழுந்து கைகழுவினார். தம்ளரில் இருந்த நீரை ஒரே வீச்சில் குடித்து முடித்தார். வாசலில் நின்ற பைக்கின் கிக்கரை உதைத்து முடுக்கினார். வண்டியின் புகைபோக்கியிலிருந்து கரும்புகை எழும்பி படர்ந்து அண்ட விசாரங்களை நோக்கி நகர்ந்தது அவரின் கட்டளைக்கு அடங்காத அவர் மனம் போலவே.

எந்த சொத்தையும் தன்னுடையதாக கருதாத ரேணுகா, பெத்தனரின் கவலைகளை தன் சொத்தாக கருதினாள். எதைக் கொண்டு அந்த சொத்தை அழிக்கலாம் என யோசித்து பார்த்தாள். மனிதனுக்கு இருக்கும் அகச் சொத்தான கனவை அவரவர் மட்டுமே அனுபவிக்க முடிந்தாலும் அதனை விதைப்பவரும் அறுப்பவரும் அவர் மட்டுமேயல்ல. தன் கணவன் கண்ட கனவு விதைப்பா? அறுவடையா? பெத்தனர் உறங்கிக் கொண்டிருந்தாலும் புருவத்துக்குள் அவரின் விழியுருண்டை உருண்டவாறே இருக்கும். எதுவும் உறுத்துகிறதோ என ரேணுகா நினைப்பதுண்டு. அந்த உள்ளுறுத்தலுக்குள் பிரவேசிக்கும் அதிகாரம் யாருக்கும் யாரிடத்துமில்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிடுவாள். மேலும் தான் உறங்குகையில் ஒரு முறை கூட எழுப்பியிராத நாகரிகத்தை அவர் அனுஷ்டிப்பதன் பிரதியுபகாரமாக  பெத்தனரை ரேணுகா எழுப்பியதில்லை.

ஏதேனும் சர்ப்ப தோஷம் இருக்குமோ என யோசித்தாள். எந்த சர்ப்பத்துக்கும் தீங்கு விளைவிக்கும் மனப்பாங்கு கொண்டவரல்ல அவர். அணைப்பட்டி புத்து நாகர் கோயிலுக்கு அவ்வப்போது சேவலறுக்கும் வழக்கம் கொண்டவர் பெத்தனரின் அம்மா. ஆகவே அரவத்தை துன்புறுத்தியிருக்க மாட்டார். எதற்கும் எங்காவது போய் சாமி பார்க்கணும் என ரேணுகா தீர்மானித்தாள். வரும் வெள்ளியன்று அணைப்பட்டி புத்துநாகர் கோயிலுக்கு ஒரு சேவல் பலி கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள்.

மூன்று

தான் பணியாற்றும் தாலுகா ஆபீஸுக்குள் நுழையும் போதே ஆபீஸின் வாசலிலிருந்த புங்க மரத்தினடியில் உட்கார்ந்து உச்சி வெயிலை வெறித்தவாறிருந்த நாககனியை கவனித்தார் பெத்தனர். கனவில் கண்ட நாகம் அவரை அலைக்கழித்த போதும் அந்த அலைக்கழிப்புகளெல்லாம் உறுத்தி விட முடியாத அளவுக்கு அரசூழிய சூழலின் நடப்பில் அவர் மனம் லயித்திருந்தது.

பெருமக்கள் என்பதை விட பெரும் பணம் என்பதே ஜனநாயகம் என நிறுவப்பட்ட இடத்தில் புழங்குவதால் பெத்தனர் அவர் மேசையிலிருந்த கோப்புகளிலெல்லாம் காந்தியின் சிரிப்பைத் தேடினார். பியூனை அழைத்து இன்று யார் யாரெல்லாம் வந்தார்கள் என்னென்னவெல்லாம் தேறியது என விசாரித்தார். மக்களை ஏமாற்ற தன்னிடமிருக்கும் துணிவின் அளவை விட, சக அரசூழியனிடம் ஏமாந்து விடக் கூடாது என்ற வேட்கை கூடுதலாக இருந்தததால் பியூன் மீது பெத்தனருக்கு சந்தேகம் வந்தது. நான்கு பேர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது புட்டத்தில் அரிப்பெடுத்தால் சொரிவதற்கு சங்கடப்படுவது மாதிரி தன் சந்தேகத்தை பியூனிடம் விசாரித்து கொள்ளவில்லை.

தன் கையெழுத்தை மூலதனமாக்கியே இங்கிருக்கும் கிளார்க்குகள், பியூன்கள் எல்லாரும் வசூலிக்கிறார்கள். தன் மூலதனத்தில் இவர்கள் இலாபமீட்டுவது என்ன தர்மம் என்ற கேள்வி அவருக்குள் அடிக்கடி இயல்பாகவே எழுவதுண்டு. தன் கையெழுத்தின் விலையை தானே தீர்மானித்து வசூலிக்கும் காலம் எப்போது வரும் என ஏங்கினார். அந்த ஏக்கத்தோடு மேசையிலிருந்த கோப்புகளை பார்த்தார். மேலாப்பில் மாணிக்கத்தின் கோப்பு இருந்தது. மேலாப்பில் ஒரு கோப்பு வைக்கப்பட்டிருக்கிறதென்றால் அக்கோப்புக்குரியவரிடம் உரிய வசூல்கள் முறையாக நடந்து முடிந்து விட்டது என பொருள். ஆகவே பேனாவின் மூடியை கழற்றி விட்டுத்தான் கோப்பையே திறந்தார் பெத்தனர். ஆறு மாதத்திற்கு முன்பு முருகத்தூரான்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலியான மாணிக்கம் , நள்ளிரவில் மல்லியப்பூ காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்து விட்டிருந்தார். மாணிக்கத்தின் மனைவியான நாககனி அரசுக் காப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தார்.

கோப்பை முழுமையாக பெத்தனர் படித்தார். உரிய இடங்களில் உரிய அலுவலர்கள் கையெழுத்திட்டிருந்தார்கள். பெத்தனர் கையெழுத்திட வேண்டிய இடத்திற்கருகில் மாணிக்கத்தின் புகைப்படம் ஒட்டியிருந்தது. ஸ்டுடியோ குடைவிளக்கின் ஒளியால் மாணிக்கத்தின் முகத்தில் வெளிர் மஞ்சலேறி படமெடுத்து நிற்கும் பாம்பின் முக வரிகள் போல கன்ன உச்சிகள் மினுங்கிக் கொண்டிருந்தன.  படபடப்போடு மாணிக்கத்தின் மனைவியான நாககனியின் புகைப்படத்தையும் பார்த்தார். வெறும் மஞ்சள் கயிறு மட்டும் கழுத்தில் தெரிந்தது. சுமங்கலிப் பொட்டுடனிருந்த அந்த புகைப்படம் ஆறுமாதத்திற்கு முன்பு எடுத்ததாக இருக்க வேண்டும். சுமங்கலிப் பொட்டும் தாலியும் இல்லாமல்தான் நாககனி வாசலில் உட்கார்ந்திருப்பாள் என்ற நினைப்பு பெத்தனருக்கு திகைப்பை உண்டாக்கியது. இத்தனையாண்டுக் காலம் தான் கையெழுத்திட்ட காப்பீட்டு விண்ணப்பங்களில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்தவர்களெல்லோரும் இறந்து போனவர்கள்தான் என்ற உண்மை அவர் நினைப்புக்கு பதைப்பூட்டியது.  அவர்கள் எல்லோரும் தன்னைச் சுற்றி நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.  இறந்தவர்களெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். காலத்திற்கு இப்படியொரு நோக்கு திறனுண்டோ?  உள்ளதிர்வோடு அண்ணாந்தார் பெத்தனர். மூன்று ரெக்கைகளைக் கொண்ட மின் விசிறி வேகமாக சுழன்று கொண்டிருந்தது. சுழலில் மாட்டிக் கொண்ட செத்தையைப் போல மின் விசிறியின் சுழல் பெத்தனரின் தலையை ஈர்த்து இழுப்பது போன்றிருந்தது. அந்த ஈர்ப்பு விசையிலிருந்து தன்னைத் துண்டித்து கொள்வதற்காக கண்களை மூடினார். அவர் கையிலிருந்த பேனா நழுவி ‘சட்’டென தரையில் விழுந்த சத்தம் திடுக்கிட வைத்து பிரக்ஞைக்கு கொண்டு வந்தது. தரையில் விழுந்த பேனாவை எடுக்காமலே எழுந்து கழிவறைக்கு சென்றார். அடர் மஞ்சளாக மூத்திரம் பிரிந்தது. வழக்கத்துக்கு மாறாக முகத்தில் தண்ணீரை வீசி கழுவிக்கொண்டார். கண்கள் சிவந்திருந்தன. மீண்டும் தண்ணீரை முகத்தில் எறிந்தார். தண்ணீரால் சுத்திகரிக்க முடியாத சிவப்பு தன் கண்களில் ஏன் அப்பிக்கொண்டது என்று பெத்தனருக்கு புரியவில்லை. தன் இருக்கைக்கு வந்தவுடன் கீழே கிடந்த பேனாவை எடுத்து வேகமாக மாணிக்கத்தின் கோப்பில் கையெழுத்திட்டார். மேசையின் மேலிருந்த மணியை அழுத்தினார். ஆடையில் துளியும் அழுக்கில்லாத வெள்ளைக்கால் சட்டையும் மேல் சட்டையுமணிந்திருந்த பியூன் வந்து நின்றார்.

‘ஃபைல எடுத்துக்க’

‘சார்’ என்றார் பியூன். அந்த சாரில் பிரத்யேக இழுவை வலிந்திருந்தது.

‘அந்தப்புள்ள ஒரு அப்புராணி சார். வழக்கமான பத்து பர்சன்ட் தேறல. ஏழுதான். புருஷன் சாக குடுத்தவ பாவம்னு எல்லாரும் கையெழுத்து போட்டுட்டாக. அதனால இம்புட்டுதே ‘ என்று இழுத்துக் கொண்டே கால் சட்டையின் இடது பையில் கைவிட்டு சில ஐந்நூறு ரூபாய் தாள்களை எடுத்து வலது கைக்கு மாற்றி காணிக்கை கொடுப்பது போல பவ்யமாக பெத்தனரிடம் நீட்டினார் பியூன். அந்த பணத்தை வாங்க வேண்டும் என்று அப்போது பெத்தனருக்கு தோன்றவில்லை. தான் வாங்கவில்லையென்றால் அதையும் சேர்த்து இவர்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள் என்பதால் அந்த பணத்தை மேசையில் வைக்கும்படி பியூனிடம் சொன்னார். மணி இரண்டைத் தொட்டிருந்தது. மேசையின் ஒரு முனையில் பணமும் மறுமுனையில் பெத்தனர் கையெழுத்திட்ட கோப்புகளுமிருக்க நடுநாயகமாக பெத்தனர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பணத்தை எண்ணாமல் எடுத்து கால் சட்டைப் பைக்குள் சொருவினார். நன்கு உள்ளே சென்று விட்டதா என தடவியும் பார்த்துக் கொண்டுவிட்டு அலுவலக முகப்புக்கு வந்தார். பியூனைக் கூப்பிட்டு சாப்பிடச் செல்வதாகச் சொன்னார்.

புங்கமரத்தினடியில் உட்கார்ந்திருந்த நாககனி, பெத்தனரைப் பார்த்து எழுந்து நின்றாள். பெத்தனர் நின்றிருந்த தாலுகா ஆபிஸ் கட்டட நிழலுக்கும் நாககனி நின்றிருந்த புங்கமரத்தின் நிழலுக்குமிடையே சில ஆள்மட்ட இடைவெளி இருந்தது. தாலுகா ஆபிஸ் வளாகத்தின் முகப்புக் கதவருகே சென்ற பெத்தனர் திரும்பி நின்று நாககனியை அழைத்தார். தான் வழக்கமாக சாப்பிடும் உணவகத்தைத் தவிர்த்து, வேறொரு உயர்தர உணவகத்திற்கு கூட்டிச் சென்று நாககனிக்கும் சேர்த்து சாப்பாடு டோக்கன் வாங்கினார். பெத்தனரின்  நாகரிக வற்புறுத்தலுக்கிணங்கி தயக்கத்துடன் மெதுவாக சோற்றை விழுங்கிக் கொண்டிருந்தாள் நாககனி. இருவருக்குமே நாவில் விழுந்த ருசியை அவர்கள்தம் மனங்கள் கிரகிக்கவேயில்லை. மெதுவாகவே உண்ட போதும் நாககனிக்கு விக்கியது. வேகமாக தண்ணீர் தம்ளரை நாககனியிடம் நீட்டினார் பெத்தனர்.  தனக்கு விக்கல் வராமல் இருந்தது பெத்தனருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாப்பிட்ட பின் கைகழுவி விட்டு தன் சேலைத் தலைப்பால் வாய்துடைத்துக் கொண்டிருந்த நாககனியிடம் தன் கால்சட்டைப் பையிலிருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே எடுத்து கொடுத்தார். நாககனி அதனை மறுத்து நெளிந்த போதும் வற்புறுத்தி அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்தார் பெத்தனர். ‘நல்லாயிரும்மா’ எனச் சொல்ல வாயெடுத்த பெத்தனர், அதற்கு தனக்கு உரிமையில்லை என நினைத்தவராக வாயை அடக்கிக் கொண்டு பேசாமல் திரும்பி நடந்து கொண்டிருந்தார்.

பெத்தனர் கொடுத்த காசை கைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு சாலையில் இறங்கினாள் நாககனி. சற்று தொலைவில் நடந்து கொண்டிருக்கும் பெத்தனரைப் பார்த்தாள். தூரக்கானல் அவர் தலையில் வழிவது போலிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் தன் உடைகளை கழற்றி கொடியில் போட்டார் பெத்தனர். மிக இயல்பாகவே பெத்தனரின் பாக்கெட்களை ரேணுகா துழாவினாள்.

“இன்னிக்கு ஒன்னையும் காணமே ! என்னவாம்?” என்றாள் ரேணுகா.

“இன்னிக்கு ஏ பொறப்புக்கு இருப்புக்குமா ஒரு பாலிஸி எடுத்தேன். மொத தவண கட்டிட்டேன்” என்றார் பெத்தனர்.

“அது எத்தன லட்சம்” என்றாள் ரேணுகா.

அ மலைச்சாமி-இந்தியா

அ மலைச்சாமி

 

 

 

 

(Visited 271 times, 1 visits today)