எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவைத் தேடிப் போன பயணங்கள் – கட்டுரை- அ.ராமசாமி

லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாயமார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதாதேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்தபோது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது.  சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜகோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம்.

ஒன்பதாம் வகுப்பு கோடி விடுமுறையில் உடல் நலமில்லாமல் படுக்கையில் கிடந்த எனது தாத்தா ஒருவருக்காக வாசித்த சக்கரவர்த்தித் திருமகனே ராவணனின் அரண்மனையையும் அசோகவனத்தையும், அனுமன் அதனைத் தீவைத்த அழித்த கதையையும் சொல்லியது. கணையாழியின் துணையோடு சீதையைக் கண்டு திரும்பிய அனுமனின் தூதுக்குப் பின் சுக்கிரீவனின் படையுதவியோடு இலங்கைக்குச் சேதுபந்தனம் கட்டி, ராவணனின் ஒரு தம்பி வீபிடணனின் துணையோடு, இன்னொரு தம்பி கும்பகர்ணனைக் கொன்று, அவனது அன்பு மகன் இந்திரஜித்தைப் போரில் அழித்து, ராவணனையும் கொன்றொழித்துச் சீதையை மீட்ட கதையாக – ராமாயணத்தை வாசித்துக்காட்டியிருக்கிறேன்.  தாத்தாவிற்குச் சொர்க்கவாசலைக் காட்டுவதற்காக வாசித்த சக்கரவர்த்தித் திருமகனோடு கம்பனின் ராமாயணத்தின் சாரத்தையும் சில காண்டங்களையும் வாசித்துத் தேர்வு எழுதிய இலக்கிய மாணவன். அந்த வாசிப்பின் வழியாகவும் தேர்வுக்கான படிப்பின் வழியாகவும் அறிந்து வைத்திருந்த இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையெல்லாம் படித்த காலத்தில் எழுந்ததில்லை. அந்த அறிமுகம் மட்டுமே எனக்குள்ளிருக்கும் இலங்கை அல்ல. எனக்குள் பல இலங்கைகள் இருந்தன; இருக்கின்றன.

இலங்கை என்னும் தீவில் தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலவே எல்லாச் சிக்கல்களோடும் வாழ்கிறார்கள் என்ற அறிமுகத்தைத் தந்த புனைகதைகள் சிலவற்றை டொமினிக் ஜீவாவின் மல்லிகையின் வழியாக வாசித்த காலம் எனது பட்டப்படிப்புக் காலம்(1977-80) அவரது தொகுப்பும், நந்தி எழுதிய மலைக்கொழுந்தும் முழுமையாக நான் வாசித்த முதல் இலங்கைத் தமிழ் நூல்கள். அந்தக் காலகட்டத்தில் தான் திறனாய்வுப் பரப்பில் க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் தீவிரமாகச் செயல்பட்டு திறனாய்வுநூல்களை வெளியிட்டார்கள். இலக்கியத்துறை மாணவனாக இருந்த என்னைத் தீவிரமான இலக்கியத்திறனாய்வு மாணவனாக மாற்றியன இவ்விருவரது நூல்களுமே.

பட்டப்படிப்புக்குப் பின் பட்டமேல்படிப்பிற்காகவும் ஆய்வுக்காகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது இலங்கையின் பேராசிரியர்களின் வருகையும் போராட்டக் காலமும் சேர்ந்துகொண்டன. தி.சு.நடராசன், சி.கனகசபாபதி போன்ற ஆசிரியர்களோடு இலங்கை எழுத்தாளர்களுக்குத் தொடர்பு இருந்தது. அவர்கள் மதுரைக்கு வந்தார்கள். ஆறு ஆண்டுக்காலம் அங்கிருந்தபோது டொமினிக் ஜீவா, சிவத்தம்பி, கைலாசபதி, செ.கணேசலிங்கன் ஆகியோரை மட்டுமல்லாமல் சொல்லாத சேதிகள் – பெண்கள் தொகுப்பை வெளியிடுவதற்காக வந்திருந்த சித்ரலேகா மௌனகு ருவையும் சந்தித்திருக்கிறேன்.  அதே காலகட்டத்தில் தமிழ் இலக்கியவரலாற்றை வேறுவிதமாகப் பார்க்கும்படி தூண்டிய தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலும், எம்.ஏ.நுஃமானின் திறனாய்வுக்கட்டுரைகளும் என எனக்குள் இலங்கையை அறிவாளிகள் நிரம்பிய ஊராகக் காட்டியிருந்தது.

இவை உருவாக்கிய பார்வைக்கோணங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பார்வையை மட்டும் உருவாக்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்தையும் சரியான வரலாற்றுப் பார்வையில் – கருத்தியல் ரீதியாகப் புரிந்துகொள்ளும் முறைமையை எனக்குள் உருவாக்கித் தந்தன. இதேபோல மரபுத்தமிழ் இலக்கியங்களில் வேலை செய்த ஆறுமுகநாவலரின் பிடிவாதமான கருத்தியல் சார்புகள், அவரின் சீடரான சி.வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்பு முயற்சிகள், விபுலானந்தரின் நாடகவியல்/அரங்கியல் ஈடுபாடுகள் என்பனவும் என்னை உருவாக்கியதின் பின்னணியில் இருக்கின்றன. இவர்களின் அறிவுசார் பணிகளின் வழியாக இலங்கைத் தமிழர்களை ஒருவிதமாக    அறிவுத்தளத்தில் இயங்கும் கூட்டமாக அறிந்துகொள்ள வைத்தது.  இப்படியான இலங்கைகள் எனக்குள் இருந்தன. டொமினிக் ஜீவாவின் மல்லிகையின் வாயிலாகவே கே.டேனியலில் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. அவரது பஞ்சமர் தொடங்கிப் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து வெளியிட்ட கானல், அடிமைகள், தண்ணீர் போன்ற நாவல்களையும் வாசித்து ஈழத்துக் கிராமங்களும் இந்தியக் கிராமங்கள் போன்றே சாதியச் சிக்கல்களையும் தீண்டாமையையும் பின்பற்றும் நிலப்பரப்பு என்ற புரிதல் உருவானது. இந்த புரிதல்களுக்கிடையே தான் வெகுமக்கள் இதழ்களில் ஈழத்தமிழர்களின் மூர்க்கமான போராட்டங்கள் செய்திக் கட்டுரைகளாகவும் நேர்காணல்களாகவும் வெளிவரத் தொடங்கிப் புதுவகை இலங்கையை அறிமுகப்படுத்தின.

மொழிசார்ந்த பெரும்பான்மை x சிறுபான்மை என்ற அரசியல் கருத்துரு உருவாக்கிய போராட்டம், போரை நோக்கி நகர்த்திய பின்னணியில் சில தொகைக் கவிதை நூல்கள் உருவாக்கிய பார்வைகளும், சில கவிஞர்களின் தனித் தொகுப்புகளின் தொகுப்புகளும் தமிழ்நாட்டில் ஒருவிதமான உணர்வுநிலைகளை உருவாக்கின. அறிவுத்தளத்தில் உணர்வுநிலையைக் கலந்த அந்தத் தொகுதிகளாக, பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி, சொல்லாத சேதிகள் எனத் தலைப்பிட்டு தொகைநூல்களாக வந்த கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியிடப்பெற்றன. அதே நேரத்தில் ஈழப் போராட்ட ஆதரவு உணர்வுநிலை வெகுமக்கள் பரப்பிலும் பரவியது. பெரும்பாலான வாரப் பத்திரிகைகளும் நாளிதழ்களும் கட்டுரைகளையும் தொடர்களையும் கவிதைகளையும் வெளியிட்டன. இந்தியாவிற்கு ஈழ மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினார்கள். வேறுபல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தார்கள். ஈழவேந்தன், காசி ஆனந்தன் போன்றவர்கள் அரங்கக் கூட்டங்களில் உணர்ச்சிகரமாகப் பேசித் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு தொப்புள்கொடி உறவுகொண்டவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்று உணர்த்தினார்கள். போராளி இயக்கங்களுக்கிடையே நடக்கும் மோதல்களின் பின்னணியில் சிங்களப் பேரினவாத அரசும், இந்திய அரசும், அதனால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புப் படையின் ஈடுபாடுகளும் அயலகத்துறையின் தந்திரோபயங்களும் இருப்பதும் உணரப்பட்டன. இந்தியா உதவுகிறதாகவும், ஏமாற்றுகிறதாகவும் கருத்துகள் நிலவின.   திராவிட இயக்க அரசுகளின் தேர்தல் அரசியலில்-   ஈழப்போராட்ட ஆதரவும் விலகலும் முக்கிய பேசுபொருளாக மாறின.  இவையெல்லாமே எழுத்துகளாகப் பதிவுசெய்யப்பட்டு வாசிக்கக் கிடைத்தன. இவ்வளவையும் அந்த மக்கள் எப்படித் தாங்குகிறார்கள் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்தது.

போர்க்காலத்தில் கவிதைகள் தொகைநூல்களாக வந்தது போலப் புலம்பெயர்ந்த தமிழர்கள் லண்டன், கனடா, பாரிஸ் போன்ற நகரங்களிலிருந்து பெருந்தொகை நூல்களை வெளியிட்டார்கள். புனைவு எழுத்துகளும் புனைவல்லாத எழுத்துகளும் படங்களும் ஓவியங்களும் சந்திப்புகள் பற்றிய செய்தித்தொகுப்புகளுமாக வந்துகொண்டே இருந்தன. பத்மநாப அய்யர், சுகன்& ஷோபாசக்தி போன்றோரின் பெயர்களோடும், பதிப்பாசிரியர்களின் பெயரில்லாமலும் வந்த கனடா, பாரிஸ் நகரத்துத் தமிழியல் தொகைகளும் படிக்கக்  கிடைத்தன.  இத்தொகைநூல்கள் அல்லாமல் போர்க் காலக் கதைகள், புலம்பெயர்கதைகள், மலையகக் கவிதைகள், இலக்கியச் சந்திப்புகள், ஊடறு- பெண்ணியச் சந்திப்புகள் வழியான தொகைகள் எனப்பலப்பலவாய்க் கிடைத்தன.  புலம்பெயர்ந்தவர்களின் முயற்சியால் வந்த சிற்றிதழ்கள், இணையப் பதிவுகள் போன்றனவுமாகத் தமிழ் இலக்கியம் பெரும் பரப்பை தமிழில் பதிவுசெய்தன. இவையனைத்துமே கடந்த கால்நூற்றாண்டுக்கான தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான தரவுகளே.

2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் அதிகமும் புனைகதைகள் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் அச்சேறிக்கொண்டிருக்கின்றன. காலம், காக்கைச் சிறகினிலே போன்ற இதழ்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் நான் வாசிக்கும் இடைநிலை இதழ்களான அம்ருதா, காலச்சுவடு, உயிரெழுத்து, தீராநதி, காலச்சுவடு போன்றவற்றின் பக்கங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பக்கங்களை ஈழத்தமிழ் எழுத்துகளே பிடித்துக்கொண்டன. பெரும்பத்திரிகைகளான ஆனந்த விகடன், இந்துதமிழ், அவற்றின் இலக்கிய இதழ்கள் போன்றவற்றிலும் பலரும் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களில் பலவும் ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுகின்றன. ஈழத்தமிழ் எழுத்துகளை வெளியிடுவதற்காக மட்டுமே பூவரசி, காந்தளகம், குமரன் போன்ற பதிப்பகங்கள் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டுப் பதிப்பகங்களோடு கூட்டுப் பதிப்பு முயற்சிகளையும் செய்கின்றனர்.  ஆண்டுதோறும் வழங்கப்படும் கலை, இலக்கிய விருதுகள் பலவற்றில் ஈழத்தமிழ்/ புலம்பெயர் எழுத்தாளர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றிருக்கிறார்கள். பலவற்றை வாசித்தவனாகவும் விமரிசனக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். உலகம் தழுவிய நிலையில் நட த்தப்பட்ட பல இலக்கியப் போட்டிகளின் நடுவர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். சில நூல்களுக்கு முன்னுரைகள் எழுதியிருக்கிறேன். போரும் போரின் துயரங்களும் ஏற்படுத்திய வடுக்களும் நினைவுகளும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய நிலையிலும் இன்னொரு பக்கம் தமிழ்மொழியென்னும் செவ்வியல் மொழியை உலகமொழியாக – உலக இலக்கியங்கள் எழுதப்படும் மொழியாக மாற்றிவிட்டது என்ற எண்ணங்களை இவை உருவாக்கித் தந்தன.

இப்படியாக எனக்குள் சில இலங்கைகள் உருவாகியுள்ளன. அது ஒற்றை இலங்கை அல்ல. மலையகப்பரப்பை அறிமுகம் செய்த புனைகதைகள் வழி உருவான இலங்கை அதற்குள் இருக்கிறது. திறனாய்வாளர்கள் உருவாக்கிய யாழ்ப்பாண மையவாத இலங்கையும்  இருக்கிறது. உணர்ச்சிகரமான கவிதைகளாலும் இடம்பெயர்ந்து அலைந்தவர்களின் பரிதவிப்புகளாலும் எழுதப்பெற்ற இலங்கையின் ஓலமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. போர்க்கால எழுத்துகளால் உருவான அவலங்களின் ஓலமும் மரணத்தின் துயரப்பாடல்களும் நிரம்பிய துயரப்பரப்பொன்றும் இலங்கைத் தமிழாக எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. போர்க் காலத்திலேயும் போருக்குப் பின்னும் எழுதிக் குவிக்கப்பட்ட புலம்பெயர் எழுத்துகள் தீட்டிய இலங்கைத் தமிழ்ச் சித்திரமொன்றும் எனக்குள் இருக்கிறது.

எழுத்துகளின் வழியாக எனக்குள் இருந்த இலங்கைகளை -தமிழ்பேசும் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நேரடியாகப் பார்க்கவேண்டும் என்ற ஆசையை எனக்குள் முதன்முதலில் தூண்டியவர் இளைய பத்மநாதன் என்னும் நாடகக் கலைஞரே. நானும் அவரும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஒரு கோடைகால நாடகப் பயிலரங்கில் (1988 மே- ஜூன்) ஒருமாதம் ஒரே அறையில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அதுவரை நான் வாசித்திருந்த பிரதிகளை முன்வைத்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு   அவர் தனது நேரடி அனுபவங்களை முன்வைத்து விளக்கிச் சொல்லச் சொல்ல எனது பார்க்கும் ஆசையும் விருப்பங்களும் கூடுதலாகின. குறிப்பாகக் வடமோடி, தென்மோடிக் கூத்து மரபுகளையும். குழந்தை ம.சண்முகலிங்கன், பாலேந்திரா போன்றோரின் நாடகத் தயாரிப்பு முயற்சிகளையும் விரிவாகச் சொல்ல, ஒருமுறை இலங்கை போய்ப்பார்க்கவேண்டும் என்று எண்ணம் உண்டானது. எப்போது போய் இவற்றையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கேட்டபோது, அவர் சொன்னார்: “ராமசாமி.., அநேகமா ஒரு ஆறுமாதத்தில் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிடும். நாமெ அங்கே போறோம். இதேபோல ஒருமாதம் அங்கெ தங்குறோம்” அவர் சொன்னதுபோல் ஆறுமாதங்களில் முடியவில்லை; ஆறு ஆண்டுகள் முடிந்த பின்னும் நீடித்தது.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பெரும் போர்கள் எல்லாம் நடந்து முடிந்து ஒரு தோல்வியோடு-முள்ளிவாய்க்கால் அழிவுகளோடு நின்றது. உடனடியாகப் போய் அந்த அழிவுகளையும் துயரங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் நிலை இல்லை. முதல் வாய்ப்பு   2016 இல் கிடைத்தது. செப்டம்பர் 16 தொடங்கி 29 வரை ஒரு 15 நாட்கள் ஒருமுறையும் இப்போது 2019 டிசம்பர் 16 தொடங்கி 2020 ஜனவரி 5 வரையிலான 20 நாட்களில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்குள் போய் வந்திருக்கிறேன். என்னை இலங்கைக்கு அழைத்துப் போவதாகச் சொன்ன இளையபத்மநாதன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் இல்லாமலேயே இரண்டுதடவை இலங்கையைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன்.

முதல் பயணத்தில் பெரும்பாலான நாட்களை மட்டக்களப்பில் தான் கழித்தேன். மூன்று நாட்கள் கருத்தரங்கம் முடிந்தபின்பு, கருத்தரங்கிற்கு வந்தவர்களோடு கொக்கட்டிச்சேவல் என்னும் கிராமத்தில் நடந்த திருவிழாவைப் போய்ப் பார்த்துவிட்டு, அதனைத் தாண்டியிருந்த மலையொன்றையும் அதன் மேலிருந்த கோயிலையும் பார்த்தோம். அங்கேதான் போர்க்காலத்தில் புலிகளின் முக்கியமான படையணிகள் இருந்ததாகச் சொன்னார்கள். நீர்ப்பரப்புகளும் நிலப்பரப்புகளும் பண்படுத்தப்படாமல் இருந்தன. கண்ணிவெடிகள் இருக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருந்தது. விவசாய வேலைகள் எதுவும் முழுமூச்சுடன் நடக்கவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் நாடகம் பயின்றுகொண்டிருந்த மாணாக்கர்களுக்கு விரிவான பயிற்சிகளை வழங்கினேன். கடைசியாகவொரு நாள் அக்கரைப்பற்றுக்குப் போய் விட்டு நேராக யாழ்ப்பாணம் போனேன். அதிகம் சுற்றிக்கூடப் பார்க்கவில்லை. பருத்தித் துறையில் இருந்த சுந்தர ராமசாமியின் நண்பர் குலசேகரம் அவர்கள், அந்த ஊரைக் காட்டிச் சிலகதைகளைச் சொன்னார். புலிகள் இருந்த காலத்தில் நிர்வாகம் கட்டுக்குள் – அச்சத்தின் காரணமாகக் கட்டுப்பாட்டுக்குள் இருத்தி வைக்கப்பட்டிருந்தது; இப்போது அந்த அச்சம் விலகிப் போனதால் எல்லாம் தறிகெட்டு அலைகிறார்கள் என்றார். அவரது கூற்றுப் பெரும்பாலும் யாழ்ப்பாணப்பகுதியை மையப்படுத்திச் சொன்னதாகவே தோன்றியது. இரண்டு நாட்கள் என்னை யாழ்ப்பாண நகருக்குள் சுற்றிக்காட்டிய நண்பர் போரின் அடையாளங்களைச் சொல்லிச் சொல்லி நகர்ந்தார். யாழ்ப்பாணக்கோட்டையைப் பார்க்கச் சிங்களப்பகுதியிலிருந்து சுற்றுலாவாகச் சிங்களர்கள் கூட்டம் கூட்டமாக வந்து திரும்பினார்கள். தன்னார்வ நிறுவனங்கள் அத்தகைய சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்து, அரசின் வெற்றியை அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிப் பல்கலைக்கழகம் சென்று நேரடியாக விமான நிலையம் போய் நாடு திரும்பும் எனது திட்டத்தில் ஒருநாள் கிளிநொச்சியில் நண்பர் கருணாகரனோடு ஒருநாள் இருந்தேன். அவர் ஏற்பாடு செய்த  சந்திப்பில் உரையாற்றினேன். இந்த முறையும் சிறுகூட்டம் ஒன்றில் உரையாடல் செய்தேன்.  இப்போது பார்த்த இரணைமடு அணையை அப்போதும் பார்த்தேன். ஊரின் நடுவே வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, போர்க்காலத்தின் பேரடையாளமாகக் கிடந்தது.  அந்தப் பயணத்தில் பெரும்பாலும் அரசின் பேருந்துகளில் தான் பயணம் செய்யும் வாய்ப்பு. பேருந்துகளைப் போலவே சாலைகளும் சீரானதாக இல்லாத நிலை. நீண்ட பயணங்கள் ஏற்படுத்திய களைப்போடுதான் முதல் பயணம் முடிந்தது.

இந்த இரண்டு பயணங்களின் போதும் எனக்குள் இரண்டுவிதமான எண்ணங்கள் இருந்தன. முதல் பயணத்தில் போரின் அழிவை – துயரத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்தேன். மட்டக்களப்பில் இருந்த ஒருவாரத்தில் நான் சந்தித்த பலரும் புலிகளுக்குள் பிளவு ஏற்பட்ட பின்னணியையும் இசுலாமியர்களுக்கெதிராகப் புலிகள் எடுத்த எதிர்நிலைப்பாட்டையும் சொல்லிச்சொல்லிக் கடந்தார்கள். கொக்கட்டிச் சேவல் பகுதிக் கிராமங்களையும் தென்னிலங்கைப் பகுதிகளையும் பார்த்தபோது வறுமையும் நம்பிக்கையின்மையும் தூக்கலாக இருப்பதை உணரமுடிந்தது.   இந்தப் பகுதிகள் திரும்பவும் எழுந்து வருமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

முதல் பயணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் முடிந்தபின் திரும்பவும் ஒரு பயணத்திட்டம். இந்தப் பயணத்திட்டத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஒரு அஞ்சலி நிகழ்வுதான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடலோர மனிதர்களை வாரிச்சுருட்டிக்கொண்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் காவுக் கொள்ளையில் தனது செல்ல மகள் அனாமிகாவைப் பறிகொடுத்தவர் நண்பர் பாலசிங்கம் சுகுமார். முன்பு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். போர்க்காலச் சிக்கல் ஒன்றால் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்கிறார். ஆண்டுதோறும் மகள் நினைவாக அவர் நடத்தும் அனாமிகா அஞ்சலி நிகழ்வை இந்த முறைச் சமூக நிகழ்வாக மாற்றி மூன்றுநாட்கள் மூன்று இடங்களில் நடத்த நினைத்தார்.  சொந்த ஊரான சேனையூரிலும் அதன் அருகிலுள்ள திருகோணமலை நகரிலும் பின்னர் பணியாற்றிய மட்டக்களப்பிலுமாக மூன்று நிகழ்வுகள். மூன்றிலும் நானே மையமாக இருந்தேன். திருகோணமலையில் இலக்கியவாதிகள்/ வாசகர்கள் சந்திப்பு. சேனையூர்- கட்டைமறிச்சானில் பள்ளி மாணாக்கர்களுக்கான நாடகப்பயிலரங்கு, மட்டக்களப்பில் ஓர் இரங்கல் பேருரையும் பல்வகை நிகழ்ச்சிகளும் எனத் திட்டமிட்ட நிகழ்வுகளுக்காகவே பயணம் தொடங்கினேன். டிசம்பர் 24,25,26 ஆகிய மூன்று நாட்களுக்கான நிகழ்வுகளை முதலில் தீர்மானித்துக்கொண்டு முகநூலில் இலங்கைக்கு நான் வருவதை அறிவித்த நிலையில் ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பல இடங்களுக்கும் வரவேண்டும்; தங்கள் அமைப்புகளில் எங்களோடு பேசவேண்டும்; நாடகப்பயிலரங்குகள் நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கோரிக்கைகள் வைத்தார்கள். எல்லா அழைப்புகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக்கொண்டு 20 நாட்கள் பயணமாகத் திட்டமிட்டேன். தயக்கத்தோடு ஏற்றுக்கொண்ட இரண்டு நிகழ்வுகள் மன்னாரிலும் வவுனியாவிலும் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளே. அழைத்தவர்கள் யாரையும் அதற்கு முன்னர் அறிமுகம் இல்லை. ஆனால் இந்தப் பயணத்தில் சிறப்பான நிகழ்வுகளைத் தந்த நிகழ்வுகளாகவும் நாட்களாகவும் அமைந்தன வவுனியாவில் தங்கியிருந்த அந்த மூன்று நாட்கள் தான்.

14 உரைகள்/ உரையாடல், நான்கு நாடகப் பயிற்சிப் பட்டறைகள், இந்நிகழ்ச்சிகளுக்கிடையே ஊர் சுற்றுதல், நண்பர்கள் வீட்டிற்கும் சென்று இலங்கைத் தீவின் பலவகைப்பட்ட உணவுகளையும் ருசித்துவிடுவது என்ற திட்டம் சரியாகவே அமைந்தது இந்தப்  பயணத்தில். மதுரையிலிருந்து 2019 , டிசம்பர் 16 இல் கொழும்பில் இறங்கி மூன்றுநாட்கள் இருந்துவிட்டு, 19 இரவில் கண்டியில் தங்கிப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  20  ஆம் தேதி இரண்டு உரைகள். அன்றிரவே மலையகத்தின் நுவரெலியாவில் தங்கல். அடுத்த நாள் நாடகப்பட்டறையும் அதற்கடுத்த நாளில் தேசிய கலை இலக்கியப்பேரவைக்காக நாடகம் பற்றிய கருத்தரங்கம். நல்ல கூட்டம்; நல்ல விவாதம். 23 ஆம் தேதி முழுவதும் பெகுலியோலாவிலிருக்கும் சபரமுகப் பல்கலைக்கழகத்தில் விரிவான உரைகளும் உரையாடலும் எனத் திட்டமிட்டிருந்தோம். அங்கு பணியாற்றும் அப்துல் ஹக் லறீனா, இந்தப் பல்கலைக் கழகம் சிங்களப்பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகம். மாணாக்கர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களோடு நீங்கள் அதிகம் உரையாடவேண்டும் என்று வேண்டியிருந்தார். இரண்டு நாட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதால், ஒரே நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இலக்கியத்தின் அடிப்படைகளில் தொடங்கிக் கவிதை, நாவல், நாடகம், பொதுநிலைத் திறனாய்வு, கோட்பாட்டு அடிப்படையில் பெண்ணியத்திறனாய்வு என ஒன்றைத்தொட்டு ஒன்றாகப் பேசி நகர்த்திச்செல்லவேண்டியிருந்தது.  தொடர்ந்து சுகுமார் ஏற்பாடு செய்த அனாமிகா அஞ்சலிகள். அந்நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் கூடுதலாக மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு டிக்கெட்டைப் போட்டுவிட்டு இடையில் ஏறாவூரில் விளிம்புநிலை மக்கள் – ஒரு பார்வை என்ற பொருண்மையில் ஒரு விவாத உரை.  அங்கிருந்து நேராக யாழ்ப்பாணம். நீண்ட பயணம். அந்த ஆண்டின் கடைசி நான்கு நாட்களும் யாழ்ப்பாணத்தில். முதல் நாள் எந்த வேலையும் கிடையாது. ஓய்வும் பக்கத்தில் இருந்த இடங்களுக்குக் கால்நடையாகப் போனதும் மட்டுமே. அந்த ஓய்வுநாளைப் பயன்படுத்திக் கொண்டு ஜீவநதி இதழுக்காக முரளீதரன் இரண்டு நேர்காணலைச் செய்துகொண்டார். அன்றைய இரவு பேரா. க. சிதம்பரநாதனின் பண்பாட்டு மறுமலர்ச்சியகத்தில் உரையாடலும் உணவுமாகக் கழிந்தது.  அடுத்த (29) நாள் முழுவதும் நாடகப்பட்டறை. பட்டறையில் போராளிகளின் காதலிகள் நாவலை எழுதிய வெற்றிச்செல்வியோடு சந்திப்பு. இரவு உணவுக்கு உடுவில். 30 ஆம் தேதி காரைநகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து சின்னதும் பெரியதுமான கிராமங்களையும் தீவுகளையும் கடற்பரப்பில் விரிந்து கிடந்த எறால் பண்ணைகளையும் மீன்பிடிப் படகுகளையும் பார்த்துவிட்டு வந்து மாலையில் தேசியக் கலை இலக்கியப்பேரவையில் எளிய மக்களுக்கான அரங்கு பற்றிய உரையும் உரையாடலும். முடிந்த பிறகு அன்றிரவே ஐபிசி (IBC) தொலைக்காட்சிக்காக இரண்டு பகுதிகளாக நேர்காணலும்.  வருடக்கடைசி நாளான டிசம்பர் 31 முற்பகலில் யாழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் ரகுநந்தன் தலைமையில் தவச்செல்வியின் ஏற்பாட்டில் சமகால இந்திய நாடகப்போக்கு பற்றிய உரை. யாழ்ப்பாணத்தில் இருந்த நான்கு நாட்களும் ஓரளவு சுற்றிப்பார்க்க முடிந்தது.

அன்றிரவே கிளிநொச்சிக்கு வந்து உரையாடல் வகைப்பட்ட சந்திப்பில் பங்கேற்றேன். தமிழ்க்கவி,ராதிகா பத்மநாதன், சிவக்குமார் போன்றோரைச் சந்தித்ததோடு விரிவான உரையாடலும் புரிதல் மிக்க விவாதங்களும் நட ந்தன. அடுத்த நாள் காலையில் கருணாகரனோடு கிளிநொச்சியைச் சுற்றி வந்தோம். ஏற்கெனவே பார்த்த இரணைமடு அணையின் புதிய நிலை. போர்க்காலத்தை அழித்துப் புதுப்பதிவுகளைப் பரப்பும் கட்ட டங்கள், சாலைகள் என யாழ்ப்பல்கலைக்கழக வளாகத்தின் கிளிநொச்சி வளாகத்திலும், சந்தையிலுமாகக்  கிடந்தன.

அடுத்த மூன்று நாட்களிலும் தங்கல் வவுனியாவில் நல்லதொரு விடுதியில். ஏற்பாடு மருத்துவர் மதுரகன் செல்வராசா. அங்கு இயங்கும் தமிழ் மாமன்றத்தின் தலைவராக இருக்கும் கிருபா நந்தன் குமரனோடு பயணங்கள். போகும்போது தேவாலயத்தின் வாகனம். ஓட்டுநர் நல்ல விவரமானவர். மன்னார் பகுதியின் ஆறு, குளம், ஆவே மரியாள், திருக்கேச்சுரம்  ஆலயங்கள் என ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போனார். அதேபோல் வரும்போது கிருபா நந்தன் குமரன். காலைநடைப் பயணமும் கார்ப்பயணங்களுமாக. மன்னாரிலிருந்து அவர்தான் அழைத்து வந்தார். உள்ளூர் வரலாறு தொடங்கி போர்க்கால நினைவுகளையும் கடந்த கால வரலாற்றையும் சொல்லிச் சென்றார். மன்னாரில் தொ.பத்திநாதனைச் சந்தித்துவிட்டு அனுப்பி வைத்தேன்.

திரும்பவும் தமிழ்நாட்டிற்குக் கிளம்புவதற்கு முந்திய நாளில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளையைப் பற்றிய உரை இருந்ததால் 3 ஆம் தேதி இரவு வ வுனியாவிலிருந்து கொழும்புவிற்குச் சொகுசுப் பேருந்தில் பயணம். தமிழ்ச்சங்கத்தில் தங்கல். இந்தப் பயணத்தில் முக்கியமானதாகச் சொல்லவேண்டியது சந்திப்புகளையே. ஏற்கெனவே அறிமுகமான எம்.எ. நுஃமான், யாழினி, மகேஸ்வரன், மௌனகுரு, யோகராஜா, மைக்கேல் கொலின்ஸ், மகேஸ்வரன், ப்ரியா, கருணாகரன், லறினா, நாடகத்துறை மாணவர்களான சுதர்சன், தவச்செல்வி, கஜீ போன்றவர்களைச் சந்தித்த தைத் தாண்டி முகநூல் வழியாகக் கிடைத்த நட்புகள் பலரைச் சந்திக்க முடிந்ததை மகிழ்ச்சியானதாகச் சொல்ல வேண்டும். முகநூல் வழியாக நான் எழுதும் வாசிப்புக் குறிப்புகள், விமரிசனக் குறிப்புகளைப் பார்த்துத் தங்கள் எழுத்துகளை அனுப்பிக் கருத்துக் கேட்ட இளம் / புதிய எழுத்தாளர்களை- கட்டுபொல் நாவலின் பிரமிளா, கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும் திலகா அழகு போன்றோரைச் சந்தித்துத் தொடர்ந்து எழுதும்படி ஊக்கமூட்டிய வினைகள் முக்கியமானவை. சிங்கள நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான கத்யானா அமரசிங்கவைக் கடைசிநாளில் பார்த்துப் பேசியது புதிய அனுபவம்.

கூடுதல் நாட்கள் பயணத்தை ஒருங்கிணைத்த ஷாமிலாவும் முஸ்டீனும் அவர்கள து மகள் சனத்தும் நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார்கள். முஸ்டீனின் பழக்கம் புதிய தெம்பை அளிப்பதாக இருந்தது.  தேடிவந்து பார்த்தவர்கள் ஒருநேர உணவைப் பரிசளித்து மகிழ்வைத் தந்தார்கள்.  பெரும்பாலும் உணவகங்களைத் தவிர்த்து அழைத்தவர்களின் வீட்டிற்குச் சென்று உணவருந்துவதை விரும்பினேன். அந்த உணவு வயிற்றுக்கு மட்டுமல்ல; செவிக்கும் நிறை உணவு என்பது உணரப்பட்டது. மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் வீடுகளிலும் சேனையூர் விவசாயக்குடும்பத்துச் சமையல் கட்டிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டேன்.

நகரங்கள் கடந்த மூன்று ஆண்டுகள் இடைவெளியில் வேகமாக மாறிவிட்டன. கொழும்பு நகரம் பெரிதாக மாறிவிட்டது. நடைநடையாய் நடந்து சில மணி நேரங்கள்; நாலைந்து கிலோமீட்டர்கள்.

ஓடிஓடி நின்று நகரும்வாகனங்களில் சில மணி நேரங்கள்; நாற்பது ஐம்பது கிலோமீட்டர்கள் பார்த்தபின் தோன்றியது, கொழும்பு நகரம் பெரிதாக மாறிவிட்டது என்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இடங்களும் புதிதாகப் பார்க்கும் இடங்களும் மாற்றத்தைச் சொல்கின்றன. நடந்துள்ள மாற்றங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சுத்தம் கூடியிருக்கிறது. வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. கட்டடங்கள் நிமிர்ந்து எழுந்து உயர்ந்துள்ளன. உறுத்தாத வண்ணங்களில் ஆடைகள் அடைந்து ஆண்களும் பெண்களும் வேகமாகவே நகர்கிறார்கள்.

உலகமயத்தை ருசித்துப் பருகும் இன்பத்தை நகரங்கள் பெரும்போதையாக்கிப் பரப்புகின்றன. ஊற்றித்தரும் மதுக்கிண்ணங்களைப் புறங்கையால் மறுப்பவர்கள் வெளியேறிக் கொள்ளலாம். நகரங்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை. காலையில் தொடங்கும் பரபரப்பு அடங்கும் நேரங்களில் தொடங்குகின்றன சிந்தனைகள்.

கொழும்பு நகர்த்திற்கு இணையாகவே யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் கிளிநொச்சியும் மாறிவிட்டன. 30 ஆண்டுக்காலப் போரின் நினைவுகள் எங்கும் பதிந்து இருக்க க்கூடாது என்ற முன்மொழிவு ஏற்று மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் திட்டமிடலோடு, இங்கு தங்கள் வணிகம் மற்றும் தொழில் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்துகொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் – இந்தியா, சீனா, கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடுகள் பளிச்சென்று தெரிகின்றன. சுற்றுலாவை மையமிட்ட பொருளாதாரத்தை முன்னெடுக்க விரும்புவதை மலையகத்துச் சாலைகளிலும் தங்கும் விடுதிகளிலும் காணமுடிகிறது.

கிராமத்து மனிதர்களும் போர்க்காலத்தை மறந்து வேளாண்மையில் தங்களின் ஈடுபாட்டைக் காட்டி வளர்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மலைவளம், நீர்வளம்,நிலவளம், மீன்வளம் ஆகியவற்றோடு மனிதவளமும் கொண்ட இலங்கைத் தீவு வேகமாக வளர்வதின் வழியாக த்தன் கடந்த காலத்தை மறக்க நினைக்கிறது என்றாலும் தேர்தல் அரசியலும் தன்னலம் சார்ந்த சுரண்டலும் அமைதியான வாழ்க்கைக்கு – தன்னிறைவான வாழ்க்கைக்கு நகர்த்துவதில் விருப்பம் காட்டும் எனச் சொல்ல முடியாது.

இலங்கையில் இருந்த இருபதுநாட்களின் நினைவுகளை ஒரு பருந்துப் பார்வையில் சொல்லியுள்ள இந்தப் பதிவைத் தாண்டித் தனித்தனியாகப் பேசவும் சில நிகழ்வுகளும் நினைவுகளும் இருக்கின்றன. அவற்றைத் தனியாக எழுத வேண்டும்.

அ.ராமசாமி-இந்தியா

அ ராமசாமி

(Visited 231 times, 1 visits today)