கொறோனா நோய் பரவலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் அதிகரிப்பும்-கட்டுரை-நிரூபா

நிரூபாபெண்களுக்கெதிரான வன்முறைகள் மோசமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு சூழலில்தான் ஏற்கனவே பெண்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றார் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கைத் தெரிவிக்கின்றது.

இன்று கொறொனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக மக்கள் எல்லோரும் உடல், உள சிக்கல்களையும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற இக் காலகட்டத்தில் பெண்கள் மேலும் அதிகரித்த வன்முறைகளை அனுபவிக்க நேரிடுகின்றது. பெண்களைப் பொறுத்தவரையில் நோய் தொடர்பான பிரச்சினைகளை ஏனைய பாலினரைப் போன்று சமாளிக்கவேண்டியிருக்கின்றபோதும், பெண் என்கின்ற காரணத்தினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை எதிர்கொள்வது பாரிய விளைவுகளைக் கொடுக்கின்றது. பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குடும்ப வன்முறையும் பிரதானமான ஒன்று.

குடும்ப வன்முறை

இதுவரையில் குடும்ப வன்முறைகளால் பாதிப்படைந்து உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்காக பெண்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். சில பெண்கள் கொலைசெய்யப்பட்டும், காணமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். இன்னும் ஏராளமான பெண்கள் வன்கொடுமைகளைத் தாங்கியவாறு வீட்டுக்குள்ளே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வாழ்தல் எத்தகைய சவால் மிக்கது என்று அனுபவிக்கும் பெண்களுக்குத்தான் தெரியும்.

பல சமூகங்களில் இன்றும் குடும்ப வன்முறை, வன்முறையாகவோ, குற்றச் செயலாகவோ கருதப்படுவதில்லை. குடும்பத்தில் அதிகாரம் செலுத்தும் துணைவன், தந்தை, சகோதரன் போன்ற ஆண்களால் நடாத்தப்படும் வன்முறை, வெறும் குடும்பப் பிரச்சனையாகவும், வழமை என்று கருதிக் கடந்து செல்வது பெரும்பாலும் யதார்த்தமாகவிருக்கின்றது. தம்பதியினருக்கிடையில் இடம்பெறும் கட்டாய பாலுறவு, பாலியல் வன்புணர்வாகப் கருத்தப்படாமல் சாதாரணம் என்று நினைக்குமளவிற்கு பெண்கள்கூட பழக்கப்பட்டிருக்கின்றனர். ஏனெனில் துணைவரென்கிற உறவுக்குள் எதையும் செய்யலாம் என்கின்ற மனநிலைதான் பலரிடமும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சிறு பராயம் முதற்கொண்டு ஆண் பிள்ளைகள் வீட்டில் தாய், சகோதரி போன்ற பெண்கள் பாராபட்சமாக நடாத்தப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், தமக்கான உரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாக மிகவும் ஒடுக்கப்படுவதையும் காண்கின்றனர். எமது சமூகத்தில் பெண்கள் பற்றி இருக்கும் பார்வைகளும், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலமையும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்வதையும் பார்த்தே வளரும் ஆண் பிள்ளைகளின் மனநிலைகளும் அவ்வாறே உருவாகி, பின் தமது சொந்தக் குடும்பங்களிலும் அவ்வாறான அடக்குமுறைகளை, வன்முறைகளை செய்யத் துணிகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்துள்ள சூழலில் அதை தடுத்து நிறுத்தவேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்ட பெண்களுக்கென பல பெண்கள் அமைப்புகள் அவசர சேவைகளையும் விரிபுபடுத்தி வருகின்றன.

கொறொனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப காலத்தில் சீனாவிலும், பின் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்தது. அதன் பின்னர் இன்று உலகம் முழுவதிலும் குடும்ப வன்முறை அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கும், பிள்ளைகளுக்குமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கின்றது.

இலங்கையில் பெண்களுக்கு உதவும் அமைப்புகள் சில கொறொனா காலத்தில் பெண்களின் அவசர தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன. உதாரணமாக மார்ச் 16 ற்கும், ஏப்ரல் 1 ற்கும் இடையில் 250 தொலைபேசி அழைப்புகள் வந்ததாகச் அதில் 60 வீதமானவை குடும்ப வன்முறையோடு தொடர்புடையவை என்றும் WIN (Women in Neeed) அமைப்புத் தெரிவித்ததாக சமூக வலைத் தளம் ஒன்றின்மூலம் அறியமுடிகின்றது. இன்று குடும்பத்தில் அனைவரும் வீட்டுக்குள் தொடர்ச்சியாக இருக்கின்ற ஒரு கட்டாய சூழ்நிலையிலேயே பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. அதே சமயம் எம்மை கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எமது வீடுகளிலேயே இருப்பதுதான் அதிக பாதுகாப்பு மிக்க வழியென்று சுகாதாரத் துறைகளினாலும், அரசுகளினாலும் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் பல பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இல்லங்கள் பாதுகாப்பற்ற இடமாகவே உள்ளன என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விடயம்.

பிறான்ஸ்ஸில் கொவிட்-19 ற்குப் பின்னர் 36 வீதம் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. ஆப்கானில் 50 வீதமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். சீனாவில் சென்ற வருடத்தை விட இவ்வருடத்தில் பெண்களின் அவசர தொலைபேசி அழைப்பு மூன்று மடங்காகவும், ஐக்கிய ராட்சியத்தில் 25 வீதமாகவும் அதிகரித்த நிலையில், மெச்சிக்கோவில் இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களிலும் 1000 பெண்கள் கொலைசெய்யப்பட்டுமுள்ளனர், அவர்களில் 244 பெண்கள் குடும்ப வன்முறையால் கொல்லப்பட்டவர்கள். உடல், உள உணர்வு ரீதியில் மட்டுமல்ல, பாலியல் ரீதியாகவும் வன்முறைகளை அனுபவித்துவரும் பெண்கள் வீட்டை விட்டு வௌியேற முடியாமல் தொடர்ந்தும் வன்முறை செய்பவருடனேயே 24 மணி நேரமும் இருப்பதென்பது எவ்வகையான சிக்கல்களை உண்டுபண்ணும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போமா?

ஏன் குடுப்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன?

நிரூபாவழமையாகவே பெரும்பாலான குடும்பங்களில் எவ்வாறான வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன என்று பார்ப்போம். உணவு தயாரிப்பதிலிருந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் வேலைகள் வரையில் (பெண்களும் வேலைக்குச் சென்றாலும் கூட) பெரும்பாலான குடும்பங்களில் பெரும் பகுதியான வேலைகளைப் பெண்களே செய்து வருகின்றனர். இந்த வேலைகளில், சிறு குறையோ, தாமதமோ ஏற்பட்டால் பெண்ணின் வேலைப் பழு, உடற் களைப்பு, மனச் சிக்கல்கள் கவனத்திலெடுக்கப்படாமலும் அக்கறைசெலுத்தாமலும், சினப்பது, அடிப்பது, பொருட்களை வீசுவது, கத்துவது, சொல் வதைகள் என்று பல்வகையான வன்முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அடி, உதை, பாலியல் வன்முறைகள் உட்பல இதுவரையில் பல பெண்கள் கொலைசெய்யப்பட்டுமுள்ளனர். வதைகளைத் தாங்கமுடியாமல் சில பெண்கள் தற்கொலையும் செய்துள்ளனர். 2017 ல் உலகம் முழுவதிலும் 50000 பெண்கள் துணைவரால் அல்லது குடும்ப அங்கத்தவரால் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று U.N அறிக்கை தெரிவிக்கின்றது.

வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்கள் நாளாந்த உணவுக்கே பணம் போதாமல் திண்டாடும்போது ஆண்களின் மது பாவனை மூலம் பிள்ளைகளையும், துணைவியரையும் அடித்தல், துன்புறுத்தல் பணத்தை பறித்தல் போன்ற பண ரீதியாக துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான பொருளாதார பிரச்சினைகள் இன்று மேலும் இறுக்கமடைந்த நிலையில், அதிகரித்த குடும்ப வன்முறையையும் தாங்கி வாழ்வதன் நெருக்கடிகள் பற்றிச் சொல்லத்தேவையில்லை.

ஏற்கனவே, வீட்டு வேலைச் சுமைகளிலும், பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் முழு நேரமும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இப்போது பிள்ளைகளுடனும் துணைவர்மாருடனும் வீட்டில் 24 மணிநேரமும் இருக்கும் ஒரு சூழலில், அதிகரித்த வேலைப் பழுவோடு வன்முறைகளையும் எதிர்கொள்வது சுமைமேல் சுமையாகிச் சமாளிக்க முடியாமல் நெருக்கடிகளை கொடுக்கின்றது.

வழமையான நாட்களில் ஆண்கள் வேலைக்கோ அல்லது வெளியே சென்று வரும் நேரங்களில் இவ்வாறான பிரச்சினைகள் குறைந்த அளவிலேயே இருக்கலாம். அத்துடன் பெண்களும் மூச்சு விட சிறிது சுதந்திர வெளியாவது கிடைக்கும். முன்னர் வேலைக்குச் சென்று வந்த பெண்களுக்கு ஒரு நாளில் சிறு பகுதியேனும் மாற்றுச் சூழல் ஒன்றில் இருந்து தமது நண்பர்களிடமோ, சக பணியாட்களுடனோ தமது மனச் சுமைகளைப் பகிரக்கூடிய சூழல் இருந்திருக்கும். தமது மனச் சுமைகளை இறக்கி வைக்க முடியாமலும், சுதந்திர வெளியும் கிடைக்காத பட்சத்தில் மன அழுத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது ஏற்கனவே மன அழுத்தம் இருந்தால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எதிர்பாராமல் ஏற்பட்ட நெருக்கடியினால், தற்காலிகமான வேலை நிறுத்தம் மட்டுமின்றி நிரந்தரமாக வேலை இழந்தவர்கள், பொருளாதார நெருக்கடிகள், உளவியற் சிக்கல்கள் என்று ஆண்களுக்கும் உள, உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது. இவையும் புரிந்துகொள்ளப்படவேண்டியவையே. இவற்றினால் எற்படும் உளரீதியான தாக்கங்களின் விளைவுகள் வன்முறையாக வெடிக்கின்றபோது அவை குடும்பத்திலிருக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிராகவே திரும்புகின்றது.

குடும்ப வன்முறை ஒரு குற்றச் செயல், அது பெண்களை மட்டுமல்ல, பிள்ளைகளையும், ஆண்களையும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையுமே பாதிக்கின்றது. இதனால் பெண்களும், வளரும் பிள்ளைகளும் ஏன் ஆண்களும்கூட பாதிப்புக்கு உள்ளாகி வாழ்வில் பல்வேறான உடனடி-நீண்ட கால விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இதுவரையில் பெண்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய தனியான நேரத்தில் தம்மைப் பற்றிச் சிந்திக்கவும், தமக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளைப் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைந்திருக்கலாம். இப்போது வழமையை விட அதிகரித்த வீட்டு வேலைப் பழுவுடன் தம்மைத் துன்புறுத்துபவருடனேயே (துணைவராக இருந்தாலும் கூட) தொடர்ச்சியாக இருப்பதால் பாதுகாப்பு வழிகளைப் பற்றி சிந்திப்பதும், துன்புறுத்தலிலிருந்து தப்பித்து வெளியேற முடியாத மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் துன்புறுத்தல்களை தாங்கி தமது வாழ்வைத் தொடர்கின்றனர்.

வழமையான ஒரு சூழலில் இவ்வாறான வன்முறைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி பெண்களுக்கான பாதுகாப்பு இடங்களில் (women’s shelter), அல்லது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் புகலிடம் தேடிக்கொள்வார்கள்.

இன்று அவசர தொலைபேசி அழைப்பை செய்வதில்கூட பெண்களுக்கு எத்தனை சிக்கல்கள் உண்டு? இலங்கை போன்ற நாடுகளில் பெண்களுக்கு அயல் சூழல்கள் சிறிது உதவியாக இருக்கும். தமக்கு நம்பிக்கையான அயல் வீட்டுக்குச் சென்று தொலைபேசி அழைப்பு மூலம் வெளி உதவிகளைப் பெறவும் முடியும். ஆனால் இன்றைய நோய் பரவும் சூழலில் இந்தச் சாத்தியப்பாடும் குறைந்துள்ளது. இவ்வாறு வைரஸ் பரவும் ஒரு சூழலில் வீட்டை விட்டுக்கு வெளியே செல்வதே அச்சுறுத்தலானது என்பது எமக்கும் தெரிந்ததே.

கனடாவில் பத்தில் ஒரு பெண் குடும்ப வன்முறை பற்றிய அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வீதாசாரம் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகளுள்ளதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவில் ஆறு நாளைக்கு ஒரு பெண் நெருங்கிய துணைவரால் கொலைசெய்யப்படுகின்றாள்.

கொவிட் நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் பெண்களுக்கும், பாலின சமத்துவத்திற்குமாக 40 மில்லியன் டொலர்களை கனடிய அரசு ஒதுக்குவதாக ஏப்பரல் 4 ல் அறிவித்திருந்தது. இதில் 30 மில்லியன் டொலர்கள் பாதுகாப்பாக தங்குமிடங்களுக்காகவும். பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பான தங்குமிடங்களுக்காகவும் செலவழிக்கவுள்ளது. வன்முறையால் பாதிப்படைந்த கனடியப் பழங்குடிப் பெண்களுக்கான பாதுகாப்பு மையங்களுக்காகவும் 10 மில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளது.

ஆகவே பெண்களின் இவ்வாறான சூழலை அரசு கணக்கிலெடுத்து செயற்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஆண் மேலாதிக்க மனநிலைகளிலும், பெண்கள் பற்றிய பார்வைகளில் மாற்றமேற்படாமல் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முழுவதுமாகத் நிறுத்திவிட முடியாது.

குடும்ப வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?

நாம் எல்லோரும் விரும்புவது ஒரு அமைதியான, சமத்துவமான வாழ்வையே.

  1. குடும்பங்களில் முதலில் பேசிப் பகிர்ந்து பிரச்சினைகளை வன்முறையற்ற வழிகளில் தீர்ப்பதற்காக முயற்சிகளை எடுப்பதே சிறந்தது. ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்துவது, எந்தக் காரணத்திற்காகவும், எந்தக் கணத்திலும், மற்றவரை தாக்குதல் செய்தல் கூடாது என்பதை அடிப்படைப் பண்பாக வளர்த்துக்கொள்வதும் பெண்களை வன்முறை நிறைந்த சொற்களால் கீழ்த்தரமாகப் பேசுவது தவிர்க்கப்படவேண்டும்.
  2. யாராகவிருந்தாலும் உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையயுள்ளவர்களிடத்து மனம் விட்டுப் பேசுங்கள். இதனால் மனப்பாரம், மன அழுத்தம் குறையும்.
  3. இருவரும் பேசித் தீர்க்க முடியாத பட்சத்தில் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ, ஆலோசகரையோ நாடுவது நல்லது.
  4. பெண்களும் எல்லா மனித ஜீவன்களைப்போன்று அனைத்து உணர்வுகளும், சிந்தனைகளும், ஆசா பாசங்களும், உரிமைகளும் கொண்டவர்கள்தான் என்பதை முதலில் புரிந்து ஏற்றுக்கொள்வோம்..
  5. அனைத்து வகையான பெண்கள் மீதான வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
  6. உள, உணர்வுச் சிக்கல்கள், போதைப் பொருள் பாவனையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தம்மாலான முயற்சிகளை ஆண்கள் எடுப்பதே வன்முறையை குறைக்க உதவும் இன்னொரு வழிமுறையாகும். உறவினர் நண்பர்களுடன், துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். முடியாத பட்சத்தில் வேறு வழிகளை நாடலாம்.
  7. நாம் செய்யும் செயலுக்கு நாமே பொறுப்பானவர்கள். மற்றவரைச்(பெண்களை) குற்றம் சாட்டுவதை நிறுத்தவேண்டும்.

குடும்ப வன்முறை நிலைகொண்டிருக்கும் இன்றைய ஒரு சூழலில் பெண்கள் குடும்ப வன்முறையிலிருந்து தம்மையும் பிள்ளைகளையும் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

  1. வன்முறைகளால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்திலிருப்பவர்கள், பாதுகாப்பினை தேடிக்கொள்வதே முதல் அவசியமாகும். காவற் துறைக்கு அறிவிப்பது, நண்பர்கள், உறவுகளிடம் உதவி கோருவது அல்லது வெளியேறிப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வது அவசியமாகும்.
  2. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பிட்ட அவசர தொடர்பு சேவைகள் உள்ளன. அவ் இலக்கங்களை கணணி மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  3. உங்களுக்கான தொலைபேசி வசதிகளை எந்த நேரத்திலும் உறுதிசெய்துகொள்வது சிறந்தது. (சார்ச்சிலிட்டு, போன் பில்லைக் கட்டி தாயாராக வைத்துக்கொள்ளுங்கள்)
  4. நம்பிக்கையான நண்பர்களுடன், உறவினருடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருங்கள். உரையாடுங்கள்.
  5. உள நெருக்கடிக்கள் இருப்பவர்கள் உங்கள் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசலாம். நேரடியாக தொலை பேச வீட்டில் வசதியற்றவர்கள் கைத்தொலைபேசி மூலம் எழுதி அனுப்பலாம். வீட்டில் இருப்பது உயிராபத்து என்று உணர்ந்தால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுவதே சிறந்தது.

இக் கட்டுரையில் இடம்பெறும் தரவுகள் பல இணையத்தளங்களிலிருந்து திரட்டப்பட்டவை.

நிரூபா – கனடா

நிரூபா

(Visited 236 times, 1 visits today)
 
நடு பலோகோ

கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 25- நிரூபா ஆயிலியம்

வணக்கம் வாசகர்களே , பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 25-ல்: கனடாவில் இருந்து எழுத்தாளரும், விமர்சகரும், இலக்கியச்செயற்பாட்டாளருமான நிரூபா ஆயிலியம் […]