திருநர் கனவு-கட்டுரை-ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

திருநர்லட்சியம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், திருநர்களைப் பொறுத்தவரை இலட்சியத்தை ஈடேற்றுவது சராசரி ஆண்கள் பெண்களோடு ஒப்பிடுகையில் வலிகளும் வேதனைகளும் தருவதாக உள்ளது. இலட்சியத்தை அடைவதற்கு கரடு முரடான பாதைகளில் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இலட்சியங்களை அடையும்போது தான் அவர்களின் வாழ்க்கையும் புத்துயிர் அடையும் எனக் கூறுகிறார்கள். இளைஞர்களே கனவு காணுங்கள் என அப்துல்கலாம் கூறுகின்றார்.  இதற்கமைய திருநர்களின் கனவுகளையும் வலிகளையும் அறிவோம் வாருங்கள்

பெயர்: லக்சன் றெசானி

10 வயது ஆகும் போதே திருநங்கையாக நான் என்னை உணர்ந்தேன்

 உங்கள் இலட்சியம்?

என்னுடைய சிறு வயது பருவத்தில் இருந்து எனது இலட்சியம் என்று யாரும் கோட்டால் நான் கூறுவது நான் ஒரு முழுமையான பெண்ணாக மாற வேண்டும் என்று ஆனால் ஆது என் வாழ்கையில் கனவாகவே இருக்கின்றது.

உங்கள் வாழ்கையில் இலட்சியத்தை அடைவதற்கான தடைகள் ஏதாவது காணப்படுகிறதா?

ஆம் நிச்சயம்! குடும்பம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் நான் வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் தவித்தேன் அது மட்டுமன்றி சமூகத்திலும் பெரும் எதிர்ப்புகள் காணபடுகின்றது அத்துடன் வேலைவாய்ப்பின்மை,அரசாங்க சார்ந்தே எந்தவித கொடுப்பனவுகள் வழங்கப்படாமை இவ்வாறான விடயங்கள் லட்சியத்தை அடைய தடையாக காணப்படுகின்றது. திருநங்கைகள் சார்பான சிகிச்சைகள் மருத்துவ வசதிகள் போதுமான அளவு வடபகுதியில் காணப்படவில்லை. இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்

உங்கள் இலட்சியத்தை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

அன்று தான் எனக்கு ஒரு புது விடியல் வந்த போல் இருக்கும் அதன்பின் என் சமூகம் சார்ந்து பெண்கள் சார்ந்தும் குரல்கொடுக்கும் நபராக நான் என்னை முழுமையாக மாற்றுவேன்.

00000000000000000000

பெயர் : பிரஷாந்தி இராசநாயகம்

13 வயதில் நான் திருநங்கை என உணர்ந்தேன்

உங்கள் இலட்சியம்?

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகவேண்டும் அது மட்டும் இன்றி பால் மாற்றம் அடைய வேண்டும் ஏனென்றால்  நான் ஒரு ஆண் தோற்றத்தில் காணப்படுகின்றேன் அந்த அடையாளம் எனக்கு அருவருக்கத்தக்க ஒன்றாகவே காணப்படுகின்றது எனக்கு முழுமையான ஒரு பெண்ணாக மாறுவது என்னுடைய வாஞ்சையாக  காணப்படுகிறது

உங்கள் வாழ்கையில் இலட்சியத்தை அடைய தடைகள் எதாவது காணப்படுகிறதா?

சமூகத்தில் அனைவருக்குமே தடைகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருநங்கை என்ற ரீதியில் மேலும் பல ஒடுக்குமுறைகள் அடக்குமுறைகள் அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் நான் ஒரு சுய தொழில் செய்கின்றேன். அதிலும் சமூக ரீதியான தடைகள் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், முழுமையாக நான் ஒரு பெண்ணாக மாறுவதற்கு சமூகம் ஒரு பெரும் தடையாகும். நான் சமூகம் என்று குறிப்பிடுவதில் என் குடும்பமும் அடங்குகின்றது. சுயமாக உழைத்து முன்வந்தால் எனது லட்சியத்தை அடைவேன், ஆனால் எனக்கு சமூகம் சார்ந்த மனகுழப்பம் தான் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றது

உங்கள் இலட்சியத்தை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

நான் நானாக இருப்பேன் என்னுடைய போலி வாழ்க்கைகளை அகற்றிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வேன்

00000000000000000000000000

பெயர் : அபிராமி

9 வயதில் என் பெண்மையை உணர்ந்தேன்

உங்கள் இலட்சியம்?

என்னுடைய சகோதரர்களையும் என்னுடைய குடும்பத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும். அதற்கு  நான் விரும்பும் சுய அடையாளத்துடன்(திருநங்கை எனும் அடையாளத்துடன்)  படித்து ஒரு நல்ல வேலை செய்ய வேண்டும்

உங்கள் வாழ்கையில் இலட்சியத்தை அடைய தடைகள் எதாவது காணப்படுகிறதா?

என்னுடைய இந்த பெண்மையை காரணம் காட்டி பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் ஒடுக்குமுறைக்குள் என்னைத் தள்ளினார்கள்.  பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். அது மட்டுமல்ல எனது குடும்பம் வறுமையில் காணப்படுகின்றது. இருந்தும் கூட, A/L பரீட்சை எழுதி 2B,S சித்தி பெற்றேன்.  பாடசாலையிலும் கல்வி நிறுவனங்களிலும் மேற்சொன்ன தடைகள் காணப்படாவிட்டால் மேலும் உயர் பெறுபேற்றை  அடைந்திருக்க முடியும்.  பல்கலைக்கழக வாய்ப்புக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

உங்கள் இலட்சியம் அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

சுதந்திரமாக வானத்தில் பறப்பேன்

00000000000000000000000

பெயர்: ஏஞ்சல் குயின்ரஸ்

8 வயதில் என்னுடைய பெண்ணை உணர்ந்தேன்

உங்கள் இலட்சியம்

எனக்கு பெண்ணாக மாற வாஞ்சையாக   இருந்தது. நான் அதை அடைந்து விட்டேன்.  தற்போது  வடக்கு கிழக்கில் உள்ள திருநர்  வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதும்,  சமூகத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் காணப்படும் அனைத்து  மக்களுக்காக சேர்ந்து குரல் கொடுப்பதும் செயற்படுவதும் எனது நோக்கமாக இருக்கிறது.

உங்கள் வாழ்கையில் இலட்சியத்தை அடைய தடைகள் எதாவது காணப்படுகிறதா

எனது குடும்பமும் சரி சமூகமும் சரி கலாச்சாரம், சமயம்  போன்றவற்றைக் கட்டுடைத்துப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே  காணப்படுகின்றார்கள். இது மிகவும் பெரிய தடையாகவே காணப்படுகின்றது . அதுமட்டுமில்லாமல்,  அரசியல் ரீதியான ஒடுக்குமுறை சட்ட ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் குறைவில்லை. இலங்கையில் திருநர் எதிரான சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உண்டு. இவ்வாறான விடயங்கள் பெரும் தடைகள் என உணருகிறேன். மேலும், வேலைவாய்ப்பின்மை பாரியதொரு  பிரச்சினை; அது வறுமைக்கும்  காரணமாக அமைகின்றது.   இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும்போது திருநர் எவ்வாறு தமது இலக்கை அடைய முடியும்?  ஒரு கேள்விக்குரிய விடயமாகவே காணப்படுகிறது?

உங்கள் இலட்சியம் அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

என்னைப்போன்ற திருநர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் அது என்னுடைய வாழ்க்கையில் பெரும் திருப்தியாக காணப்படும். ஒவ்வொரு திருநர்களும் வலிகளை கனவுகளாக சுமந்து வாழ்கின்றார்கள் ….

எப்போது இந்தக் கனவுகள் நிறைவடையும் என்று ஏக்கத்துடன் திருநர்கள் அன்றாடம் வாழ்கின்றார்கள்

ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்-இலங்கை

ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

(Visited 240 times, 1 visits today)
 
ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 07-ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 07-ல் தாயகத்தில் இருந்து ‘திருநர்’ ஆன ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ், தானும் தனது குழுமமும் […]