“இன்று இல்லாவிட்டால் நாளைக்கு கூட நிகழலாம்”-மிகுல் எம்.மொரேல்ஸ்- தமிழில்-தேசிகன் ராஜகோபாலன்

Miguel-M.-Morales“கோபம் என்பது சுத்தியலைப் போன்ற ஒரு கருவி. அதனால் வீடுகட்டவும் முடியும் ஒருவரை அடித்து வீழ்த்தவும் முடியும். சில வேளைகளில் உங்களுக்கு அந்த இரண்டையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்”.

மிகுல் எம்.மொரேல்ஸ்

00000000000000000000

மிச்சிகன் அவென்யூ வழியாகச் சென்ற ஊர்வலத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. “அமெரிக்க மருத்துவ கழகத்தை ஒழித்துவிடும்படி” நாங்கள் கோஷமிட்டதுடன், “எதிர்த்துப் போராடுவோம்! எய்ட்சுக்கு எதிராகப் போராடுவோம்!” என்று முழங்கியபயே எமது ஊர்வலம் நகர்ந்தது. இதைக் கண்ட கடைக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

மருத்துவ உதவி தேவைப்படுகின்ற அனைத்து நோயாளர்களும், அவர்கள் எத்தகைய நோயாளர்களாக இருந்தாலும் எச்ஐவி சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமானது என்று 1992 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவக் கழகம் முன்மொழிந்தது. சிகாகோவில் அவர்களின் மாநாடு இடம்பெற்றது. எயிட்ஸ் தொடர்பில் செயற்படும் அமைப்புகளின் கூட்டிணைவான ஆக்ட்-அப்  [AIDS Coalition to Unleash Power (act-up)] ஒரு ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. எனது குழு (FO (ACT-UP/KC) ) எமது மத்திய மேற்கு செயல்வீர சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளித்தது.

குதிரையின் மீது அமர்ந்திருந்த பொலிசார் குழுமியிருந்தவர்களை தடுத்து நிறுத்தி மாநாடு நடைபெற்ற ஹோட்டலை அடைய முடியாமல் செய்தனர். இருப்பினும் எமது முழக்கங்கள் மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்து. அவர்களை மாநாட்டு மண்டபத்தின் ஜன்னல்களின் வழியே எட்டிப்பார்க்கவும் வைத்தது.

கூட்டத்திற்குள் பொலிசார் ஊடுருவினர். இதனால் நாம் நிலைகுலைந்து சிதறிப்போனோம். நான் சாலையோரம் வீழ்ந்துவிட்டேன். இருப்பினும் விரைவாக ஊர்ந்து சென்று அந்த இடிபாடுகளிலிருந்து வெளியேறிவிட்டேன்.

நான் பொலிசாரின் தடுப்பு வேலிக்கு அந்தப்புறத்தில் இருப்பதை உணர்ந்தேன். அது விடுதியின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னதாக இருந்தது. நான் ஏனையவர்களைவிட மேலும் முன்னேறிச் சென்றேன். மாநாடு நடைபெறும் விடுதியின் சுழல்கதவை நோக்கி விரைந்து சென்று, அதனைத் தள்ளி திறப்பதற்காக எனது அனைத்து கோபத்தையும் அதன்மீது செலுத்தி ஊன்றித் தள்ளினேன்.

விடுதியின் மாநாட்டு அறையில் இருந்தவர்கள் என்னை அச்சம்தோய்ந்த முகத்துடன் பார்த்தனர். நான் அவர்களுக்கு நோய்தொற்றை ஏற்படுத்தவா வந்துள்ளேன்? ஒரு பொலிஸ்காரரின் கை என்னைப் பின்புறமாக இழுத்து சுழலும் கதவைத் திறந்து நடைபாதையை நோக்கி தள்ளிவிட்டது. நிழற்படக் கருவிகளின் ஃப்ளாஷ் லைட்டுகள் பளிச்சிட்டன. ஊடகங்கள் என்மீது கவனத்தைச் செலுத்தின. மறுபுறத்தில் கன்சாஸ் நகரில் புற்றுநோயால் பாதிக்கப்படட எனது அன்னை, தனது 24 வயது மகனை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்வதை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட காட்சியை பார்த்தார்.

“உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள்!” என்று நான் களத்தில் தொடர்ந்தும் முழக்கமிட்டவாறிருந்தேன். பொலிஸ்காரரின் முழங்கால் எனது பழுப்புநிற முதுகை அழுத்திக்கொண்டிருந்ததுடன் எனது மணிக்கட்டுகள் இறுக்கமாக விலங்கிடப்பட்டிருந்தன.

எனது மனம் எனது அன்னை புனித மைக்கேல் சிலையின் பலிபீடத்தை நோக்கி விரைந்தது. வலிமை மிகுந்த சிறகுகளை அகலவிரித்து, கையில் கத்தியுடன், அவர் ஒரு அரக்கனின்மீது நின்றிருந்தார். நடைபாதையின்மீது எனது முகம் அழுத்தப்பட்டிருந்த நிலையில், நான் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் புனித மைக்கேலின் உலகத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன் – நான் எப்பொழுதும் அவரது அரக்கனாகவே இருந்து வருகிறேன்.

காவல் நிலையத்தில், மின்தூக்கியின் தரையில் புதிதாக சொட்டிய இரத்தத்தைப் பார்த்தேன். அவர்களை இரத்தம் சிந்த வைத்த அந்த காவல்காரர்களின் கண்களை உற்றுப்பாரக்கும் தைரியம் என்னிடம் இருக்கவில்லை. மின்தூக்கியின் கதவுகள் திறந்தவுடன், நான் இரத்தம் சிந்திய பாதையைப் பின்தொடர்ந்தேன். சொட்டு இரத்தத்தினால் உருவான பாதை விசாரணை அறைக்கு இட்டுச் சென்றது. அங்கு நான் மற்றொரு போராட்டக்காரரைப் பார்த்தேன். அவர் முதலாவதாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அவர் இப்பொழுது நிமிர்ந்து நிற்க முடியாமல் இரத்தம் வழிய வேதனையுடன் நின்றிருந்தார்.

எங்களது கைவிரல் ரேகைகளைப் பதிவுசெய்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும்போது அந்த அரக்க முகங்கள் சிரித்தன. இது சட்ட அமுலாக்க பிரிவினரினால் உங்களுக்கு அறிவிக்காமலேயே கைது செயது, மூர்க்கத்தனமாகத் தாக்கி; பாதிப்புக்குட்படுத்தும் அவர்களது சுவர்களுக்குள் மேற்கொள்ளும் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்.

ஆன்ட்-அப் எப்பொழுதும் தனது கடைசி வழிமுறையாகவே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னர் எமது மக்கள் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். நாம் முடிவெடுப்பவர்கள் சரியான முடிவெடுக்க வேண்டும் என்பதையே விரும்பினோம். அவர்கள் அதற்கு மறுப்புத்தெரிவித்து எமது குரல்களை புறந்தள்ளியதனாலேயே நாம் எமது மக்களை செயலில் ஈடுபடுத்தினோம்.

போராட்டங்களும், புறக்கணிப்புகளும் கைதுகளும் எப்பொழுதும் இலக்கல்ல. உயிர்களைக் காப்பதே எமது இலக்கு. அவர்கள் எமக்கு எதிராகத் திரும்பாமல் எம்முடன் இணைந்து பணியாற்றியிருந்தால் அதற்கு ஏராளமான வேலைகளை மிகச் சுலபமாகச் செய்திருக்க முடியும். ஆக்ட்-அப்பில் இருப்பவர்கள் அனைவருமே மூலோபாய சிந்தனையாளர்கள். வழிகளைத் திறப்பதற்குச் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் நாம் உருவாக்கியிருக்க முடியும்; உயிர்களைக் காப்பதற்குத் தேவையான ஒவ்வொரு வழியையும் எம்மால் குறிப்பிட்டுக் காட்டியிருக்க முடியும். மக்கள் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் நாம் எமக்குள் உள்ளகக் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கிறோம். அவ்வப்போது விவாதங்களில் அனல் பறந்திருக்கின்றன,  மாற்றுவழியில்லாதபோது நாம் கதவை உடைத்துக்கொண்டு மண்டபத்திற்குள் நுழைய நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

எனவே நான் ஏன் உங்களுக்கு இந்த இருபத்தேழு வருட பழைய கதையை, அதிலும் நீங்கள் இப்பொழுது இதைப் படிக்கின்ற பொழுது இன்னமும் பழமையாகிப் போயிருக்கும் கதையைச் சொல்கிறேன்? ஏனெனில் நாம் அந்த நாட்களிலிருந்து ஒருபோதும் திரும்பமுடியாது என்ற காரணத்திற்காகவே இதனை நான் கூறினேன். ஹெச்ஐவியைப் பற்றிய பயமும் அசட்டையும் எயிட்ஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டை தீயிட்டு கொளுத்துவதற்கு வழிவகுத்துவிடும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நகரத்தை விட்டோ அல்லது அதையும்விட மோசமான இடத்திற்கோ உங்களை விரட்டிவிடும். ஆகவே ஒரு முதியவராக, இந்த நேரத்தில் இன்னமும் உயிர்த்திருப்பவனாக என்னால் உங்களுக்கு கையளிக்க வேண்டியது அதுவே.

எனது கோபத்தையும் உணர்ச்சிவசப்படலையும் கண்டு நானே அஞ்சக்கூடாது என்ற பாடத்தை செயற்பாட்டின் ஊடாக நான் அறிந்து கொண்டேன். நாம் குழந்தைகளாக இருக்கும்போது அத்தகைய உணர்வுகளை மறைத்து வைக்கும் படியும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் எமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் கோபம் என்பது சுத்தியலைப் போன்ற ஒரு கருவி, அதனால் வீடு கட்டவும் முடியும் அல்லது ஒருவரை தாக்கி வீழ்த்தவும் முடியும். சில வேளைகளில் உங்களுக்கு இரண்டும் தேவைப்படும்.

சிலநேரங்களில் என்பது போராட்டத்தையும் சக்தியையும் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துதலை நிற்கிறது. ஏனைய நேரங்களில் எமக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? இதனால்தானே நாம் ஏனையவர்களின் திறமையை மறுக்கிறோம் அதுதானே அவர்கள் விரும்பிய நேரத்தில் விரும்பியதைச் செய்வதற்குத் தூண்டுகிறது என்பதை உணர்ந்து எமது கோபத்தைக் குழிதோண்டிப் புதைப்பதைக் குறிக்கிறது.;

கோபத்திலிருந்து எமது ஆணவத்தை வெளியேற்றுகின்றபோது, அது குற்றமற்றதாகிவிடுகிறது. நாம் அந்த சக்தியை வேறொரு நல்ல விடயத்திற்கு மாற்ற முடியும்.

நாம் ஆணவத்தை எமது கோபத்தின் ஒருபகுதியாக இருப்பதற்கு அனுமதிக்கையில், அது எமது உள்ளத்தில் மலையைப்போல் ஏறி அமர்ந்துவிடும். அதனை எதிர்த்து நாம் எந்த அளவிற்கு போராடுகிறோமோ அந்த அளவிற்கு அதனை அசைப்பது கடினமானதாக இருக்கும். நாம் எமது கோபத்திலிருந்து ஆணவத்தை அப்புறப்படுத்தும்போது, அது மென்மையடைந்துவிடுகிறது. நாம் சோர்வடைந்திருக்கையில் அந்த ஆற்றலை தடுத்துநிறுத்தலாம். நாம் அந்த ஆற்றலை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

தானே வலிய வந்து தொடுத்த ஒவ்வொரு போரிலும் அதற்கு எதிராகப் போராடுவது எனது இயல்பு. அதில் நான் சிலவற்றில் தோற்றிருக்கிறேன் சிலவற்றில் வென்றிருக்கிறேன் ஆனால் என்னைப் பொறுத்தவரை மௌனமாக இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கமாகும். நான் வயது மூப்படைந்த நிலையில், சில மனிதர்கள் அமைதியாக இருப்பதையும் நான் போராட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதையும் உணர்ந்துகொண்டேன். அந்த வழியேலேயே அந்தப் பிரச்சினையை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. போராட்டத்தின் வெற்றியினூடாக அவர்கள் அனுகூலம் அடைகிறார்கள் அல்லது தோல்வியிலிருந்து அவர்கள் விலகிக்கொள்கிறார்கள். இது என்னை ஏமாற்றமடையச் செய்கிறது  இருப்பினும், நான் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களில் சில மனிதர்கள் எப்படி பின்னாலிருந்து உந்துதலிப்பது என்பதைப் பற்றி தெரியாதவர்களாக இருந்தார்கள் என்பதை மிக விரைவில் நான் புரிந்துகொண்டேன்.

ஒவ்வொருமுறையும் நான் போராடியபோது எனக்கு அனுபவத்தை வழங்கியதுடன் தலைமைத்துவத்திற்கான பாடங்களையும் கற்றுக்கொடுத்தது. ‘சொல்வது சுலபம் செய்வது கடினம்’ என்ற பழமொழிக்கேற்ப போதிப்பவருக்கு செயற்படுத்துவது என்பது ஒரு பெரிய சித்திரவதையாகவே இருக்கிறது. எனவே இப்பொழுதெல்லாம் நான் சண்டையிட வேண்டும் என்ற தாகம் ஏற்படும் போதும் பின்நின்று உந்தித்தள்ளும்போதும், இதில் நான் தலைமைப் பொறுப்பை ஏற்கையில், நான் ஏனையவர்களின் தலைமையை தட்டிப் பறிக்கிறேனா? என்ற கேள்வியை நானே எனக்குள் கேட்டுக்கொண்டு சிந்திக்க வேண்டியுள்ளது. எனது இளம்பிராயத்தில் ஒவ்வொரு போராட்டத்தையும் வயதில் மூத்தவர் ஒருவர் தலைமைதாங்கி வழிநடத்தியிருந்தால், நான் இன்று இருப்பதைப் போல் ஒரு செயற்பாட்டாளராக வந்திருக்க முடியாது. எனவே இளைஞர்களைத் தூக்கிவிடுவதற்கான வழிகளை நான் ஏற்படுத்துகிறேன். ஒருநாள் முழுவதும் பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கெடுக்கும் அத்தகையவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், தமது வார இறுதி நாட்களை ஊர்வலத்திலும், மக்கள் மத்தியில் இருப்பதிலும், நிழற்படக் கருவிகளின் பெட்டிக்குள் அடங்குவதிலும் செலவழிப்பவர்பகளாகவும் அவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நேரிலும் தொலைபேசியூடாகவும் எழுத்து மூலமாகவும் தெரிவிப்பவர்களாக இருப்பதால் அது அவர்களை அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் உங்களை அச்சுறுத்துகின்ற போதிலும் நீங்கள் அதனை திரும்பவும் செய்கிறீர்கள்.

பேரூந்து நிலையம் அல்லது பலசரக்கு கடை போன்ற அனைத்து இடங்களிலும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும், இருட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் அவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு (மீள் உற்பத்தி உரிமை மற்றும் முதியோர் பாதுகாப்பு உட்பட) அவர்களின்மீது எந்தவகையிலாவது அன்பு செலுத்தும் அல்லது அவர்களின்மீது அக்கறை கொள்பவர்களுக்கும்; சூழல் தொடர்பில் நீரைப்பாதுகாப்பதற்கும், குடியேற்றவாசிகளைப் பாதுகாப்பதற்கும் குரல்கொடுப்பவர்களுக்கும் நன்றிகள்.

இதனைச் செய்வது உங்களது இயல்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு உங்களால் முடியாமைக்கு எத்தகைய காரணம் இருந்தபோதிலும் அதையெல்லாம் மீறி நீங்கள் எதையோ அனைத்தையுமோ – எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான பதாகைகளை எழுதுவதற்கான நிதியுதவி அளித்தல், திட்டமிடல் கூட்டம் நடைபெறும் வேளைகளில் ஒரு பிட்சாவை அனுப்பிவைத்தல், சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு ஊக்கப்படுத்துதல், அடிப்படைக்கொள்கையை ஆதரித்தல் உள்ளிட்ட அனைத்தையும் செய்பவர்களுக்கு குறிப்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்ப்பு நடவடிக்கையில் புதிதாக ஈடுபடுபவர்கள், பணி ஓய்வு பெற்றதன் பின்னர் செயல்வீரர்களாக இணைந்துகொள்பவர்கள், முன்னணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நன்றிகள். தொடர்புடையவர் என்ற அடிப்படையில் நீங்கள் எழுப்பிய குரலுக்கும் உங்களது உடல்களை வீதிகளில் கிடத்தியமைக்கும், தொண்டைகட்டும்வரை விண்ணதிர நீங்கள் எழுப்பிய முழக்கங்களுக்கும் வேலைக்குப் போகாமல் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், போராட்டத்திற்கு ஆதரவாக மேலதிகமாக சில டொலர்களை செலவழித்தமைக்கும் நன்றிகள். அதனைத் தொடர்ந்து செய்யுங்கள்.

ஆசிரியர் குறிப்பு:

மிகுல் எம். மோரேல்ஸ் ஒரு குடியேற்றவாசியாக வளர்ந்து வந்தார். அவர் ஒரு பருவகால பண்ணை தொழிலாளி. லாம்ப்டா கல்வியியல் நிறுவனத்தில் ஆய்வாளராக இருப்பதுடன் எழுத்தாளர்களுக்கான பட்டறைகளை மேற்கொள்ளும் VONA Voices and Macondo Writers Workshops  நிறுவனத்தின் முன்னாள் மாணவருமாவார். அவர் In Remembrance of Orlando and the forthcoming Fat & Queer anthology இன் இணை ஆசிரியராகவும் திகழ்கிறார்.

மிகுல் எம். மோரேல்ஸ்

Miguel-M.-Morales

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் -இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 41 times, 1 visits today)