‘பத்மா சோமகாந்தன் மறைந்தார்’-பத்மா சோமகாந்தன் நினைவுக்குறிப்புகள்-சி.மௌனகுரு

சென்ற வாரம் ஒரு காலைப்பொழுதில் எனது தொலைபேசி மணி ஒலித்த து மறுமுனையில் பழக்கமான பத்மாசோமகாந்தனின் கணீரென்ற குரல்:

“என்னப்பா சுகமாக இருக்கிறீர்களா ? சித்திரா நலமா? உங்களையெல்லாம் காணாவும் கதைக்கவும் கொள்ளை ஆசையாக இருக்கிறது’ என்ற பத்மாவின் குரலில் ஒரு பெரும் சோகம் இழையோடியது.

சிறு கதை எழுத்தாளர் அல்லவா? கதை கூறுவது போலவே கதைப்பார் ஒரு நீண்ட உரையாடலாக எமது தொலைபேசி உரையாடல் தொடர்ந்தது. அதில் நாம் இருவரும் பழைய காலங்களை நினைவு கூர்ந்தோம்.

அவரது கணவர் செயல் வீரர் சோமகாந்தன். கைலாசபதி,சிவத்தம்பி, ஞானா பிரேம்ஜி, டானியல், ரகுநாதன் ,வித்தியானன்தன், கணபதிப்பிள்ளை, சில்லையூர் செல்வராஜன், காவலூர் ராஜதுரை, இளங்கீரன், நந்தி ,முருகையன், சிவானந்தன், நீர்வைபொன்னையன், செ.யோகநாதன், பெனடிக்ட் பாலன், புதுவை ரத்தினதுரை, எனப் பலரை நினைவு கூர்ந்தோம். இதில் எவரும் இப்போது இல்லை காலமாகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் இலக்கியத்தால் சோமகாந்தனுக்கு மிக நெருக்கமானவர்கள். அவரினால் பத்மாவுக்கு நெருக்க மானவர்கள். ஒரு சிலரைத் தவிர ஆனைவரும் சோமகாந்தன் வீட்டில் சிற்றுண்டி அல்லது உணவு உண்டவர்கள்,

பத்மாவின் கைப்பாக ருசியையும்.அவர் உரையாடல் ருசியையும் சுவைத்தவர்கள். அவர்களுள் நானும் ஒருவன்.

“இருவரும்தான் உயிருடன் இருக்கிறோம் போல இருக்கிறது பத்மா” என்றேன் சிரித்துகொண்டே,

“அப்படிச் சொல்லாதீர்கள் நீங்கள் நீண்ட காலம் இருக்க வேண்டும்’

என உணர்ச்சி பொங்க தன் வழமையான கம்பீரக்குரலில் கூறினார் பத்மா

‘நிரந்தரம் இன்மைதானே நிரந்தரம்” என்றேன்

இருவரும் பலமாகச் சிரித்துகொண்டோம். இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றி மிகுந்த கவலையுடன் பேசினார். இந்த அளவிற்குக் கொணர தானும் தன் கணவரும் ஏனைய முன்னோடிகளும் பட்ட கஸ்டங்களையும் அச்சமயம் தமக்கு பக்க பலமாயிருந்தோரையும் நினைவு கூர்ந்தார்

“கொழும்புக்கு விரைவில் வருவேன், வந்தால் அவசியம் வருவேன் சந்திப்பேன்’ என்றேன்

இன்னும் ஒரு மாத காலத்துள் சந்திப்போம் என தீர்க்கமான முடிவு எடுத்தோம். இனிச் சந்திப்பே இல்லை. இனி சந்திப்பு அவர் கருத்தியலின் படி வேறு இடங்களில்தான் நடை பெற முடியும்

இந்த பத்மாவையும் அவர் கணவன் சோமகாந்தனையும் நான் எனது 20 ஆவது வயதில் 1960 களில் யாழ்ப்பாணத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பருத்தித் துறையில் ந ட த்திய பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணச் சுவாமிகள் கவி அரங்கிற்கு சென்றபோதுதான் சந்திக்கிறேன்

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித் துறை புறப்பட்ட எழுத்தாளரை சுமந்த பஸ்ஸில் இவர் தன் கணவருடன் வந்திருந்தார்.அப்போது அவர்கள் இளம் தம்பதியினர்.புது மணத் தமபதியினர்.சோமகாந்தன் ஓடி ஓடி வேலை செய்தார்.

அவ் எழுத்தாளர் பஸ்ஸில்,

கைலாசபதி

சிவத்தம்பி

வித்தியானந்தன்

சில்லையூர் செல்வராஜன்

காவலுர் ராஜதுரை

டானியல்

டொமினிக் ஜீவா

ரகுநாதன்

கணேசலிங்கன்

நீர்வைபொன்னையன்,

முருகையன்

சிவானந்தன்

என ஒரு பெரும் முற்போக்கு எழுத்தாளர் பட்டாளம். அனைவரும் இளைஞரகள், 25, 30 வயதினர். நானும் யோகநாதனும்தான் 20 வயது இளைஞர்கள் என நினைக்கிறேன். பருத்தித் துறையில் யாழ்ப்பாணச் சுவாமிகள் கவி அரங்கம் நடைபெறுகிறது. நான் கவிதை வாசிக்கிறேன். அனைவருக்கும் அறிமுகமாகின்றேன். மட்டக்களப்பு பையன் என அறிமுகமாகிறேன். அதற்குச் சிபார்சு செய்து என்னை அங்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைத்துச் சென்றவர் கைலாசபதி. அக்கவி அரங்கம் முடிய தேடி வந்து மனம் நிறையப் பாராட்டினார் இந்த பத்மா

அன்று ஏற்பட்ட அந்த உறவு. சென்ற வாரம் வரை தொடர்ந்தது இன்று நேற்று உறவா? ஏறத்தாள ஆறு தசாப்த அறாத உறவு. இலக்கியம் எற்படுத்திய உறவு. பத்மா பூணூல் அணிந்த பகுதியினர். ஆயினும் அவர் வீட்டில் அனைவருக்கும் அவர் அமுதளித்தார். அதனால் அவர் சனாதனிகளின் கண்டனத்திற்கும் உள்ளானர். ஆனால் அக்கண்டனகள் பற்றி அவர் சிறிதும் கலங்கியதில்லை. சமூக க் கட்டுகளிலிருந்து விடுதலை பெற அவர் சந்தித்த சவால்களை பெரும் எதிர்ப்புகளைக் கதை கதையாக அவர் கூறுவார்.

சோமகாந்தன் உறவு அவருக்கு பெரும் துணையாயிற்று. துணிவாயிற்று. இருவரும் இணைந்தே செயற்பட்டனர். அருமையான தமபதிகள். நான் சோமகாந்தனுக்கு மிக நெருக்கமானவனானேன். என்னுடைய நாடகங்களின் நடிப்பின் பெருரசிகரானார் அவர். அவர் அந்நாடகங்களை பற்றி நிறையவே எழுதியுமுள்ளார்

கொழும்பில் நானும் சித்திரலேகாவும் வாழ்ந்தபோது சோமகாந்தனும் பத்மாவும் எங்கள் குடும்ப நண்பர்களாயினர். சித்ரலேகாவும் பத்மாவும் நெருக்கமாயினர். பெண்ணியம் இருவரையும் இணைத்தது சோமகந்தன் இறப்பின் பின் சிலகாலம் பத்மா சோர்ந்திருந்தார். பல சவால்களைச் சந்தித்தார். எனினும் இயங்கினார்,எழுதினார், செயற்பட்டார். இடைக்கிடை கொழும்பு தமிழ் சங்கத்தில் காணுவேன்,

பத்மாவுக்கும் மட்டக்களப்பிற்குமிடையே ஒரு தொடர்பு இருந்துள்ளது.மட்டக்களப்பு வசந்தன் கூத்தினை 1940 இல் பதிப்பித்து வெளியுலகிற்கு அளித்த சதாசிவ ஐயரின் தம்பி மகள் இந்த பத்மா என்பதுதான் அந்த உறவு. சதாசிவ ஐயர் அக்காலத்தில் மட்டக்களப்பில் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தவர். பத்மாவிடம் பழைய நினைவுகள் பல இருந்தன. அவை ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,தவறிவிட்டோம். அவரையும் தவற விட்டோம். பத்மாவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

பேராசிரியர் மௌனகுரு 

சி.மௌனகுரு

(Visited 67 times, 1 visits today)