தமிழுக்குப் பிரியமானவளே சென்று வருக -கட்டுரை-வி ரி இளங்கோவன்

தமிழ்ப்பிரியா கொரோனா பேரிடரால் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள இவ்வேளை எழுத்தாளர் தமிழ்ப்பிரியா காலமானார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

ஒருசில நாட்களுக்கு முன்தான் எம் மூத்த கலைஞர் ஏ. இரகுநாதனை இழந்து வருந்தினோம். அடுத்தடுத்து ஒவ்வொருதுறை ஆளுமைகளை இழந்து கலங்கவேண்டியுள்ளது. ஈழத்தில் அன்று யான் நன்கறிந்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் தமிழ்ப்பிரியா.

எழுபதுகளில் அதிவேகமாக எழுத்துலகில் பிரவேசித்தவர். சிறுகதை – நாடகம் – கவிதை – மெல்லிசைப்பாடல் எனப் பலவும் எழுதிப் புகழ்பெற்றவர். புஸ்பராணி முத்தையா என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் ‘தமிழ்ப்பிரியா’ என்ற புனைபெயரிலேயே இலக்கியவுலகில் அறிமுகமானார். புகழ்பெற்ற இலக்கியவாதிகளைப் பெற்ற ஏழாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கணவர் இளங்கோவன்.

தினகரன் – வீரகேசரி – சிந்தாமணி – ஈழநாடு – ஈழமுரசு – மல்லிகை – சிரித்திரன் – சுடர் – கலாவல்லி – அமிர்தகங்கை – குங்குமம் (தமிழ்நாடு) என அன்று வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாகின. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆக்கங்களை அளித்துவந்தார்.

1988 -ம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்துசேர்ந்தார். புலம்பெயர்ந்தபின் அவரது எழுத்து முயற்சி குறைந்துவிட்டது என்றுதான் கூறலாம். இங்கு ‘பாரிஸ் ஈழநாடு’ பத்திரிகையில் சிலவேளை இவரது ஆக்கங்களைப் பார்த்த ஞாபகம்.

தமிழ்ப்பிரியா வானொலி – தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார். எனது நூல்களின் அறிமுக நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிச் சிறப்பித்தார். ‘ரி. ஆர். ரி.’ தொலைக்காட்சியில் யான் தொகுத்தளித்த நிகழ்வுகளிலும் பங்குபற்றிச் சிறப்பித்தார். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது.

02 – 05 – 2010 – ல் இவரது இரு சிறுகதைத் தொகுதிகளின் (காம்பு ஒடிந்த மலர் – ஒரு நியாயம் விழிக்கின்றது) வெளியீட்டு விழா பாரிஸ் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் யான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியமை ஞாபகத்திலுண்டு. தமிழ்ப்பிரியா துணிச்சலானவர். பேச்சாற்றல் மிக்கவர்.

தொலைபேசியில் உரையாடும்போதும் நீண்ட நேரம் அந்தக் காலத்து இலக்கியச் சர்ச்சைகள் – விடயங்களை எனக்கு ஞாபகப்படுத்தி எடுத்துச் சொல்வார். அன்று கிராமிய மணங்கமழ நெஞ்சில் நிலைத்த நினைவுகளைப் பதிவாக்கிச் சிறுகதைகளைப் படைத்தளித்தவர். ஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அவரது நாமம் நீடித்திருக்கும்.

சகோதரி தமிழ்ப்பிரியாவுக்கு எமது அஞ்சலிகள்..!

வி. ரி. இளங்கோவன்-பிரான்ஸ்

வி ரீ இளங்கோவன்

 

 

(Visited 70 times, 1 visits today)