மொழிபெயர்ப்புக் கட்டுரை-ஷோகூஃபெஹ் அசார்-தேசிகன் ராஜகோபாலன்

இரானியர்கள் ஏன் தொடர்ந்தும் ஆஸ்திரேலியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுகின்றனர்?

தேசிகன் ராஜகோபாலன்ஷோகூஃபெஹ் அசார் 2010ஆம் ஆண்டு அரசியல் அடைக்கலம் கோரி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தார். அந்த அம்மையாரின் எழுத்தில் உதயமான தி என்லைட்மென்ட் ஆஃப் தி கிரீன்கேஜ் ட்ரீ (see WLT, Spring 2020, 96 ,  The Enlightenment of the Greengage Tree 2020 96) என்னும் நாவல் பார்சி மொழியிலேயே முதலில் எழுதப்பட்டது. அது 2018ஆம் ஆண்டு நாவலுக்கான ஆஸ்திரேலியாவின் ஸ்டெல்லா பிரைஸ் விருதிற்காகவும் 2020ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் புக்கர் விருதிற்காகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இங்கு அவர் தனது இரானிலிருந்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை நோக்கிய பயணம் குறித்தும் யுத்தம் அற்ற சூழலிலும் இரானியர்கள் ஏன் தொடர்ந்தும் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்கிறார்கள் என்பது குறித்தும் தமது நினைவுகளை மீட்டுகிறார்.

தெஹ்ரானில் உள்ள அறியப்படாத பல சிறைகளுள் ஒன்றில் மூன்று மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் நான் ஈரானிலிருந்து தப்பித்தேன். விசாரணை என்ற பெயரில் உடல் மற்றும் உளவியல்ரீதியாக நான் அனுபவித்த சித்திரவதைகளும் இதில் அடங்கும். இதன் காரணமாக 2010ஆம் ஆண்டு, படகின் மூலம் அகதி அந்தஸ்து கோரி நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்தவுடன் அங்குள்ள அகதி முகாம்களின் சூழல் குறித்து கவனம் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. தனிமைச் சிறையில் இருந்த மூன்று மாதங்களை நினைக்கையில் அவை மிகவும் கொடூரமானவை, நான் அதைப் பற்றிப் பேசாமல் இருக்கவே விரும்புகிறேன் அல்லது விரைவாக அதைக் கடந்து செல்ல விரும்புகிறேன். தனிமைச் சிறையில், வெளிச்சமே இல்லை. அசுத்தமான பாத்திரத்தில் உணவு என்ற பெயரில் ஏதோ ஒன்றைக் கொடுக்கும்போதும் நான் விசாரணைக்கு அழைக்கப்படும்போதும் மட்டுமே கதவு திறக்கப்படும். இத்தகைய விசாரணைகள் நீண்டநேரம் நடைபெறும். அப்பொழுதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்படுவேன். என்னுடன் கடந்தகாலத்தில் இணைந்து செயற்பட்டவர்கள், எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது நண்பர்கள், குடும்பம், தொழில் இன்னபிற பற்றியெல்லாம் அப்பொழுது கேள்விகள் கேட்கப்படும். கிறிஸ்மஸ் தீவை அடைந்தபோது நீண்டதும் தொடர்ச்சியானதுமான விசாரணைகளினால் நான் பெரிதும் குழப்பமடைந்திருந்தேன், மனரீதியாக சோர்வடைந்தேன், பயந்தேன்; பெரும்பாலான நேரங்களில் முகாமின் ஒரு மூலையில் தனிமையில் அமைதியாக இருப்பதையே எனது மனம் விரும்பியது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திரேலியாவை அடைந்தவுடன், அகதிமுகாம்கூட எனது மூளையை மீளமைப்பதற்கும் எனது உடல் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதற்கும் ஏற்ற பாதுகாப்பானதும் நட்புரீதியானதுமான ஒரு இடமாகவே எனக்குத் தோன்றியது.

அது ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 2010ஆம் வருடம், சூரியன் உதித்த பகல் பொழுது, நானும் என்னுடன் வந்திருந்த எழுபத்துநான்கு அகதி அந்தஸ்து கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலில் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் சூழப்பட்டிருந்தோம். நாங்கள் கிறிஸ்துமஸ் தீவை அடைந்திருந்தோம். மயில்கழுத்து நிறத்தில் இருந்த இந்துப் பெருங்கடல் அழகிய குருத்துப் பச்சை நிறத்துடன் சங்கமித்திருந்தது. நீலவானம், உயர்ந்த பனைகள், அடர்ந்த காடு, மயில்கழுத்து நிறத்திலான கடல், இவை அனைத்திற்கும் மேலாக அழகிய, சுத்தமான, அமைதியான கடற்கரை இவை எல்லாம் இருந்தும் நான் ஒன்றும் விதியின் கோரப்பிடியில் சிக்கிவிடவில்லையே, கிறிஸ்துமஸ் தீவு விடுமுறையைக் கழிப்பதற்கு ஏற்ற பொருத்தமான இடமாக இருக்காதோ? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. பின்னர் நாங்கள் ஒரு வானில் ஒரு குன்றில் இருந்த பெரிய மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நுழைவாயிலின் அருகில் ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில்: “ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் அகதிகளை வரவேற்கிறோம்!” என்று எழுதியிருந்தது. எனது உறைந்துபோன நரம்புகளுக்குள் பாதுகாப்பையும் இதத்தையும் உட்செலுத்துவதாகவே நான் முதலில் உணர்ந்தேன்.

அந்த மண்டபத்தின் பெரிய ஜன்னல்களின் வழியே, கீழே விரிந்திருந்த கடற்கரையையும் வனத்தையும் என்னால் காணமுடிந்தது. அந்த வனம் நான் வடக்கு இரானின் மழைக்காட்டில் வளர்ந்தபொழுது நான் எப்படி பாதுகாப்பை உணர்ந்தேனோ அதே பாதுகாப்புணர்வை எனக்கு எப்பொழுதும் அளித்தது. டெஹ்ரானில் கழித்த அந்த பயங்கர மாதங்களின் பின்னர், ஒருவாரகாலம் இந்தோனேசியாவிற்கான பதற்றம் நிறைந்த பயணம், பின்னர், ஐந்து நாட்கள் மன அழுத்தம் மற்றும் பட்டினியுடன் பாதுகாப்பற்ற படகில் கடற்பயணம் இவை அனைத்தும் சடுதியில் மறைந்து பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றியது.

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (செர்கோ), குடிவரவு அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் நடத்தை மரியாதைக்குரியதாகவும், சில சமயங்களில் புன்னகை தவழுவதாகவும் இருந்தது. அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்தபொழுது நாங்கள் திடீரென ஆஸ்திரேலியாவில் கால்பதித்ததில் அவர்களுக்கு ஆச்சரியமில்லை என்பதாகவும் இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் போலவும் தோன்றியது. அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிட்ட ஒழுங்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நான் பாதுகாப்பாக இருப்பதாகவும், அகதிகள் தொடர்பில் முன்னெடுக்கும் எஞ்சிய நடவடிக்கைகள் இறுதியில் சரியாகவே இருக்கும் என்றும் உணர்ந்தேன்.

ஆனால் அதே இடத்தில் பிரிதொரு நேரத்தில் ஏனைய இரானிய அகதிகள் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றனர். மூன்றாண்டுகளின் பின்னர், பெஹ்ரௌஸ் பூச்சானி என்னும் இரானிய ஊடகவியலாளர் கிறிஸ்துமஸ் தீவில் எனக்குக் கிடைத்ததைவிட வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றார். அவருக்கு விருதைப் பெற்றுக்கொடுத்த புத்தகமான நோ ஃப்ரெண்ட் பட் தி மௌன்டன்ஸ் (, No Friend But the Mountains) ‘மலையைத் தவிர வேறு நண்பன் இல்லை’ என்னும் நூலில் அவர் எழுதியுள்ளபடியே, அவர் கிறிஸ்துமஸ் தீவில் காலடி வைத்தவுடன் பாதுகாப்பற்றவராகவும் வரவேற்கப்படாதவராகவும் உணர்ந்தார். தன்னால் கிறிஸ்துமஸ் தீவில் தங்கியிருக்க முடியாதென்றும் தனக்கு இரண்டு தெரிவுகளே உள்ளன: அதாவது ஒன்றில் அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் செல்வது, அல்லது தான் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ குயினியா தீவிற்கு மாற்றப்படலாம் என்று பெஹ்ரௌஸ் கூறினார். எதிர்பாராத விதமாக, அவர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னர், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் ஆஸ்திரேலியாவின் அகதிகள் சட்டத்தை மாற்றியிருந்தார்.

“நீங்கள் ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர் இல்லை அப்படித்தானே?”

அந்த மண்டபத்தில், எனக்கு வழங்கப்பட்ட சூடான உணவை உண்டு, குடிப்பதற்காகக் கொடுத்த பானத்தை குடித்து முடித்த பின்னர், எனது கல்வி, தொழில், குடும்ப அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட வேறு சில தகவல்களையும் பூர்த்தி செய்து கொடுப்பத்றகான படிவம் ஒன்று என்னிடம் வழங்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கும் நிறைந்திருந்தனர், அவர்கள் எமக்கு படிவங்களைப் பூர்த்தி செய்வதில் உதவினர். செர்கோ அதிகாரிகளும், ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையின் பல ஊழியர்களும் மரியாதைக்குரியவர்களாகவும், படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் வழங்குவதற்கு உதவியாகவும் இருந்தனர். எனது படிவத்தைப் பூர்த்திசெய்து குடிவரவு அதிகாரியிடம் கையளித்தபொழுது, அந்த அம்மையார் என்மீது தனிகவனம் செலுத்தினார். அவர் எனது பெயரையும் பிறந்த திகதியையும் மீண்டும் சரிபார்த்தார். பின்னர் அந்த அம்மையார் நான் என்ன தொழில் செய்தேன் என்று வினவினார். அதற்கு நான், “ஊடகம்” என்று பதிலளித்தேன். அவர் படிவத்தைப் பார்த்துவிட்டு சந்தேகத்துடன் வினவினார்: “நீங்கள் ஊடகவியலாளரா அல்லது புதின எழுத்தாளரா?”என்று. நான் மீண்டும், “நான் ஊடகவியலாளர்தான், ஆனாலும் நான் ஒருசோடி கதைப்புத்தகங்களையும் வெளியிட்டுள்ளேன்” என்றேன். பின்னர் அந்த அம்மையார் அதனை மட்டுமே வலியுறுத்தும் விதத்தில்: “ம் நீங்கள் ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர் இல்லை!” என்றார். அந்த அம்மையார் என்ன சொல்லவருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, சற்று எரிச்சலடைந்தவனாக, “இல்லை! நான் ஊடகவியலாளன்தான். நான் பதினொரு ஆண்டுகளாக தொழில்சார் ஊடகவியளாளராக இருந்துள்ளேன். ஏதேனும் பிரச்சினை உள்ளதா?” என்றேன். அவர் என்னை உற்றுநோக்கியபடி, “ம். நீங்கள்தான் படகு மூலம் கிறிஸ்துமஸ் தீவிற்கு வந்துள்ள முதலாவது ஊடகவியலாளர்” என்றார். நானும் பதினான்கு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் பணிபுரிந்து வருகிறேன் இதுவரை படகு மூலம் ஒரு ஊடகவியலாளரேனும் இங்கு வந்ததை நான் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை.

அவருடைய முகத்தில் நம்பிக்கை அளிக்கக்கூடிய எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. மாறாக, இது குறித்து அவர் திருப்தியடையாதவராக இருந்திருக்க வேண்டும். நான் உறுதியற்ற நிலையில் சிரித்தபடியே, “அது எனது போதாத காலமாக இருக்கலாம்” என்றேன். அவர் தனது தோள்பட்டையை குலுக்கியபடி சென்றுவிட்டார்.

எவ்வாறிருப்பினும், அந்த அம்மணியின் கூற்று சரியானதே. பிபிசி (இலண்டன்)யின் பாரசீகமொழிப் பிரிவு, வொய்ஸ் ஒஃவ் அமெரிக்கா (வாஷிங்டன்)வின் பாரசிக மொழி அலைவரிசை, டச்சு வெல்லி (பெர்லின்) அலைவரிசையின் பாரிசிக மொழிப்பிரிவு, ஐரோப்பிய சுயாதீன வானொலியின் பாரசிக மொழிப்பிரிவு போன்ற இரானிய செய்மதி அலைவரிசைகள் அங்கு செயற்படுவதால் எனது கடந்தகால ஊடக நண்பர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடைக்கலம் அடைந்தது எனது நினைவுக்கு வந்தது. அவர்களால் அவற்றில் இணைந்து பணியாற்ற முடிந்தது. நான் ஒரு அதிர்ஷ்டமில்லாதவன். நான் தேடிக்கொண்ட ஆட்கடத்தல்காரரால் என்னை ஐரோப்பாவிற்கோ அமெரிக்காவிற்கோ அழைத்துச் செல்லமுடியவில்லை அத்தகைய நாடுகளுக்கான தரைவழிப் பயணம் நீண்டதூரமானதும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருந்தது. மறுபுறத்தில், மாதக்கணக்கில் துருக்கியிருப்பதற்கோ அல்லது ஐ.நாவின் அகதிகளுக்கான விசாவிற்காக வருடக்கணக்கில் காத்திருப்பதற்கோ என்னிடம் போதிய பணம் இல்லை. அந்த நேரத்தில் எனக்கிருந்த ஒரே வழி அவுஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக படகில் வந்து சேர்வது மட்டும்தான். அதனால்தான் ஆஸ்திரேலியாவிற்கு படகுமூலம் வருகை தந்த முதலாவது ஊடகவியலாளராக நான் இருந்தேன்.

நான் குடும்ப முகாமிற்குள் நுழைந்த வேளையில், அதே குடிவரவு அதிகாரியின் மாறுபட்ட அணுகுமுறை எனக்கு நல்ல புரிதலைக் கொடுத்தது. உண்மையில், அதேநாள் மதியவேளையில் நான் குடும்ப முகாமிற்குள் நுழைந்தவுடன் எனக்கும் அவரைப்போலவே ஆச்சரியமாக இருந்தது. அந்த முகாமில் ஓரளவு கல்வியறிவு படைத்த உழைக்கும் வர்க்கத்தினரே பெருளவில் இருந்ததைப் புரிந்துகொள்வதில் எனக்கு கஷ்டம் இருக்கவில்லை. அவர்களில் பெருமளவானோரிடம் தாங்கள் அகதிகள் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆவணம் எதுவும் இல்லை.

நான் கிறிஸ்துமஸ் தீவிற்கு வருவதற்கு முன்னர், இரானிய அகதிக் கோரிக்கையாளர்கள் இரான் இஸ்லாமியக் குடியரசை சுயஉணர்வுடன் திட்டமிட்டே சவாலுக்குட்படுத்திய ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் அல்லது பெண்ணியவாதிகளைப் போன்று மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பாடு நடவடிக்கைகள் காரணமாகவே இங்கு வந்திருக்கின்றனர் என்றே நினைத்திருந்தேன். அல்லது ஒத்துழையாமை அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களை அல்லது பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதனூடாக இரானில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கான மக்களே இங்கு வந்திருக்கிறார்கள் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் நினைத்தது தவறு. 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், வேலையற்ற மக்கள், உரிமையாளர்கள், வியாபாரிகள், கடைமுதலாளிகள், கல்வியியலாளர்கள், சமூகத்தில் மரியாதையுடையவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சமூகத்தின் அனைத்துக் குழுக்களையும் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய பசுமை இயக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மில்லியன் கணக்கான இரானியர்கள் அதில் அடங்கியிருந்தனர். இரானிய அரசுக்கெதிராக பசுமை இயக்கத்தில் கலந்துகொண்ட என்னைவிட அதிகளவில் வித்தியாசமான ஏராளமான மனிதர்களை கிறிஸ்துமஸ் தீவில் சந்தித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கிறிஸ்துமஸ் தீவில் தங்கியிருந்த காலப்பகுதியில், தமது நீண்ட அரசியல் மற்றும் சமூகப் பணியின் காரணமாகஇரானிய அரசுக்கு சவாலாகத் திகழ்ந்த கல்வியறிவில் சிறந்து விளங்கிய ஒரு சிறிய குழுவை மட்டுமே சந்தித்தேன்.

வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால், அந்த முகாமில் தங்கியிருந்த இரானியர்கள் வாழ்வின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதனால்தான் அந்த குடிவரவுப் பிரதிநிதியும் அவர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போலவே எதிர்வினையாற்றினார்.

இடப்பெயர்வைத் தூண்டும் உத்தியோகப்பற்றற்ற யுத்தங்கள்:

வாழ்வின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த இரானியர்களுடனான சந்திப்பு இரானிய மக்களுக்கும் இரானிய அரசுக்கும் இடையிலான உறவு குறித்து மீண்டும் சிந்திக்கத் தூண்டின. இரான் 1988இலிருந்து எத்தகைய யுத்தங்களிலோ அல்லது சிவில் யுத்தங்களிலோ ஈடுபட்டதில்லை, ஆனால் யதார்த்தத்தில் கடந்த நாற்பதாண்டுகளாக இரானிய அரசு இரண்டு விதமான உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது சொந்த மக்களுடன் யுத்தத்திலும் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது:

  1. அரசிற்கும் வெளிப்படையாகவே அரசின் கொள்கைகளை எதிர்க்கும் ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழிற்சாலை கொள்கைகளை எதிர்ப்பவர்கள் ஆகியோருக்கிடையில் மோதல்கள் இருந்து வருகின்றன. இத்தகைய எதிர்ப்பாளர்கள் கொலைசெய்யப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் அல்லது நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இரான் நாட்டின் சிறைகள் அனைத்தும் இத்தகையவர்களினால் நிரம்பி வழிகின்றன. ஆரோக்கியமான சமூகத்தில் மக்கள் மதிக்கப்படவேண்டும். மேலைத்தேய ஊடகங்களில் இத்தகைய கதைகள் ஏராளமாக உள்ளன.
  2. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் அவர்களது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பில் மோதல்கள் நிலவுகின்றன. எதிர்பாராத விதமாக, அண்மையில் பெண்கள் கட்டாயமாக முக்காடு அணிய வேண்டும் என்னும் சட்டத்திற்கு எதிரான “வெள்ளை புதன்” என்னும் போராட்டம் நடைபெறும் வரையில் இரானியர்களின் வாழ்வியல் தொடர்பான இத்தகைய செய்திகளோ கட்டுரைகளோ மேலைத்தேய ஊடகங்களில் ஒருபோதும் வெளிப்படுவதில்லை.

2009 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளராகவும் “பசுமை இயக்கம்” அமைப்பின் குறியீடாகவும் மிர்-ஹொசைன் மௌசவி போட்டியிட்டார். தேர்தலுக்குப் பின், அந்த அமைப்பு இரானிய அரசிற்குச் சவால் விடத்தக்க மக்களை அணிதிரட்டிய அமைப்பின் அடையாளமாக “பசுமை இயகம்” மாறியிருந்தது.

தேசிகன் ராஜகோபாலன்

ஷரியா சட்டம் அன்றாட வாழ்வில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது:

இந்தச் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, ஈரானில் பல தார்மீக பொலிஸ் அமைப்புகள் உள்ளதையும் குடிமக்களின் தார்மீக பிரச்சினைகளில் தலையிடுவது அல்லது “பொலிஸ்” கடமையைச் செய்வதே அவர்களின் வேலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரச நிறுவனங்களில் விழுமிய பொலிஸ், சமூக ஊழலுக்கு எதிராகப் போராடும் பொலிஸ், தர்மத்தைப் பாதுகாக்கும் பொலிஸ், விழுமிய ஊழலுக்கு எதிராகப் போராடும்

புகைப்படம்: பென் கர்டிஸ் ஃ ஏபி புகைப்படம்

பொலிஸ், இஸ்லாமிய நடத்தைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கண்டறியும் பஸ்ஜி அமைப்பு என்று இப்படி ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. இத்தகைய நிறுவனங்களின் மூலம் பொதுமக்களின் பொதுவாழ்வையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கட்டுப்படுத்துவதற்காக இரானிய அரசு ஆண்டுதோறும் பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்கிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆண்டுதோறும் இந்த மோதல்களால் சிறைவைக்கப்பட்டும், கொல்லப்பட்டும், சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் வருவதுடன் தண்டப்பணம் செலுத்தும்படியும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது ஒரு அன்றாட யுத்தமாகவே – தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கான டிஷ் அன்டெனா வைப்பது, சமூக ஊடகங்கள், சங்கீதம், பெண்களின் பர்தா, பெண்களின் காலணிகள், பெண்கள் அணிகின்ற இருக்கமான அல்லது குட்டையான காற்சட்டைகள், பெண்களின் ஒப்பனைகள், மதுபாவனை, பெண்களின் நடனம், பெண்கள் பாடுவது, பாலியல் உறவுகள், ஓரினச் சேர்க்கை உறவுகள் இப்படி பல விடயங்களையும் உள்ளடக்கிய நாளாந்த யுத்தமாகவே அதிகார வர்க்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடைபெறுகிறது.

இரானிய சட்டப்படி பெண்கள் முகத்தை மூடும் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். ஏழு வயது நிரம்பிய பெண் பிள்ளைகள் பாடசாலைகளில் கண்டிப்பாக முகத்தை மூடிய ஹிஜாப் உடை அணிந்திருக்க வேண்டும். பெண்பிள்ளைகள் ஒன்பது வயதிலும் ஆண்பிள்ளைகள் பதினைந்து வயதிலும் திருமணம் செய்துகொள்ளலாம். பெண்களுக்குப் பாடும் உரிமை கிடையாது. மேற்கத்திய இசையை அல்லது நடனம் ஆடத்தூண்டும் இசையைக் கேட்பது ஹராமாகும் என்பதுடன் நாட்டின் சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டதுமாகும். பெண்கள் நடனமாடுவது ஹராம் என்பதுடன் தடைசெய்யப்பட்டுள்ளது.

மது அருந்துவதும் பன்றியின் பின்பக்கத்தை வற்றல் போட்டோ, காயவைத்தோ அல்லது வாட்டியோ உண்பதும் பன்றி இறைச்சியை உண்பதும் ஹராமாகும் என்பதுடன் சட்டவிரோதமுமாகும். திருமண பந்தத்திற்கு வெளியில் உணர்ச்சிபூவர்கமாகவோ, உடல்ரீதியாகவோ உடலுறவு கொள்வது ஹராமானதும் சட்டவிரோதமானதுமாகும். ஆண்களும் பெண்களும் இணைந்து நடனமாடும் திருமண விழாக்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் அத்துடன் பெண்கள் இஸ்லாமிய பாரம்பரிய உடையணியாத கொண்டாட்ட நிகழ்வுகளும் ஹராமானதும் சட்டவிரோதமானதுமாகும். இரானிய சட்டப்படி (திரையரங்கு, திரைப்படம், கேலிச்சித்திரப்படம், புத்தக நிகழ்வு, கலை நிகழ்ச்சி இன்னபிற) மேற்கத்திய கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற களியாட்டம் மற்றும் நடனம் ஆகியவை உத்தியோகபூர்வமாக ஹராமானதும் சட்டவிரோதமானதுமாகும். இரானிய சட்டப்படி, பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் கண்டிப்பாக வெவ்வேறு பாடசாலைகளிலேயே கல்வி கற்க வேண்டும் மேலும் ஆண்களும் பெண்களும் பல்கலைக்கழகங்களிலும் தனித்தனி வகுப்பறைகளிலேயே கல்வி கற்க வேண்டும். சில பல்கலைக்கழகங்களில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே மின்படிக்கட்டுகள்கூட இருக்கின்றன. டெஹ்ரான் போன்ற நகரங்களில் பெண்களுக்கென்று பிரத்தியேக பூங்காக்கள் கூட உள்ளன இந்தப் பூங்காவில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளுக்கு அனுமதியில்லை.

எழுதப்பட்ட இத்தகைய சட்டங்களுக்கு மேலதிகமாக, முல்லாக்கள், ஒழுக்க காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் அன்றாடம் தீர்ப்பாயங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அறிவிக்கும் நூற்றுக்கணக்கான உத்தியோகப்பற்றற்ற சட்டவிதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, பெண்கள் வண்ண வண்ணமாக ஆடைகள் அணிதலும் அதேபோன்று நாகரிகமானதும் எடுப்பாகத் தெரியக்கூடிய வண்ணங்களில் பாதணிகளை அணிவதும் ஹராமானதும் சட்டவிரோதமானதுமாகும். “இஸலாத்தைத் தோற்றுவித்த முகமதுநபியின் காலத்தில் ஸ்டைலான சிவப்பு சப்பாத்துகள் (ஷ_) உருவாக்கப்பட்டிருந்தால் அவர் அவற்றைத் தடை செய்திருப்பாரா?” என்று கேட்கும் துணிவு ஒருவருக்கும் இல்லை.

அண்மையில், தெஹ்ரானில் ஒழுக்க விழுமியங்களைக் காப்பதற்குப் பொறுப்பான பொலிசார், பெண்கள் தனியாக மலைக்குச் செல்வதற்கு உரிமை இல்லை என்று அறிவித்தனர். (தெஹ்ரானுக்கு வடக்கில் கண்களைக் கவரக்கூடிய அழகிய மலை ஒன்று உள்ளது). 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை, பெண்கள் விளையாட்டு அரங்குகளுக்குச் செல்வதற்குத் தடைவிதித்திருந்தனர்.

என்னால் இரானின் விதிகளின்படி சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளவற்றையும் ஹராம்கள் குறித்தும் நீண்ட பட்டியலை எழுத முடியும். இந்த முடிவற்ற நீண்டு செல்லும் பட்டியல் மக்களை சீரழித்துள்ளதுடன் கடந்த நாற்பதாண்டுகாலமாக அவர்களின் அன்றாட வாழ்க்கையையே புறட்டிப்போட்டுள்ளது. இது ஈரானிய ஆட்சியாளர்கள் சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்வில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத மக்களைப் பாதிக்கின்ற யுத்தமாகும். ஆஸ்திரேலியர்களுக்கு வேண்டுமானால் “அரசாங்கத்திடம் குடிமக்கள் தனிமனித சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கோருவது” என்பது அர்த்தமற்றதாக இருக்கலாம். ஆனால் இரானிய சட்டத்தின்படி, ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்குமிடையில் எத்தகைய சமத்துவமும் இல்லை. இது தொடர்பிலான சட்டங்கள் குறித்து என்னால் மீண்டும் ஒரு நீண்ட பட்டியலை எழுத முடியும். இருப்பினும் அவற்றில் சிலவற்றையே நான் குறிப்பிடப்போகிறேன்.

ஷரியா சட்டத்தின்படி, ஒரு பெண்ணிற்கு தனது தந்தையிடமிருந்து கிடைக்கக்கூடிய பூர்வீக சொத்தானது அவளது உடன்பிறந்த சகோதரனுக்கு உரித்துடையதில் பாதியாகும். ஒரு பெண்ணிற்கான பரிகாரத் தொகையானது ஆணிலும் பாதி. பெண்ணிற்கு வழங்கப்படும் பரிகாரத் தொகை என்பது ஒரு ஆணின் இரண்டு விதைகளுக்குச் சமம். ஆம் நீங்கள் இதனை சரியாகப் படியுங்கள்: இஸ்லாத்தில் ஒரு பெண்ணின் மதிப்பென்பது ஒரு ஆணின் இரண்டு விதைகளுக்குச் சமம்!

ஷரியா சட்டத்தின்படி, தந்தை தனது குழந்தையைக் கொலை செய்ய முடியும் ஏனெனில் குழந்தை என்பது தந்தையின் சொத்தாகவே கணிக்கப்படுகிறது. விவாகரத்தின் பின்னர், குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்படுகிறது. தந்தை இறந்து விட்டாரென்றால், தந்தை வழி தாத்தாவிடமோ அல்லது தந்தை வழி மாமாவிடமோ கையளிக்கப்படுகிறது எக்காரணம் கொண்டும் தாயிடம் கையளிக்கப்படுவதில்லை. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தலாம் ஆனால் அதே நேரம் பெண்களும் ஆண்களும் திருமண பந்தத்திற்கு வெளியில் உடலுறவு கொண்டால் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்.

கணவர் தனது மனைவியை வேலைக்குச் செல்லவிடாமல் தடுக்கலாம். கணவர் தனது மனைவியை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம். ஒரு பெண், தனது கணவன் சித்த சுவாதீனம் அற்றவர், பாலியல் நோய் உள்ளவர், போதைவஸ்திற்கு அடிமையானவர் போன்ற ஏழு வகையான காரணங்களில் ஒன்றை நிரூபிக்காத வரையில் அவள் விவாகரத்து கோரும் உரிமையற்றவள். வேறுவிதமாகச் சொன்னால், “உங்கள் கணவரை உங்களுக்குப் பிடிக்கவில்லை” என்ற காரணம் மட்டும் ஒரு பெண் விவாகரத்து பெறுவதற்குப் போதுமானதல்ல.

பெண்களுக்கு எதிரானதும் குழந்தைகளுக்கு எதிரானதுமான இத்தகைய வன்முறைச் சட்டங்கள் 1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் நடைமுறைக்கு வந்தன. பெண்ணியவாதிகளும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும் இரண்டாம் ஷா பாஹ்லவியின் ஆட்சிக்காலத்தில் (1941-79) ஷரியா சட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றிகண்டிருந்தனர் (முல்லாக்களினால் பாதுகாக்கப்பட்டது) மேலும், பெருமளவில் பெண்கள் மற்ம் குழந்தைகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது. மிதவாதியான ஷாவின் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் பெண்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் இடமிருந்தது, பதினெட்டு வயதிற்குக் குறைவான பெண்பிள்ளைகளும் இருபது வயதிற்குக் குறைவான ஆண்பிள்ளைகளும் திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது அத்துடன் தம்பதியர் பிரிந்ததன் பின்னர் குழந்தை தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பெண்களுக்குக் கணவனின் அனுமதி தேவையில்லை. ஆணின் பலதார மணத்திற்குக் கடுமையான விதிகள் இருந்தன, அதாவது அவனது முதல் மனைவியின் சம்மதம், கணவனின் நிதி வலிமை, இரு மனைவிகளுக்கும் சமமான ஜீவனாம்சம் செலுத்துதல் போன்றவை. தந்தை தனது குழந்தைகளைக் கொலை செய்தால் மரண தண்டனைக்கு உள்ளாவார். இந்த சட்டங்கள் ஷாவிற்கு ஈரானை நவீனமயமாக்குவதற்கும் பெண்கள் கல்வி கற்கவும் தொழில் செய்யவும் ஊக்கமளித்தன.

தேசிகன் ராஜகோபாலன்

 

கிறிஸ்துமஸ் தீவில் சிரிப்பும் கண்ணீரும்

கிறிஸ்துமஸ் தீவின் குடும்ப முகாமில், இரானிய அகதிகள் சிலரின் கதைகளைக் கேட்டபோது, அனைவருமே மக்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் அடங்கியுள்ள இயற்கையான விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் முயற்சிக்கும் அந்த மனிதகுலத்திற்கு எதிரான சட்டங்களால் துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டன். அரசியலில் ஈடுபடுவதையோ அல்லது அதிகாரிகளுடன் உறவுகளைப் பேணுவதையோ அவர்கள் விரும்பவில்லை அவர்கள் விரும்பியதெல்லாம் விடுதலையும் சமத்துவமும் மட்டுமே.

 

ஆஸ்திரேலியாவின் லில்லி கடற்கதையிலிருந்து எதில் கடற்கரையை நோக்கிய நடைபயணம். நிழற்படம்: டேவிட் ஸ்டான்லிஃஃபிலிக்கர்

அகதிகளில் ஒருவர் மது அருந்தியதற்காகத் தாம் ஏற்கனவே இருமுறை கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறினார். மற்றொரு அகதி தான் தனது பெண் நண்பருடன் தனிப்பட்ட விருந்துபசாரங்களில் கலந்துகொண்டிருந்த வேளைகளில் ஒழுக்கங்களைக் கண்காணிக்கின்ற பொலிசாரால் (Moral Police) பலமுறை கைது செய்யப்பட்டதாகக் கூறினார். அத்தகைய ஒரு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்த வேளையில், மாரல் பொலிசிடமிருந்து அவர் தப்பிப்பிக்க முயற்சித்தபோது ஒரு ஜன்னலின் வழியே கீழே விழுந்து நிரந்தர மாற்றுத்திறனாளியாகியுள்ளார். அவர் தனது பின்புறத்தை எனக்குக் காண்பித்தார். அதில் சத்திரசிகிச்சை செய்ததற்கான அடையாளமிருந்ததைக் காணமுடிந்தது. மற்றொரு அகதி தான் தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் டிஷ் அன்டெனாவைப் பொருத்தி அதில் பிபிசியின் பாரசீகமொழி ஒளிபரப்பையும் வாய்ஸ் ஒவ் அமெரிக்காவின் பாரசீக மொழி காணொளியையும் பார்த்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். (இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளும் வெளிநாடுவாழ் இரானியர்களுக்குச் சொந்தமானவை; இரான் அரசிற்கு எதிரானவை). மற்றொரு பெண் அகதி பச்சை நிற ஸ்கார்ஃப்ஐ அணிந்து பசுமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த வீதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார் (பச்சை பசுமை இயக்க சீர்திருத்தவாதிகளின் நிறம்). மற்றொரு ஆண் அகதி தான் தனியார் நீச்சல் தடாகத்தில் பெண்களுக்கு நீச்சல் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியதாகவும் அயலவர் ஒருவர் மாரல் பொலிசிக்குத் தகவல் கொடுத்ததாகவும் கூறினார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எழுபத்தைந்து சாட்டையடியும் கொடுக்கப்பட்டது. அவர் தனது பின்புறத்தை எனக்குக் காட்டினார். அதில் சாட்டையடியின் தழும்புகள் இன்னமும் இருந்தன. தன்னைக் கைது செய்வதற்காக பொலிசார் எப்படி நீருக்குள் துள்ளிக் குதித்தனர் என்பதையும் அந்த நீச்சல் தடாகத்தினுள் மாரல் பொலிசாருடனான தனது போராட்ட அனுபவத்தையும் அந்த காட்சிகளையும் அவர் மீண்டும் நினைவுபடுத்திக் கூறுகையில், அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நாங்கள் அனைவருமே சத்தம்போட்டுச் சிரித்தோம். ஆனால் அது சோகமான சிரிப்பு. முட்டாள் தனமானதும் வேடிக்கையானதுமான சாகசங்களுக்கான விலை அதிகம்.

போதை வஸ்துக்கு அடிமையான தனது முன்னாள் கணவர் எப்பொழுதும் அவர்களது மகனை அடித்துக்கொண்டே இருப்பாராம். மணமுறிவின் பின்னரும் அந்தக் குழந்தையை அவரே வைத்திருக்க விரும்பியதாக மற்றொரு இரானிய பெண்மணி கூறினார். அவர் தப்பித்து தனது மகனுடன் தனது குடும்பத்தினருடன் சேர்வதற்குச் சென்ற வேளையில் பொலிஸ் அவரைக் கைது செய்து, அவரது மகனை வேலையற்ற, போதைவஸ்துக்கு அடிமையான தந்தையிடம் கொடுத்தனர். அந்தத் தாயின்மீது ஆட்கடத்தல் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்கப்பட்டார். ஒருவாறாக அவர் சிறையிலிருந்து விடுதலையான பின்னர், அவர் பாடசாலை முடிந்து வெளிவந்த தனது மகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி இறுதியில் கிறிஸ்துமஸ் தீவை அடைந்ததில் அவரது சோகக் கதை முடிவிற்கு வந்தது.

மேசையைச் சுற்றியிருந்த அந்த மக்களையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்…. அவர்கள் மிகவும் சாதாரணமானவர்களாகவும், எளிமையானவர்களாகவும் தமது விருப்பப்படி வாழ்வதற்கான சுதந்திரத்தை தவிர வேறெதிலும் நாட்டமற்றவர்களாகவும் இருந்தனர். பல்லாண்டுகளாக ஒடுக்குமுறையை அனுபவித்த அவர்களுக்கு தங்களது குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து உலகின் மற்றொரு பாகத்தில் அடைக்கலம் தேடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. இரானிய அரசு ஏன் மக்களை அவர்கள் போக்கில் விடமறுக்கிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஏன் அவர்கள் மில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் இஸ்லாத்தைத் திணிக்கிறார்கள்? இந்த சாதாரண மக்களுக்கான தனிமனித சுதந்திரங்கள் இந்த அரசைத் தக்கவைபப்தற்கு உத்தரவாதம் வழங்ககாதா? பெண்களை சிகை அலங்காரத்திற்காகவும், சிவப்பு நிற சப்பாத்து அணிந்ததற்காகவும், பாடுவதற்காகவும் இதனைப் போன்று வேறு சில நடவடிக்கைகளுக்காகவும் கைது செய்வதால் என்ன நன்மை?

ஒரு ஊடகவியலாளனாக, நான் இரானில் இருந்தபொழுது இத்தகைய கதைகளை நான் திரும்பத் திரும்ப கையாண்டுள்ளேன். உதாரணமாக, 2008ஆம் ஆண்டு கோடைகாலத்தில், தெஹ்ரானின் மாரல் பொலிசார் இஸ்லாமிய கலாசாரப்படி உடையணியாததற்காக 25இலட்சம் பெண்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் எச்சரிக்கை செய்திருப்பதாகவும் அல்லது கைது செய்து சிறையிலடைத்திருப்பதாகவும் அறிவித்தது. சர்மயெஹ் என்னும் சீர்திருத்த செய்தித்தாளில் எனது அறிக்கை பிரசுரமாகியிருந்தது. அதில் தெஹ்ரானின் மக்கள் தொகை 12மில்லியன் என்றும் அதில் கால்பகுதியினர் குழந்தைகள் என்றும் கால் பகுதியினர் வயோதிபர்கள் என்றும் வைத்துக்கொள்வோம் அதன்படி சுமார் ஆறு மில்லியன் இளைஞர்கள் தெஹ்ரானில் வசிக்கின்றனர். இந்த ஆறுமில்லியனில் ஏறத்தாழ ஆண்கள் மூன்று மில்லியனும் பெண்கள் மூன்று மில்லியனும் வசிக்கின்றனர். எனவே, தெஹ்ரான் மாரல் பொலிஸ் 2.5 மில்லியன் பெண்களை அவர்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடையணியாமைக்காக எச்சரித்திருப்பது அல்லது கைது செய்திருப்பதானது தெஹ்ரானில் வசிக்கின்ற பெண்களில் ஏறத்தாழ அனைவருமே தற்போதைய இரானிய அரசு பிரதிநிதித்துவப்படுகின்ற இஸ்லாத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாகவே இருப்பதாகப் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தெஹ்ரான் மக்களை இஸ்லாமியர்களாக்குவதற்கான பலதசாப்த முயற்சிகளும் அதற்காகச் செலவிடப்படும் மில்லியன் கணக்கான டொலர்களும் பயனற்றுப்போயுள்ளன (இது ஒட்டமொத்த இரானுக்கும் ஒரு மாதிரி).

உலகெங்கிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ{டன் போராடுகின்ற இந்த நாட்களில் கூட, இரானியர்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் தார்மீக ரீதியில் கண்டிக்கப்படுகிறார்கள். நான் இரானைவிட்டு வெளியேறிதன் பின்னர் சுமார் பத்து வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறேன். ஆனாலும், ஒவ்வொருநாளும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் நான் இரானில் என்ன நடக்கிறது என்பதை உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற ஊடகத்தின் மூலமாக நான் அவதானித்து வருகின்றேன். இந்த பத்து வருடங்களில், நான் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பொறுத்தவரை இரானின் சூழ்நிலையில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. இத்தகைய காரணங்களுக்காக அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்படுகின்றனர் அல்லது சித்திரவதைக்குட்படுகின்றனர். உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு உத்தியோகபூர் ஊடகத்தில் வெளியான செய்தியானது, தெஹ்ரானில் ஒரு தோட்டத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது 111பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது “கொரோனாவிலிருந்து தப்புவதற்கான தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம்பெறவில்லை” மறுதலையாக, “இஸ்லாமிய மதத்தின் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பதற்காக இடம்பெற்றுள்ளது.

நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்ததிலிருந்து, கடந்த பத்து ஆண்டுகளில், இரானிய அகதிகள் “உண்மையான அகதிகள் இல்லை” அல்லது அவர்கள் “பொருளாதார அகதிகள்” என்று ஏராளமான ஆஸ்திரேலியர்கள் சொல்வதை எனது காதுகளால் கேட்டிருக்கிறேன். இரானிய மக்களின் அன்றாட வாழ்கையுடன் இந்தச் சுவையையும் சேர்ப்பதன் மூலம் தகவல்களைத் தெரிந்துகொண்டு அவர்கள் முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

000000000000000000000000

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்

இந்த ஆங்கில கட்டுரையின் மொழிநடையைச் செழுமைப்படுத்துவதில் (நனவைiபெ)உதவிய நண்பர் பேராசிரியர் ஆன் பீட்டர்சனுக்கு எனது நன்றிகள்.

ஷோகூஃப் அசார் கட்டுரைகள், பத்திகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதியவர் மற்றும் இரானிய வழுவழுப்பான சாலைகளில் ஓரமாக நின்று தனது கட்டைவிரலை நீட்டி தன்னைக் கடந்து செல்லும் வாகனங்களில் சவாரி செய்வதற்கு அனுமதிகோரி நின்ற முதல் ஈரானிய பெண் ஆவார். முதலில் ஃபார்சியில் எழுதப்பட்ட மற்றும் அநாமதேய மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்ட கிரீன்ஜேஜ் மரத்தின் அறிவொளி (வுhந நுடெiபாவநnஅநவெ ழக வாந புசநநபெயபந வுசநந) ஆஸ்திரேலியாவின் 2018 புனைகதைக்கான ஸ்டெல்லா பரிசு மற்றும் 2020 சர்வதேச புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்டது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் நாவல் இது.

000000000000000000000000

I would like to thank my friend Professor Anne Pedersen for help editing my English in this essay.

Shokoofeh Azar is the author of essays, articles, and children’s books and is the first Iranian woman to hitchhike the entire length of the Silk Road. The Enlightenment of the Greengage Tree, originally written in Farsi and translated by an anonymous translator, was shortlisted for Australia’s 2018 Stella Prize for Fiction and the 2020 International Booker Prize. It is her first novel to be translated into English.

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 63 times, 1 visits today)