‘உடல்கள் பேசுகின்ற பொழுது’(அமைப்புகள் பேசுகின்ற பொழுது)-கீதா ஹரிகரன்-கட்டுரை-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

‘உடல்கள் பேசுகின்ற பொழுது’ [ அமைப்புகள் பேசுகின்ற பொழுது, (When Bodies Speak) ] என்னும் கட்டுரையில் கீதா ஹரிகரன் திரௌபதியைச் சுற்றிச் சுழலும் கதையின் பல வழிகளினூடாக பற்றிப்பிடித்து காவியக்  கதை மற்றும் இந்தியாவில் தொடர்ந்தும் பெண்களின்மீதான ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் அழகிய நாண்கொண்டு இணைக்கின்றார். சமகால கலாசாரம் மற்றும் பெண்அடிமைக்கு எதிரான செயற்பாடுகள் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துவதற்கு தணிக்கையாளர்கள் அவரது நாவை அடக்கக்கூடும்.

000000000000000000

ஒரு பெண் ஆடை அணிந்திருக்கிறாள். பின்னர் துகிலுரியப்படுகிறாள்: எனவே அவள் உடலால் ஒரு பெண் மட்டுமே. ஆனால் கௌரவம் முதல் நாட்டின் பாதுகாப்புவரை அனைத்திற்காகவும் நிகழ்ந்த அதிகாரத்திற்கான அனைத்து யுத்தங்களும் அந்த வெற்றுத்தோலின் பெயராலேயே நடத்தப்பட்டன. இந்த பெண்ணின் உடல் பேசுகின்ற பொழுது என்ன நடக்கிறது? அதன் மொழி என்ன? அத்தகைய மொழி அரசியல் சொல்லாடலிலிருந்து விடுபட்டு தனித்து இருக்க முடியுமா? இங்கே அடர் நிறத்திலான ஒரு பெண் திரொளபதி நிற்கிறாள்.

“ஏனைய பெண்களிடம் உள்ளதைவிட என்னிடம் நிறைய இருக்கிறது. எனக்கு ஐந்து கணவர்கள் அவர்களில் மூத்தவர் நீதிக்கு இளவரசர். ஆனால் நான் நாதியற்ற அநாதையான விதவையைப்போல் அனைவருக்கும் ஒரு காட்சிப்பொருளாக பொதுவெளியில் நிற்கிறேன்” என்று அவள் கூறுகிறாள். அவள் மேலும்:

“பாருங்கள் ஒருவன் என்னுடைய சேலையைப் பிடித்து உருவுகின்றான். மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்” என்று கூறுகிறாள்.

இதிகாசங்களில் பெரிதும் போற்றப்படும் மகாபாரதக் கதையில் தீயிற்கும் பூமிக்கும் மகளாகப் பிறக்கும் திரௌபதி விரைவிலேயே சாபத்திற்கு ஆளாகிறாள். அவள் தனது பழிவாங்கும் எண்ணத்தைப்  பொறுத்து வளர்க்கிறாள். அவள் பூமிக்குரியவள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்தவள். இதே பூமியில் பிறந்த இராமயணத்தின் கதாநாயகி சீதையைவிட மிகவும் மாறுபட்டவள். இந்தியாவில் உள்ள ஏனைய விடயங்களைப் போலவே சமாந்தரம் மற்றும் உருவகங்கள் ஊடாக எமது காலத்திலும் கசிந்தொழுகும் பழங்கதையுடன் தொடங்குவோம். இவை கருத்தியல்களினூடான அடித்தளத்திலிருந்தும் வியாக்கியானங்களிலிருந்தும் தோற்றம் பெறுவதால் கலாசாரத்தினூடாக பலகுரல்களை கவர்ந்திழுத்து  போட்டிப் பிரதேசம் ஒன்றை உருவாக்குகின்றன. தவிர்க்க முடியாதவகையில் பல கலாசாரங்களின் கலவையாக உள்ள ஒரு கலாசாரத்தில் அவைகள் எதிர் விளக்கங்களின் ஊடாக சவால்களைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதத்தில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் உள்ளனர். ஒரு ஆண்டு முழுவதும் அவளுடன் ஒருவர் இருப்பது என்று முறைவைத்து அவர்கள் இணைந்து வாழ்கின்றனர். ஒரு பரிபூரண கணவனை உருவாக்குகின்ற இயல்புகளில் ஒவ்வொருவரிடமும் ஒரு குணாதிசயம் இருக்கின்றது. ஒருவர் அழகானவராக இருக்கிறார். அடுத்தவர் சான்றோராகத் திகழ்கின்றார். மூன்றாமவர் திறமைவாய்ந்த படைத்தளபதியாகத் திகழ்கிறார் நான்காமவர் பத்து கரடிகளுக்குச் சமனான வலிமையைப் பெற்றிருக்கின்றார். அவர்களில் மூத்தவரோ சட்டங்களை அறிந்தவராகவும் அவற்றைப் பின்பற்றி எப்படி ஒழுக வேண்டும் என்பதில் பாண்டித்தியம் பெற்ற நீதிக்கே எடுத்துக்காட்டானவராகத் திகழ்கின்றார். இத்தகைய சிறந்த பண்பையுடையவர் தங்களது எல்லா செல்வங்களையும் வைத்து சூதாடினார். ஏதுமற்ற நிலையில் அவர் தன்னையே வைத்து சூதாடியதுடன் தனது சகோதரர்களையும் அடிமைகளாக்கினார். அத்துடன் நில்லாமல் தங்களின் பகிரப்பட்ட மனைவியையும் சூதாட்டத்தின் மூலம் இழக்கிறார்.

திரௌபதி அரச சபைக்கு அவளது முடியைப்பிடித்து இழுத்துவரப்படுகிறாள். அவள் சாந்தகுணம் படைத்த பாதிக்கப்பட்டவள் அல்ல. “எத்தகைய மனிதன் இவன்”என்று அவள் கேட்கிறாள் “ஒரு விளையாட்டில் தன் மனைவியை பகடையாக வைப்பதா?” என்று அவள் சட்டம்சார்ந்தும் பாதுகாப்பு தேட முயல்கிறாள். அவளது கணவன் ஒரு அடிமை என்றால் அவர் தனக்கே ஒருபோதும் எஜமானாக இருக்க முடியாது. அந்த நிலையில் அவரால் அவரது மனைவியை பணயமாக வைக்க முடியுமா? அவளது புத்திசாலித்தனம் பளபளப்பான தரையை உற்றுநோக்கிய அவளது தவறிழைத்த கணவர் உட்பட அனைத்து பார்வையாளர்கள் மத்தியிலும் எடுபடவில்லை. அவளது வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது. அவளது உடல் மட்டுமே எஞ்சியுள்ளது. டபிள்யு.டி. மொன்றோ எழுதிய இந்திய கடவுள்களும் கதாநாயகர்களும் என்னும் வண்ணச் சித்திரக்கதைக்காக எவிலின் பொல் அவர்கள் திரொளபதி தனது அறையிலிருந்து இழுத்துவரப்படும் காட்சியை வரைந்துள்ளார். அந்தப் புத்தகத்திற்கான விளம்பரம் ஒன்றில்:

Private Collection / Bridgeman images. Evelyn Paul, Draupadi Dragged from Her Chamber, 1912, color lithograph from Stories of Indian Gods and Heroes, by W. D. Monro. An ad for the book claimed Monro’s tales were “thoroughly infused with all the glamour and warmth of color of the East.”
Private Collection / Bridgeman images.
Evelyn Paul, Draupadi Dragged from Her Chamber, 1912,
color lithograph from Stories of Indian Gods and Heroes,
by W. D. Monro. An ad for the book claimed Monro’s tales
were “thoroughly infused with all the glamour and warmth
of color of the East.”

“மொன்ரோவின் கதைகள் கிழக்கின் வண்ணத்தையும் கவர்ச்சியையும் தெளிவாக உடலில் ஊசி ஏற்றுவதுபோல் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திரௌபதியின் சேலையைப் பற்றியிருப்பவன் அதனை அவிழ்க்கத் தொடங்குகிறான்.  திரௌபதி அவனிடமிருந்து விடுபட போராடுகிறாள். பசுவினை மேய்ப்பவரும் பெண்களைக் கவர்ந்திழுப்பதில் வல்லவருமான கடவுள் கிருஷ்ணனை அவள் தொழுகிறாள். ஒரு அதிசயம் நிகழ்கிறது. முரண்நகையாக பெண்களின்மீது மோகம்கொண்ட கடவுளிடமிருந்து தனது உடலை மறைப்பதற்கான ஆடையைப் பரிசாகப் பெறுகிறாள். ஒவ்வொரு ஆறு கெஜத்திற்கும் ஒரு நிறமாக அவளது சேலை வளர்கிறது. திரௌபதியைத் துகிலுரிப்பவர் கணக்கிலடங்கா கெஜக்கணக்கான சேலை வருவதைக் கண்டதும் சோர்வடைகிறார்.

ஆண் பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இருந்தாலும் திரௌபதியின் உடல் மறைக்கப்படுகிறது. அவள் தன்னையிட்டும் நீதிமன்றத்தையிட்டும் சில உறுதிமொழிகளை எடுக்கிறாள். தன்னை இழுத்துவரச் செய்தவனின் இரத்தத்தைக் கொண்டே தனது முடியை கட்டுவேன் என்றும் அதுவரை தலைவிரிகோலமாகவே இருப்பேன் என்றும் உறுதிபூணுகிறாள். கோபமுற்றிருக்கும் காளியைப்போன்றும் சீற்றம்கொண்ட ஆற்றைப் போலவும் தனது கூந்தலை காற்றில் பறக்கவிடுவாள். பின்னர் கோபமுற்றிருந்தாலும் அவள் தனது கணவர்களின் செல்வத்தை மீட்டெடுக்கிறாள்.

இன்றைய கட்டமைப்பில் திரௌபதியை நாம் ஒரு வரம்பெற்ற பெண்ணாகக் கருதலாம் ஆனாலும் அவள் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து செயற்படும் ஒரு பெண். திரௌபதியை ஒரு கிராமத்து கடவுளாகப்  பல நாடகங்களிலும் திரையிலும் ஓவியத்திலும் கவிதையிலும் புதினங்களிலும் சித்திரிப்பதன் ஊடாக இக்கதை இன்றளவும் பல வழிகளில் உயிர்த்திருக்கிறது. ஒரு சிக்கலான மரபு பற்றியே மகாபாரதத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் கூறப்படுகிறது. இத்தகைய கூறல்களும் மீளக்கூறல்களும் போரை வரையறை செய்யும்போதோ நியாயப்படுத்தும்போதோ தோல்வியடையும்போதோ அல்லது வெற்றிபெறும்போதோ பெண்ணின் உடலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் யுத்தச்சூழலில் எல்லாநேரங்களிலும் பொருந்துவதில்லை.

திரௌபதியின் கதையும்கூட ஒரு அமைதியான காலப்பகுதியிலேயே உயிர்வாழ்கிறது அது சமகால வியாக்கியானங்களுக்கான ஒருவகையான முன்னோடி. இத்தகைய சவால் “மரபு” அல்லது “இந்திய கலாசாரம்” என்ற பெயரில் ஒரு பெண்ணை நிர்வாணமாக மேடையின் நடுவில் முன்னிறுத்துவதற்கும் – ஒரு பெண்ணின் உடல் அதிகாரப்போட்டிக்கு சாதகமாக அமைவதற்கும் அனுமதியளிக்கிறது. பிரபல வங்க எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான மஹேஸ்வேதா தேவியின் கதையில் திரௌபதியின் உடலானது பாதிக்கப்பட்ட ஒருவரே பாதிக்கப்பட்டதை எதிர்ப்பதுபோன்று சித்திரித்திருப்பது ஒரு சிறந்த உதாரணம்.

“திரௌபதி 1978ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் புகழ் வீழ்ச்சியடைவதற்குக் காரணமான அவசரகால நிலை விலக்கப்பட்டபோது வெளிவந்தது. (Gayatri Chakravorty Spivak’s translation appeared in the winter issue of Critical Inquiry in 1981.)  கலாசார அரசியலில் நீண்ட வியாக்கியானங்களுடனான இக்கதை ஏன் முக்கியத்துவம் பெறவேண்டும்?

மஹாஸ்வேதாவின் திரௌபதி யதார்த்தமானது அவள் ஒரு இளவரசி அல்ல ஒரு பழங்குடிப்பெண்- ஆதிவாசி. அவளது வாழ்க்கைத் தேவையை வரையறுப்பதற்கு ஐந்து கணவர்கள் இல்லை. அவளுக்கு பழங்குடியினரின் மாண்பினையும் உரிமைகளையும் காப்பதற்காகப் போராடும் ஒரேயொரு கணவர் மட்டுமே இருந்தார். இந்த திரௌபதிக்கு தனது பெயரை சமஸ்கிருதத்தில் சொல்லக்கூட முடியாது ஆனால் கொரில்லா போராளியான அவளுக்கு திரௌபதி என்பதைவிட வட்டாரவழக்கில் ‘தோப்தி’ என்ற பெயரே பொருத்தமாக உள்ளது. ஏனைய பல ஆதிவாசிகளைப் போலவே அவளது கணவனும் விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பதிகாரியினால் இடதுசாரி தீவிரவாதிகள் என்கவுண்டர் முறையில் கொல்லப்படுவதுபோல் கொல்லப்பட்டார்.

ஒட்டுமொத்தத்தில் அரசின் அனுமதியுடன் இடம்பெற்ற இத்தகைய கொலைகளின் மூலமாக என்கௌன்டர் என்னும் பெயர்ச்சொல்லானது கௌன்டர் என்னும் வினைச்சொல்லாக மாறி பின்னர் கௌண்டர் என்று இந்தியமயப்படுத்தப்பட்டது. இது 1971இல் நடைபெற்றது. “ஆயுதந்தரித்த பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கை” ஒன்றில் ஒரு நிலாச்சுவான்தார் கொல்லப்பட்டார் என்றும் வரட்சிக்காலப் பகுதியில் பழங்குடியினர் மேல்சாதியினரின் கிணறுகளை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் கூறி கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுற்றிவளைக்கப்பட்டனர். வறண்ட தொனியில் அமைந்துள்ள அவளது உரையைக் கொண்டு முழுக் கதையையும் எழுதும் மஹாஸ்வேதா அழுத்திச் சொல்ல வேண்டிய இடங்களில் ஆங்கிலத்திலிருந்து வங்கமொழிக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிறார்.

“ஜார்கானியின் காட்டுப் பிரதேசத்தில் நடவடிக்கை தொடர்கிறது. அது தொடரும். அரசாங்கத்தின் முதுகில் அதுஒரு கரும்புள்ளி…. தோப்தி மெஜ்ஹெனைப் பிடியுங்கள். அவள் ஏனையோரைப் பிடிப்பதற்கு எமக்கு வழிகாட்டுவாள்.”

திரௌபதி காட்டிற்குள் கவனமாக நடக்கிறாள். அவளது இடையில் ஒரு துணியில் முடித்துவைத்த பழையசோறு தொங்குகிறது. அவளது தலை அரிப்பெடுக்கிறது. தலையில் மண்ணெண்ணெயைத் தடவி பேன்களைக் கொல்ல நினைக்கிறாள். ஆனால் மண்ணெண்ணெய் வாசனை தனது இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று அஞ்சுகிறாள். அவளது முன்னெச்சரிக்கையையும் மீறி அவள் “கைதுசெய்யப்படுகிறாள்” பொலிஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அந்த என்கவுண்டர் நிபுணரான பொறுப்பதிகாரி சேனநாயக் இராப்போசனத்திற்குப் போகுமுன் தனது உதவியாளர்களிடம் “அவளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்…. தேவையானவற்றைச் செய்யுங்கள்…” என்று சொல்கிறான்.

அது இரவு நேரம். அவளது கைகளும் கால்களும் கட்டப்பட்டுள்ளன. அவள் நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு ஏராளமானவர்கள் அவளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துகின்றனர். நின்றிருக்கும் அவளது உடலின்மீது “சதையினால் ஆன பிஸ்டன்கள் எழுவதும் வீழ்வதும் எழுவதும் வீழ்வதுமாக இருக்கின்றன… அவளது முலைகள் மூர்க்கத்தனமாக கடிக்கப்படுகின்றன. முலைக்காம்புகள் கிழிகின்றன. “காலையில் பெரிய அதிகாரி சேனநாயகவின் உத்தரவிற்கமைய அவளை அவனிடம் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு ஒரு பிரச்சினை.

திரௌபதி தன்னை கழுவிக்கொள்வதற்கோ அல்லது ஆடை உடுத்துவதற்கோ மறுத்துவிடுகிறாள். சூரிய வெளிச்சத்தில்இ “நிமிர்ந்த தலையுடன் நிர்வாண கோலத்தில் திரௌபதி வருவதை சேனநாயக் பார்க்கிறான். காவலர்கள் பதற்றத்துடன் பின்தொடர்கின்றனர்.” “திரௌபதி அவன் முன்னே நிர்வாணமாக நிற்கிறாள். தொடையும் பெண்குறி முடியும் உறைந்த இரத்தத்துடன் குலாவுகின்றன. இரண்டு முலைகள். இரண்டு காயங்கள். திரௌபதியின் கருத்த உடம்பு அவனை நெருங்குகிறது. அவள் சிரிக்கும்போது அவளது உதடுகளிலிருந்து இரத்தம் வழிகிறது. தனது உள்ளங்கையால் உதிரத்தைத் துடைத்தபடியே அவள் நடுங்கவைக்கும் குரலில் சேனநாயக்கை நோக்கி:

“நீ என்னை உரிக்கலாம். ஆனால் நீ எனக்கு எப்படி மறுபடியும் ஆடை உடுத்திவிடுவாய்? நீ மனிதனா?” என்று கேட்கிறாள். சேனநாயக்கின் தூய்மையான வெள்ளை சட்டையின்மீது தனது வாயிலுள்ள இரத்தத்தைத் துப்பி: “வா……… என்னை அனுபவி…..- வா என்னை அனுபவி?” என்று அழைக்கிறாள். அவனை தனது காயமடைந்த மார்பகங்களால் தள்ளுகிறாள். தனது சேவைக்காலத்திலேயே சேனநாயக் முதன்முறையாக “ஒரு நிராயுதபாணி இலக்கைக் கண்டு மிகவும் பயப்படுகிறான்.” ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பு பேசினால் என்ன ஆகும்?

திரௌபதி நினைத்த மாத்திரத்தில் தலைவராகிவிடவில்லை. மாறாக, அவள் தனது காயமடைந்த உடலையே ஆயுதமாக்கியதால் சக்தியின் ஆதாரமாக உருவெடுக்கிறாள். அந்த குறுகிய மின்னல் வெளிச்சத்தில் சிதைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் “நிராயுதபாணியான இலக்கு” (“unarmed target,”) அவளைக் கொள்ளையிட்டவர்களை அச்சுறுத்துகிறது. அது சேனநாயக்கின் மனிதத்தன்மையை அவனது அதிகாரபலத்தை அச்சுறுத்துகிறது. ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பு பேசுகையில் அதன் மொழியானது  பாதிக்கப்பட்ட உடலை பேசும் உடலாகவும் போரிடும் உடலாகவும் மாற்றிவிடும். இனியும் அவளது உடல் வலிமையான ஆணினால் வெட்டப்படக்கூடியதாக மட்டும் இருக்காது அவளது உடலே கல்வெட்டு செய்யும் சிற்பியாக மாறும். இதற்குமுன் இந்த மொழியை நாம் வீட்டிலோ அல்லது வீதிகளிலோ கேட்டிருக்கிறோமா? அது பிரபல்யமடைய வேண்டும். இருப்பினும் ஏதோ ஒன்று ஏற்றுக்கொள்ளத்தக்க மொழியினின்றும் அதனை சவாலுக்குட்படுத்துகிறது. சிலவேளைகளில் அது துணிச்சலானதாகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருப்பதும் அதற்குக் காணமாக இருக்கலாம்.

திரௌபதியின் கதை கிழக்கின் வங்க மொழியிலிருந்து வடகிழக்கின் மணிப்பூர்வரை பயணித்துள்ளது. காஷ்மீர் போன்ற வடகிழக்கு பிரதேசம் “பாதுகாப்புப் படைகளின்” ஒன்றிணைந்த செயற்பாடுகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமைகளினால் நீண்டகாலமாக துன்பப்படுகிறது. அவர்களின் அதிகாரப்  பிரயோகம் “என்கவுண்டர்” என்ற பெயரில் மக்களைக் கொல்லுதல், “தடுப்புக்காவலில் வைத்தல்” அல்லது பெண்களை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்துதல் என்பவை ஆயுதப் படையினருக்கு சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுவதால் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்றது.

உதாரணமாக மிகவும் அருவருக்கத்தக்க ஆயுதப்படைகளுக்கான விசேட அதிகார சட்டம் ஏஎவ்எஸ்பிஏ என்று பரவலாக அறியப்பட்ட சட்டவிதியானது “குழப்பப் பிரதேசங்கள்” என்று வரையறுக்கப்பட்டு ஆயுதப்படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்குகிறது. 1950களிலிருந்தே வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய விசேட அதிகாரங்கள் ஏதேனும் ஒருவடிவத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடல் போன்ற நடவடிக்கைகள் எப்பொழுதும் எங்கேயும் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்துவதாகவே அமைகிறது. அதாவது உயிர் உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கும் அல்லது அதனால் சம்பவிக்கும் மரணங்களுக்கு மத்தியிலேயே மக்கள் நிரந்தரமாக வாழ்கின்றனர். இதில் எப்பொழுதும் அதிகளவானோர் பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களின் உடல்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அல்லது கொலைசெய்யப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

திரௌபதியின் கதை மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலாவைச் சேர்ந்த அரங்க இயக்குநர் ஹெயிஸ்நாம் கன்ஹய்லாலிடம் கையளித்ததினூடாக தனக்கான பாதையை அமைத்துக்கொண்டது.

அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த நாடக தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற கன்ஹைலால் மணிப்பூரில் கலாச்சாரம் மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டிற்கும் முக்கியமான ஒரு தொகுதியில் ஏற்கனவே பணியாற்றியிருந்தார் ‘நுபி கேய்தெல்’ அல்லது “இம்பாலில் பெண்களின் சந்தை” என்னும் நாடகத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அவர் அரங்கேற்றியிருந்தார். எளிமைஇ மௌனம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சக்தியை நுட்பமான கலாசார ஆக்கத்தினூடாக வெளிப்படுத்தும் அவாவைக் கொண்ட ஒரு குழுவைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகவும் கன்ஹைலால் செயற்பட்டுள்ளார்.

“நாம் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் ஒரு புதிய உடற் கலாசாரத்தைப் படைப்பதேயாகும்” என்று கன்ஹைலால் ஒருமுறை கூறியுள்ளார். அவர் தான் கூறிய விடயம் என்ன என்பதை திரௌபதிக் கதையைத் தயாரித்ததன் மூலம் வெளிக்காட்டியுள்ளார். நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் திரௌபதியாக நடிக்கும் கன்ஹைலாலின் மனைவியும் நடிகையுமான சாபித்திரி தனது ஆடைகளை ஒன்றன் பின் ஒன்றாக கழற்றினார். தன்னை வன்புணர்ந்தவர்களுக்கு எதிரான அவளது போராட்டத்தை ஏதோவொரு விதத்தில் மணிப்பூரின் பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே அழுத்தம் திருத்தமாக புரியவைக்க வேண்டும் என்பதாகவும் விசேட அதிரடிப்படையின் ஆதரவுடன் செயற்பட்ட இராணுவத்தினர் எந்தளவிற்குத் திறமையானவர்கள் என்பதையும் அவர்கள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள்.

அந்த நாடகம் 2000ஆம் ஆண்டு மணிப்பூரில் இரண்டுமுறையும் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பலமுறைகளும் மேடையேறியுள்ளது. அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய உறுதிமிக்க அரசியல் நிலைப்பாட்டை அரங்கிற்கு எடுத்துச் செல்வது சாத்தியமாக இருந்ததா? மணிப்பூரில் அந்த நாடகம் சிலவற்றைப் பேசியது. அது ஏனையவர்களுக்கு வலுவூட்டியது அதனால் அது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது. இரண்டுமுறை நாடகத்தை நடத்தியதன் பின்னர் நாடகத்தில் நிர்வாண காட்சியைக் கைவிடும் கோரிக்கைக்கு செவிமடுப்பதைவிட நாடகத்தையே கைவிடுவது என்று நாடகக்குழு தீர்மானித்துள்ளதாக கன்ஹைலால் எழுதினார். நான்கு ஆண்டுகளின் பின்னர் அந்த நாடகம் தீர்க்கதரிசனம் நிறைந்ததாகப் போற்றப்பட்டது. கன்ஹைலால் ஒரு தீர்க்கதரிசியாக உள்ளூர் செய்தித்தாள்களில் போற்றப்பட்டார். 2004ஆம் ஆண்டு ஒரு இலக்கிய காவியத்தையும் குறுநாவலையும் சமரசம் செய்துகொள்ளாத நாடகத்துறையையும் நிஜவாழ்க்கையில் ஒருங்கிணைத்தது.

திரௌபதியின் கதை முழுப்பிரதேசத்திலும் ஒரு சுற்றி சுற்றி வந்தது. சாதாரணப் பெண்கள் கோபத்துடன் வீதிகளில் வாழ்கின்றனர். அவர்களது உடல்களே அவர்களின் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்கின்றது. அசாம் துப்பாக்கி இராணுவத்தினரின் (Assam Rifles army) )மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பன்னிரண்டு நடுத்தர வயதுப்பெண்கள் பட்டப்பகலில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றனர். இவ்வாறாக ஒரு புதினம் நிஜவாழ்க்கையை எதிர்கொண்டது. முதலில் திரௌபதியின் கதை வேறொரு பெண்ணின் கதையைத் தழுவியிருந்தது.

A group of women stripped naked in broad daylight to protest against the brutality of the Assam Rifles army contingent (July 2004).
A group of women stripped naked in broad daylight to protest against the brutality of the Assam Rifles army contingent (July 2004).

தங்ஜகம் மனோரமா என்றழைக்கப்படும் முப்பத்து நான்கு வயதுப் பெண் அசாம் துப்பாக்கிப் படையினரால் அவளது உடலமைப்பின் காரணமாக மனோரமா தேவி என்ற ஹென்தோய் என்று ஜூலை 10ஆம் திகதி 2004ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டார். அவர் ஒரு ஆயுதப் போராளி. அபிவிருத்தி அடைந்த வெடிபொருள் சாதனங்களைக் கையாள்வதிலும் தயாரிப்பதிலும் (“IEDs or improvised explosive devices.”)  வல்லவராகத் திகழ்ந்தார். “இரவு நேர தேடுதல் நடவடிக்கையின்போது” அசாம் றைபிள்ஸ் பணியாளர்கள் அவளது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அவளைப்பிடித்து வீட்டை விட்டு வெளியே முற்றத்திற்கு இழுத்துவந்தனர். அவரது தாயும் சகோதரர்களும் தாக்கப்பட்டதுடன் வீட்டை வெளியில் வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களால் ஜன்னல் வழியாக மனோரமாவைப் பார்க்க முடிந்தது. அவள் கன்னத்தில் அறைந்து முடியைப் பிடித்து இழுத்து நிலத்தில் தள்ளினான். மனோரமா போராடினாள். சீருடை அணியாத ஒரு மனிதன் கத்தியை எடுத்து சாரத்தையும் ஸ்கர்ட்டையம் ஒத்த ஆடையின் கீழ்ப்பகுதியில் செருகினான். அவளது ஆடை இடுப்பிலிருந்து நழுவி முழங்கால்களை அடைந்தது. அவளது நீண்ட மேல்சட்டையைப் பிடித்து இழுத்து பொத்தான்கள் கழற்றப்பட்டன. இவ்வளவு செயற்பாடுகளும் ஆயுதங்கள் குறித்தும் அவை எங்கே பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன என்பது அவளுக்குத் தெரியுமா என்பதை கேட்டபடியே நடந்தன. அவர்கள் அவளை விடியற்காலை 3.30மணியளவில் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். குடும்பத்தாரிடம் அவளை தடுப்புக்காவலில் வைப்பதற்காக அழைத்துச் செல்கிறோம் என்று கூறினர். அவள் அப்பொழுதும் உயிருடன் இருந்தாள். நான்கு மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கிச் சன்னம் ஏறிய அவளது உயிரற்ற உடல் அவளது வீட்டிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அவளது உடலில் சிராய்ப்பு காயங்களும் விந்தின் அடையாளமும் இருந்தன. அவளது இடது தொடையின்மீது ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. அவளது பிறப்புறுப்பில் பதினாறு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.

மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் அவர்களின் இதயத்தில் வலியேற்பட்டிருந்தது அவர்களின் முகங்கள் கண்ணீரால் நனைந்தன. அதன் பின்னர் ஏஎவ்எஸ்பிஏவை கலைக்கச் சொல்லி வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் பேரணிகளை நடத்தினர். கோபம் பொங்கியெழுந்தது. அது அனைத்துப் பகுதிகளிலும் கொந்தளிப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. 2004ஆம் ஆண்டு காலை 7மணியளவில் சில பெண்கள் நுபி ஸமாஜ் அலுவலகத்தை அடைந்தனர். அவர்கள் தமது உள்ளாடைகளை அகற்றி பின்னர் மீண்டும் சாரம் போன்ற ஆடையையும் வெண்ணிற மேலாடையையும் அணிந்தனர். ஒரு பதாகையைக் கையிலேந்தி அசாம் றைபிள்ஸ் பணியாளர்கள் முகாமிட்டிருந்த கங்லா கோட்டையை நோக்கி நடந்தனர். மற்றொருபெண் அவர்களை கங்லா கோட்டையின் மேற்குப்புற நுழைவாயிலில் சந்தித்தார். காலை பத்துமணியளவில் கடமையிலிருந்த அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. நிறைய பெண்கள் நுழைவாயிலின் அருகில் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள்? என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். சடுதியில்இ எவ்வித எச்சரிக்கையும் இன்றித் திரண்டிருந்த பெண்களில் இருந்து பன்னிரண்டு இமாக்கள் (Imas)  தாய்மார்கள் தமது ஆடைகளைக் களைந்தனர். பாரம்பரிய முறைப்படி துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் தலைவிரிகோலத்துடன் இருந்தனர்.

அவர்கள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகையில் “இந்திய இராணுவமே: எங்களை அனுபவி.” என்று எழு தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களை அங்கிருந்தவர்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு முதலில் தயக்கத்துடனும் பின்னர் உரத்த குரலிலும் அவர்கள் ஏ இந்திய இராணுவமே…… “எங்கள்மீது பாலியல்வன்புணர்வுகொள்இ எங்களைக் கொலைசெய்!” என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட்டனர்.

அதில் ஒரு பெண் “நாங்கள் அனைவரும் மனோரமாவின் அன்னைகள். வா…… எங்களுடன் உடலுறவுகொள் முறையற்ற விதத்தில் பிறந்தவர்களே!” என்று கத்தினாள். மகாபாரதத்தில் வரும் திரௌபதியைப் போன்று தலைவிரிகோலத்துடனும் மஹேஸ்வேதா மற்றும் கன்ஹைலாலின் தோப்தியைப் போன்று நிர்வாணத்துடனும் உடலாலும் குரலாலும் அவர்கள் முழக்கமிட்டனர். காவியத்திலும் கதையிலும் நாடகமாகத்திலும் நடந்தவை பட்டப்பகலில் இந்தியநாட்டின் ஒரு வீதியில் நிஜவாழ்விலும் நடைபெற்றது.  திரௌபதி தொடர்ந்து இடம்பெறுகின்ற சங்கிலித்தொடரான கதைகள்இ திருப்புமுனைகள் மற்றும் புதிய கற்பனைகள் உருவகங்கள் மற்றும் நிஜவாழ்க்கை ஆகியவற்றுடன் காலந்தோறும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காக நீதிவேண்டி போராட முழுமையாக ஒரு வலம் வந்தாள். காவியங்கள் கதைகள் மற்றும் உண்மைச்சம்பவங்களின் வரலாறு போன்றே திரௌபதியின் மரபும் அனைவருக்கும் சொந்தமானது. ஆனால் புதிய வழிகளில் திரௌபதியை சித்திரிப்பது ஏற்படுத்துகிறது. இந்தச் சண்டைக்கு ஒரு முடிவு இருக்காதுபோல் தெரிகிறது. திரௌபதியின் கதை அவளது சவாலை மலினப்படுத்தி அதனை அர்த்தமற்றதாக்கச் செய்பவர்களுக்கு எதிராக இன்னமும் போராடவேண்டியுள்ளது.

2010ஆம் ஆண்டு புகழ்பெற்ற இந்திய வண்ண ஓவியரான எம்.எவ்.ஹசைன் தனது தொண்ணூற்று நான்கு வயதில் இந்தியாவைவிட்டு வெளியேறினார். அவர் தனது இந்தியக் குடியுரிமையை இரத்துசெய்துவிட்டு கத்தார் நாட்டின் குடிமகனானார். இஸ்லாமியரான அவர் இந்துமத கடவுள்களையும் குறியீடுகளையும் வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தார். அவரது ஓவியங்கள் பெண்களை ‘அவமதிப்பதாக’ இந்துமதத்தின் பாதுகாவலர்களாக தமக்குத் தாமே முடிசூட்டிக்கொண்டவர்கள் அவற்றின்மீது தாக்குதல் நடத்தினர். இத்தகைய குழுக்கள்இ ஒரு வலதுசாரி சிந்தனையுடவர்களாக வந்ததுடன் அந்த ஓவியரை அச்சுறுத்தி அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடுத்தனர். அவர் தனது படைப்புக்களை காட்சிப்படுத்திய அரங்குகளையும் அவர்கள் அழித்தனர். அதற்கு ஹசைனின் ஓவியங்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாக அவர் வரைந்த “பாரதமாதா”வின் முழு உருவ வண்ண ஓவியம் காரணமாக இருந்திருக்கலாம். அதில் அவர் ஒரு பெண் (பாரதமாதாவை) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  சித்திரித்திருந்தார்.

திரௌபதியின் இரண்டு வண்ண ஓவியங்களுக்காகவும் அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார். திரௌபதியை (1971) ஓங்கி உயர்ந்து நிற்கும் பெண்ணாகவும் அவரைச் சுற்றி அவளது வாழ்க்கையைக் கட்டுப்படுத்திய  ஆண்கள் சிறிய உருவங்களுடன் நிற்பதாகவும் வரைந்திருந்தார். அதே ஆண்டில் திரௌபதி தாயக்கட்டையின்மீது நிற்கிறாள் (Draupadi on Dice (1971) ஓவியத்தில் மகாபாரதத்தின் மையக்கருவான திரௌபதியும் அவளது அவலக் குரலும் தாயக்கட்டையால் சூழப்பட்டுள்ளதாக மற்றொரு ஓவியத்தையும் வரைந்திருந்தார். அதே காலப்பகுதியில்இ தெலுங்கு எழுத்தாளரான யார்லாகட்ட லக்சுமிக்கு திரௌபதி நாவலுக்காக சாகித்திய அகதமி விருது அறிவிக்கப்பட்டது. அந்த நாவல் திரௌபதியை அநாகரிகமானவளாக்கிவிட்டது என்று கூறி இந்து ‘ஆர்வலர்கள்’ குழு ஒன்று நூலாசிரியர் மேடையில் இருந்தபொழுது அவர்மீது காலணிகளை எறிந்தது.

பிரதிபா றே என்னும் ஒரிய எழுத்தாளர் 1984ஆம் ஆண்டு யஜ்னாசேனி என்னும் நாவலை வெளியிட்டார். அதன் தலைப்பு (‘தியாகத் தீ பிறந்தது’ – “born of the sacrificial fire”) திரௌபதியின் பல பெயர்களில் ஒன்றைக் குறிப்பதாக அமைந்தது. விருதுபெற்ற அந்த புதினம் திரௌபதியின் பக்கத்திலிருந்து மகாபாரதக் கதையை கற்பனை செய்கிறது. ‘ஒரு மகனைப் போல’ கவிதை எழுதிஇ கேள்விகள் கேட்டு வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஐந்து கணவர்களை மணமுடிப்பதற்காகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவும் அவர்கள் போகுமிடமெல்லாம் செல்வதற்காகவும் – அவர்களது தர்மத்திற்காகவும் மட்டும் வாழ்ந்ததைப் பின்தொடர்கிறது. சில தசாப்தங்களுக்குப் பின்னர்இ 2013இல் வலதுசாரிஇ மெதுவாசகர்கள் அனைவரும் றேயின் போராளியும் போர்க்குணமுமிக்க உயிரோடிருக்கும் அதீத மானுடமான திரௌபதிக்கு எதிராகக் குரலெழுப்பினர் 2013 ஆம் ஆண்டு மார்ச்மாதம் உள்;ர் செய்தித்தாளான பயனியரில் யஜ்னசேனி திரௌபதியை அவமதித்துவிட்டார் என்று பிரசுரித்திரந்தமை இத்தகைய உச்சகட்ட பிரதிபலிப்பிற்கான உதாரணமாகும். நவீன பெண்ணியவாதி திரௌபதி…. ஒரு கோபக்கணல் மேலும் அனைத்து சகோதரர்களையும் திருமணம் செய்துகொள்வதற்கான முன்மொழிவு என்பது எல்லைமீறிய மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்…. திரௌபதி கதாபாத்திரம் ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட ஒன்று என்பதுடன்இ எனவே ஒரு எழுத்தாளருக்கு அதனை மீண்டும் வடிவமைப்பதற்கோ அல்லது அதனுடன் விளையாடுவதற்கோ எத்தகைய சுதந்திரமும் இல்லை… ஒரு முழுமையான இந்தியப் பெண்ணாக அவள் தனது கணவர்களுக்கு மனதாலும் உடலாலும் சொல்லாலும் பாத்தியப்பட்டவள். திரௌபதி இந்தியப் பெண்ணின் மகுடத்தை அலங்கரிக்கும் ஒரு அலங்கார ஆபரணமாகவே திகழ்கிறாள். நம்பிக்கையான மனைவியின் இதயத்தில் அவளது கணவன் கடவுளைவிட அதிகமான இடத்தைப் பிடித்திருக்கிறான். தற்பொழுது திரௌபதி புதிய வகைக்காவலர்களான சிந்தனாவாத பொலிசாரினால் தீண்டத்தகாத ஒரு சிலையாக மாற்றமடைந்துள்ளாள்.

வலதுசாரி சிந்தனையால் வழிநடத்தப்படுகின்ற இந்து தேசத்தை விரும்பும்இ ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பைப் போசகராகக் கொண்ட இத்தகைய புதிய கலாசார நிபுணர்களைப் பொறுத்தவரை எதிர்த்துக் கேள்வி கேட்கும் திரௌபதியின் உத்வேகத்தை நசுக்க வேண்டும். ஊக்கமளிப்பது எத்தகைய வலிமையுடையது என்பதை அறிந்ததால் அவர்கள் அச்சமடைந்திருக்கக்கூடும். ஒரே கதையை பலமுறைகளில் சொல்வது அவர்களுக்கு நிச்சயமாக ஒவ்வாமைதான். ஆனால் இந்தியாவைப் போன்ற பன்மைத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கலாசார பரிவர்த்தனை தவிர்க்க முடியாதது. வலதுசாரி சிந்தனை அதிகாரத்தைப் பிரயோகிக்கும் தளமாக – புதினத்திலோ அல்லது நிஜவாழ்க்கையிலோ – பெண்ணின் சமூக அங்கீகாரத்தை அல்லது அவளது உடலை சவாலுக்குட்படுத்துவதற்கு கற்பு என்னும் கச்சையைக் கட்ட விரும்புகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் எமது சொந்தக்கதையை உருவாக்குவதை எதிர்க்கிறார்கள் எமது இன்றைய வாழ்க்கையின் அர்த்தத்தையே குழிதோண்டிப் புதைக்கிறார்கள். சிந்தனை பொலிசார்கள் ஒரு பெண் ஐந்து கணவர்களைத் திருமணம் செய்ய வேண்டியேற்பட்டதையும் அவள் பொதுவெளியில் துகிலுரியப்பட்ட நிலையிலும் அவளிடம் கற்பிதத்தில் கற்பை விரும்புவதில் ஆச்சரியமில்லை. அத்தகைய கதை பல்வேறு வகையில் வாசிக்கப்படுவதை அவர்களால் எப்படி தணிக்கை செய்ய முடியும்? அந்தப் பெண்ணை கற்பின் தெய்வமாக மாற்றிவிடுவது.

ஒரு மனிதனாக ஒரு உண்மையான பெண்ணாக ஒரு நாவலிலோ அல்லது ஒரு கவிதையிலோ அல்லது ஒரு ஓவியத்திலோ கூட அவளை அனுமதிப்பது கலையிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ இருந்தாலும் இலட்சிய இந்து பெண்ணின் கடவுளாக கணவன் மீது தொடர்ந்து இருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கலாம். திரௌபதியையும் அவளது வழித்தோன்றலான தோப்தியையும் கிண்டல் செய்வது தொடர்கிறது. வலதுசாரி இந்திய அரசாங்கம் செப்டெம்பர் 2016இல் மகாஸ்வேதா தேவி மரணித்த வேளையில் அவருக்கு முழுமையான அஞ்சலியைச் செலுத்தியது. பின்னர் எப்பொழுதும்போலவே அது புதிய கலாசார காப்பாளர்களுக்கு வியாபாரமாகிப் போனது.

ஹரியானா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் மாணவர்களும் மகேஸ்வேதாவின் “திரௌபதி” கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால் வலதுசாரிகள் அதிகாரி முதல் தோட்ட வேலை செய்பவர் வரையிலான ரௌடிக்கும்பல் “தேசபக்தயையும்” “தேசவிரோதத்தையும்”  தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக எண்ணினர். மாட்டுக்கறி உண்பது தேசவிரோதம். காஷ்மீரில் அல்லது வடகிழக்கில் இராணுவ அடக்குமுறையை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவளிப்பது தேசதுரோகம். பாகிஸ்தானை எதிர்க்காமல் இருப்பது தேசவிரோதம். பெண்கள் அடங்க மறுப்பதும் தேசவிரோதமே.

மஹேஸ்வேதாவின் கதையைத் தத்து எடுத்துக்கொண்ட ஹரியானா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அகில பாரதிய வித்தியார்த்தி பரிதத்தை (Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) ஐச் சேர்ந்த வலதுசாரி மாணவர் குழு நாடகத்தின்மீதும் அதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதும் கதை இராணுவத்தினரை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி தாக்குதல் நடத்தியது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகவாவது அதனை ஒருமுறையேனும் வாசித்திருப்பார்களா என்பதே சந்தேகம். ஆனாலும் அவர்கள் கதையை மாற்றுவதில் வெற்றியடைந்தனர். எனவே அது திரௌபதியைப் பற்றியதாகவோ தோப்தியைப் பற்றியதாகவோ இருக்கவில்லை. அது இராணுவத்தினரைப் பற்றியதாக இருந்தது – “துணிச்சலான இதயங்கள்” “தியாகிகள்” – அவர்கள் “தேசியவாதிகளாக” அனைத்து பரப்பிலும் போற்றப்படவேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. திரௌபதி, பெண்கள், பெண்ணின் உடல் ஆகியவை ஒரு பேச்சுக்குக்கூட குறிப்பிடமுடியாத அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளன. பேச்சு சுதந்திரத்தின்மீதான கூட்டுத்தாக்குதலானது வெறுப்புணர்ச்சி சீரழிவுகள் மற்றும் முட்டாள்தனம் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. அண்மையில் மணிப்பூரில் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாய்மார்கள் நிர்வாணமாக நின்று போராடிய படங்களை முகநூல் அப்புறப்படுத்தியது. வியட்நாம் போரிலிருந்து பிரபலமான மை லாய் புகைப்படத்தைப் போலவே போராட்டத்தில் ஈடுபட்ட  மணிப்பூரி பெண்களை “நிர்வாணம்” காரணமாக ஆபாசமாகக் கண்டது.

ஒரு கல்லூரி ஆசிரியர் தனது கோபமான பதிலில்:

“மணிப்பூரில் சக்திவாய்ந்த பெண்கள் இந்த போராட்டத்தின் மூலம் இந்திய ஆயுதப்படைகளை அவமானப்படுத்தினர். இன்று இந்திய ‘’தேசபக்தர்கள்’ ‘தங்களது’ ‘பிள்ளை’களுடன் சட்டவிரோதமாக இருக்கையில் அந்த படம் குற்றமாகத் தெரிகிறது. முகநூல் என்ன செய்கிறது? இந்த நிழற்படம் ஒரு குறியீடு என்பதை உணர்வதற்கு மாறாக அது தேசபக்தர்களின் பக்கம் நிற்கிறது. பிரதிபா றேயின் கதையில் திரௌபதி “அனைத்து சம்பிரதாயங்களும் சட்டங்களும் ….. ஏழை-பணக்காரன்இ உயர்வு-தாழ்வு பிராமணர்-சண்டாளன் ஆண்-பெண்… ஆகியவற்றைச் சுற்றியும்…. புரையோடிப்போயுள்ள சமத்துவமின்மைகளும்… புண்ணிய- பாவத்தை அடிப்படையாகக் கொண்டும்….கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் எதிர்ப்பது ஒரு வாழ்நாள் போராட்டம் இருப்பினும் அது செய்யப்படவேண்டியது. இதன் பொருள்இ பேச்சுச் சுதந்திரம்இ கருத்தாடல் கற்பனை ஆகியவற்றை சகித்துக்கொள்ள முடியாததற்கு எதிரான வாழ்நாள் போராட்டம் என்பதாகும்.  அதாவது வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்கும் பழக்கத்தை அறுவடை செய்வதாகும். நாம் எவ்வாறு எண்ணிலடங்கா சவால்களை எதிர்கொண்டுள்ள கதைகளை ஒரு உள்ளீட்டுக் கலாசாரத்தில் நிலைபெறச் செய்யப்போகிறோம்?

ஆசிரியர் குறிப்பு:

கீதாஹரிகரன்இ இந்தியாவில் தமிழகத்தில் கோவையில் பிறந்தவர் . இவர் பல புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், செய்தித்தாள் கட்டுரைகள், பத்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் இரவின் ஆயிரம் முகங்கள் – The Thousand Faces of Night (1992)- அது 1993ஆம் ஆண்டுஇ காமென்வெல்த் எழுத்தாளர்களுக்கான பரிசினை சிறந்த முதல் புத்தகத்திற்காக பெற்றுக்கொண்டது. அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Almost Home: Cities and Other Places. என்பது அவரது மிகச்சமீபகால வெளியீடாகும்.

பிற்குறிப்பு:

கீதா கரிகரன் எழுதிய ‘உடல்கள் பேசுகின்ற பொழுது’ என்ற கட்டுரை ‘தி வேர்ல்ட் லிட்ரேச்சர் ரு டே’ சஞ்சிகையில் பங்குனி 2017 ஆண்டு வெளியாகினாலும் சமகாலத்தில் அதிகாரத்தையும் மகளிர் இருத்தலையும் கேள்விக்குட்படுத்துவதில் பிரதான வகிபாகத்தைக் இக் கட்டுரை கொடுக்கின்றபடியால் இதை மீண்டும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தவேண்டிய கட்டாயத்தை நாம் கொண்டுள்ளோம் .

நடு குழுமம்

0000000000000000

கீதா ஹரிகரன்-இந்தியா

தமிழில் : தேசிகன் ராஜகோபால் 

தேசிகன் ராஜகோபால்

(Visited 162 times, 1 visits today)