‘பத்மா சோமகாந்தன் நினைவாக…’-பத்மா சோமகாந்தன் நினைவுக்குறிப்புகள்-வி. ரி. இளங்கோவன்

மூத்த எழுத்தாளர் – சிறந்த பேச்சாளர் பத்மா சோமகாந்தன் இன்று மாலை (15 – 07 – 2020) காலமான செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. நீண்ட காலமாக யான் அவரை அறிவேன். என் பாடசாலைக் காலத்தில் எங்கள் மூத்த சகோதரர் நாவேந்தன் உரையாற்றும் சில இலக்கியக் கூட்டங்களில் அவரும் உரையாற்றியிருக்கிறார். அவ்வேளை அவரின் சிறந்த மேடைப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன் – அவருடன் உரையாடியிருக்கிறேன். பிற்காலத்தில் அவர் கலந்துகொண்ட சில மேடைகளில் நானும் பங்குபற்றியிருக்கிறேன்.

1970 -களில் ஒருமுறை நல்லூர் சாதனா பாடசாலையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் கருத்தரங்கிலும் தொடர்ந்து ‘பல்கலை வேந்தர்’ சில்லையூர் செல்வராசன் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கிலும் பங்குபற்றினேன். விழா முடிவில் பத்மா சோமகாந்தன் என்னருகில் வந்து எனது பேச்சையும் கவிதையையும் மனம் திறந்து பாராட்டினார். நாவேந்தனின் தம்பி என்பதை நிரூபித்திருக்கிறாய் என்றார். மகிழ்ச்சியாயிருந்தது.

நாவேந்தன் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயிற்சிபெற்ற காலத்தில் இவர் கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றார். அவ்வேளை தமிழ் ஆசிரிய கலாசாலைகளுக்கிடையேயான விவாதப் போட்டியில் இந்த இரு கலாசாலை விவாதக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டு இலங்கை வானொலியில் இறுதி விவாதப் போட்டி ஒலிபரப்பாகியது.

கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாலை விவாதக் குழுவின் தலைவராக பத்மாவும் நல்லூர் ஆசிரிய கலாசாலை விவாதக் குழுவின் தலைவராக நாவேந்தனும் பங்குபற்றினர். இறுதியில் பத்மா தலைமையிலான குழுவே வெற்றிபெற்றது. இரு அணித் தலைவர்களுக்கும் பாராட்டு – பரிசுகள் கிடைத்தன. இதனை நாவேந்தன் தன் வாழ்க்கைக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2014 -ல் நடைபெற்ற எனது நூல்களின் வெளியீட்டு “இலக்கிய மாலை” நிகழ்வில் பத்மா சோமகாந்தன் இதனை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கலாநிதி து. மூர்த்தி தோழர் கே. டானியலின் “கோவிந்தன்” நாவல் அறிமுக விழாக்களில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்தார்.

அவரைப் பல இடங்களுக்கும் நானே அழைத்துச் சென்றேன். கொழும்பில் நடைபெற்ற விழாவின் பின்னர் அவரைச் சந்தித்து உரையாட ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்’ விருப்பம் தெரிவித்தனர். அந்தச் சந்திப்பு பத்மா சோமகாந்தன் வீட்டில் தான் ஒழுங்குசெய்யப்பட்டது. கலாநிதி மூர்த்தியை அங்கு அழைத்துச் சென்றேன்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேம்ஜி – சோமகாந்தன் – முருகபூபதி – பத்மா மற்றும் ஒருசிலர் கலந்துகொண்டனர். கலந்துரையாடல் உச்ச நிலையில் காரசாரமாகச் சு+டாக நடைபெற்றது. பத்மாவும் பிள்ளைகளும் உபசரித்தனர். கலந்துரையாடலை மிக அவதானத்துடன் செவிமடுத்தனர்.

கொழும்பில் நடைபெறும் எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளிலும் மற்றும் உரையரங்குகளிலும் தவறாது கலந்துகொள்வார். கொழும்புத் தமிழ்ச் சங்கப் பணிகளிலும் தொடர்ந்து பங்குகொள்பவர்.

“கடவுளின் பூக்கள்

மாண்புறு மகளிர்

இற்றைத் திங்கள்

நெஞ்சுக்கு நிம்மதி

பாரா முகங்கள் சில பார்வைகள்

ஈழத்துப் பெண் ஆளுமைகள்…”

உட்பட பல நூல்களின் ஆசிரியர். நூல்களுக்கான விருதுகளும் பெற்றவர். இலங்கை – தமிழக இலக்கியச் சஞ்சிகைகள் – பத்திரிகைளில் எழுதிப் புகழ் பெற்றவர்.

ஆரம்ப காலத்தில் ‘புதுமைப்பிரியை’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியவர். ஆசிரியராக – அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். வீரகேசரி – கலைக்கேசரி சஞ்சிகையில் “நினைவுத் திரை” என்னும் தலைப்பில் இசை ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியவர். “முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்” கணவர் சோமகாந்தனுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றியவர். மூத்த பெண் எழுத்தாளுமையான அவரது நினைவு நீடித்து நிலைக்கும்..!

வி. ரி. இளங்கோவன்

வி ரி இளங்கோவன்

(Visited 92 times, 1 visits today)